கரையை தொடாத அலைகள்

புதுக்கவிதை

கரையை தொடாத அலைகள்

கரையைத் தொடாத அலைகள்...

மனதின் வலிகளை 
தானம் வாங்கும்
கொப்பளிக்கும் ஆக்ரோஷம்
முஷ்டியுடன் தடுமாற்றமென
இதயத்து எண்ண அலைகள்
உதட்டு கரையைத் தொடாத *அமைதியான*  அலைகளே!

மனது இலேசாக
நேரத்தை துணைக்கழைத்து
கடலோரம் நடக்க
கண் விளிம்பைத் தொட்டது
கரையைத் தொடாத அலைகள்!

குறுக்கு வழியில் வாழ்ந்திடும்
சக பந்தங்கள் ஆங்கே
திசைக்கு செங்குத்தாக
நீரலை மேலே *குறுக்கலைகளாக!*

வீட்டின் நிகழ்வுகள்
கைக்கடங்காமல் போக
நினைப்பில் பயணமாக
மனத்தளர்வுடன் நெருக்கமாகி
அதிரும் மன உறவான
கரையோரம் தொட விழையாத
நீரலையான *நெட்டலைகளாக!*

பிரச்சினை சமாளித்தெழ எத்தனிக்க
போட்டியும் பொறாமையும் அழுத்த
சோதனைகளும் வேதனைகளும்
பெரிய கப்பலையே சாய்த்திடும்
தலை கவிழ்ந்து கண்கலங்க
உணர்வின் எழுச்சியில்
நீரலை மீதான *சத்த அலைகளாக!*

எல்லாம் மறக்க எண்ணி
காலை வருடும் அலை தேடி செல்ல
காலடி மண்ணைக் கரைத்து
அட்டென்டஸ் போடும் 
அனுசரித்த நலம் விசாரிப்பில் 
நீரலையின் *தோழமை அலைகள்!*

மணலில் அமர்ந்து 
கண்ணோடு பேசிட அமர்ந்து
ஏதோ குழப்பத்தில் கைவிரல்கள்
கிறுக்கிய புள்ளிகளும்/கோடுகளும்
திடுமென செருப்போடு அடித்துப் போக/கவலையின் கண்ணோட்டம்
*எதிர்மறை அலைகளாக!*

வயிற்றுப் பிழைப்பு தேடி
வலை போடும் மீனவனுக்கு
மீன்கள் அள்ளித் தரும்
கரையைத் தொடாத கொடையாளி
ஆக நீரலையின் *தர்ம அலைகள்!*

முற்றுப் பெறாத சிந்துபாத்தின்
கடற்பயணத்தில் துணையான
 *தொடர் அலையாக!*
பாற்கடல்வாசன் பத்மநாபனுக்கு
தாலாட்டும் *ஆனந்த அலைகளாக!*

அடங்கி நடக்கும் பெண் அலை
ஆக்ரோஷமான ஆண் அலையென,
10000 கண்டெயினர்களை காணாது போக்கடித்த *மர்ம சுழல் அலைகள்!*
*ஹெரால்டு ஹெக்கல்* எழுதி
சீசா பாட்டிலில் அனுப்பிய 
4800 கடிதங்களுக்கு 3000 பதில்
பெற்று தந்த *தபால் அலைகளாக!*

மொத்தத்தில்,
மன சித்தத்தில்,
நுரையாகி 
நமநமத்த எண்ணங்களோடு
நாட்டுப்பண்ணாவதே
கரையைத் தொடாத அலைகள்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை.