தந்தை பெரியார் கவிதை

பெரியார் பிறந்த தினம் கவிதை

தந்தை பெரியார் கவிதை

*பகுத்தறிவு பெரியார்*
*ஈ. வே. ராமசாமி.!*

இருக்கும் ஆசாமிகளுக்காக
இல்லாத சாமிகளை எதிர்த்து,
இருக்கும் ஆசாமிகளாலே அசிங்கப்படுத்தப்பட்ட சாமி!

நேரில் வராமல் 
தேரில் மட்டும் வரும்
சாமிகளுக்கிடையில்
எப்போதும் ரிக்க்ஷாவிலும் 
எப்போதாவது காரிலும்
வந்து போன சாமி!

அன்றைய அரசை
விருதுநகர் ஆண்ட போதும்
காஞ்சிபுரம் ஆண்ட போதும்
ஈரோட்டை செங்கோட்டையாக்கி
தெறிக்கவிட்ட சாமி!

குட விளக்கு 
கும்பாபிஷேகம்
பாலாபிஷேகம்
செய்ய
நூறு சதவீதம் உகந்த சாமி!
ஆனால், பெரும்பாலும்
செருப்புகளாலேயே
அர்ச்சிக்கப்பட்ட சாமி!

மதத்திற்கு ஒரு சாமி
மாதத்திற்கு ஒரு சாமி
என்றில்லாமல்
இறுதிவரை ராமசாமியாகவே
இருந்த சாமி!

உண்டியல் இல்லாமலே
பணக்காரனாக இருந்த சாமி!
வேண்டுதல் இல்லாமலேயே
கதர் துணி 
தலையில் சுமந்து
பாதயாத்திரை செய்து
 வேண்டியதை
நிறை வேற்றிய சாமி!

அலகு, தீ மிதி, விரதம் 
இவையெல்லாம்
சாமிக்கானது இல்லை என்றும்,
சகுனம், நல்ல நேரம்
கெட்ட நேரம்,
வலது கால், இடது கால்
எல்லாம் நம்மை கட்டி ஆள
அவாள் ஏற்படுத்திய
கட்டுக்கதை என்றும்
போட்டுடைத்த சாமி!

சாமி இல்லை என்றாலும்
சௌகரியமாக வாழலாம்
என்பதற்கு சமகால சான்று
பெரியார்!
அவர் பிறந்தநாளை
பகுத்தறிவின் 
பிறந்த நாளாகவும், 
மூட நம்பிக்கையின் எரிப்பு நாளாகவும்
கொண்டாடுவோம்!

கூட்டத்தில்
குறைந்தவர்களானாலும் 
நாம் பகுத்தறிவு
ஊட்டத்தில் குறைந்தவர்கள்
இல்லை
என்று காட்டுவோம்!

முனைவர். பெ.தமிழ்ச்செல்வி