புன்னகை...! 026

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

புன்னகை...! 026

புன்னகை

 அவளுக்கு தலையை நிமிர்த்தி பார்க்கவே வெட்கமாக இருந்தது. மற்றவர்களிடம் தன்னுடைய அவலத்தை சொல்லி உபகாரம் கோரவும் ஏதோ ஒன்று இடைஞ்சலாய் இருந்தது. ஓரக்கண்ணால் சுற்றிலும் முற்றிலும் பார்த்தாள். அனைவரும் தங்களுடைய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். யாரும் அவளை கவனிக்கவில்லை என்பது அதிலிருந்து தெளிவாகியது.

 "கடவுளே நான் என்ன பண்றது? இப்ப டீச்சர் கிளாஸுக்கு வந்துருவாங்களே!"

 என தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டாள். வெகு நேரம் சென்றும் தனக்குரிய சிறந்த தீர்வு உதிப்பாக தோன்றாமை  காரணமாக கடவுள் தன்னுடைய வேண்டுதலை புறக்கணித்து விட்டாரோ? என்று எண்ணத் தோன்றியது அவளுக்கு.

அவள் சித்ரா தரம் நான்கு படிக்கும் இளம் மொட்டு. மழலை இல்லை ஆனால் குழந்தை. பால்வடியும் முகம். செல்வ செழிப்புடன் வளர்ந்த ஒரு தாரகை. நேற்றைய தினம் அப்பாவுடன் வெளியில் சென்றதால் பயிற்சிகள் ஒன்றும் செய்து கொண்டு வந்திருக்கவில்லை. இப்பொழுது அவசர அவசரமாக ஆசிரியர் வரும் முன் செய்து முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருந்தவளுக்கு பிழை ஏற்பட்டு விட்டது. இன்று காலை ஆசிரியரின் திட்டுக்குப் பயந்து வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என மேசையில் அமர்ந்தது நன்றாகவே அவள் எண்ணத்திலிருந்தது. திடீரென்று அப்பா வந்ததும் பாடசாலைக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை பரவாயில்லை என்று அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு பையில் புத்தகங்களை இடும் போது அலி ரப்பர் கீழே விழுந்து இருக்க வேண்டும்.ஏனென்றால் பிழையை சரி செய்து எழுதுவதற்கு அலி ரப்பர் இல்லை என்பதால் அவள் சிந்தனையே வேறு புறம் சென்று இருந்தது.  இந் நாள் வரை மற்றவர்களுடன் நடந்து கொண்ட முறையின் காரணமாக அவர்களிடம்  கேட்கவும் வெட்கமாக இருந்தது.சிறு பிள்ளை அவள் முதன் முறையாக நட்பு வட்டாரங்கள், உறவுகள் எல்லோரும் தனக்கு அவசியமானவர்கள் என்பதை உணர்ந்து கொண்டாள். இருந்தாலும் தன்னுடைய புரிதலை எவ்வாறு மற்றவர்களிடம் வெளிப்படுத்துவது என்ற விடயம் அவளுக்கு தெரியவில்லை.

மணி அடித்ததன் பின் ஆசிரியர் வகுப்புக்குள் நுழைய அவள் மனம் தித்திக் என்று  அடித்துக்  கொண்டது. ஆசிரியரை முகம் கொண்டு நோக்கவே அச்சமாக இருந்தது.அமைதியாக எதுவும் தெரியாத ஒரு அப்பாவி போல அமர்ந்து கொண்டாள். தொண்டை குளிக்குள் இருந்து எச்சில் இறங்கி விடமாட்டேன் என்று அவளை மிரட்ட அழுகை கூட எட்டிப் பார்த்தது அந்த கணம்.இருந்தாலும் "தைரியமாக இரு நம்பிக்கையை இழக்காதே!" என்று ஆறுதல் கூறியது அவள் மனம். பாடத்தை படித்துக் கொடுத்த ஆசிரியர் வீட்டு வேலை பற்றி கேட்க தன்னையறியாது அவள் கண்கள் கலங்கிப் போயின.
 அவசரமாக புறங்கையால் கன்னத்தை துடைத்துக் கொண்டாள். அனைவரும் பயிற்சி கொப்பிகளை காட்டும் போது தாயை இழந்த பிள்ளையாக ஏக்கப்பார்வையை பார்த்து வைத்தாள். ஆசிரியர் வித்யா தேவி அவளுடைய நடவடிக்கையை பார்த்து, பாவனைகளையும் பார்த்து 

"சித்ரா பயிற்சி கொப்பிய கொண்டு வா" என்று கேட்க விழிகள் மழையாய் கண்ணீர் துளிகளை  பொழிவிக்க,  பற்களெல்லாம் நர்த்தனம் ஆட...

"செய்யல மேம்!"

 என்று கூறினாள். 

"ஏன்?"

" நேத்...து அப்..பா கூட வெளி..யில போனே..ன்.. வரும்..போ..து இரவு ஆயி..ருச்சு அப்ப..றம் காலை..யில எந்தி...ரிச்சு செய்..யும்போது பள்..ளிக்கு கிள...ம்ப நேரம் ஆச்சு அதனா...ல செய்ய..ல பள்ளில செய்ய...லாம்...னு உக்...காந்..
தேன் பர்ஸ்ட் செய்யு..ம்போ...து பில ஆயி...ருச்சு அளிக்...கிறதுக்கு அலி ரப்பர் தேடினே ..ன் ஆனா கா...லையில அவசரத்துல  விழு...ந்தி...ருச்சின்னு நினைக்...கிறேன் அதனால செய்யல.."  

வினா தொடுக்க வாய் திறக்கும் முன்னே நான்கைந்து பிள்ளைகள் 

"எங்க கிட்ட கேட்கலாமே சித்ரா! நம்ம பிரண்ட்ஸ்..
தானே!" 

என்று கூற லேசாக புன்னகைத்துக் கொண்டார் ஆசிரியர் வித்யா தேவி. இத்தனை நேரம் இருந்த கவலை துக்கம், வருத்தம், எல்லாம் பின் தள்ளப்பட  புன்னகைத்து வைத்தாள் சித்ராவும்.

 *குழந்தைகள் மனம் இவ்வாறு தான் எதையும் மறைக்கத் தெரியாதவர்கள். குற்றங்களை  மனதில் வைத்துக் கொண்டு திரியாதவர்கள். சித்ராவின் பணத்தின் காரணமாக ஏற்பட்ட பேச்சுக்கள் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை என்பதுதான் எதார்த்தம்*

-ஹம்னா அக்பர்,
இலங்கை.