சுயம் தேடும் பெண் 043

புதுமைப்பெண் கட்டுரைப் போட்டி

சுயம் தேடும் பெண் 043

சுயம் தேடும் பெண்

       பிறந்தவள் பெண் என்பவள் போற்றத்தக்கது .எங்கு காணினும் ஒரு முகை மலர்கையில், நதி உருவாககையில், நிலவு முழுநாள் காணும் பொழுது, காலைப் பொழுதின் பனி சேர்கையில் என காணும் இயற்கையின் அத்துனை அழகிலும் கவிஞர்களின் மனம் ஏனோ ஒரு பெண்ணையே நாடுகின்றது. 
                        
                     இது வெறும் கம்பியை வளைத்து ஆபரணம் செய்வது போல் எழுத்தை புனைவதோடு மட்டுமே நின்று விடுகின்றது .
       
                             வெளியில் தேடும் பெண்ணின் அழகை உள்ளளவில் நாட மறுக்கின்றனர். காற்றில் பறக்கும் புள்ளினமும்,  வெட்ட வெளியில் தவழும் மேகங்களும், அடர்மிகு வனங்களின் வனப்பில்  சுற்றித் திரியும் உயிரினங்களும் தன் சுயத்தை விட்டு வர யாரும் சுதந்திரம் தரவேண்டிய அவசியம் இல்லை.
                  
                  பெண்ணிற்கு மட்டும் ஏன் இந்த சுதந்திரம் மறுக்கப்படுகிறது  என்பது புலப்படாத ஒரு நியதியாக உள்ளது.
                   
                     பெண்ணின் பெருமை, தியாகச்சுடர், வீரமங்கைகள் என்ற தலைப்புகளில் வர்ணனைகள் உருவாக்கி பெண்ணைப் பற்றிய நமது பெருமைகளை நாமே பேசுவதைவிட , நம்மைப் பற்றி ஒவ்வொரு ஆணையும் பேச வைப்பதில் அல்லவா மகத்தான வெற்றி அடங்கியுள்ளது. நான் மட்டுமே பெண்ணின் பெருமைகளை பேசி என்ன பயன்?

             இவ்விடத்தில்  நான் கூறுவது ஜான்சி ராணியையோ , வேலுநாச்சியாரையோ, லட்சுமி சேகல் போன்ற வீரமிக்க தமிழகச்சிகளைப் பற்றியோ அல்ல.
             
                   ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் தூங்கி  எழுந்ததிலிருந்து இரவு மறு உறக்கம் கொள்ளும் வரை ஒவ்வொரு நாளும் ஏற்படும் சவால்களை சாதனைகளாக படைத்துக் கொண்டிருக்கும் பெண்ணியம் பற்றி எப்பொழுது நாம் உணர வைப்பது?
      
                       சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் கொடுப்பதல்ல !  அது ஒவ்வொரு உயிர்களுக்கும் தானாய் படைக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதை , " என் மனைவிக்கு அல்லது என் மகளுக்கு உடை அணிவதிலும், நகை அணிவதிலும் படிப்பதிலும் போன்ற எல்லாவிதத்திலும் நான் சுதந்திரம் கொடுத்துள்ளேன் " என்று மார்தட்டிக் கொள்ளும் ஆண்களுக்கு யார் உணர வைப்பது இப்பேருண்மையை.
            
                   பெண்களின் இரணங்களை அறிவார் யார் ? பெண்களின் வலிகளை அறிவார் யார் ? பெண்ணின் ஒவ்வொரு உணர்வுகளையும் அறிவார் யார்? யாருமே இல்லை!  ஏன் சில இடங்களில் பெண்களே இல்லை!
               
                     மாதவிலக்கு தள்ளிப் போகும்போது  தனக்கான வாரிசு வரப்போகிறது என குதூகளிக்கும் ஆண்கள் உலகம், அதே மாதவிலக்கின் போது பெண்ணிற்கு ஏற்படும் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முற்படவில்லை எனினும் காயப்படுத்தாமலாவது  இருக்கலாம்.ஃ 
       
                  இது படிக்காத பெண்களின் நிலைமை மட்டுமா படித்த பெண்களை நிலைமையும் ‌ இவ்வாறே !
      
               பெண்களின் மனக்குமுறல்கள் வெளியில் பேசப்படுவதில்லை! உள்ளே ஏற்றுக் கொள்ளப்படுவதே இல்லை ! 
   
       பெண்கள் எப்பொழுது மற்றொருவர் உருவாக்கும் வட்டத்திற்குள் சிக்காமல் தனக்கான வட்டத்தை தாமே அமைத்துக் கொள்கிறார்களோ அதுவே பெண் தினம். அதுவே அவர்களது சுயமும் கூட. சுயத்தை இழந்து வாழ விரும்பாதவள் பெண் என்பதை ஆண்களுக்கு உணர்த்தும் சமயமே நமக்கான பெண்கள் தினம்.
              வாழ்வில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு இன்னல்களையும் சாதித்துக் கொண்டிருக்கும் இன்றைய சாதனையாளர்களுக்கும்,  இனி ஆண்களுக்கு நிகராக போராடி வெற்றி காணப்போகும் பெண்களுக்கும்   என் பெண் தின வாழ்த்துக்கள்...

பெயர்: செ. ஜீவலதா
ஊர்: இராஜபாளையம்