தாயுமானவள்... 

தாயுமானவள்... 

       உடல் அனலாய் கொதிக்கிறது. எழுந்துக் கூட நடக்க முடியவில்லை. நேத்து  ஊசி போட்டும் உடம்பு இப்படி காயுதே...
முடியவில்லை என்று ரெஸ்ட் எடுக்கவா முடியும். குழந்தைங்க ஸ்கூல் போகணும், அவர் ஆபிஸ் போகணும், வீடு சுத்தம் செய்யணும், துணி துவைக்கணும், பாத்திரம் கழுவணும்னு.... அன்றாட வேலைகள் அடுக்கடுக்காய் காத்துகிட்டு இருக்கே வழக்கம் போல.. மணி பார்த்தேன் 4.50. சரி எழுந்திருப்போம். அலுப்பு பட்டா சரி வராது.

                   முடியாமல் பொறுமையாக எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்துக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியாயிற்று. "மறக்காம மாத்திரை சாப்பிடு" என்று சொல்லி அவரும் ஆபிஸ் கிளம்பி விட்டார். துணி துவைக்கணுமே....அலுப்பா இருக்கு நாளைக்கு செஞ்சிக்கலாமா?.. அய்யோ வேண்டாம்.. சேர்த்து வச்சு நாமதான் செய்யணும். அது இன்னும் கொடுமை.

               வலிகளோடு அனைத்து வேலைகளையும் செய்தாயிற்று. ச்சை.... செத்தாலும் எல்லா வேலைகளையும் செஞ்சி வச்சிட்டுதான் சாகணும் போல இருக்கு.என்ன வாழ்க்கையோ இது?..இந்த டைம்ல நம்ப அம்மா கூட இருந்தா நம்பள இப்படி விட்ருபாங்களா?.. எப்படி பார்த்துகிட்டு இருப்பாங்க... நாமளும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். அம்மாவ வேணும்னா
போன் பண்ணி கூப்பிடலாமா?...
வேண்டாம்.. அங்கயே அவங்களுக்கு நிறைய வேலை..இங்க வந்தும் வேலை செய்யணும். பாவம் அவங்க.. இரண்டு பஸ் பிடிச்சு இங்க வரதுக்கே அரைநாள் ஆகிடும். வயசான காலத்துல அவங்கள வேற தொல்லை பண்ண வேண்டாம்.

                  "லேசா... லேசா... நீயில்லாமல் வாழ்வது லேசா"...
செல்போன் சிணுங்கியது. ஆயுசு நூறு தான். அம்மா தான் கூப்பிட்றாங்க..
"ஹலோ அம்மா"... 
" ம்ம்ம்... சொல்லுடா... சாப்டியாடா? 
உடம்புக்கு இப்போ எப்படிமா இருக்கு?" ... என்ற அம்மாவின் குரல் கேட்க கேட்க என்னையும் மீறி  பீறிட்ட அழுகையை அடக்கி கொண்டு பேசினேன்.
"ம்ம்ம்.. பரவாயில்லைமா... நீங்க கவலை படாதீங்க"... 
"ஏன்டா, குரல் ஒரு மாதிரி இருக்கு.. ரொம்ப முடியலையாடா?.. நான் வேணும்னா கிளம்பி வரட்டுமாடா?"....
"ஐயோ வேண்டாம்மா..  இப்போ பரவாயில்லை.. நீங்க சிரமபட வேண்டாம் மா... நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் மா"...
"ம்ம்ம்.. சரிம்மா.. எல்லா வேலையும் இழுத்து போட்டுகிட்டு செய்யாத என்ன.. ரெஸ்ட் எடு.. நாளைக்கு சேர்த்து செஞ்சிக்கலாம்... சரியா?".. 
"சரிம்மா"... போன் ஆப் செய்தேன்.
ஆறுதலடையா மனநிலையில் ஆறுதலடைய தாய்மடி கிடைப்பது வரம் தானே.... மனம் எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. சிறிது நேரம் படுக்கலாம். ஆழ்மனம் சற்றே அம்மாவின் நினைவுகளை புரட்டி போட்டது.

             திருமணத்திற்கு முன்பு வரை எனக்கு சமைக்கத் தெரியாது..ஆனால் அம்மாவின் சமையல் அருமையாக இருக்கும். அப்படி பட்ட அம்மாவிற்கு இப்படி பட்ட ஒரு பொண்ணு என்று கிண்டலடிப்பார்கள்.
"புருஷன் வீட்ல போய் கஷ்டப்படணும்டி.. இப்பவே சமைக்கக் கத்துக்கோ"..
"ப்ச்...எனக்கு சமையல்ல இன்ட்ரஸ்ட் இல்லமா... இன்ட்ரஸ்ட் வரும் போது நானே கத்துக்குறேன்".

