மன்னிக்கலாமா ?.. 007

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

மன்னிக்கலாமா ?.. 007

மன்னிக்கலாமா?

"அம்மா நேத்து ஒன்பது குஞ்சு இருந்துச்சுல்ல? இன்னைக்கு எட்டு குஞ்சு தான் இருக்கு!" காலை எழுந்தவுடன் முகத்தைக் கூட கழுவாமல் புதிதாகப் பிறந்த கோழிக் குஞ்சுகளைப் பார்க்கச் சென்ற கிரிதரன், அம்மாவைக் கூப்பிட்டான். நான்கு நாட்களுக்கு முன்னால் தான் அவர்களது வீட்டின் பிரவுன் நிறக் கோழி பத்து குஞ்சுகளைப் பொரித்திருந்தது. பத்து குஞ்சுகளையும் அழகாக வீட்டைச் சுற்றிலும் கூட்டிக்கொண்டு போய் அவ்வளவு சமத்தாக வளர்க்க ஆரம்பித்திருந்தது. 

பாதி சமையலில் இருந்த அம்மா, "ஐயையோ! பத்துல இருந்து நேத்து ஒன்பது ஆச்சு, இன்னைக்கு எட்டு ஆயிடுச்சா!" என்றபடி தானும் வந்து கோழிக் குஞ்சைத் தேடிப் பார்த்தார். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்கிறதா, தனியாக அலைகிறதா, வீட்டுக்கு வெளியே சென்று விட்டதா என்றெல்லாம் தேடிப் பார்த்தார்கள். 

"அம்மா! பாவம்ல அம்மா நம்ம பிரவுன் கோழி? தினசரி அதோட ஒரு குஞ்சு காணாமப் போகுது.." என்று அழுவதற்குத் தயாரானான். எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த அபிராமி பாட்டி,

"அந்தப் பக்கத்துத் தெரு செவலை நாய் தான் காலையில நான் வாசல் தெளிக்கும் போது இந்தப் பக்கமா அலைஞ்சுகிட்டு இருந்துச்சு" என்றார்.

"ஏன் பாட்டி! நீங்க ஒரு கல்லை எடுத்து அதை அடிக்க வேண்டியது தானே? போன தடவையும் எங்க கோழிக்குஞ்சுகளை அது தான் புடிச்சிட்டுப் போச்சு" என்றான் கிரி கோபத்துடன்.

"பாவம் ராசா அது! அது இப்ப குட்டி போட்டு இருக்குல்ல.. அதைப் போய் கல்லால அடிக்கலாமா?" என்றார் பாட்டி.

"போங்க பாட்டி! உங்க கூட டூ! இப்படிலாம் செஞ்சீங்கன்னா உங்க கூட பேசவே மாட்டேன்" என்று கிரி கூற,

"பெரியவங்களை அப்படிப் பேசக்கூடாதுடா.. வா! குளிக்கப் போகலாம்" என்று அம்மா கிரியைக் கூப்பிட, "நீ இப்பதான் குளிக்கப் போறியா? நான் அப்பவே கிளம்பியாச்சு! என்றபடி அபிராமிப் பாட்டியின் வீட்டிற்குள்ளிருந்து வந்தாள் அபிநயா. அவள் கிரியின் வகுப்புத் தோழி. அபிராமிப் பாட்டியின் பேத்தியும் கூட.

"நீ முதல்ல குளிச்சிட்டேன்னா என்ன? நான் தானே முதல்ல சாப்பிடுவேன்.. எப்பவும் நான் தான் முதல்ல ஸ்கூலுக்கு போவேன் தெரியுமா?" என்று அழகு காட்டிவிட்டு குளிப்பதற்காக ஓடினான் கிரி. அவன் கண்களில் இப்போதும் லேசாக வந்த கண்ணீர் அவன் தலையில் ஊற்றிய நீருடன் கலந்து ஓடியது.

 அரை மனதுடன் சாப்பிட்டுக் கிளம்பி கிரி வெளியே வர, அவனுடைய நண்பன் கவினும் அவனுடன் சேர்ந்து கொண்டான். "பாத்தியா கவின்! இன்னிக்கும் ஒரு கோழிக் குஞ்சை அந்த செவலை நாய் தூக்கிட்டு போயிடுச்சுடா!" என்று கிரி கூற,

"வாடா இன்னும் ஸ்கூலுக்கு நேரம் இருக்கு. நாம ரெண்டு பேரும் அதைத் தேடிப் போவோம். இன்னிக்கி அதைக் கல்லால அடிச்சுக் கொன்னுட்டு தான் மத்த வேலை" என்று கவின் கூற, "வாடா போவோம்!" என்று புத்தகப்பையை வாசலிலேயே வைத்துவிட்டு கிரியும் அவனுடன் நடந்தான்.

"கிரி எங்கே போறே?" என்று அம்மா கூப்பிடுவதைக் காதில் வாங்காமல் விறுவிறுவென்று இருவரும் நடந்தனர். பக்கத்துத் தெருவில் ஒரு ஆளில்லாத வீட்டின் ஓரம் தான் அந்த செவலை நாயின் இருப்பிடம். அங்கு அவர்கள் அதைத் தேடிப் போக, அந்த நாயைக் காணவில்லை.

