எழுத்தாளர் இரா. கலைச்செல்வி அவர்கள் எழுதிய சிறுகதைகள்
கலைச்செல்வி கதைகள்
001. கலெக்டர் அம்மா
அர்ச்சனா தனது அலுவலக அறைக்குள் நுழையும் முன் , தன் பார்வையில் பட்ட,
அ. அர்ச்சனா , ஐ.ஏ.எஸ்.,
மாவட்ட ஆட்சியர், மதுரை.
என்ற பெயர் பலகையை பார்த்தவுடன், மனதிற்குள் சட்டென்று ஆயிரம் நினைவுகள் . (நான்கு நாட்களுக்கு முன்புதான் மதுரை மாவட்ட ஆட்சியராக அர்ச்சனாவிற்கு அரசாணை வழங்கப்பட்டது)
அவள் அரை நொடி, அதை நின்று பார்த்துவிட்டு , தனது அறைக்குள் நுழைகிறாள்.
தனது 15ஆவது வயதில் , தான் வரைந்த அந்த ஓவியத்தை , பிரேம் போட்டு, அவளின் இருக்கைக்கு மேலே, அலுவலக அறையில், நேற்று மாலையே ... கந்தன் மாட்டியிருக்க வேண்டும் . அர்ச்சனாவின் கண்கள் அதன் மேலேயே நிலை குத்தி நின்றன.
"ஒரு கால் மணி நேரம் ...யாரும் உள்ளே வர வேண்டாம், "என தன் பர்சனல் செகரட்டரி ராதிகாவிடம், சொல்லிவிட்டு, அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினாள்.
திரைப்படமே கண்முன் வந்து போனது...!!!
அப்போது அர்ச்சனா பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த ஊர் கலெக்டரின் மகள், பிரியாவும் நெருங்கிய தோழிகள்.
பிரியா அவளை ...தனது பர்த்டே பங்க்ஷனுக்கு , தன் வீட்டிற்கு மாலை வருமாறு ஆசையோடு அழைத்தாள்.
தனது தோழி அன்போடு அழைக்கிறாள் என , அர்ச்சனாவும் அன்று மாலை பள்ளி முடிந்தவுடன் பிரியாவின் வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்குச் சென்றவளை, பிரியாவின் அம்மா வீட்டிற்குள்ளேயே விடவில்லை. அனாதையை போல் ...ஒரு மணி நேரம் காத்திருந்து விட்டு, அவமானத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் உள்ளே... பிரியாவும் அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அர்ச்சனாவிற்கு தெளிவாய் கேட்டது.
"ஏய் ...பிரியா யாருடி அவ ...உன் பிரண்டா . பார்க்க அப்படி இருக்கா..!! வெளுத்துப் போன பாவாடையும்.. பழுப்பு நிற வெள்ளை சட்டையும் போட்டுக்கிட்டு ....அவ தான் உனக்கு பிரண்டா ....? நீ எப்படி ...அவளை நம்ம வீட்டு..!! பர்த்டே ஃபங்க்ஷனுக்கு கூப்பிடுவ...?"
"நம்ம வீட்டுக்கு ...இப்போ எத்தனை விஐபிகள் வருவாங்க . அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க .இவ வந்து நம்ம வீட்டுக்குள்ள நிக்கிறதா..?? எதுக்கு நீ கூப்பிட்ட ..?? ஒரு பியூனோட பொண்ணு நம்ம வீட்டு ஹாலுக்கு வர்றதா..? அதுவும் டிரெஸ்ஸாவது நல்ல போட்டுட்டு வந்து இருக்காளா..!! எதுக்காக என்கிட்ட கேட்காம அவளை கூப்பிட்ட...?"
"இல்லம்மா... என் பிரண்டு அவ . ரொம்ப நல்லவ .ரொம்ப நல்லா படிப்பா . கிளாசில் ஃபர்ஸ்ட் ரேங்க் அவதான் . அவ அப்பாவுக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுக்க முடியல..எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாம்மா.. சயின்ஸ் ரெக்கார்ட் நோட்ல படம் எல்லாம், அவ தான் வரைந்துகொடுப்பா . அம்மா ப்ளீஸ்மா அவ வரட்டும்மா .வீட்டுக்குள்ள வரட்டுமா... இன்னைக்கு மட்டும்..!!" கெஞ்சிளாள் பிரியா.
எவ்வளவு கெஞ்சியும் ...பிரியாவின் அம்மா ...அர்ச்சனாவை அனுமதிக்கவே இல்லை.
கொஞ்ச நேரத்தில் பெரிய பெரிய அதிகாரிகள் , கோர்ட்டெல்லாம் போட்டுக்கொண்டு , பிரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். பிரியாவின் அம்மா அவர்களை அப்படி முகம் மலர... வரவேற்றாள். அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் ...வீட்டிற்கு வந்து, அன்று இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள் அர்ச்சனா.
தூக்கம் வராமல் , புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அர்ச்சனா... அன்று இரவு வரைந்த ஓவியம் இது. தூக்கம் வராத எரிச்சலிலும், வருத்தத்திலும் தனது குமுறலை எல்லாம் ஓவியமாய் தீட்டி விட்டாள். அன்று அவள் மனதுக்குள் ஒரு விதையை ஆழமாக பதித்து விட்டாள் அர்ச்சனா.
நானும் கலெக்டர் ஆகியே...திருவேன் , என மனதுக்குள் வைராக்கியம் கொண்டாள். அதை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஓவியம் அமைந்திருந்தது. வெளுத்துப் போன பாவாடைக்காரி அர்ச்சனா ஒரு பக்கம். அவள் கலெக்டராய் உருமாறி..!!! கம்பீரமாய் அழகான ஆடையில் ...அமர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனா ஐ.ஏ.எஸ்.எதிர்பக்கத்தில். இதுவே அந்த ஓவியத்தின் சாராம்சம்.
அந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு ...நிறம் மாற்றப்பட்டு... நகல் எடுக்கப்பட்டு அழகான ஒரு ஓவியமாய்... ஆச்சிரிக்கப்படுகிற ஒரு ஓவியமாய் இதோ... இங்கே... இப்போது.
தான் ... அன்று வரைந்த ஓவியத்தை தன் வீட்டின் சுவரில் ...தான் படிக்கும் இடத்திற்கு மேல் ....ஒட்டி வைத்து தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அந்த ஓவியம் அவளுக்கு ...தினம் தினம் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. கலெக்டர் ஆகியே தீரவேண்டும் என்ற வேகத்துடனும் , விடாமுயற்சியுடனும் , பிளஸ் டூ ..வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தது , பி. ஏ படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் படிக்க தேவையான முயற்சிகளை செய்து, கடும்முயற்சியுடன், இரண்டாவது முறையில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 10 ஆவது இடத்தை பிடித்தது, எல்லா நிகழ்வுகளும் ஒரு நிமிடத்திற்குள் திரைப்படமாய் மனதிற்குள்.
அந்த நிகழ்வு .....அன்று அவள் வீடு.....இன்று அவளின் கலெக்டர் பங்களா, அன்றைய பியூன் அப்பா, இன்றைய கலெக்டரின் அப்பா, மாவட்ட ஆட்சியர் என போர்டு வைக்கப்பட்ட தனது கார் , கிடைக்கும் சல்யூட்கள் என அத்தனையும், ஒரு நொடியில் வந்து போய், பெரிய பிரமிப்பை அவளுள் ஏற்படுத்தி விட்டது. அந்த அவமானம் இல்லையேல்... இன்று இந்த அர்ச்சனா ஐ.ஏ.எஸ் இல்லை. தனது தோழி பிரியாவின் அம்மாவிற்கு மானசீகமாய் நன்றி தெரிவித்தாள்.
பர்சனல் செகரட்டரி ராதிகா வந்து ...மேடம் என கூப்பிட்ட பிறகு தான் , சுய நினைவுக்கு வந்தாள்.... அர்ச்சனா .
"என்ன மேடம்.... டயர்டா இருக்கீங்களா..?"
"ஒன்னும் இல்ல. சும்மாதான்."
"அந்த போட்டோவை நேற்று ஈவினிங், கந்தன் பிரேம் செய்து கொண்டு வந்தான். அதை உடனே, நீங்க சொன்ன இடத்துல, மாட்ட சொல்லிட்டேன் மேடம் .சரியா இருக்கா மடம்..?"
"ம்...ஓகே ."
"இந்த ஃபோட்டோ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா மேடம்..?"
"எஸ்... நான் வரைந்தது.."
"ரொம்ப நல்லா வரைந்து இருக்கீங்க மேடம்."
..ம்.. ஒரு புன் சிரிப்பு.
( நான் கடந்து வந்த பாதையை என்றும், மறக்கக்கூடாது என்பதற்காக ,இதை மாட்டச் சொன்னது , ராதிகாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.)
"மேடம்....உங்கள பார்க்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க மேடம். உங்க பிரண்டு பிரியா...வாம். அவங்க அம்மா கூட வந்திருக்காங்க... முதலில் அவங்கள வர சொல்லட்டுமா...?"
"இல்ல.. வரிசைப்படியே அனுப்புங்க ராதிகா..."
"எஸ் மேடம்..."
முற்றும்.
*********************************************************************
002.உயிர் மூச்சு
இனி எனக்கு யாருமே இல்லையா... ? 16 வயது சுந்தரி என்ற நான், இவ்வுலகில் இனி தனித்து விடப்பட்டு விடுவேனா...!!! அனாதையாய் அலையப் .... போகிறேனா ? என் பள்ளி படிப்பு அவ்வளவுதானா...!!! என் வாழ்க்கை பயணம், இனி கரடு முரடு தானா...?
ஆள் அரவமற்ற காட்டுக்குள் , கொடூர மிருகங்களுக்கு நடுவில் , தனித்து விடப்பட்டவளாய் , ஒரு நொடி உணர்ந்தவள், சட்டென்று சுதாரித்துக் கொண்டு, இனி என்ன செய்வது என சிந்தித்தாள்.
அம்மாவின் மூச்சுத் திணறல் அதிகரித்துக் கொண்டே ..... செல்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகி, இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.
டாக்டரிடம் "அழுது ஆர்ப்பாட்டம் " செய்து விட்டாள். அவர்களும் முயற்சித்தார்கள். எங்குமே ஸ்டாக் இல்லையாம்.
தெரிந்தவர்களிடம், தனியார் ஏஜென்சி மூலம், முயற்சிக்க சொல்லியாகிவிட்டது. ஒரு பலனும் இல்லை. அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள்.
இனி நான் என்ன செய்வேன்...!!! எங்கிருந்து வந்தது இந்த கொரோனா.? ஏன் வந்தது.??? உலகையே ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறது.?? திட்டமிட்டு , பரப்பப்பட்ட வைரஸ் என சொல்கிறார்களே..!!! உண்மையா..??
ஐயோ...இரண்டாவது அலையில், கொத்துக்கொத்தாய் மரணிக்கிறார்களே. பக்கத்து வீட்டில் போன வாரம், அம்மா ,அப்பா ,மகன் மூவரும் பலியானார்களே...!!!
நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது சுந்தரிக்கு.
இன்னும் எவ்வளவு நேரம் , அம்மாவின் உயிர் ...அவள் உடலில் இருக்கும் ,என தெரியவில்லை. அம்மாவும் போய் விட்டால்... நான் எப்படி இந்த கொடூர உலகில்... இந்த வயதில்...
கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை சுந்தரிக்கு.
"ஏதாவது செய்தாக வேண்டும். ...என் அம்மா உயிர் பிழைத்தே ....ஆக வேண்டும். "
உலகின் அத்தனை தெய்வங்கள்யும் வேண்டிக் கொண்டாள் சுந்தரி. ஏதோ ஒரு வழியில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்து விடாதா..!!! அம்மா மீண்டு வந்து விட மாட்டார்களா..!!!
மின்னல் வேகத்தில் அடுத்த தெரு , கவிதா அக்காவின் , ஞாபகம் வந்தது. போன் செய்தாள். சுந்தரிக்கு வார்த்தைகள் வரவில்லை. அழுகை மட்டுமே வந்தது. சொல்லுவதற்குள் நெஞ்சு அடைக்கிறது. மூச்சு முட்டுகிறது...!!!
ஒருவாரு சமாளித்து, விஷயத்தை சொன்னாள். இன்னும் ஒரு மணி நேரம் கூட அம்மாவால் தாங்க முடியும் என தோன்றவில்லை.. அக்கா...
அம்மா கடைசி கட்டத்தில் இருக்கிறாள். எப்படியாவது , ரமேஷ் அப்பாகிட்ட சொல்லி சிலிண்டருக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்க அக்கா. செய்தே ஆகவேண்டும் அக்கா...... எவ்வளவு ரூபாய் என்றாலும் பரவாயில்லை அக்கா......
ஐயோ...அப்படியா...!!! சிலிண்டர் தீர்ந்து விட்டதா..!!!கவலைப்படாத சுந்தரி. நான் அவர்கிட்ட சொல்றேன் . நாங்கள் உங்க அம்மாவிற்கு, அவர் எங்களுக்கு செய்த உதவிக்கு, ரொம்பவும் கடமைப்பட்டுள்ளோம்.
கவிதா அக்காவின் கணவர் , அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரி பொறுப்பில் உள்ளவர்.
அப்பா இறந்து, ஒரு மாதம் கூட ஆகவில்லை . அப்பாவிற்கு காரியம் செய்து விட்டு, இப்போதுதான் உறவினர்கள் ஊர் போய் சேர்ந்துள்ளார்கள். எவ்வளவு முயன்றும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அம்மாவையாவது காப்பாற்றியே தீர வேண்டும். இல்லையெனில் நானும் அவர்களுடனே போய் சேர வேண்டும்.
அம்மாவின் மூச்சுத் திணறலை பார்க்க சகிக்கவில்லை .இந்த வேதனையை பார்ப்பதே பெரிய வேதனையாய் இருந்தது. அம்மாவின் கையை நான் அழுத்தி, பிடித்துக் கொண்டிருந்தேன்.
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள காற்று.. சுத்தப்படுத்தப்பட்டு, புட்டிக்குள் அடைக்கப்பட்டு, உயிர் மூச்சாய், ஒரு லட்சம் ,இரண்டு லட்சம் என விற்கப்படுகிறதே...!!! அதுவும் கிடைக்கவில்லையே....!!!
