நிலவு...

புதுக்கவிதை

நிலவு...

அகிலத்திற்கே ஒற்றைப்பூவாய்
 பூத்து குலுங்குகிறது நிலவு
பறித்துச் சூட ஆளில்லை

சூடிக் கொள்ளும் ஒரு மனதை
ஒளிக் குளம்பினில் முத்தி எடுத்து
திருமஞ்சனத்தில் நீராட்டும் 
அதன் கனவு
பின்னிரவில் கண்ணீர் முத்துக்களாய்முடிந்து போகிறது

ஓ... முல்லையே ..
விஷ காளான்களை புத்தனுக்கு
உணவளிக்கும் கலாச்சாரத்தில் உனக்கொரு பாரி 
கிடைக்க மாட்டான்

மகரந்தப் புனலாடும்
அஞ்சிறைத் தும்பியின் மோகனத்தை சிதைக்கும்
மணி நா ஆர்த்த
மாண் வினைத் தேரன்
குறிஞ்சி காட்டில் ஒரு கோங்கு மரமாய் நின்று விட்டான்

காலம் பிரசவிக்கும் 
புன்மையின் நடுவே
தன்னிலை மறந்து கவிழும் வெள்ளிப் பாற்குடத்தில்
சொட்டிக் கொண்டிருக்கும் 
அமிர்த தாரைகளை
தன்னிலை மறந்த நீ
நாவில்
ஏந்திக் கொள்

புழுக்கள் நெளியும் இதயம்
செத்து ஒழியட்டும்

தங்கேஸ்.