மார்கழி மாத பூக்கள்

மார்கழி கவிதை

மார்கழி மாத பூக்கள்

மார்கழி மாத பூக்கள்...

அதிகாலை நீராடி 
வாசல் தெளித்து/திருமண
வயதுடைய பெண் இருப்பதை 
மாக்கோல நடுவினிலே 
பசுஞ்சாணி  மீதினிலே
*பரங்கிப் பூ*  அழகு படுத்தி,
தை மாதம் திருமணம் கைகூட *செம்பருத்திப் பூ* வைத்து உணர்த்தும்
மார்கழி மாத பூக்கள்!

பாரதப்போர் சமயத்திலே 
போர் வீரர்கள் வீட்டை 
கிருஷ்ணர் பாதுகாப்பு தருவதற்கென
*வியாசரின்*  வியூகத்தால் 
அடையாளம் காணவே
சாணம்  மெழுகி கோலமிட்டு 
*ஊமத்தம் பூ* நடுவினில் செருகிய 
மார்கழி மாத பூக்கள்!

துர்வாச முனிவரை நகையாட 
நண்டாக சாபம் பெற்ற கந்தர்வன்
*தாமரைப் பூ* பறித்து
சிவலிங்கத்தை அர்ச்சிக்க
இந்திரன் கோபத்தில் வாளோச்ச
சிவனின் உச்சியில் தஞ்சமென
நண்டு(கற்கடம்)  உள் நுழைய
கற்கடேஸ்வரராக அபயமளிக்க,
திருத்தல வாசலிலே 
செம்மண்ணிட்ட கோலமதில் 
தாமரை அழகுற அலங்கரிக்கும்
மார்கழி மாத பூக்கள்! 
 
மார்கழி திருவாதிரையில் 
பதஞ்சலி முனிவரான *ஆதிசேஷன்* 
தில்லை அம்பலத்தானின் 
திருநடனம் காணும்
ஆருத்ரா தரிசனமாகி
ராகு பகவானை திருமணம் கை கூட
கன்னிப்பெண்கள் 
*செவ்வரளி* பூவுடன் வேண்டிடும்
மார்கழி மாத பூக்கள்!

*ஆவாரை பூத்திருக்க 
சாவாரை கண்டதுண்டா?"
 என்ற தேவார வரிகளாகி 
பூளைப்பூவுடன் ஆவாரம் பூ கட்டி 
மங்கல வாழ்வு பெறவே
வாசல் கூரை பூவாக  தொங்க விட்டு ஒகேனக்கலில் ஆரவாரமான
*ஆவாரப் பூ பறி* விழாவாகிய
மார்கழி மாத பூக்கள்!

பாவை நோன்பு நியதியான 
மலரிட்டு நாம் முடியோம் 
என்ற இரண்டாம் பாசுர வரியாகி,
குவளை மலர்களிலே 
பொறிவண்டு கண் படுப்ப 
என்ற மூன்றாம் பாசுர வரியாகி,
தூ மலர் தூவி தொழுது 
இறைவனை வழிபடு என 
பாசுரம் ஐந்தாம் வரியாகி,
செங்கழுநீர் பூவின் இதழ்களை 
நெகிழ  வைத்து, 
ஆம்பல் மலர் வாயினை 
கூம்பச்  செய்யும் 
14ஆம் பாசுர வரிகளாகி,  
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப...  என்ற
பாசுரம் 18 ன் வரிகளாகி, 
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூ போல செங்கண் சிறு சிறிதே
என் மேல் விழியாயோ
 என்ற பாசுரம் 22 ன் வரிகளாகி,
பூவே பூ வண்ணா!  உன் கோயில் நின்று... என்ற 23ம் பாசுரமாகி
பாவங்கள் தீர்க்கும்
பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும்
கோதை நாச்சியார் பாடலினில்
வலம் வந்து வளம் சேர்க்கும்
மார்கழி மாத பூக்கள்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.