மருத்துவமனையின் சூழல் ,சுந்தரிக்கு ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்திக் கொண்டே.... இருந்தது. ஒரு பக்கம் மகனை காப்பாற்ற அம்மா..., மறுபக்கம் கணவருக்காக மனைவி.... ,மற்றொரு பக்கம் அப்பாவிற்காக மகன் ...., என மருத்துவமனையில், வாடி வதங்கிய... முகத்தோடு பலர் தவித்துக் கொண்டிருந்தார்கள்..
மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மத்தியில் ,போதுமான ஜன்னலும், இயற்கைக் காற்றும் இல்லாத நிலையில்,...
அம்மாவை வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா?. ...புங்க மரத்தடிக்கு அழைத்துச் செல்லலாமா? டாக்டர்கள் விடுவார்களா.? இப்படி சாவதை விட , புங்க மரத்தடிக்கு சென்றாலாவது , நல்ல காற்று கிடைக்குமே. கொஞ்சம் மூச்சு விட முடியுமோ.....!!!! அம்மா உயிர் பிழைத்தாலும் பிழைக்கலாம்...... சாத்தியம் இருக்கு.... மனதில் பலவித குழப்பங்கள்.
மரங்களின் மகத்துவத்தினை மக்கள் உணர்வதே இல்லை.
அம்மா கை அசைக்கிறாள்.... ஏதோ சொல்ல வருகிறாள்.... மூச்சு முட்டுகிறது.சொல்ல முடியவில்லை.
என் அம்மா.... இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பது, அப்பட்டமாக தெரிகிறது.
"டாக்டர்."............ மருத்துவமனையே அதிர்ந்து போனது. சுந்தரியின் கதறலை கண்டு. வாழ்க்கையின் எல்லைக்கே சென்று விட்டாள் சுந்தரி. டாக்டர் , நர்ஸ் ஓடி வந்தார்கள்.
"என் அம்மா பிழைத்தே.... ஆக வேண்டும் டாக்டர் .ஏதாவது செய்யுங்கள் டாக்டர் ...ஏதாவது செய்யுங்கள்.... என்று டாக்டரி ன் காலை பிடித்து கதறினாள். மன்றாடினாள். அருகில் நின்ற அனைவரும் கண் கலங்கினர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லையே... என்னம்மா செய்வது. என்னால் முடிந்தவரை முயற்சித்து விட்டேன் சுந்தரி.
அந்நேரத்தில் சுந்தரியின் போன் ஒலித்தது. எதிர்பக்கம் கவிதா. அக்கா...... என அலறினாள் சுந்தரி.
கவலைப்படாத சுந்தரி. சிலிண்டர் கிடைச்சிருச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த ஆஸ்பத்திரிக்கு வந்துரும்.
அதுவரைக்கும் அம்மாவின் உயிர் தாங்குமானு... தெரியலையே அக்கா... சீக்கிரம் வரச் சொல்லுங்க.... அக்கா.
போனை வைத்தாள் சுந்தரி. டாக்டரின் காலை மறுபடியும் பற்றினாள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வந்துவிடுமாம் டாக்டர். அதுவரை என் அம்மாவின் உயிரைக் காப்பாற்றுங்கள் டாக்டர்....
டாக்டர் செய்வதெரியாது திகைத்து நின்றார். அந்த அம்மாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதே.
சுந்தரியின் காதறலையும்... ஆதரவற்ற நிலையினையும் அறிந்த ஒரு தாய், தன் கணவரின் சிலிண்டரை சற்று நேரத்துக்கு தானம் தர முடிவு செய்து, டாக்டர் ....என் கணவரின் சிலிண்டரை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த சிலிண்டர் வரும் வரை. பரவாயில்லை.. அவரை பார்த்துக் கொள்ளலாம் . நாங்கள் எங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டோம்.
பாவம் ...அப்பாவை இழந்த பொண்ணு...!!! அம்மாவாவது....
டாக்டர் பம்பரமாய் சுழன்றார்.
சுந்தரி கண்களை மூடிக்கொண்டாள். என் அம்மாவின் கடைசி மூச்சுக்கு முன், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட வேண்டுமே ...!!! இறைவா.... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் போனது. பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் துணைக்கு அழைத்தாள் சுந்தரி.
கண் முன் பசுமையான வேப்ப மரங்களும், புங்க மரங்களும், மா மரங்களும், மற்ற அடர்ந்த அனைத்து மரங்களும், அப்பப்பா , உயிர் மூச்சினை, இப்பிரபஞ்சத்தில் பரப்பி வியாபித்துக் கொண்டிருந்தது. அம்மா ... அங்கு சுகமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
யாரோ... தன்னை தொடுவதை உணர்ந்த சுந்தரி , திடுக்கிட்டு, கண் விழித்தாள்.
எதிரே......டாக்டர் . அவர் முகத்தில் புன்னகை.
சுந்தரியின் முகத்தில் பிரகாசம்.
அம்மாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சுவாசம் சீராக போய்க்கொண்டிருந்தது.
ஓடிச் சென்று அம்மாவின் முகத்தில் முகம் புதைத்தாள் சுந்தரி . அம்மா வாசம்.... இனி என்றும் எனக்கே எனக்கு..!!!
சுந்தரி டாக்டரின் காலை தொட்டு... நன்றி தெரிவித்துவிட்டு , திரும்பினாள். கவிதா அக்கா கூறிய சிலிண்டர் வந்து கொண்டிருந்தது. தானம் தந்த அந்தத் தாயின் முகத்தில் மகிழ்ச்சி.
******************************************************************
003.சுருட்டு தாத்தா
அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது. சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என நல்ல வியாபாரம் . சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின் முதலாளி சுருட்டு தாத்தா. ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர்.
ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி. தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம் சிலரிடம். . ஓய்வு நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார். பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.
"தாத்தா ... தாத்தா ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்."
"இந்தா பேராண்டி எடுத்துக்கோ. " அன்போடு கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.
"என்ன தாத்தா . எப்படி இருக்கீங்க? .ஒரு சொக்கலால் பிடி கட்டு."
ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ?ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து ,இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி. உரிமையோடு கூறுவார்.
சரிங்க அய்யா. வேலை இல்லையினா, இந்த பக்கம் தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம். . வரேன் அய்யா."
"போய் வா தம்பி."
"தாத்தா ... தாத்தா... எங்க அம்மா... கம்பெனியிலிருந்து வர லேட் ஆகும் . நாளைக்கு ...நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க, கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்."
"அதுக்கு என்ன பேராண்டி... எடுத்துட்டு போ .உனக்கு இல்லாததா.!!"
மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா.
"அய்யா இரண்டு "கோல்டு பிளேக் " சிகரெட் பாக்கெட்."
தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட். முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து விட்டு, கீழே குனிந்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து ... "பழைய பாக்கி என்ன ஆச்சு ." இது தாத்தாவின் கேள்வி.
அசடு வழிந்தவன்... "அடுத்த வாரம் தந்துடறேன்"
"இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ. இப்போ நடையை கட்டு... என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு கிளம்பினான்.
"வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து வாங்க துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது .ஒரு வேலைக்கும் போகல. ஊரை சுத்திகிட்டு சிகரெட் குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற.." தனக்குள் , ஆனால் அவனுக்கு கேட்கும் படி ,முணுமுணுத்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு சிறுவன் ஓடி வந்தான் . தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க தாத்தா.
தாத்தா அவனைப் பார்த்து விட்டு , தண்ணி தாகமா இல்ல பசியா..? சும்மா சொல்லு.
அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான்.
தாத்தா நிலைமை புரிந்து , ஒரு மாம்பழ ஜூஸ் பாட்டிலும் ,ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.
அச்சிறுவன் வேண்டாம் தாத்தா... வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும்.
பரவாயில்ல பேராண்டி .சாப்பிடு நல்லா சாப்பிடு. சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார்.
இட்டார் பெரியோர் . சிலருக்கு ,சில நேரங்களில் , இடாதோரும் பெரியோரே.
முற்றும்.
************************************************************************
004.தாய் மனம்
தியேட்டரில் என் மகனின் படத்தை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு , அழுகையை அடக்க முடிய வில்லை.
(என்ன புரியவில்லையா? என் மகன் விஜய் புகழ் பெற்ற நடிகன். அவனின் படத்தை தியேட்டரில் பார்க்கத்தான் மகிழ்ச்சியோடு ,யார் கண்ணிலும் படாமல் ,படம் ஆரம்பித்தவுடன் , இருட்டில் தியேட்டருக்குள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவனின் அப்பாவுடன்)
படத்தில் என்னமாய் ....பாசத்தை காட்டுகிறான் அம்மாவிடம்... பார்க்க பார்க்க என் மனசு வலித்தது. என் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர்.
பக்கத்தில் இருந்த என் கணவர் என்னை அதட்டினார்... "தெரியும்...நீ இப்படி தான் உணர்ச்சி வசப்படுவாய் என்று. யாராவது அடையாளம் தெரிந்து, கவனிக்கப் போகிறார்கள்.. என் மானத்தை வாங்காதே."
நான் அழுதது படத்தில் என் மகன் நன்றாக நடிக்கிறானே என்பதற்காக, பெருமைப்பட்டு , வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல . படத்தில் நடிக்கும் அந்த அம்மாவிடம்... அவன் காட்டும் பாசத்தில் , ஒரு கடுகளவு கூட , இப்போது அவன் என்னிடம் காட்டுவதில்லையே ..!!! என்ற என் ஆதங்கம் அழுகையாய் மாறிவிட்டது.
என்னுடன் அன்பாய் பேசி , சிரித்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு போன் கூட இல்லை . நல்லா இருக்கியா..? உடம்பு எப்படி இருக்கு..? சாப்டியா ..?ஒரு வார்த்தை. ம். இல்லவே இல்ல . என்னுடன் பேச அவனுக்கு நேரமே இல்லை . அவ்வளவு பிஸி..!!
ஒரே ஊரில் தான் இருக்கிறோம் . சென்னையில் அவன், மனைவியுடன் தனியாய் வசிக்கிறான் . மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூட.. வீட்டுக்கு வந்து எங்களை பார்க்க , அவனுக்கு நேரமில்லை.
அவனுடன் அன்பாய் பேச, அவனை மடியில் சாய்த்து அவன் தலையை கோதி விட , அவன் விரும்பி சாப்பிடுகிற உணவை சமைத்துக் கொடுக்க , ஏன்..? அவன் மீது சாய்ந்து கொள்ள கூட தான், இந்த தாய் மனம் ஏங்குகிறது. என்ன இருந்து , என்ன பயன்...? பெரிய பங்களா. ஆடி கார். ஆனால் மனசுக்கு ஆறுதல் இல்லையே. பேரக் குழந்தைகளை கூட பார்த்து கொஞ்சுவது அரிதாகிவிட்டது.
இதெல்லாம் கூட எனக்கு இப்போது எட்டா கனியாகிவிட்டது . வயதான காலத்தில் நாங்கள் இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறோம்.
தியேட்டரிலாவது அவனை பார்க்கலாம் என்றால்... அப்படத்தின் கதை என்னை மேலும் சோகமாக்கி விட்டது. அவனோட நடிப்பை , அவன் முகத்தை பார்க்க ஆவலாய் வந்தேன் . இங்கு வந்து அழுது கொண்டிருக்கிறேன்.
அவன் உலகம்... ஒரு தனி உலகமாகிவிட்டது ...!!!
படத்தில் அம்மாவாய் நடித்துக் கொண்டிருப்பவரிடம் அவ்வளவு பாசத்தை காட்டி பேசுகிறான்.. என் பையனா இது...? அந்த அம்மாவின் மடியில் முகம் புதைக்கிறான். அன்போடு முத்தம் கொடுக்கிறான்.
சிறு வயதில் அம்மா அம்மா என... என் சேலையை பிடித்துக் கொண்டு திரிந்த என் மகன் , இன்று என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட ஒரு உணர்வு என்னுள்.
நான் போன் செய்தால் ,வை போனை. வேலை இருக்கு எனக் கூறும் அவனின், பேச்சு என் ஆழ் மனதினை என்னவோ செய்கிறது. இன்று அவனின் இத்தகைய நடிப்பினை பார்க்கும்போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரே மகன். என்னுடன் பேசுவதற்கு அவனுக்கு விஷயங்களே இப்போது இல்லையாம். என்ன பேசுவது ..? என்கிறான். அப்படி ஆகிவிட்டது தாய் மகன் உறவு.
படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என.. என் மடியில் படுத்து அழுத என் மகன், இப்போது உன்னுடன் பேச என்ன இருக்கிறது என கேட்கிறான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு ,போன வாரம் வீட்டுக்கு வருவதாய் மருமகள் போன் செய்திருந்தாள். பிறகு வேறு ஒரு வேலை வந்து விட்டது எனக் கூறி வரவில்லை .
அந்த மன அழுத்தத்திற்குப் பிறகே, இன்று ரிலீசான எனது மகனின் படத்தினை ,முதல் நாளே...!! வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் ஆவலிலும் இங்கு வந்தேன்.
ஆனால் என்னால் படத்தை ரசித்து பார்க்க முடியவில்லை . மனது கிடந்து தவித்தது. விஜய்யின் அம்மா நான் ,என பக்கத்தில் தெரிந்தால் , சூழ்ந்து கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் அழுகையை அடக்கிக் கொண்டு ,படம் முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டோம்..
வீட்டுக்கு வந்த எனக்கு இரவு சாப்பிட பிடிக்கவில்லை. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. படத்தில் எனது மகன் விஜய் ..., அந்த நடிக்கும் அம்மாவுடன் பேசிய விஷயங்கள், திரும்பத் திரும்ப என் மணக்கண் முன்னே வந்து கொண்டிருந்தது.
விஜய்யின் அப்பா... நான் அழுவதை பார்த்து , எனது உணர்வுகளை உணர்ந்து ,சிரித்துக் கொண்டிருந்தார்.
லலிதா ...இத்தனை வருஷம் கழித்தும், உன்னிடம் உன் மகன் அன்பு காட்டவில்லை , போன் செய்யவில்லை, உன்னை வந்து பாக்கல, அப்படின்னு இவ்வளவு வருத்தப்படுறியே...!!!
அவன் எவ்வளவு பிசியான நடிகன் . அவனுக்கு எவ்வளவு ரசிகர்கள். எவ்வளவு நண்பர்கள். அவனோட வேலை அது. அதை அவன் செய்து தான் ஆகணும்.
இந்த சினிமா இண்டஸ்ட்ரில , அவன் கால் ஊன்ற எவ்வளவு கஷ்டப்பட்டான் என உனக்கே தெரியும் லலிதா. நீயே அவனோட படம் நல்லா ஓடணும்னு கோவில் கோவிலா போய் வேண்டிகிட்ட...!!! அப்போ நீ போகாத கோயிலே இல்ல. அவன் படம் மிகப்பெரிய வெற்றி அடையணும் என்று , திருப்பதிக்கு போய் மொட்டை கூட அடிச்ச நீ. ஞாபகம் இருக்கா. அவனும் மிகவும் கஷ்டப்பட்டு தான், இந்த நிலைக்கு வந்திருக்கிறான்
அப்படி கஷ்டப்பட்டு கிடைச்ச பெயரை... அவன் நிலை நாட்டணும்மா... வேண்டாமா ? உன் கூட பாசம் இல்லாம இல்ல. அம்மா தானே ... அப்புறம் பேசிக்கலாம் என்ற உரிமை. பிறகு சமாதானப்படுத்திக்கலாம் அப்படின்னு நினைச்சுட்டு இருப்பான்.
அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. பொண்டாட்டி கூட பேசுவானா..? குழந்தைகளை கவனிப்பானா..? நடிக்கிறதை பாப்பானா. .?? அவன் ரசிகர்களோட கேள்விக்கு பதில் சொல்வானா? ரசிகர்களை மதிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.. எவ்வளவோ விஷயங்கள் இருக்கு லலிதா.. அழுகிறதை விட்டுட்டு புரிஞ்சுக்க... ட்ரை பண்ணு.
இந்த வயதில் நீ இப்படி நினைச்சேன்னா ...மருமகளோட நிலைமையை பாரு . மருமகள் கூடவும் பேசுறதுக்கு அவனுக்கு நேரமே இல்லை. எல்லா குடும்ப வேலைகளையும் அவ தலை மேல போட்டுகிட்டு பண்றா.
அங்கே சினிமாவுல, உன் பையன் , காதல் காட்சியில் நடிக்கும் போது , அதை பார்க்கிற மருமகளோட மனசு ,எப்படி இருக்கும்னு நெனச்சு பாரு...!! அப்பாவுக்கு நம்ம கூட டைம் ஸ்பென்ட் பண்ண நேரமில்லையே என என்னும் புள்ளைங்களோட நிலைமையை நினைச்சு பாரு ..!! .நம்ம அப்பா நம்ம ஸ்கூலுக்கு வர்றதில்ல .மத்த அப்பாக்கள் மாதிரி இருக்கிறதில்ல. அப்படின்னு அவங்களுக்கு எவ்வளவு ஏக்கம் இருக்கும்...??? நம்ம மருமகளுக்கு எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும்..?
மருமக, புள்ளைங்க, அவங்களோட வேதனையை பார்க்கும் போது உன்னுடைய வேதனை ரொம்ப சிறியது லலிதா.
லலிதாவின் மனசு லேசானது. புத்தியில் கொஞ்சம் உரைத்தது.
பொதுவா அவனுடன் போன் பேச , எனக்கு தயக்கம். அவனே அம்மாவிடம் பேசவில்லையே என்ற ஆதங்கம் என்னுள். என்ன செய்ய..? இப்போ நானே அவனுக்கு காலையில் போன் செய்தேன்.
தூக்க கலக்கத்தோடு போனை எடுத்த விஜய் , என்னம்மா...எப்படி இருக்க என்றான் . மறுபடியும் என் கண்களில் நீர் முட்டியது. சமாளித்துக் கொண்டு,போன வாரம் நீங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு நீ வரல. நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வா விஜய். சரியா...?
நேத்து தியேட்டரில் போய் உன்னோட அந்த "வைராக்கியம்" என்ற படத்தை நானும் உன் அப்பாவும் சென்று பார்த்தோம்.
ம்..அப்படியா..? எப்படி ஏன் நடிப்பு..? நடிப்பு நல்லா இருந்துச்சா.??
ரொம்ப நல்லா நடிச்சிருக்கப்பா..!!! நான் அழுதுட்டேன். அதுல அந்த... உன்னோட அம்மாவ நடிக்கிற அந்த அம்மா ரொம்ப பாக்கியசாலி.
ஏம்மா அப்படி சொல்ற..!! ஆமா அந்த அம்மா மேல தான், அவ்வளவு அன்பு காட்ற. இந்த அம்மாவை பார்க்கக்கூட உனக்கு நேரம் இல்ல . அதனால தான் சொன்னேன் .
ஏம்மா... இப்படி இருக்க நீ.... ? உனக்கு அறிவே இல்ல. அது நடிப்புமா... இல்லாட்டி எவனும் படத்த பாக்கவே மாட்டான். என் பெயரை தக்க வச்சுக்கணும் இல்ல. என் வேலை அது.. அம்மா என்னோட உண்மையான அன்பு... உன் மேல தாம்மா.
ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா வருவோம் . கோழி வறுவலும் மட்டன் குழம்பும் செய்து வை . வந்து உன் சமையல ஒரு பிடி பிடிக்கனும். உன் கையால சாப்பிட்டு ,ரொம்ப நாள் ஆச்சு.
நான் அழும் சத்தம் அவனுக்கு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக போனை உடனே கட் செய்து விட்டு, கண்ணீரைத் துடைத்தேன். நான் சகஜ நிலைக்கு வர அரை மணி நேரம் ஆனது.
விஜய்யின் அப்பா என்னை கிண்டல் அடித்தார் . என்ன மகனோட பேசியாச்சா..? மனசு சமாதானம் ஆயிடுச்சா ...? இதுதான் நிஜம். அது சினிமா. உன் மருமகள் பரவாயில்லை .சினிமாவை சினிமாவாய் பார்க்க கற்றுக் கொண்டு விட்டாள் .உன்னால் அது முடியவில்லை.
தாய் மனம் தவித்தாலும், இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் அமைதியானது. ஆம்...அது சினிமா .
முற்றும்.
********************************************************************************************************************************
005. இரத்தக்களறி
- இரா.கலைச்செல்வி
"அம்மாடி... எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. இப்படியா.... செய்வானுங்க. எனக்கு ஐந்தடி தூரத்தில.... நட்ட நடு ரோட்டுல ....கார்ல உட்கார்ந்து இருந்தவரை புடிச்சு இழுத்து.... .ரோடு பூராவும் ....ஒரே இரத்தக்களறியா இருக்கு."
"வந்தவனுங்க..... வந்த வேகத்துல காரில் சிட்டா பறந்துட்டானுங்க. ஐயோ.... சினிமாவுல நடக்குற மாதிரியே இருக்கே."
புலம்பியபடியே பக்கத்தில் உள்ள தெருவுக்கு போய்' ஒரு வீட்டின் வாசற்படியில் அமர்ந்தாள் ரேணுகா.
"அம்மா .....கொஞ்சம் தண்ணி குடுமா... ஒரே....மயக்கமா வருது. இப்படியா பண்ணுவாங்க. படுபாவி பயலுக" .
"என்னம்மா... என்ன ஆச்சு...? "
"ஏன்... கேக்குறீங்க ....போங்க...". கொஞ்சம் பத்தடி தள்ளி... ரோட்ல போய் பாருங்க ....அந்த ரத்தக்களரிய.
அப்போதுதான் அந்த தெருவிற்கே தெரிந்தது . ரோட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.
செய்தி காட்டுத்தீயாய் பரவியது. தெருவெல்லாம் ஒரே பரபரப்பு. . இப்படியா பண்ணுவானுங்க ...!!! பட்ட பகல்ல.... ரோடு எல்லாம் இரத்தம். பார்க்க முடியல .
"என்ன ஆச்சு... என்ன ஆச்சு... " பலரும்.
நம்ம பஞ்சாயத்து தலைவரைத் தான்... வெட்டி போட்டுட்டு ஓடிட்டானுங்க.
"அடக்கடவுளே... இவரையுமா...??? "
அந்த பழைய தலைவர் அம்மாவா... பொம்பளையுனும் கூட பாக்காம... பஞ்சாயத்து ஆபீஸ்லயே... வச்சு வெட்டுனானுங்க. இரண்டாவது தலைவரை... அவர் வீட்டிலேயே வச்சு வெட்டுனானுங்க. இப்போ மூணாவதா இவரையும்.... இப்படி நட்ட நடு ரோட்டில கொலை பண்ணிட்டாங்களா...!!!
"என்னதான் நடக்குது இந்த ஊர்ல...!!! "
எல்லாம் ரியல் எஸ்டேட் தகராறு தான். பஞ்சாயத்து தலைவர் ஆனவுடன்... அதிகாரம் இருக்குதுன்னு ஊர்ல உள்ள ...பொறம்போக்கு நிலத்த எல்லாம் பட்டா போட்டு ... இஷ்டத்துக்கு விக்கிறாங்க. காசு... கொள்ளை காசு வருது. அதுல வர்ற பங்கு தகராறு தான்... வேற என்ன...??
"நம்ம ஊருக்கு .. ரோடு போட கவர்மெண்ட் கொடுக்கிற பணத்தையும் ...பொய் கணக்கு எழுதி .. அங்கே ரோடு போட்டேன் ...இங்கே ரோடு போட்டேன்....ன்னு சொல்லி வாயில போட்டுக்கிறாங்க. "
"தெரிஞ்சவன் சும்மா இருப்பானா....??? எனக்கும் பங்கு வேணும்னு கேட்பான்..!!! குடுக்கலைன்னா வெட்டு."
இவங்களுக்கு கொஞ்சம் கூட ....உயிர பத்தி கவலையே இல்லையே.
முன்னாடி ரெண்டு பேரையும் தான் வெட்டுனாங்களே...!!!. இப்பவாவது கவனமா இருக்கணும்னு நினைச்சாங்களா ..!!!. காசை வைத்து என்னத்த பண்ண போறாங்க...??? இப்போ உயிரே போச்சே...!!!... இப்படி சிலர்.
இனிமே இந்த ஊருல பஞ்சாயத்து தலைவரா யாரும் நிக்கவே மாட்டாங்க..!!! அடுத்தடுத்து மூன்று உயிர் போயிடுச்சே. இது பலரின் அங்கலாய்ப்பு.
இந்த ஊரை நினைச்சாலே பயமா இருக்கு... ஏன் இவனுங்க இப்படி இருக்காங்க ...??.கொலை செய்ற அளவுக்கு..!!! பேசி தீர்க்க முடியாதா..??
ஒன்னும் புரியல .ஒரு கொலையா... ரெண்டு கொலையா ....மூனு கொலை...!!! மூனு பஞ்சாயத்து தலைவர்களையும் வெட்டி சாய்ச்சுட்டாங்களே.. ..!!! புலம்பித் தீர்த்தாள் ரேணுகா.
"பஞ்சாயத்து தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்யவா வர்றாங்க .??.சொத்து சேர்க்கிறதுக்கு தான் வர்றாங்க. இப்படி உயிரே போகுது. உயிரை விட சொத்து தான் பெருசா போச்சு. .பதவிக்கு வராங்க.... ஊரெல்லாம் வளைச்சு போடுறாங்க. மத்தவங்களுக்கு பகையாளியா மாறிடுறாங்க... !!! எப்ப தான் இந்த ஊருக்கு நல்ல காலம் வருமோ..? இது ஊர் மக்கள்.
மூன்று பஞ்சாயத்து தலைவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு விட்டநிலையில் இனியாவது... யாராவது உண்மையில் சேவை செய்யும் மனப்பான்மையோடு பஞ்சாயத்து தலைவராக வருவார்களா என்ற ஏக்கம்... அந்த ஊர் மக்களுக்கு.
யாரும் நல்ல மனிதர்கள் தேர்தலில் நிற்பதே இல்லை. கட்சிக்கு எவன் காசு கொடுக்கிறானோ அவனுக்கு சீட்டு. ஓட்டு யாருக்கு போடுறதுன்னே... தெரியல. மூஞ்சியிலயே ரவுடி..ன்னூ எழுதி ஒட்டி இருக்கு .எவனுக்கு ஓட்டு போடுவது. பலரின் ஆதங்கம் இதுதான்.
வீட்டு வரி அவ்வளவு கட்றோம். 15 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ரோடு. குண்டும் குழியுமா இருக்கு. நடக்கவே முடியல..!!! . ரோடு போட சொல்லி எத்தனை தடவை தான் மனு கொடுக்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்ல...!!!
எதுக்கு வரி கட்டணும்....??? வரி கட்டுவது நம்மளோட கடமை தான்.. அப்ப அவங்க கடமையை அவர்கள் செய்ய வேண்டாம்...!!! ஆத்திரமா வருது...!!! புவனா புலம்பி தீர்த்தாள்.
எலக்க்ஷன் வருதுன்னா மட்டும்... எவ்வளவு ரூபாயை வேஸ்டா செலவழிக்கிறாங்க..!!! மேள தாளம் ...நோட்டீஸ்... விளம்பரம்... கட் டவுட்... மேடைப் பிரச்சாரம். இப்படி எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறாங்க...??? அந்தப் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தினா திரும்ப திரும்ப அவனுக்கு தானே ஓட்டு போடுவாங்க...?? இது தெரியாதா..????
இறைவா ....இந்த ஊருக்கு ஒரு நல்ல காலம் பிறக்கணும்...!!! இப்படி ரேணுகாவின் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு வருடம் ஆனது . அடுத்த பஞ்சாயத்து தேர்தல் .இந்த தேர்தலில் கொலை செய்யப்பட்ட தலைவரின் மனைவி கமலா போட்டியிட போவதாக தகவல்.
அனைவருக்கும் ஆச்சரியம் .இத்தனை கொலை நடந்த பிறகும்மா...!!! கணவர் இறந்தும் கூடவா...!!! ஊரைவித்து உலையில போட்டவங்க .இருக்கிற காசு பத்தாதா...??? கட்சிக்கு எத்தனை கோடி கொடுத்தாங்களோ...!!! ஊரே பதறிப்போனது.
தேர்தலுக்கு பத்து நாள் இருக்கின்ற நிலையில்... கமலாம்மா ... வாக்கு சேகரிக்க புறப்பட்டாள்.