        "  அம்மா டைம் ஆச்சும்மா..
டிபன் பாக்ஸ் குடுங்கம்மா"..
"ஒரு நிமிஷம்டா.. குழம்பு ரெடியாகிடும்"..
"மார்னிங் பண்ற டிபனையே குடுக்க வேண்டியது தானே மா"..
"அதெப்படி மா மார்னிங் பண்ற இட்லி, தோசை.. மதியம் வறண்டு போய்டாதா?"..
"அட ஏன்மா நீங்க வேற,8.30 பஸ் விட்டுடேனா அப்புறம் 8.40 க்கு தான் பஸ்.. பத்து நிமிஷம் லேட்டா போனா பிரின்சிபால் ஸார் திட்டுவாங்கமா... ஸ்டூடன்ஸ் கூட சேர்ந்து நானும் கேட்டுக்கு வெளியே நிக்கணும்மா..டீச்சர்ஸ் மீட்டிங்ல மானத்தை வாங்குவாரும்மா"..
"சரி சரி.. இந்தா எடுத்துட்டு கிளம்பு..பார்த்து போய்ட்டு வாம்மா"..
"ம்ம்ம்.. சரிம்மா.. பை"..
"ஏய்... பவ்யா.. இந்தாடி... பூ வைக்க மறந்துட்ட பாரு.. வச்சிட்டு போம்மா"... கையில் பூச்சரத்துடன் வேகமாக ஓடி வந்தாள் அம்மா...
"ஏம்மா... வீட்ல தான் 15 வகையா ரோஜா பூ பூக்குது இல்ல... அது போதாதா.. நீங்க வேற ஏன்மா டெய்லி பூ வாங்கி கை வலிக்க கட்றீங்க"
"தலை நிறைய பூ வச்சாதான் பெண் பிள்ளைக்கு அழகு".. என்று சொல்லி பூ வைத்து விட்டார்கள்.
"சரிம்மா.. வரேன்"... என்று வேகமாக நடையைக் கட்டினேன்.

  ஈவினிங் ஸ்கூல் விட்டு வந்து ரிபிரஷ் ஆனதும் ஸ்நாக்ஸ்சும் ,காபியும் என்னை தேடி வரும். கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு, ஸ்கூல் வொர்க் இருந்தால் முடித்துவிட்டு டிபன் சாப்பிட்டு தூங்கி விடுவேன். ஸ்கூல்ல பிரின்ஸ்பால்க்கு பயந்து எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியிருக்கு. ஆனால் வீட்டில் அம்மாவிற்கு ஒரு வேலையும் செய்ய மாட்டேன்.. ஏன்னா நம்ப அம்மா தானே ஒன்னும் சொல்ல மாட்டார்கள் என்ற அலட்சியம்". 
உண்மை தான். எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அக்கறையோடு செய்வார்கள். நான் வேலை செய்யவில்லை என்று குறை கூட கூற மாட்டார்கள். புகுந்த வீட்டுக்கு போனா தானா செய்ய போறா... இங்க இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும் என்பார்கள். எங்காவது வெளியே செல்ல நேரிட்டாலும் எனக்காக காலையிலேயே எழுந்து காலை, மதிய உணவை செய்து வைத்துவிட்டு தான் செல்வார்கள்.
ஒரு மகாராணியை போல, ஒரு குட்டி தேவதையைப் போல பார்த்துக் கொள்வார்கள்.

  திருமணம் ஆனபின் தான் அவர்களின் மதிப்பு தெரிகிறது. இங்கு எந்த நிலையில் எப்படியிருந்தாலும் நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மாவும் இப்படி தானே கஷ்டப்பட்டு இருப்பார்கள். என் தாயின் நிலையை நான் தாயான பின் தான் உணர்கிறேன். திருமணம் ஆனபின் தான் அம்மாவிடம் கேட்டு கேட்டு சமைக்க கற்றுக் கொண்டேன். எங்கள் வீட்டில் ஏதேனும் சிறிய விஷேசம் என்றால் கூட 30, 40 பேருக்கு தனியே நின்று சமைக்கும் அளவிற்கு கொஞ்சம் தேறிவிட்டேன். அம்மாவிற்கு பெருமை தாங்க முடியவில்லை.
"சமைக்கவே தெரியாதவள் தனியாக இத்தனை பேருக்கு சமைக்கிறாள்" என்று பெருமை பேசினார்கள்.

  இப்பொழுதெல்லாம் நான் அம்மா வீட்டுக்கு சென்றால் அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன். அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தாலும் நான் அவர்களை வேலை செய்ய விடுவதில்லை.. 
"அங்கதான் எப்போதும் வேலை செய்யுரீங்க. இங்கயாவது ரெஸ்ட் எடுங்கம்மா".... என்பேன். 
பாவம் அம்மா.. எங்களுக்காக உழைத்து உழைத்து களைத்தவர்கள். இப்படிபட்ட அம்மா கிடைக்க நான் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்  செய்திருக்க வேண்டும். நினைத்து கொண்டிருக்கும் போதே கண்ணீர் கன்னம் தொட்டு வழிந்தோடியது அனிச்சையாக.

 அம்மாக்கள் என்றுமே வரம் தான் பிள்ளைகளுக்கு... அதிலும் குறிப்பாக "பெண் பிள்ளைகளுக்கு".
நன்றி.

-சசிகலா திருமால்.
கும்பகோணம்.