"போடா! எங்கேயோ தப்பிச்சிடுச்சு" என்று கிரி காலைத் தரையில் உதைத்தவாறு கூறினான். "ஏய் ஏதோ சத்தம் கேட்குது பாரேன்" என்று கவின் கூற, இருவரும் அதன் இருப்பிடத்தில் சென்று பார்த்தார்கள். குட்டிக் குட்டியாக நான்கு நாய்க்குட்டிகள். இன்னும் கண் திறக்கவில்லை. அவ்வளவு அழகாக இருந்தன.

"டேய் ரொம்ப அழகா இருக்குடா!" என்றான் கிரி. இந்த நாய்க்குட்டிகளின் அம்மாவைத் தான் கொல்ல வந்தோம் என்பதே அவனுக்கு மறந்து போய்விட்டது.

"நாம அந்த நாயைக் கொன்னுட்டா இந்தக் குட்டி எல்லாம் பாவம்ல டா?" என்று கவின் கேட்க, "ஆமாடா!" என்று கிரியும் ஒத்துக் கொண்டான்.

"கொஞ்சம் இந்த குட்டிங்க வளர்ந்த பிறகு அதைக் கொல்லலாம். சரியா?" என்று கிரி கேட்க, "சரிடா" என்றான் கவின். 

இருவரும் வீட்டிற்கு நடந்தனர் அப்போது எதிரில் வந்த அபிநயா, "பாத்தீங்களா? இன்னைக்கும் நான் தான் ஃபர்ஸ்ட்! ஸ்கூலுக்குப் போகாம வீட்டைப் பார்க்க போயிட்டு இருக்கீங்க?" என்று கேட்க,

"நானே சோகத்துல இருக்கேன். நீ போ.. பெருமை பேசாதே" என்றான் கிரி கோபத்துடன். கவின், "அதில்ல அபி.." என்று நடந்ததைக் கூற, 

"அதுல என்ன இருக்கு? உணவுச் சங்கிலி அப்படி தான் இருக்கும்" என்றாள் அபி.

"என்ன உணவுச் சங்கிலியா? உணவுல எப்படி செயின் செய்றது?" என்பது கிரியின் சந்தேகம். "ஒருவேளை நூடுல்ஸ் மாதிரி சங்கிலி டிசைன்ல கடையில் விப்பாங்களோ?" என்றான்.

"இது தெரியாதா? போன வாரம் கிளாஸ்ல சார் சொல்லிக் கொடுக்கும் போது தூங்கிகிட்டு இருந்தியா?" என்று அவர்களைக் கேலி செய்துவிட்டு அபிநயா பள்ளியைப் பார்க்க நடந்தாள்.

 அன்று முழுவதும் உணவுச் சங்கிலி என்றால் என்னவென்றே கிரியின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. பிற நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்பதற்கு மனம் வரவில்லை. வீட்டிற்குத் திரும்பியவன், இப்போதெல்லாம் அக்கா செய்வதைப் போல அம்மாவிடம் போய், "அம்மா! கொஞ்சம் நெட்ல சர்ச் பண்ணனும்.. ஒரு டவுட்டு.. உங்க ஃபோனைக் குடுங்களேன்" என்று வாங்கி, அம்மாவின் அலைபேசியில் உணவுச் சங்கிலி என்று தட்டச்சு செய்து தேடினான். படத்துடன் விரிவாகப் போட்டிருந்தார்கள்.

 கிரிக்கு அவ்வளவாகப் புரியவில்லை. "என்னடா பாக்குற?" என்று அம்மா வந்து கேட்க, "இந்த அபிநயா ஏதோ உணவுச் சங்கிலின்னு சொன்னாம்மா.. அதான் என்னன்னு பார்க்கிறேன்" என்றான்.

"அதுவாடா? இப்ப மண்ல இருக்குற புழுக்களை எல்லாம் கோழி சாப்பிடுது.. கோழியை நாம சாப்பிடுறோம்.. இதே மாதிரி காட்டில் உள்ள பறவைகளை ஓநாய், நரி மாதிரி கொஞ்சம் பெரிய விலங்குகள் சாப்பிடும். அந்த நரி, ஓநாயை சிங்கம் சாப்பிடும். அப்புறம் சிங்கம் இறந்து போச்சுன்னா அதோட உடல் பல புழுக்களுக்கு, எறும்புகளுக்கு உணவாகும். கழுகுகள், வல்லூறுகள் கூட அந்த உடலை சாப்பிட்டுட்டுப் போகும். மண்ணுக்கு உரமாகவும் இறந்து போனவங்களுடைய உடல் மாறலாம். மறுபடியும் அந்த மண்ணிலிருந்து செடி வளரும். அதை வேற ஏதாவது உயிரினம் சாப்பிடும். இதுதான் உணவுச் சங்கிலி" என்றார் அம்மா.

"சூப்பர் மா!" என்றான் கிரி. இப்போது இணையத்தில் அவன் பார்த்த செய்தியும் அவனுக்குப் புரிந்தது. மறுநாள் கவின் அவனிடம், "அப்ப, அடுத்த மாசம் நாம அந்த நாயைக் கல்லால் அடிச்சு கொன்னுடலாமாடா?" என்று கேட்க,

"இல்லடா. பாவம் அது உணவுச் சங்கிலியோட ஒரு பகுதி தான். மன்னிச்சு விட்டுடலாம்" என்றான் கிரி. அவனது சிந்தனை மாற்றத்திற்கு என்ன காரணம் என்று யோசித்தான் கவின்.


-Dr. S. அகிலாண்ட பாரதி
சங்கரன்கோவில்.