அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர் கவிதை

அண்ணல் அம்பேத்கர்

"சமத்துவம் போற்றிய சான்றோர்கள் " அண்ணல் அம்பேத்கர்

ஆக்ஸிஜன் இல்லாமல் கூட வாழந்து விடும் 
ஆனால் சாதி இல்லாமல் 
ஒரு நாள் கூட
உயிர்த்திருக்காது இந்த நாடு

இரத்தத்தில் புதைந்திருக்கும் வெள்ளையணுக்கள்
சிவப்பணுக்கள்

ஆனால் அணுக்களுக்குள்ளும் மறைந்திருக்கும்
மரபணுக்கள் தான் இந்த சாதிகள்

இருள் காடாய் வளர்ந்திருந்த
 இந்தப் பிரதேசத்தில் தான்
முதன் முதலில் ஒரு ஒளிக்கீற்று பாய்ந்தது
சத்தியமாய் அப்போது யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்
அது அநீதியை எரிக்க வந்த சமத்துவ ஞாயிறு என்று

புத்தன் மீண்டும் ஒரு அவதாரம் எடுக்கிறான்
அண்ணல் அம்பேத்கராக

அறிவின் சோதி மறைக்கப்படலாம்
ஆனால் ஓர் நாளும்
அதுஅணைக்கப்படாது 

“” இந்தியா என்பது மதங்களின் நிலமல்ல
இனக்குழுக்களில் நிலம்
உரியவரிடம் தான் ஒப்படைக்க வேண்டுமென்றால்
இதை தமிழனிடம் தான் ஒப்படைக்க வேண்டும் “

இது அண்ணலில் வார்த்தைகள் மட்டுமல்ல
காலத்தின் மீது செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள்

மேற்கே ஓர் மார்க்ஸ் 
கிழக்கே ஒரு அம்பேத்கர்
சிங்கங்கள் ஓநாய்களுடன் சமரசம் செய்து கொள்வதில்லை
சமர் செய்வதே அவைகளின் இயல்பு

“” கோவில்களில் சிங்கங்களை யாரும் பலியிடுவதில்லை
ஆடுகளை மட்டுமே பலியிடுகிறார்கள்
ஆதலால் சிங்கங்களாக மாறுங்கள் மனிதர்களே “
என்றார் அண்ணல்

செம்மறிகள் சிங்கங்களாயின
அண்ணல் நல்ல மேய்ப்பர் தான்
ஆனால் ஆடுகளுக்கும்
போராடக் கற்றுக் கொடுத்த மேய்ப்பர்

தலைவர்கள் நூற்றாண்டுகளுக்கு
 ஒரு முறைதான் வருகிறார்கள்
ஸ்பார்ட்டகஸ்கள் ஆயிரம்  ஆண்டுகளுக்கு
ஒரு முறைதான் வருகிறார்கள்
ஆனால் புத்தர்கள் மகாவீரர்கள் அம்பேத்கர்கள் 
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் உதிக்கிறார்கள்

சிலர் வரலாற்றில் வாழ்கிறார்கள்
சிலரால் வரலாறு வாழகிறது
சிலருக்கு மட்டும் தான் வராற்றில் முன்னும் பின்னும் என்ற வார்த்தை அடை மொழி பொருந்துகிறது

‘’ விலங்குகளை தொடுவது புனிதமென்றும் மனிதனை தொடுவது தீட்டு என்றும்  ஒரு மதம் சொல்லுமாயின்
அது மதமில்லை ‘’ என்றார் அண்ணல்

‘’ சாதிகள் உள்ளவரை இது என் தேசமாக இருக்க முடியாது ‘’ என்றார்
‘’ ஒன்று சேர் கற்பி புரட்சி செய்  ‘’ என்றார்

‘’ மகாத்மாக்கள் வருகிறார்கள் போகிறார்கள்
ஆனால் சாதி அப்படியே தான் வாழ்கிறது ‘’ என்றார்

‘’ என்னை அடிமையாக நீ நினைக்கும் வரையிலும்
உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறுவேன் நான் ‘’ என்றார்

மரபின் மீது மகத்தான கேள்விகள்
பதில் சொல்வதற்கு யாருமில்லை
அறியாமை இருளின் மீது கிழித்துப் போட்ட
அறிவின் நெருப்புக்குச்சி தான் அண்ணல்

அண்ணலைப் போல இப்புவியில் அஞ்சாது 
கர்சித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்

ஒரு மார்க்ஸ் ஓர் எங்கெல்ஸ்
ஒரு பெரியார் ஒரு அம்பேத்கர்

புயலை மூடி போட்டு அடைக்கப்பார்ப்பவர்களே
புரிந்து கொள்ளுங்கள்

கடலை சாடிக்குள் அடைக்கப் பார்ப்பவர்களே
தெரிந்து கொள்ளுங்கள்

தடைகளை தகர்ப்பது தான் அவைகளின் வேலைகள்
போராட்டமே அவைகளின் வாழ்க்கைகள்

அவர் சாதித் தலைவரல்லர்
தேசத்தலைவர்
தேசத்தலைவர் இல்லையென்றால்
அவர் உலகத் தலைவர்

இந்திய அரசியல் சாசனச் சிற்பி
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
இந்திய ரிசர்வ் வங்கியை தோற்று வித்தவர்
அமெரிக்கா சென்று படித்த முதல் இந்தியர்
பெண்களுக்கு சம உரிமை கோரிய போராளி
அவர்களுக்கு மண விருப்பம் 
மற்றும் மண விலக்கு 
பெற்று தந்த பெருமகன்
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரிய பிதாமகன்
தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை
வரையறுத்த உழைப்பின் தலைவன்

சமத்துவத்தை நிலை நாட்ட முடியாத தன்
சட்ட அமைச்சர் பதவியை 
துச்சமென 
தூக்கி எறிந்த தலைவன்

பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
அண்ணலை சாதி வட்டத்திற்குள் அடைப்பவர்கள்
தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்

வெளிச்சம் வருவது இருளை விரட்டத்தான்
நதிகள் தோன்றுவது கடலில் கடலில் கலக்கத்தான்
புத்தர்கள் மகாவீர்கள் பெரியார்கள் அம்பேத்கார்கள் 
தோன்றுவது மனித குலம் தழைப்பதற்குத்தான்
மனித குலம் தழைப்பதற்குத்தான்

- தங்கேஸ்,