கமலாவின் பேத்தி ..."பாட்டி பாட்டி எலக்சன்ல நிக்காதீங்க..தாத்தா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆயிரும். வேண்டாம் நீங்க வீட்டிலேயே இருங்க." புடவையைப் பிடித்துக் கொண்டு ..... பாட்டியை போக விடவில்லை பேத்தி.
கமலாவின் மகன் சீக்கிரம் கிளம்புமா..!!! .அதுக்கு என்ன.? பவித்ரா முதல்ல உள்ளே போ. அதட்டினான்.
12 வயது பவித்ரா போச்சு... போ... எனக் கையை ஆட்டிக்கொண்டே உள்ளே போனாள்.
அம்மா ... வாமா...என அவசரப்படுத்தினான் ...அடுத்து தலைவராய் வலம் வர போகும் கற்பனையில், அவளின் 45 வயது மகன்..
அம்மா.... பேருக்கு தானே தலைவி . அதிகாரம் செலுத்தப் போவது நாம் தானே... என்ற நினைப்பு இவனுக்குள்....!!!
காசு கொடுத்து வரவழைத்திருந்த 20 பெண்கள் புடைசூழ... கமலாவை நடுவில் நிற்க வைத்து ...மேள தாளத்துடன் ...ஓட்டு கேட்க... பயணம் தொடர்ந்தது.
கமலா.... இந்த தடவை நான் வெற்றி பெற்றால்.... இந்த ஊர் மக்களுக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து , என் கணவர் செய்த பாவங்களுக்கு ... பிரயாச்சித்தம் செய்தே ஆக வேண்டும் ...!!! என்ற ஒரு திடமான முடிவோடு... பிரச்சார பயணத்திற்கு ....காலடி எடுத்து வைத்தாள்...!!!
முற்றும்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
006.நான் ஏன் இப்படி...???
- இரா. கலைச்செல்வி
ஆம். அவள் கிடத்தப்பட்டுள்ளாள். ஐஸ் பெட்டிக்குள்... அசைவின்றி கிடக்கிறாள். அவள் வாய் ... துணியால் கட்டப்பட்டுள்ளது. அவள் போய் விட்டாள்.
ஆம். என்னை விட்டு போயே போய்விட்டாள். வாழ்ந்து முடித்து போய்விட்டாள். இல்லை. அவள் வாழாமலே போய்விட்டாள்.
ஆம். அவளும் இவ்வுலகில் சந்தோஷமாய் வாழத் தானே பிறந்தாள். ஆனால் நான்…நான்… அவன் மனசு விம்மியது.
திருமணம் என்ற ஒரே பந்தத்திற்காக ...உன் அத்தனை ஆசைகளையும் , விருப்பங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டேனே நான். சமையல் கட்டுக்குள்ளேயே உன்னை முடக்கி விட்டேனே…!!! ஏன் நான் இப்படி…..? விழ இருந்த கண்ணீரை விழாமல் இருக்க பெரும் முயற்சி செய்தான் கணேஷ்.
எத்தனை தவிப்பு…. உனக்குள் இருந்திருக்கும். எத்தனை தடவை என்னிடம் கெஞ்சி இருப்பாய். கல்லாய் இருந்து விட்டேனே. நான் முறைக்கிற முறைப்பிற்கும், கத்துகிற கத்தலுக்கும் ... பயந்து ... உனக்குள்...ஒடுங்கி போனாயே…!!!
இன்று என் மனம் கனத்து கிடக்கிறது.. நான் ஏன் அப்படி செய்தேன்....? அவளுக்கு எது சந்தோஷமோ அதை ஏன் நான் அனுமதிக்கவில்லை....? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தோஷம். சிலருக்கு பாடுவதில் சந்தோஷம். சிலருக்கு ஆடுவதில் சந்தோஷம். சிலருக்கு பேசுவதில் சந்தோஷம். அந்த உயிரில் அமைந்த இயல்பு அது…. அதை தடுக்க மற்றவருக்கு என்ன உரிமை…???
சிலருக்கு சில திறமைகள இயல்பாய் அமையும். கணவர் என்ற ஆணவத்தில், நான் உன் ஆசையை , திறமையை அலட்சியப்படுத்தி விட்டேனே…!!!
இந்த நிலையில் வருகின்ற ஞானோதயம்… ஏன் நீ கெஞ்சிய போது வரவில்லை. எனக்குள் உள்ள கணவன் என்கின்ற அகம்பாவம். ஈகோ.
உயிருடன் இருக்கும் போது அன்பு செலுத்துவதில்லை. இறந்த பின்பு போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது எவ்வளவு கேவலம்….!!! எவ்வளவு வேஷம். நான் தவறு செய்து விட்டேனே…!!! இன்று அனாதையாய் தவிக்கிறது என் மனசு.
அவளின் சங்கீத ஞானம். அந்த ஆர்வம். எனக்கு இல்லையே. . என்ன குரல் வளம்....!! என்ன இனிமை...!!! காது குளிர கேட்டுக் கொண்டே இருக்கலாம்...!!! ஆனால் ஒருநாளும் அவளை பாடப் சொல்லி நான் ரசித்ததே இல்லை. ஒரு நாளும் அவளை நான் பாராட்டியதே இல்லை.
நான் இல்லாத நேரத்தில், அவள் ஆனந்தமாய் பாடுவாள். அவளுக்குத் தெரியாமல் நான் ரசித்திருக்கிறேன். அவளின் குரல் வளத்தைக் கண்டு, நான் வியந்து போய் இருக்கிறேன்.
ஆனால் அவள் குரல் வளத்தினை மற்றவர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே , அவளை பலவாறு இம்சித்திருக்கிறேன். முகம் கொடுத்து பேசாமல் இருந்திருக்கிறேன். சிறு திருமண நிகழ்ச்சிகளில் கூட , அவளை பாட நான் அனுமதித்ததே இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும், நான் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டேனே...!!!
அவள் குரல் இனிமை .அதைவிட அவள் ... பாடல் அமுத கானம் தான்.
இன்று இப்படி ....இவள் வாய் மூடி.... படுத்துக் கொண்டிருக்கிறாளே....!!!
55 வயதில் இப்படி அசைவற்று கிடக்கிறாளே....!!! அந்த அமுத கீதம் பாடிய அந்த வாய் , இப்படி கட்டப்பட்டு.... கிடக்கிறாளே....!!!
அவளை பாட அனுமதித்திருந்தால், இன்றைக்கு ஒரு பி . சுசிலாவாகவும், வாணி ஜெயராமுவாகவும், ஒரு ஜானகியாகவும், ஏன் அவர்களுக்கு மேலும் ,ஆகியிருப்பாள். இன்று தமிழகமே துக்கம் அனுசரித்து இருக்கும் .
ஆனால் இன்று ஒரு 100 பேருக்கு மட்டுமே தெரிந்தவளாய் இந்த உலகத்தினை விட்டு விடை பெற்று செல்கிறாள்…!!!
அவளை அனுமதித்திருந்தால், இன்று பார் போற்றும் பாடகியாய் இருந்திருப்பாள். இவ்வளவு சீக்கிரம் உலகை விட்டுப் போயிருக்க மாட்டாள். அவள் அவளவில் நிறைவான வாழ்வு வாழ்ந்திருப்பாள்.
ஆனால் என்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற நினைப்பு என்னுள். அதனாலேயே அனுமதிக்கவில்லை நான். நான் சாதாரணமானவனாய் இருந்து, அவள் , அனைவரும் போற்றும் பாடகியாய் இருப்பது என்னால் நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. அவள் சாதாரண குடும்பப் பெண்ணாய் இருப்பதைதே நான் விரும்பினேன். அதனாலயே அவளை நான் முடக்கி விட்டேன்.
இன்று அவள் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்ககூடும்.. செய்தித்தாளில் முக்கிய செய்தியாய் முதல் பக்கத்தில் வந்திருக்கும் . ஆனால் இவை ஏதும் இன்றி , அவள் வாய் கட்டப்பட்டு ...இன்று மிகச் சாதாரணமான மனிதப்பிறவியாய் யாருக்கும் தெரியாமல் இவள் மறைந்து போக போகிறாள்.. இவள் புதை குழிக்குள் போகப் போகிறாளே.
ஜயோ... மகா பாவி நான்…!!!
நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்..???. அவளின் சந்தோசத்தை அழித்து என் சந்தோசத்துக்காக அவளை கொலை செய்துவிட்டேனே.
நான் ஒரு கொலையாளி…!!!. கொலையாளியே தான்…!!! மனைவியே என்னை மன்னித்துவிடு.
திடீரென்று அவள் வாய் திறக்கப்பட்டு, அவளின் குரல்வளையில் இருந்து ஏதோ அசைந்து வாய் வழியே ஒரு ஒளிப்பிழம்பு பீறிட்டு வெளியேறுவதைப் போல ஒரு கணம் உணர்ந்தான்.
என்ன இது... இது நிஜமா...? பிரமையா...? அவள் வாய் ஒரு கணம் திறந்தது போல் இருந்ததே....ஏதோ. ஒரு ஒளிபோல்....சீ..... என்ன இது. நிஜமாய் நடந்தது போல் இருக்கிறதே…!!!
சிறிது நேரம் சற்று குழம்பி…. வியந்து போன…. கணேஷ். இயல்புநிலைக்கு வந்து, ஆகவேண்டிய காரியங்கள் முடிந்து, இறுதி சடங்கு முடிந்து , உறவினர்கள் எல்லாம் அவரவர் இல்லம் போய் சேர்ந்தாகிவிட்டது.
வீட்டில் வெறுமை ஆட்கொண்டது. எப்போதும் மயான அமைதி . ஆனால் அவ்வப்போது அவளின் அமுத கானம் மட்டும் … என் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
வருடங்கள் உருண்டோடின.
எட்டாவது படிக்கும் என் பேத்தியின் குரலும் அவள் குரல் போலவே இனிமையாக இருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு பாடலை பாடி கொண்டே இருக்கிறாள்.
மகன் ரவியும் தன் மகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்க ஆர்வம் காட்டினான். ஸ்கூல் முடிஞ்சு தினம் பேத்தியை பாட்டு வகுப்பிற்கு அழைத்து செல்வது இந்த தாத்தாவின் வேலை.
இவளை நிச்சயம் சிறந்த பாடகியாய் உருவாக்கி விட வேண்டும் என்ற நினைப்பு என்னுள் வலுவாக. பேத்தியின் திருமணத்திற்கு முன்பே , அவளை பார் போற்றும் பாடகியாய் ஆக்கிவிட வேண்டும் என தீர்மானித்த அந்த கணத்தில்….
ஏணோ….. சட்ரென்று நினைவு வந்தது , அந்த நிகழ்வு. அன்று தனது மனைவியின் குரல்வளையில் இருந்து, ஏதோ அசைந்து அவள் வாய் வழியே ஒளிபிழம்பாய்........ ஒளிப்பிழம்பு எங்கே போனது....?
நினைவு வந்து சிலிர்த்து போனான் கணேஷ். மனைவியின் குரல் பேத்தியின் குரலாய்…
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
007.இவளா அவன்..?
ஆக்கம். இரா. கலைச்செல்வி,
"ஹாய் சுதா .... இங்க வாயேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் .மதியம் லஞ்ச் டைமில் பேசலாம் . சீக்கிரம் டைனிங் ஹாலுக்கு வந்துவிடு."
"என்னடி ... அப்படி முக்கியமான விஷயம்.
"முக்கியமானது தான். மதியம் சொல்றேன் ."
"ஏன் இப்பவே சொன்னா என்னடி..? இன்னும் டைம் இருக்கே . ப்ளீஸ் சொல்லு சாந்தி ."
"உனக்கு எப்பவுமே ரொம்ப அவசரம் சுதா. ஒன்பது மணிக்கு சீட்டில் இல்லாட்டினா அந்த மேனேஜர் தாம்.. தூம்..ன்னு காத்துவார். அதனாலதான் மதியம் நிதானமா சொல்றேன் சொன்னேன். விஷயத்தை ஆரம்பித்து பாதியிலேயே விட்டேனா உனக்கும் வேலை ஓடாது. எனக்கும் வேலை ஓடாது . காலையிலாவது ஒழுங்கா வேலை செய்வோம் .போடி போய் வேலையை பாரு ."
ரொம்பவும் தான் பொறுமையா சோதிக்கிற நீ. . இன்னும் நாலு மணி நேரம் காத்திருக்கனுமா..? என்று சொல்லிவிட்டு தன் சீட்டிற்கு செல்கிறாள் சுதா .
சிறிய முள் மணி ஒன்றைத் தொட்டதோ இல்லையோ ...சுதா டைனிங் டேபிளை தொட்டுவிட்டாள் .இருப்புக் கொள்ளவில்லை சுதாவிற்கு.
சாந்தி என்ன விஷயம் ? சீக்கிரம் சொல்லுடி. இன்னைக்கு வேலையே ஓடல .
எனக்குத் தெரியும் உனக்கு வேலையே ஓடாதுன்னு . ஒன்னும் இல்ல. நாம இத்தனை நாளா குமுதத்துல வந்த " இவளும் பெண்தான் " என்ற தொடரை விழுந்து விழுந்து படிச்சோமே . அதை எழுதினது கவிவாணன் என்ற ஆண் இல்லை. ஒரு பெண். அதுவும் நம் ஆஃபீஸில் புதுசா சேர்ந்திருக்கிறாளே கவிதா. அவ தான் கவிவாணன் என்ற புனைப்பெயரில் எழுதிட்டு வந்திருக்கா.
உனக்கு எப்படி தெரியும் ..? அது அவ எழுதினது..
எப்படியோ தெரியவந்தது. இப்ப இந்த ஆராய்ச்சி தான் உனக்கு தேவையா..? நான் எப்படி இவ அந்தத் தொடரை எழுதினாள். இவ்வளவு எதார்த்தமா எப்படி எழுத முடிந்தது இந்த சின்ன வயசுல ...? என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ...
"எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு சாந்தி . வயசு 25 தான் ஆகுது. என்னவோ பெரிய அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் எழுதினது மாதிரி இல்ல அந்த தொடர் இருந்தது ..! . இவ நம்ம ஆஃபீஸ்க்கு வந்து நாலு மாதம் ஆச்சு . அன்னிக்கு அந்த தொடரை பத்தி அவகிட்ட அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோமே. நான்தான் அதை எழுதுகிறேன் என மூச்சு கூட விடலையே . பலே ஆளுதான் அவ. இத்தனை நாளா எப்படி ஒரு ஆண் இவ்வளவு எதார்த்தமா ஒரு பெண்ணோட உணர்வுகளை , அதுவும் ஒரு ரெட்லைட் ஏரியாவில் மாட்டிக்கொண்ட பெண்ணோட உணர்வுகளை இந்த அளவிற்கு ஆழமா சித்தரிக்க முடிந்ததுன்னு எனக்கு கேள்விக்குறியாய் இருந்தது. "
"அது சரி சாந்தி ...இவளால எப்படி இவ்வளவு இயற்கையா எழுத முடிந்தது. ஒரு வேலை இவளும் ரெட் லைட் ஏரியாவில் மாட்டி தப்பிச்சு வந்தவளா இருப்பாளோ ..! அதனாலதான் இவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்க முடிஞ்சுதோ..! இவளோட நேட்டிவ் சென்னையின்னு தான் சொன்னா.? யார் கண்டா அங்க எப்படி இருந்தாளோ..!"
சீச்சி... அவளப் பாத்தா அப்படி தெரியலடி. கௌரவமான குடும்பத்து பெண் மாதிரி இருக்கா .நீ வேற எதையாவது உளராதே..
யார் கண்டா அவ்வளவும் நடிப்பா இருக்கும்.
கவிதா தன் மதிய உணவை முடித்துக் கொண்டு , சிறிது நேரம் சாந்தி , சுதாவை பார்த்து இன்றைய செய்திகள் பற்றி , ஏதாவது கொஞ்சம் அலசி விட்டு வருவோம் என்ற நினைப்பில்.. அவர்களை பார்க்கச் சென்றாள். அப்போது தன் பெயர் அடிபடுவதை அறிந்து சற்று நின்று கவனித்தாள். தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என புரிந்து கொண்டு... உற்றுக் கேட்டாள்.
கவிதாவிடம் சும்மா.. அவ கதை எழுதியது நமக்கு தெரியாதது மாதிரி.. எதையாவது பேசி அப்புறம் எப்படி எழுதினாய் என கேட்டு பார்ப்போமா ..? அப்போவாவது சொல்கிறாளா எனப் பார்ப்போம்.
கவிதாவிற்கு அந்த கவிவாணன் நாம்தான் என... இவர்கள் தெரிந்து கொண்டதில் ரொம்பவும் சந்தோஷம் . மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஆனால் அடுத்த வினாடி அவள் இதயம் சுக்கு நூறானது.
என்னத்த சொல்லுவா அவ.... நான் ரெட் லைட் ஏரியாவுல இருந்தவ. என்னோட அனுபவத்தை தான் அப்படியே எழுதினேனா சொல்லுவா .நாம தான் புரிஞ்சுக்கணும்.
கவிதாவிற்கு சம்முட்டியால் நெஞ்சில் ஓங்கி அடித்தது போன்ற உணர்வு .ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது. அவள் சீட்டில் போய் அமர்ந்து கொண்டு, தலை வலிப்பது போல் பாவன செய்து கொண்டு ...முடிந்த மட்டும் மனதுக்குள்ளயே அழுது தீர்த்தாள் . அப்போது அந்த நிகழ்ச்சி அவள் மனத்திரையும் நிழலாடியது.
ஏண்டி ...கவிதா குமுதத்துல இவளும் பெண் தான் என்ற ஒரு தொடர் கதை வருதே. படிச்சிட்டு வர்ரியா.? வாரவாரம் அந்தக் கதையை படிக்கும்போது, நான் அழாமல் இருந்தது இல்லடி. என்னமா ..எழுதுகிறார் அந்த கவிவாணன்!! எப்படி ஒரு பெண்ணோடு மனநிலையை அவ்வளவு தத்துரூபமா உணர்ந்து அவரால் எழுத முடியுதோ தெரியல. இவரு ரொம்ப பேமஸ் ஆக போறார் பாரு . சிலருக்கு ...பிறக்கும் போதே இந்த ஆற்றல் வந்திரும் போல . ரொம்ப சீக்கிரம் இவருக்கு தேசிய அவார்டு கிடைக்கும் பாரு.
அன்று ... அப்படி புகழ்ந்தவன் இன்று அது... நான் எனத் தெரிந்ததும், பெண் என்றதும் எப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.. அட கடவுளே ... சற்று யோசித்தாள் கவிதா.
இவ பேச்சை கேட்டுவிட்டு ...நான் ஏன் வருத்தப்படணும் .வாய் இருக்கு. வந்ததை பேசறா.! . அறிவு இருந்தா... கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பேசி இருப்பாள் .அவளுக்கு பொழுது போகணும் அவ்வளவுதான்.
பொதுவா மத்தவங்க மனதை காயப்படுத்தி... தன் மனதிற்கு குளுமை தேடி கொள்கின்ற போலித்தனம் இப்போ மனித இயல்பா போச்சு. என்ன செய்ய.? . இந்த நிலைமை எப்ப மாறப் போறதோ தெரியல.! . ஆனா அந்த மாற்றம் வரும் வரை நாமதான் எதையும் தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக்கனும். எவ்வளவு ஈசியா சொல்லிட்டா ... ம். வரட்டும் நல்ல பதிலடி கொடுப்போம்.
என்ன கவிதா... சாப்டியா ...என்ற குரல் கேட்டு சிந்தனையில் இருந்தும் மீண்டாள் கவிதா.
"ம். இப்பதான் ."
"எங்களோட வந்து சாப்பிடக்கூடாதா..? "
“உங்களோட வந்து சாப்பிடக்கூடாதுன்னு ஒன்னும் இல்ல . லஞ்ச் டைம் அரை மணி நேரம் தான். இதுல மூணு பேரும் சேர்ந்தோம்னா சீக்கிரம் சாப்பிட மாட்டோம் .எதையாவது பேசி பாதி நேரம் போயிரும். நானா சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமே என்று தான். எதுக்கு தேவையில்லாத எதையாவது பேசி நேரத்தை வேஸ்ட் பண்றோம்ன்னு எனக்கு தோணும். முக்கியமானது ஏதாவது இருந்தா... நானே வருவேனே.”
“அது சரி. நீ பெரிய ஆளு .கதை எல்லாம் எழுதுறவ. எங்களோட பேசுனா அது வேஸ்ட்டா தான் தோணும். இருந்தாலும் இவ்வளவு நாளாகியும் , நான் தான் அந்த கவிவாணன்னு ஒரு வார்த்தை கூட நீ சொல்லவேயில்லை.”
“ஓ... அதைச் சொல்றியா. நீங்களே தெரிஞ்சுக்கிறது தான் எனக்கு சந்தோஷம் . நீ அன்றைக்கு அந்த கவிவாணனை பற்றி அப்படி புகழ்ந்த போது , நான் தான் அந்த கவிவாணன்னு நானே சொல்லி இருந்தா ... தற்பெருமையா தோன்றும். நம்பவும் மாட்டீங்க. சீக்கிரமே நேரம் வரும்போது தெரிஞ்சுக்கட்டும் என்று தான்.”
“சரி கவிதா... நீதான் அதை எழுதினது என்று தெரிஞ்சுட்டது. எப்படி உன்னால் அவ்வளவு ஒரு ரியலா ... உணர்ச்சிபூர்வமா அந்த தொடரை எழுத முடித்தது .எனக்கு நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு கவிதா.”
“இதில் ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு சுதா. நான் தான் ரெட்லைட் ஏரியாவுல கொஞ்ச நாள் இருந்துட்டு ...இப்பதானே தப்பிச்சி இங்க வந்தேன். அதனால தான் அப்படி எழுத முடிஞ்சது.”
சுதா, சாந்தி இருவரின் முகத்திலும் ஒரு திகைப்பு. சரியாய் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவமானம். பதில் சொல்லத் திராணி இல்லாத ஓர் தவிப்பு.
“நான் கொஞ்சம் முன்னாடி உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் இருவரும் பேசியது என் காதில் விழுந்தது. திரும்பிட்டேன். சுதா… இப்ப உன்னிடம் ஒரு கேள்வி கேட்கணும்னு எனக்கு தோன்றது. அன்னிக்கி நீ வாரவாரம் அந்த தொடரை படித்துவிட்டு அழாமல் இருந்தது இல்லடி .எவ்வளவு இயற்கையா இருக்குன்னு சொன்னியே..? கதைகளில் வருகிற காட்சிகளை சம்பவங்களை படிச்சிட்டு .....உனக்கு ஏன் அழுகை வந்தது..? அது இயற்கையாய் இருப்பதாய் எப்படி சொல்ல முடிகிறது உன்னால் .? . ஒருவேளை உனக்கும் அந்த மாதிரி அனுபவம் இருக்குமோ..? .அதை இந்த கதை திரும்ப நினைவுபடுத்துவதைப் போல இருந்ததா..? இல்லாட்டி உனக்கேன் அழுக்கு வருது..? ம்..சொல்லு சுதா.”
சுதா இப்போது உள்ளம் என்ற நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சுதா ...அப்படியே நின்னுட்டே. நீ அந்த கதையைப் படித்த போது உனக்கே தெரியாம ...உன்னோட உள் மனது அந்த பெண்ணோட நிலையில் நீ இருப்பது போல கற்பனை செய்யும். அந்த கற்பனையின் பிரதிபலிப்புதான் அந்த அழுகை .இல்லையா.., ? அது மாதிரி தான் என்னோட மனசும் கற்பனை செய்தது.”
“சாரி சுதா. நான் மனப்பூர்வமா அப்படி கேட்கல. உனக்கு ஏதாவது பதிலடி கொடுக்கணும் , நீ புரிஞ்சுக்கணும்னு தான் அப்படி கேட்டேன் .ஆனா ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு சுதா. அன்னிக்கு கவிவாணனை ஜீனியஸ் என புகழ்ந்தாய். அவருடைய கதை எழுதும் திறனுக்கு தேசிய அவார்டு கிடைக்கும் என்றெல்லாம் புகழ்ந்தாய். இன்னிக்கு அது கவிதான்னு தெரிஞ்சதும் , அதுவும் நான்னு தெரிஞ்சதும்... காலில் போட்டு மிதிச்சிட்டியே. ஏம்மா இப்படி...? பதில் சொல்லு .என்னுடைய அடுத்த கதைக்கு கருவாக அமையும்.”
"சாரிடி ...என்னை மன்னிச்சிடு ."
நான் மன்னிப்பது இருக்கட்டும் சுதா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."
“என்ன காரணம் சொல்றதுன்னு எனக்கே தெரியல. ஆனா யாரோ ஒருத்தர் என்று அந்த முகம் நமக்கு தெரியாதபோது... பிரபல பத்திரிக்கையில் தொடராக வரும் அளவிற்கு பெரிய எழுத்தாளர் அவர் என்ற ஒரு நினைப்பு இருக்கும்போது அந்த எழுத்தாளரைப் பற்றி நினைக்கல . அவரோட கதையை மட்டும் ஆழமாய் பார்த்தேன். பாராட்டினேன் .”
“ஆனா அதை எழுதினது என்னோட வேலை பார்க்கும் நீ தான்னு தெரிய வந்தபோது நம்ப முடியல . இவ்வளவு நாள் உன்னை சாதாரண ஆளா நினைச்சுட்டு இருந்துட்டு, இப்ப பெரிய கதாசிரியை என்ற நிலையை ஏத்துக்க முடியல .பெண்களுக்கு உலக நடப்புகளில் அதிகமாக பரிச்சயம் இல்லாத நிலைமை இருப்பதாலும், ஒரு கற்பனை உணர்வில் மட்டும் எழுதினாய் என நம்ப முடியல. அந்த நம்பிக்கை இல்லாத எண்ணம் தான்... என்னை அப்படி பேச வைத்ததோ என்னவோ...!”
“இங்க பாரு சுதா ..ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு விஷயத்துல ஆர்வம் இருக்கும். சிலர் அந்த ஆர்வத்தை வளர்த்துக்கிறாங்க. தன்னோட அனுபவத்தின் பாதிப்பில் தான் கதை எழுதுகிறார்கள் என்ற கருத்து தவறு. எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளர் எங்கிருந்தோ தன் மனதில் பதியும் சில விஷயங்களை ,வெளி நடப்புகளால் இவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை, அவர்கள் மனதிற்கு நியாயமாக தோன்றும் கற்பனை கருத்துக்களை , அந்த கற்பனையில் கதாநாயகர்களாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு , ஒரு சுதந்திரமான மனநிலையில் வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவ்வளவுதான். உங்களுக்கு சரி எனப் பட்டால் பாராட்டுகிறீர்கள். இல்லையேல் ஆட்சேபனை செய்கிறீர்கள். அது உங்கள் உரிமை.
“ஆனால் நான் உறுதியா சொல்லுவேன் . ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமான கற்பனை திறன் உண்டு .ஆனால் அதை வெளிப்படுத்துகிற தைரியம் தான் பல பெண்களுக்கு இல்லை .காரணம் கற்பனை செய்வதற்கு கூட அவர்களுக்கு சுதந்திரம் இல்லை .ஆண்களின் கற்பனையை ஆராதிக்கின்ற இந்த சமுதாயம் பெண்களின் கற்பனைக்கு கேள்வி கேட்கிறது . நீ கேட்டியே அது மாதிரி. பெண்களின் கற்பனைக்கு கூடவா... கட்டுப்பாடு வேண்டும் .என்ன சுதா.. ஏதாவது சொல்லு..?”
“கவிதா ப்ளீஸ் என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடு. அப்போது தான் எனக்கு நிம்மதி.”
“நான் அப்படி சொன்னா ... உனக்கு நிம்மதி . எனக்கு இன்னொரு கதைக்கான கரு கிடைத்துவிட்டது என்று நிம்மதி.” இருவர் முகத்திலும் புன்னகை.
முற்றும்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
008.தண்டனை
- இரா. கலைச்செல்வி, சென்னை
காலிங் பெல் அழுத்தப்படும் சத்தம் கேட்டு , சுமதி கதவினை திறந்தாள். அங்கே கண்ட காட்சி..!! சுமதியை பதை பதைக்க வைத்தது. பக்கத்து வீட்டு லெஷ்மி பத்ரகாளியாய் ... நின்றிருந்தாள்.
