காஞ்சிபுர கற்பக விருட்சம் அண்ணா 009

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை போட்டி

காஞ்சிபுர கற்பக விருட்சம் அண்ணா 009

தேன் சொட்டும் தமிழை நெஞ்சில்
தினந்தோறும் தேக்கித் தேக்கித்
தென்னவரின் உள்ளந் தன்னில்
தென்றலென நாளும் தோய்ந்து
பின்னவரும் போற்றும் வண்ணம்
பெருமைமிகு செயல்கள் செய்து
மன்னவராய் வாழ்ந்தார் அண்ணா
மாநிலத்தார் நாளும் போற்ற!

கஞ்சிவர மண்ணில் தோன்றிக்
கற்பகமா விருட்சம் ஆனார்
துஞ்சுகின்ற போதும் கூட
துணையாகத் தமிழைக் கொண்டார்
விஞ்சுகின்ற அறிவைக் கூட்டி
வியப்பினிலே மக்கள் ஆழ
நெஞ்சமெலாம் புகுந்தே எங்கும்
நிறைந்தாரே எங்கள் அண்ணா

காகப்பட் டராய் நடித்தார்
கம்பரசம் பிழிந்து தந்தார்
வேகமுடன் விதைக்கும் பேச்சால் 
விந்தைமிகு கூட்டும் கண்டார்
தாகமெலாம் தீர்ந்து போகத் 
தமிழகமாம் பெயரைத் தந்தார்
நாகமெனும் இந்தி நீக்கி
நமதன்னைத் தமிழைக் காத்தார்!


முனைவர்.பேரா.சே.பத்மினிபாலா