பா ரதம் ஓட்டிய பாவலன்...! 025

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பா ரதம் ஓட்டிய பாவலன்...! 025

பாரதப் போரில் பார்த்தன் தனக்கு பாதுகாவலனாக
பரந்தாமன் பாகன் ஆனது போல்;
பாரதம் மீட்க
பைந்தமிழ் அன்னையை தேர்வில் அமர்த்தி
புலவன் ஒருவன் வலவன் ஆனான்! 
அவனே, அவனே… 
புது நெறி காட்டிய புதுப்பா தந்தை! 
சின்னச்சாமி பெற்றெடுத்த பெரியசாமி! 
இலக்குமி ஈன்றெடுத்த சரசுவதி தோற்றரவு!
சின்னஞ்சிறு அகவையில் சீரானத் தமிழ்க் கற்று
பாவலர் பலர் வியக்க பைந்தமிழ் வளர்த்தவர்! 
பதினொரு மொழிகளிலும் பக்குவம் பெற்றபின்
தண்டமிழே இனிதென்று தரணிக்குச் சொன்னவர்! 
காலத்தின் தேவைகருதி கன்னித் தமிழ் தனக்கு
புதுப்பா வடிவீந்த புலவர் பெருமகனார்! 
பிறப்பால் சிறப்பென்ற பேதைமைப் பேயழியத்
தெய்வத் தமிழ்த் தந்த தேயத்துப் பாவலர்! 
பெண்மையை  பொம்மையாய் எண்ணிய மக்களின்
மடமை மாய்த்திட்ட மங்கை நலப்பேணர்! 
இமைப்பொழுதும் சோராது இளைஞர் கிளர்ந்தெழவே
உளம்புகு தமிழ்ப்பாட்டால் ஊக்கம் ஊட்டியவர்!
புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தரும்
அரும்பெரும் பாக்களை;
நாவலம் நலம்பெற நவின்றவர் பாரதி! 
இருபால் மக்களும் இணை என்றாகில்;
இவ்வுலகெல்லாம் -இனிதே
அறிவால் ஓங்கும்! 
இது அறிவுரையை? அல்ல அல்ல
அறவுரை! 
மாந்தர் இனத்திற்குப் பொதுவுரை!
இதுவே, உலகப் பொதுமறை! 
பாரதி பாக்களுக்குப் பொழிப்புரை தேவையா?
அல்ல அல்ல;
அவர் வாழ்வே அதற்கு விளக்கவுரை! 
சொல்லிய சொல்லோடு சென்றவர் பலர்! 
சொல்லிய வண்ணம் செய்தவர் பாரதி! 
காலங்கள் சென்றாலும்
கடையூழி முடிந்தாலும்
தம்முடையத் தமிழ்ப்பணியால்
தரைநீங்காத் தமிழ்மகனார்! 
அச்சமெல்லாம் அகன்றோட
அரும்பாக்கள் தந்தவர்;
கூற்றுவனும் அவர் 'பா' சுவைக்க
கூட்டிபோனான் மிகவிரைவில்! 
"புதுப்பா" உள்ளவரை பாரதி இருப்பார்! 
இன்றும் புதுப்பா இருக்கிறது. 
எனவே பாரதியும் இருக்கிறார்! 
'பா'ரதம் ஓட்டிய பாவலன் வாழ்க..!

மா. அழகுவேல், தமிழாசிரியர், 
விகாசா ஜூபிளி பள்ளி, மதுரை