"என்ன லெக்ஷ்மி .... என்ன ஆச்சு" ....?? எனக் கேட்பதற்குள் அவளை தள்ளிவிட்டு .... சுமதியின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
வீட்டில் சுமதியின் கணவன் மணிகண்டன் ,சோபாவில் சாய்ந்து ,டிவி பார்த்துக் கொண்டிருந்தான். வந்த வேகத்தில் லெட்சுமி ...அவனின் வயிற்றுக்கு ...கீழே பத்து மிதி மிதித்தாள். அவள் கால்களுக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.. அத்தனை ஆவேசம் அவளுக்குள்...!!
ஓடிவந்து .... வீட்டிற்கு வெளியே கிடந்த செருப்பை எடுத்து , அவன் வாயில் ஆனமட்டும் வெளுத்து வாங்கி விட்டாள். "என்ன நடக்கிறது " என ஒரு கணம் சுமதிக்கு புரியவே இல்லை.
"லெஷ்மி ... பிளிஸ்.. ஏன் இப்படி. பண்றீங்க.? " சுமதி லெஷ்மியின் கையை பிடித்தாள்.
"சுமதி ....எதுவும் பேசாதீங்க.....!!! பேசினா ...உங்களுக்கும் தான் அடி விழும். "
மணிகண்டன் இதை எதிர்பார்க்கவில்லை .அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தான்.
" எனக்கு ஒண்ணுமே புரியலையே. அவரு வாயெல்லாம் இரத்தம் ஒழுகுதே...!!!
அத்தை.. ...எதிர் வீட்டு ஐயாவை கூட்டிட்டு வாங்களேன்...." அழுது கொண்டே கூறினாள் சுமதி.
" ஏண்டா டேய்.... நீ எல்லாம் மனுஷனாடா.. ?? என்ன பண்ணி இருக்க , இந்த வயசுல...??? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.... உன்னைய கொலை கூட பண்ணிடுவேன். தூ....." என காறி அவன் முகத்தில் உமிழ்ந்தாள் லெஷ்மி.
மணிகண்டனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அம்மா... மகள்... மனைவி என அனைவரும் அருகில் இருக்கும் போதே ....இவள் இப்படி செய்து விட்டாளே என கூனி குறுகிப் போய் , முகத்தில் பட்ட , அவள் எச்சிலை துடைத்துக் கொண்டான்.
அதற்கான காரணத்தை ஒருவாறு யூகித்துக் கொண்ட அவனுக்கு .... அதிர்ச்சியில் பேச முடியவில்லை ..
சுமதி.. லெஷ்மியை கெஞ்சினாள் . "என்ன லெக்ஷ்மி ...ஏன் இப்படி பண்றீங்க" .
லெஷ்மியின் கண்களில் தீப்பொறி .
" நான் என்னத்த....சொல்லுவேன் . பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது. நேத்து நீங்க எல்லாரும் கோவிலுக்கு போயிருந்தீங்க ...இல்லையா ..? இந்த ஆளு மட்டும் தானே வீட்டில் இருந்தான்."
"ஆமா. "
பிரியங்கா... "அங்கிள் வீட்டில போயி ....ஊஞ்சலில் கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு
வரேன்னு " வந்தா. "
" வந்த புள்ளைய .....இவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா....? என் வாயால அதை சொல்ல முடியல. இவன் கிட்டயே கேளுங்க." மறுபடியும் ஓங்கி மிதிக்க போனாள் லெஷ்மி.
அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வந்து விட்டனர்.
"உங்களுக்காக பார்க்கிறேன் சுமதி. இல்லாட்டி இவனுக்கு இப்பவே , சமாதி கட்டிடுவேன். "
அந்தப் பிளாட் 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு.
" என்னாச்சு...? என்னாச்சு மா ..?" என அனைவரும் லெஷ்மியை கேட்டனர். லெட்சுமி அனைவரையும் பார்வையால் எரித்தாள்..!!!
"என்னம்மா ...என்ன நடந்தது ...?.ஏன் இப்படி ராட்சசியா நடந்துக்கிறே.....ஒரு ஆம்பளையை இப்படி போய் அடிக்கிற... "எதிர் வீட்டு முதியவர்.
கண்ணகியின் கோபம் அவள் கண்களில்....." யாராவது ஏதாவது பேசினீங்க ....நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பேசாம போயிடுங்க."
" எப்படிம்மா பேசாம போக முடியும். என்ன... ஏதுன்னு...??.எங்களுக்கு தெரிய வேண்டாம் ..??"
" நீங்க தெரிஞ்சுக்கணுமா ....?? கேளுங்க ... அவன்கிட்ட...".
மணிகண்டன் குனிந்த தலை நிமிராமல் , அமர்ந்திருந்தான்.
"என்ன மணிகண்டா என்ன ஆச்சு . நீயாவது சொல்லுப்பா... " எதிர் வீட்டு சதாசிவம், மணிகண்டனை வற்புறுத்தினார். "
"இவ்வளவு நேரம் பேசாம இருக்கியேப்பா. ..... ஏதாவது பேசுப்பா. அப்பத்தானே நாங்களும்.... என்ன ஏதுன்னு.... கேட்கலாம்."
"அவன் என்ன பேசுவான் ..? அவனால என்ன பேச முடியும்..?? சண்டாளன்.
நேத்து இவன் வீட்டுக்கு , விளையாட வந்த என் மகளை...அந்த பச்ச குழந்தைய போயி...இவன் இவன்..." சொல்ல நாக்கு கூசுதுங்க.
அனைவருக்கும் லேசா பொறி தட்டியது.
" ஏம்மா... ஏதாவதுன்னா போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் குடுமா. அத விட்டுட்டு பிளாட்டில் வந்து இப்படி கத்திட்டு இருக்க...." இது கோவிந்தனின் குரல்.
"என்ன ....போலீஸா...? போலீஸ் கீலிஸ்ன்னு ஏதாவது பேசினீங்க ... அப்புறம் நல்லா வாயில வந்துரும். போலீஸ்ல சொன்னா ....என்ன நடக்கும்..? என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாது..? "
"நூறு தடவை போலீஸ் ஸ்டேஷன்ல வரச் சொல்லுவாங்க. சாட்சி கேப்பாங்க.
இல்லாத ....கேள்வி எல்லாம் கேட்பானுங்க. கடைசியில... கோர்ட்டுக்கு போக சொல்லுவானுங்க."
" கோர்ட்ல தீர்ப்பு வழங்க பல வருஷங்கள் ஆகும். நான் வக்கீலுக்கு காசை கொட்டிட்டு.... நான் நிம்மதி இழந்து சாகணும்.... அதுதானே நாட்டுல இதுவரை நடக்குது...!!! எதுவும் பேசாம திரும்பி போயிடுங்க. "சீறிளாள் லெஷ்மி.
"இவன் செஞ்ச காரியத்துக்கு நான் இங்கேயே... இப்பவே ....இவனுக்கு தண்டனை கொடுக்கணும்" , எனக் கூறிவிட்டு மறுபடியும் போய்...காலால் அவனின் தொடைகளுக்கு இடையில் நன்கு மிதித்தாள். அவளின் கால்கள் துணிச்சலாலும்.... துயரத்தாலும்.... இரும்பு தூண்களாகிப் போயிருந்தன. "அம்மா... " என்று அலறி சாய்ந்தான் மணிகண்டன் ..
ஆத்திரம் தீரும் மட்டும் மிதித்து விட்ட லெஷ்மிக்கு ...இதற்கு மேல் மிதித்து பயன் இல்லை என்ற நிலையில் ....ஆவேசமாக வீட்டிற்கு வெளியில் வந்தாள்.
"ஏம்மா ....இப்படி கத்துற . வெளியே தெரிஞ்சா... உன் குழந்தைக்குத் தான் அவமானம்."
"என்ன.. ம்.... என்ன பேசிற நீ...? என் குழந்தைக்கு என்ன அவமானம்...?? "
எட்டு வயசு குழந்தைக்கு , ஏதாவது பட்டம் கொடுத்திடுவீங்களா....!!! என்ன பட்டம் குடுப்பீங்க ... ?? கற்பு இழந்தவள்..!! அப்படின்னா..??. இல்ல.... வேற ஏதோ பெயர் சொல்லுவீங்களே... அப்படியா..??
"பொம்பளைக்கு மட்டும் நிறைய பட்டம் வச்சிருப்பீங்களே ..!!! அவனுக்கு என்ன பட்டம் கொடுக்கப் போறீங்க..? அகராதியிலேயே இப்படி பண்ற ஆண்களுக்கு ஒரு பெயரும் இல்லையே...!!!"
"இப்படியே சொல்லி சொல்லி தானடா ...பொம்பளை புள்ளைங்களுக்கு நியாயமே... கிடைக்காமல் , மறுபடியும்... மறுபடியும்.... உலகத்துல இதே தப்பு நடந்துக்கிட்டே இருக்கு.. !!!
"ஸ்கூல் வாத்தியார் மாணவியை பலாத்காரம் செய்தான் . சிறுமியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தான். எம்.எல்.ஏ கூட்டு பாலியல் செய்தான். இது தானே இப்ப நியூஸ். இப்படிப்பட்டவன்களை... தெரிஞ்ச உடனே சுட்டு தள்ளனும்.. இல்லாட்டி ...அணு அணுவா வெட்டி கொல்லனும்." நினைச்சா ரத்தம் கொதிக்குது.
ஏதோ பேப்பர்ல படிச்சிருக்கேன். டிவில பாத்திருக்கேன். பச்ச குழந்தையை கூட இப்படி பண்ணுவான்களா ...??? என நினைத்து வியந்து போயிருக்கிறேன். ஆனா அதெல்லாம் என் வீட்டிலேயே நடக்கும் என.... நான் நினைக்கவே இல்லை.
பிரியங்கா ...நேத்துல இருந்து ...வயிறு வலி..... வயிறு வலி... ன்னு சொல்லிவிட்டு இருந்தா. அவளுக்கு என்னன்னு கூட சொல்லத் தெரியல...கெவுன தூக்கி பார்த்தா .....!!! அப்படி ரணமா ....சிவந்து போய் இருக்கு. கேட்டா அந்த அங்கிள் இங்க கடிச்சாரு. ரொம்ப வலிக்குதும்மானு சொல்றா. ராஸ்கல் ...அவனை என்ன பண்ணினா... சரியா இருக்கும்...???
அனைவரும் ஏதும் பேச முடியாமல் மௌனமாய் தலை குனிந்து நின்றனர்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த...தன் எட்டு வயது குழந்தை.... வந்து "என்னம்மா... ஏம்மா ....அந்த அங்கிளை அடிக்கிற...? பாவம்மா " எனக்கூறி அம்மாவின் கையை பிடித்து இழுத்தாள்.
"ஒன்னும் இல்லடா... செல்லம் . நீ வா... நம்ம வீட்டுக்கு போகலாம் "என கூறி... பிரியங்காவை உச்சி முகர்ந்து...கை பிடித்து அழைத்துச் சென்றாள்.
லெட்சுமியின் மனதிற்குள் .... அவன் செஞ்ச காரியத்துக்கு.... ஏத்த தண்டனையை நானே கொடுத்துட்டேன் . அவன் பல்ல உடைச்சிட்டேன் இல்ல...!! கீழே.. அது... நல்லா நஞ்சு போயிருக்கும்....!!! இது போதும்... இது போதும் . அவன் இனி வெளியில ... தலை காட்ட முடியாது .
மேலேயும் போச்சு ....கீழேயும் போச்சு.... மனதிற்குள் ஆறுதல் அடைந்தாள் லெட்சுமி.
அன்றில் இருந்து மணிகண்டன், அவன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அவமானத்தால் அரண்டு போயிருந்தான் . வீட்டில் யாரும் அவனுடன் பேசுவதில்லை . அவன் அம்மாவே அவனை அருவருப்பாய் , பார்க்க தொடங்கி இருந்தாள். அன்றிலிருந்து... ஒருநாளும் அவன் அம்மா.... அவனுடன் முகம் பார்த்து பேசியதில்லை .
இந்த மூன்று மாதத்தில் அவன் , மெலிந்து ....பொலிவு இழந்து போய்விட்டான். முன்பற்கள் உடைந்து போனதில் , அவன் முகம் இன்னும் விகாரமாய் மாறிப் போய் இருந்தது. பைத்தியம் போல் , அடிக்கடி தனக்குத் தானே , பேசிக் கொள்கிறான்.
ஒரு நாள் சுமதியின் வீட்டுக்குள் இருந்து ஒரே அழுகை. அலறல் சத்தம். மனது கேட்காமல் லெஷ்மி சுமதியின் வீட்டு கதவை தட்டினாள். அவனின் மகள் கதவைத் திறந்தாள்.
என்னாச்சு மா...???
இல்ல ...ஆன்ட்டி அப்பா..... அவளால் பேச முடியவில்லை.
உள்ளே போன லெக்ஷ்மி ...அதைக் கண்டு ....அதிர்ச்சியுற்றாள்.
அவன் அறையில் அவன்.....!!! மனைவியின் சேலை , கயிறாய் மாறி இருந்தது.
பழைய சேலை . அறுந்து விழுந்த வேகத்தில் , அவனின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது போல. துடி துடித்துக் கொண்டிருந்தான்.
சுமதி அழுகிற சத்தம் கேட்டு... பிளாட்டில் அனைவரும் வந்துவிட்டனர். வெளியே வந்த லெஷ்மி விசயத்தை தெரிவித்தாள் . இப்படி செய்வான் என அவளும் நினைக்கவில்லை....!!!
அனைவரும் வந்து ...அவனை பார்த்து சென்றனர்.
" கொஞ்ச நேர சபலம். எதில் போய் முடிந்து விட்டது பாருங்கள்...!! என்னத்தை சொல்ல..? கடைசில அவன் தலையெழுத்து. இனிமே அவன் இடுப்பு சரியாகுமா...???
ரண வேதனைப்பட்டு, சாகத்தான் போறான்...?? தன் வினை தன்னைச் சுடும்...!!"
சில ஆண்கள் பேசிக்கொண்டனர்.
ஆறறிவு கொண்ட மனிதன் , ஐந்தறிவு கொண்ட மிருகத்தை விட கேவலமா நடந்துக்கிறாங்க. இவனுக்கு இது ஒரு நல்ல பாடம். அதுவும் எட்டு வயது குழந்தையை போய்... தனக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா என்பதையும் மறந்து... இவனுக்கு நல்லா வேணும். இதை விட பெரிய தண்டனையை இவனுக்கு யாராலும் கொடுக்க முடியாது. " ஈனப் பிறவி..." என்றவாறு ... பெண்கள் அவரவர் வீட்டுக்கு கலைந்து சென்றனர்.
முற்றும்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
009.ரமணி பாட்டி.........
-இரா. கலைச்செல்வி
முதியோர் இல்ல பொறுப்பாளர் சதீஷ்சை ரமணி பாட்டிக்கு அறிமுகப்படுத்த உரையாடல் தொடர்கிறது......
பாட்டி.... பாட்டி...உங்க .. பேரன் சதீஷ்..... வந்திருக்கான்.
ம்..ம்.யாரு..?
பேரன்.... சதீஷ்....
அமெரிக்காவிலிருந்து...
பேரனா சதீஷ்சா.... சற்று நேரம் பேச்சே இல்லை ...நிமிர்ந்த கண்களில் கொஞ்சம் ஈரம்.
சற்று நிதானித்து... எப்படி இருக்க சதீஷ்... என் கண்ணு.... ராசா..
. உங்க அப்பா எங்கே..
நல்லா இருக்கேன் பாட்டி. அப்பா வரல. என்கூட வர்றதா இருந்தாரு. அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசரம் . வேலை.. நான் மட்டும்தான் பாட்டி இப்ப வந்தேன்.
ம்.. என்னப்பா ...காது சரியா கேட்கலப்பா....
அப்பாபா... வரல பாட்டி. நான் மட்டும்தான் வந்தேன்.
ரெண்டு வருஷம் ஆச்சு பார்த்து...... .இங்கே சேர்த்த பிறகு , ஒரு தடவ வந்துட்டு போனான்..... எப்போ என் மகனை பார்ப்பேனு தோணுதுப்பா சதிஷ்சு..
தினம்.... உங்க நெனப்புதான் சதீஷ்.... ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குது ..இந்த அம்மா (பொறுப்பாளர்)கிட்ட தான் சொல்லுவேன் அடிக்கடி... என் பையனுக்கு போன் போட்டு வரச் சொல்லுங்கனு.....சொல்லி ஆறு மாசம் ஆகுது... அவங்களும் 10 தடவைக்கு மேல சொல்லிட்டேன்னு சொன்னாங்க.....
வாய் கொளறுதுப்பா... ரொம்ப பேச முடியல..
ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ நீ மட்டும் வந்து இருக்கே..உங்க அம்மா எப்படி இருக்கா? ...தம்பி எப்படி இருக்கான்?..மருமகளைப் பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு.... கையை விரித்துக் காட்டியபடி. போன தடவை உங்க அப்பா மட்டும்தானே வந்து போனான்.
சரி நீயாவது ..வந்தியே இப்ப ..இந்த பாட்டிய பாக்க.
இன்னும் ஒரு வருஷம் நான் இங்க தான் இருப்பேன் பாட்டி.. இங்க தான் வேலை..ப்ராஜெக்ட் இனி வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களை வந்து பார்ப்பேன் பாட்டி...
அப்படியா சதீஷ்... அப்படியா... இங்கேயா வேலை ?..ரொம்ப சந்தோஷம்ப்பா... பாட்டியின் கண்களில் ஒளி... வாயில் எச்சில் .... கண்களில் கடல் பொங்கிய நிலை..
இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள்... ரமணி பாட்டி ..பிறகு வாயை துடைத்துக் கொண்டே .............. மக
ராசா அது போதும் ..அது போதும்.. எனக்கு.! பொக்கை வாய் மலர்ந்தது. குழந்தை சிரிப்பு போல...
பத்து நிமிடம் இருந்து விட்டு......
....சரி வரட்டுமா பாட்டி?....என்றான் சதீஷ்.
என்னப்பா.....அதுக்குள்ள போறேங்கிர... உன்னை பாத்து எவ்வளவு நாளாச்சு.?. ....சாயங்காலம் போயேன் .....கொஞ்சம் ஓங் கூட பேசிட்டு இருக்கேனே....
அடுத்த வாரம் தான் வருவேனே பாட்டி...
அது இருக்கட்டும். இப்போ இருப்பா..
சதீஷ் ...கையை பிடித்து உட்கார வைத்தாள் ரமணி பாட்டி....
உங்க அப்பா சின்ன வயசுல ...அப்படி பாசமாக இருப்பான்... அம்மா அம்மான்னு சேலையை புடிச்சுக்கிட்டு பின்னாடியே வருவான். நான் செய்ற அச்சு முறுக்கு அவனுக்கு ரொம்ப பிடிக்கும்... எப்பவும் அதையே தான் கேட்பான்...
. அதை இன்னும் மறக்க முடியல.. அப்புறம் ஸ்கூல், காலேஜ் ,வேலை, கல்யாணம்னு பிஸியா ஆயிட்டான்*. ...கல்யாணம் வரைக்கும். .. தினம் தினம் போன் பண்ணுவான்.....
இப்ப...? என்கூட பேச நேரமில்லை அவனுக்கு.
நீ.... அப்பா மாதிரி செய்யாதப்பா.... அம்மா அப்பா கிட்ட உன் பாசம் குறையவே கூடாது... எவ்வளவு வேலை இருந்தாலும் வாரத்துக்கு ஒரு தடவையாவது போன் பண்ணி பேசிடனும். என்ன சதீஷ்... எப்பவும் ...அம்மா அம்மாதான் .அப்பா அப்பா தான். உங்களுக்காகத்தான் அவன் இப்படி ஓடிட்டு இருக்கான்.....
சதீஷ் பெருமூச்சுவிட்டான்.
நானும் உங்க தாத்தாவும் ,கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து...பாத்து பாத்து அந்த வீட்டை கட்டிணோம். உங்க தாத்தா , பையனுக்கு வேணும் ...பேரனுக்கு வேணும்னு அந்த வீட்டை கனவு வீடா கட்டினார். அங்கே இப்போ யாருமே.....
இல்லை . மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...அதை பத்தி பேசணும்னு நினைச்சேன் ..இந்த ஹோம்ல. இருக்கிறவங்க என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிறாங்க.. அவங்க செய்யற உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல.. பெத்த தாயை கவனிப்பது போல பாத்துக்கிறாங்க. இவங்க தான் இப்ப எல்லாம் எனக்கு..
சதீஷ் முகத்தில் ஈ யாடவில்லை.
அந்த வீட்டை இந்த முதியோர் இல்லத்துக்கு எழுதி வெச்சிடலாம்னு நினைப்பு வந்துக்கிட்டே இருக்குப்பா ...என்ன மாதிரி... அனாதைகளுக்கு அடைக்கலம் கிடைக்குமே.... என்ன சொல்ற. சதிஷ்... ...எல்லாமே வெறுத்துப் போச்சு....ஓடி ஓடி காசு சேத்து.. அர்த்தமே இல்லாத வாழ்க்கையா ஆயிடுச்சு... என்பது வயசுல உங்க அப்பாவும் இப்படித்தான் நினைப்பான். இப்ப புரியாது.. அவனுக்கு..
அப்பாவுக்குத் புரியும் பாட்டி. அடிக்கடி உங்கள பார்க்கப் போகணும்னு சொல்லிகிட்டு தான் இருப்பாரு.
நான் உயிரோடு இருக்கும்வரை தானே வரப்போறான்...
கவலைப்படாதீங்க பாட்டி. சீக்கிரம் அப்பாவ வர சொல்றேன்.
சரிப்பா..சதீஷ் உங்க அப்பா போட்டோ இருக்கா ..காட்டேன்... இப்ப எப்படி இருக்கான்? போட்டோல யாவது பார்க்கிறேன்.
சதீஷ் கைபேசியில் இருந்து காண்பித்தான்.
என்ன முகத்தில சுருக்கம் வந்திருச்சு. முடி கொஞ்சம் வெளுத்து இருக்கு.. கடவுள் புண்ணியத்துல கண்ணு மட்டும் நல்லா தெரியுது எனக்கு. அவன் கல்யாண முகம் மட்டும்தான் எப்பவும் ஞாபகம்.. அதுவரை தானே என்னோட இருந்தான் .. கல்யாணம் முடிஞ்சு அமெரிக்கா போனவன் தான்... அந்த முகமும், அந்த பத்து வயது முகமுமே எப்பவும் வந்து போகுது... அவன் முகத்தைப் பார்க்கத்தான் இந்த உசுரு ஊசலாடிக் கிட்டு இருக்கு சதிஷ்சு....
சீக்கிரம் வருவார் பாட்டி. கவலைப்படாதீங்க.சரி பாட்டி. அஞ்சு மணி ஆச்சு .நான் கிளம்புறேன் . ஞாயிற்றுக் கிழமை வரேன் பாட்டி...
கிளம்புறியா... சதீஷ்.. சரி போயிட்டு ...அடுத்த வாரம் வா... எழுந்திருக்க முயன்றாள்... ரமணி பாட்டி... முடியவில்லை...
சதீஷ் கையை பிடித்து பொக்கைவாய் சிரிக்க... அடுத்த வாரம் வா. .. .. உங்க அப்பாவை போன் போட்டு வரச் சொல்லு...
சரி பாட்டி....
அடுத்த ஞாயிற்றுக்கிழமை பாட்டியை பார்க்க சதீஷ் வந்தான். முதியோர் இல்லம் சற்று வித்தியாசமாகப்பட்டது.
ஆங்காங்கே ஒரே கூட்டம்...சதிஷ்க்கு ஒன்னும் புரியல.
பாட்டி அறைக்குள் நுழைந்தான்.. அந்த பொறுப்பாளர் அம்மா சதீஷ்யை பார்த்தவுடன் கண்கள் கலங்கின .. இப்பத்தாம்பா பத்து நிமிஷம் ஆச்சு.. திடீரென மூச்சு திணறுச்சு.. ஏதோ சொல்ல வந்தாங்க.... முடியல. ஐந்து நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சு போச்சுப்பா... இப்ப தான் உனக்கு போன் போட்டேன் .ஒரே பிசியா இருந்தது ...உங்க அப்பாவுக்கு இப்பதான் சொன்னேன்.
இப்போ என்னப்பா பண்றது .உங்க அப்பா அம்மானால உடனே வர முடியுமா?..உயிரோடு இருக்கும் போதே உங்க அப்பாவ பார்க்க ரொம்ப ஆசைப்பட்டாங்க..நான் எத்தனையோ தடவை சொன்னேன்.. வரேன் வரேன்னு சொல்லிட்டு வரல....
இப்ப கேட்டு சொல்லுப்பா ...இல்லாட்டி நாங்களே எல்லா பார்மால்டியும் இங்கேயே முடித்து விடுவோம்.. பேரன் நீ இருக்க ... கொல்லி மட்டும் போடுப்பா... உன்னை பார்த்த சந்தோஷத்திலேயே போய் சேர்ந்துட்டாங்க போல....
ஒரு வாரமா அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்...
சதீஷ் வெறுமையாய் சிலையாய் நின்றிருந்தான்.
சதீஷ் தனக்குள்.... அப்பா செய்தது தவறு. வருடத்திற்கு ஒரு முறையாவது பார்க்க வந்திருக்கலாம். எனக்கு இது ஒரு பாடம். உயிர் போன போது பாட்டியின் மனசு என்ன பாடு பட்டிருக்கும். இது பெரிய பாவம்.. . அனைவருக்கும் இது ஒரு பாடம். பாட்டியின் கடைசி ஆசைப்படி , அந்த வீட்டை ரமணி பாட்டி முதியோர் இல்லமாக மாற்றுவதால் அவரின் ஆன்மா சாந்தி அடையும். சடலத்தை பார்க்க இனி அப்பா வந்து ஒரு பயனும் இல்லை. தனது இந்த முடிவோடு அந்த பொறுப்பாளர் அம்மாவை பார்த்தான் சதீஷ்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
010.அவனோட மனசு.
-இரா. கலைச்செல்வி
அடப்பாவி பயலே.…இவன் போகும் போது, என்னத்த அள்ளிக்கிட்டு போகப் போறான்.. எங்க இருந்து வந்தான் இவன்…? ஒரு பள்ளி கூட பசங்க போறதுக்கு ஒரு ஒத்தையடி பாத …அதைவிட மாட்டேன்னு சொல்லிட்டு … இப்படி இரும்பு கேட் போடுகிறானே….!!!
சிவக்குமாராம்…சிவக்குமார்… சரியான சவக்குமார்… எல்லாரோட வயித்தறிச்சல கொட்டிக்கிட்டா…..சவக்குழிக்குத்தான் போவான். புதுசா இந்த வீட்டை வாங்கிட்டானாம்.. என் வீட்டு சந்தில் யாரும் போகக்கூடாது என அடம் பிடிக்கிறான். ஒரு அடி சந்து… ஒரு பத்து நிமிஷம் பசங்க போ போறாங்க.. இதுக்கு என்ன பாடு… படுத்துறான்…!!! கொட்டி தீர்த்தாள் திலகா.
அரை நிமிடத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள்….இப்ப ஐந்து கிலோமீட்டர் சுற்றி பள்ளிக்கு போக வேண்டியிருக்கு .. நம்ம பழைய சீனிவாசன். எப்படி பட்ட. மனுஷன். நம்ம குழந்தைங்க… அவர் வீட்டு சந்து வழியா போறத நின்னு…. பார்த்து ரசிப்பார். பசங்க ஸ்கூல் போற நேரத்துல ….அவரு வீட்டுக்கு வெளியில வந்து, எல்லாருக்கும் டாட்டா சொல்லுவார். நம்ம குழந்தைகளை பார்க்கிறபோது… அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். இப்ப இவன் சுத்த கடுகடுத்தானாவுல இருக்கான். இது ஆனந்தியின் ஆதங்கம்.
அந்தத் தெருவில் உள்ள அத்தனை பேரும், சிவக்குமாரிடம் சென்று, பேசி பார்த்தனர் . அவன் சரி சொல்வதாய் இல்லை. அந்த ஊர் கவுன்சிலரும் சென்றுபேசிப் பார்த்தார். அப்போதும் அவன் கேட்க வில்லை. அவன் மனசு அப்படி . இது என் வீட்டு சந்து. இது வழியா ஏன் போகனும் என சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் வீட்டு சந்து தான்… .யாரு இல்லையினா . குழந்தைங்க அது வழியாக, நடந்து போனா … தரை தேஞ்சா போயிரும். பொறுமினாள் பொன்னி.
