சட்டமாமேதை அம்பேத்கர் 049

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சட்டமாமேதை  அம்பேத்கர் 049

சட்ட மாமேதை அம்பேத்கார்

தலைவனே, இந்தியாவின் தவப்புதல்வனே, அண்ணலே, அம்பேத்காரே,

நீ அன்று பட்ட கஷ்டத்தை விட, இன்று சாதி , மதத்தால் சாகும் அவலம் கேவலமாக உள்ளது.

நீ அன்று போராடிய போராட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை ஒடுக்கப்பட்டவர்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வி இன்றளவும் எட்டாக்கனியாய் சிலருக்கு,

சமூக ஏற்றத்தாழ்வு குறைந்தபாடில்லை,

அருவருக்கத்தக்க ஆணவக் கொலைகள்,

இன்றும் ஆலயத்துக்குள் செல்ல முடியாத அவல நிலை,

டீக்கடையில் இரட்டை குவளை முறை,

திரை அரங்கிற்குள் செல்ல முடியா பிச்சைக்காரர்களின் ஆச்சரிய நிலை,

சாதி, மதம், இனம் இன்னும் சாகாமலே பல பேரை சாகடிக்கிறது,

சாதிக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு கூலி, சாதிக்கு ஒரு வேலி இன்னமும் நம் தேசத்தில் உள்ளது.

அன்றைய காலகட்டத்தை விட இன்றைய காலகட்டம் சாதி தலைவிரித்து அல்ல, தலை எடுத்து அலைகின்றது!

பெண்களின் நிலையோ அபாயம் முடி அறுத்து, முடக்கி போட்டு, நிர்வாணப்படுத்தி, எரித்து, கொலையாக்கி மண்ணோடு மக்கச் செய்யும் அவலம்,

தேசம் டிஜிட்டல் அல்ல தீவிர சாதியின் பெயரால் தீட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறது.

மனித நேயம் மக்களிடம் மாண்டு போனது எப்போது,

எவனுக்கு எது வந்தால் எனக்கென்ன, தனக்கென இருக்கும் வரை தன்மானம் தரை தட்டி போனது,

கடவுளையே சிலுவையில் அறைந்தவர்கள் நம் மக்கள்.

 எத்தனை அம்பேத்கர் வந்தாலும் ஏறாத மரமண்டைகளை என்ன செய்வது,

கல்வி வெறுமையாகி போனது, எதற்காக படிக்கிறோம் எதிர்காலம் என்னவென்று அறியாமலே,

தற்போது கூட தெலுங்கானாவில் டாக்டர் மாணவி சாதியின் பெயரால் தற்கொலை!

சமூக ஊடுருவல்கள் எமது இளைய தலைமுறையை இலகுவாய் போதைக்குள் தள்ளி புரட்சி செய்ததால் திறனற்றவர்களாய், சிந்திக்க தகுதியற்றவர்களாய் ஆக்கிவிட்டது,

பிஞ்சுகளை கூட விடாமல் கசக்கிப் பிழியும் நாசக்காரர்களை என்ன செய்வது,

வேங்கை வயலில் மனசாட்சியை உலுக்கிய மனிதக் கழிவு,

இன்னும் கண் மூடிக்கொண்டிருந்தால் இவ்வுலகம் காணாமல் போய்விடும்,

 மிச்சம் மீதி இருக்கும் நல்லவர்களே வாருங்கள் மாற்றத்திற்காக போராடுவோம் அநீதி ஒருபோதும் தலைதூக்க முடியாது என்பதை அகிலத்துக்கு காட்டுவோம் .

அண்ணலே, அம்பேத்காரே நிச்சயம் உன் பெயரால் மாற்றம் வரும்.

நீ, ஆசானாய் சொல்லிக் கொடுத்ததால் அடுத்த கட்ட வேலையை திறனாய் செய்வோம் நீ நிம்மதியாய் ஓய்வு எடு!

விழிக்கும் நாள் வந்து விட்டது!

ஆணும், பெண்ணும் சமமடா, அனைவரும் மனிதனடா, நீதியே உயர்ந்ததடா, மாறுவோம், சாதி மதத்தை கழுவுவோம், சுத்தமாக, சத்தமாக.

- A. தேவதனுஷ், பி . டெக், முதலாம் ஆண்டு மாணவர், மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம்.