குழந்தைகள் செல்வது அவனுக்கு தொந்தரவாக இருந்தாலும் , ஒரு பத்து நிமிடம் தானே. காலையில் ஒரு பத்து நிமிடம் .மாலையில் ஒரு பத்து நிமிடம்.. திறந்து வைத்தாலே போதும். கல் மனசு காரன். அங்கலாய்தாள் ஆனந்தி..
அந்த ஒரு அடி சந்திற்கான பணத்தினை… எட்டு குடும்பங்களும் சேர்ந்து பங்கிட்டு கொடுப்பதாய் சொல்லியும் அவன் மறுத்து விட்டான்…
ஒரு நாள் அனைவரும் சேர்ந்து அந்த கதவினை திறக்க முற்பட்டனர். சிவக்குமார் 100 க்கு போன் செய்துவிட்டான்.. போலீஸ் வந்து விசாரித்தனர்.
என்னப்பா… பள்ளி குழந்தைகள் தானே. ஒரு பத்து நிமிஷம் திறந்து விடுவதால் உனக்கு புண்ணியம் தானே. சமாதானமா போப்பா….!!! போலீஸ் வந்து சமாதானம் பேசியும், அவன் கேட்டை திறப்பதாய் இல்லை.
அந்த தெருவில் உள்ள 8 வீடுகளின் பள்ளிக் குழந்தைகள் மட்டுமே அந்த ஒரு அடி சந்தில்… பக்கத்து பள்ளிக்கு செல்வார்கள் . மற்ற யாருக்கும் அந்தப் பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு சைக்கிள் கூட நுழைய முடியாது..
திடீரென்று அந்த எட்டு பேருக்கும் கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது. அதிர்ந்தனர் அனைவரும்.. சிவக்குமார் தான் கேஸ் போட்டுள்ளான். தனது கேட்டை உடைக்க வந்ததாகவும் , தன்னை அடிக்க வந்ததாகவும், கேஸ் போட்டிருக்கிறான் . நஷ்ட ஈடு ரெண்டு லட்சம் கேட்டும்… கேஸ் போட்டிருக்கிறான்.
அடப்பாவிபயலே…இப்படி கேஸ் போட்டு இருக்கானே….!!! சம்மன் வந்தா கோர்ட்டுக்கு போகணுமா…?. ஆமாம்மா கண்டிப்பா போகணும் இல்லாட்டினா…அவனுக்கு சாதகமா ரெண்டு லட்சம் கொடுக்க தீர்ப்பாயிடும்…. கோர்ட்டுக்கு போனால் தீர்ப்பு வர ரொம்ப நாள் ஆகுமே…!!. ஐயோ இது எதுக்கு …என் புள்ளையை ஆட்டோவுல அனுப்பிக்கிறேன்….
எட்டு பேர் மேலயும் கேஸ் போட்டு இருக்கான். போய் தான் ஆகணும். என பலவாறாக அனைவரும் பேசிக்கொண்டனர்.
ரெண்டு வருஷமா கேஸ் நடந்தது. எட்டு வீட்டு நபர்களுக்கும் …கேஸ்க்காக வக்கீல் பீஸ்…அது இது என …ஒரு லட்ச ரூபாய் செலவானது.
இரண்டாம் ஆண்டு இறுதியில் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் ஒவ்வொரு குடும்பமும் ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும், குழந்தைகள் நலன் கருதி, கதவினை காலையில் அரை மணி நேரமும் மாலையில் அரை மணிநேரமும் திறந்து வைப்பதற்கும் உத்தரவு இடப்பட்டது. அவன் கேட்ட நஷ்ட ஈடு தள்ளுபடி செய்யப்பட்டதாக திர்ப்பானது.
கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும்… அவன் கதவை திறக்கவேவில்லை . எட்டு வீடுகளும், வீட்டுக்கு ஐந்தாயிரம் என 40 ஆயிரம் கொடுக்க தயாராய் இருந்தனர். ஆனால் அவன் கதவை திறக்க முடியாது என அனைவரிடமும் தெரிவித்து விட்டான்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற கருத்தினை கண்ணன் முன்வைத்தார். ஆனால் செல்லையா அதை மறுத்து விட்டார். இனிமேலும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். அது அவன் இடம் .அவனுக்கு மனமில்லை. அது அவனோட மனசு. அவனே மாறினால் ஒழிய ….நம்மால் மாற்ற முடியாது. நாம் நம்மை மாற்றிக் கொள்வோம். என் பேரனை நானே சைக்கிளில் கொண்டு விட தீர்மானித்து விட்டேன் என்றார்.
அந்த எட்டு குடும்பங்களில் வயதில் மூத்தவர் செல்லையா. அனுபவம் மிக்கவர். அனைவராலும் நல்ல மனிதர் என போற்றப்பட்டவர். அவர் கூறியதில் மற்றவர் யாரும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. அனைவரும் கட்டுபட்டனர்.
இதற்கு மேல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பயனில்லை எனக் கருதி , 8 குடும்பங்களின் குழந்தைகள்… ஐந்து கிலோமீட்டர் சுற்றி, அந்த ஸ்கூலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டனர்.
ஆனால் அந்த எட்டு குடும்பங்களுக்கும்… அவன் மேல் இருந்த கோபம் தனியவே இல்லை. இப்படி ஒரு அடாவடி பேர்வழியா இருக்கிறானே என உள்ளூர கொதித்தனர். அவனே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து , நம்மை அலயவிட்டு… பின் அவனே நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் ,அடம் பிடிக்கிறான். இவனை என்ன செய்வது….?. இதுவே அனைவரின் ஆதங்கம்….!!!
சிவகுமார்… சிவகுமார் …. என்னப்பா பண்ற… . தள்ளாத வயதில் மூச்சிறைக்க ஓடி வந்தார் செல்லையா.. அந்த ஐயா இவனை நோக்கி ஓடி வருவதை கண்டு… சிவகுமார் அதிர்ந்து போனான்.
அப்பா… சிவக்குமாரு. … தம்பி …..உன் பையன் சைக்கிள்ல போகும்போது காலேஜ் …திருப்பத்துல ரோட்டுல விழுந்து கிடந்தான்ப்பா. கடைக்கு போன நான் நல்லநேரம் பார்த்தேன். தலையில நல்ல காயம். இரத்தம் உறைஞ்சு கிடந்தது. உடனே நம்ம பாலாஜி மருத்துவமனையில் சேர்த்துட்டு வர்றேன். தலையில தையல் போடணுமாம். ஸ்கேன் எடுக்கனுமாம். உடனே பத்தாயிரம் கட்ட சொன்னாங்க. உடனே கட்டிட்டேன் . நீ உடனே கிளம்புப்பா.
சிவக்குமார் சிலையாய் நின்றான். எப்படி இவருக்கு இப்படி. மனம்… வந்தது … நமக்கு சொந்தமான இடத்தில் மற்ற குழந்தைகள் நடந்து செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக கேஸ் போட்டு அவர்களை அலக்கழித்தேன். இவர் எப்படி என் மகனுக்காக பத்தாயிரம் ரூபாய் கட்டிவிட்டு…. இந்த வயதில் இப்படி ஓடி வருகிறார் . எப்படி…?
ஐயா …!!! என கையெடுத்து கும்பிட்டான் சிவக்குமார். குரல் தழுதழுத்தது. கண்கள் பனிந்தன.
முதல்ல ஆஸ்பத்திரிக்கு போப்பா …சிவா.. இன்னும் காசு தேவைப்பட்டால் கேளுப்பா… தரேன் அப்புறம் திருப்பி கொடுக்கலாம்..
இந்த வார்த்தையை கேட்டு சிவக்குமார் உறைந்து போனான்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஒரு பக்க சிறுகதை
011.ஏக்கம்
-இரா. கலைச்செல்வி
காலையில் ஏழு மணிக்கு ,பழைய கஞ்சியை, தூக்கு வாளியில் எடுத்து கொண்டு ,குழந்தை செந்திலையும் தூக்கிக்கொண்டு, வயலுக்கு, நாற்று நட போன சரசு, வீடு திரும்பிய போது, மணி மாலைஐந்து.
வந்ததும், வராததுமாய், குழந்தையை திண்ணையில் விட்டுவிட்டு, வீட்டைப் பெருக்கி விட்டு, அடுப்பைப் பற்ற வைத்து, கொதிக்கும் உலையில், ரேஷன் அரிசியை களைந்து போட்டாள்.
திண்ணையில் விட்ட, மகன் செந்தில் அழும் குரல் கேட்டது. இருடா செல்லம் ....ஆத்தா வந்துடுறேன் .இந்த வெண்டைக்காய நறுக்கி வைச்சுட்டு வந்துர்றேன் எனக்கூறிவிட்டு வெண்டைக்காயை அலசினாள்.
செந்திலின் சத்தம் நின்று போகவே, பதறிப்போய் திண்ணைக்கு ஓடிளாள் சரசு.
செந்திலை காணோம். வெளியே வந்தபோது ,சற்று தூரத்தில், செந்தில் தவழ்ந்து போய், எதையோ வேடிக்கை பார்ப்பது தெரிந்தது.
அருகில் போனாள். அங்கே வெள்ளாடு ஒன்று, தனது குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது. அதைதான் செந்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பசியில், அந்த ஏக்கத்தில் ,செந்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
நானும் தான், எங்க ஆத்தாகிட்ட சப்பிச் சப்பி குடிக்கிறேன். ஒன்னுமே வரமாட்டேங்குது. இந்தஆட்டுக் குட்டி மட்டும், எப்படி மடக்கு மடக்குனு குடிக்குது. எனக்கு வயிறு பசிக்குதே..!!! .நம்மளும் ஆட்டுக்குட்டியா பிறந்திருநதால் ...நல்லா பால் குடிக்கலாமோ? செந்தில் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
ஏக்கத்தோடு ஆட்டுக்குட்டியை பார்த்துக், கொண்டிருந்த மகன் செந்திலை, அப்படியே வாரி அணைத்து, உச்சி முகர்ந்து, பால் கொடுக்க உட்கார்ந்தாள்.
சரசுவிற்கு கண்ணீர் மல மலவென கொட்டியது. அந்த மனுஷன், இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவானே...!! அதுக்குள்ள குழம்பு வைக்கணுமே. இல்லாட்டி கன்னாபின்னான்னு கத்துவான். ஒரு நாள் கூட குடிக்காம வரமாட்டானே. . அவன் அடிக்கிற அடியை தாங்கற சக்தி இந்த உடம்புக்கு இல்லை. அவன் பேசற பேச்சை கேட்கிற சக்தி இந்த மனசுக்கும் இல்லை. என பலவாறு பயத்தோடு சிந்தித்துக்கொண்டிருந்தாள் சரசு.
இப்படி பயந்துகொண்டே பால் கொடுத்தால், எங்கே இருந்து பால் வரும்..
செந்தில் வெறுமனே ஆத்தாவின் மார்பகத் தோலை , அவள் உடம்பின் வியர்வை உப்பினை, பால் என நினைத்து, வெறுமனே சப்பிக் கொண்டிருந்தான்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
012.ஒரு பக்க சிறுகதை - பொக்கிஷம்
-இரா. கலைச்செல்வி
யு.கே.ஜி. படிக்கும் என் பையன், காலையில் படுக்கையை விட்டு எழும் போதே, "அம்மா... அம்மா....அது எங்கம்மா..? காணாம்......நான் ராத்திரி தூங்கும் போது கையிலே வச்சுகிட்டு ....தூங்கினேனே....அது எங்கமா...? எனக்கு வேனும் "என்று ஒரே அழுகை... எனக்கு ஓன்றுமே புரியவில்லை.
" என்னடா எதை வச்சுகிட்டு... தூங்கினே ? நல்லாபாரு... இருக்கும்..." என
சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தேன். காலை 10 மணிக்குள் ஆபிஸ் போக வேண்டிய அவசரம் எனக்கு...
அவன் மறுபடி சமயலறைக்கு வந்து... "அம்மா அம்மா.... பிளிஸ்மா.. நான் நேத்து ஸ்கூலில் இருந்து வரும் போது ...எடுத்துட்டு வந்தேனே...இப்பிடி......இப்பிடி நிட்டிகிட்டு..பஞ்சு மாதிரி இருந்துச்சே......அதுதாம்மா. அது எனக்கு இப்பவே ...வேணும்...." என்று பிடிவாதமாய் என்னை இழுத்துச் சென்று...கட்டிலில் கிடக்கா... எனத் தேடச் சொன்னான். கூடவே ஒரே...அழுகை.
எனக்கு காலை அவசரத்தில் கோவம் கோவமாய் வந்தது..
"ஏண்டா ...காலை அவசரத்தில் இப்படி என் உயிரை எடுக்கிற...பெரிய பொக்கிஷத்தை பறி கொடுத்த மாதிரி..."என்று திட்டி இரண்டு அடி கொடுத்தேன்...அப்பவும் விடுவதாய் இல்லை...
ஸ்கூல் போகும் வரை தேடிக் கொண்டே இருந்தான்...சுத்தமாய் சாப்பிடவில்லை..
எனக்கு ஒரே ஆச்சிரியம். இவன் எதை தேடுகிறான் என்று. அவன் ஸ்கூல் போன பிறகு கட்டிலில் மெத்தையை தட்டி சரிபடுத்தினேன். ஏதாவது இருக்க...என ஆராய்ந்தேன். ஒன்றும் இல்லை.
ஆபிஸில் கூட அதே ஞாபகம். பையன் எதை தேடி இருப்பான் என்று..? சே...அடித்து விட்டோமே ... என்ற வேதனை ஒருபக்கம்.
மாலை ஆபிஸ் விட்டு வந்தவுடன்..."அம்மா...அம்மா...அது...கிடைச்சிருச்சு... பெட்டுக்கு அடியில் கிடந்தது... " என்று சொல்லி அவ்வளவு ஆனந்தமாய், பெரிதாய் சிரித்துக் கொண்டே...ஓடி வந்து..என்னிடம் காட்டினான்....அது...அது..அது வந்து.............
"மைனா குருவியின் அழகிய சிறகு"
முற்றும்.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

Comments (0)