வரமாய் வந்த செல்வங்கள்... 002

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

வரமாய் வந்த செல்வங்கள்... 002

வரமாய் வந்த செல்வங்கள்...

       மதிய உணவு இடைவேளை மணி அடித்தது. அந்த மிகப்பெரிய தனியார் பள்ளியின் மாணவர்கள் மிகவும் கண்ணியமாக கைகளைக் கட்டிக்கொண்டு கை கழுவுவதற்காக வரிசையில் சென்றுக்கொண்டிருந்தார்கள். கைகளைக் கழுவிய பின் வரிசை மாறாமல் தத்தம் வகுப்பறைக்குள் சென்று ஒருநிமிட இறை பிரார்த்தனை செய்தனர். மூன்றாம்  வகுப்பில் பிரார்த்தனை முடிந்தபின் ஆசிரியை விமலா, "ஸ்டூடன்ஸ் எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கலாம் சிந்தாம சமத்தா அவங்க அவங்க எடுத்துகிட்டு வந்த சாப்பாட மிச்சம் வைக்காம வீண் பண்ணாம சாப்பிடணும் ஓகேவா" என்று சொன்னவுடன், "ஒகே மிஸ்" என்று அனைத்து மாணவர்களும் கோரஸாய் கூறிவிட்டு தத்தம் டிபன்பாக்ஸை திறந்தார்கள். 

               முகிலனும் அஜய்யும் ஆர்வமாக சாப்பிட அமர்ந்தார்கள். முகிலன்  வெண்டைக்காய் சாம்பார் சாதமும், கருப்பு கொண்டைக்கடலை கிரேவியும் எடுத்து வந்திருந்தான். அஜய் நூடுல்ஸ் கொண்டு வந்திருந்தான். அஜய் முகிலனிடம், "ஏன் முகிலா டெய்லி நீ குழம்பு சாதம் வெஜிடபிள்ஸ் எடுத்துட்டு வர்றியே உனக்கு போர் அடிக்காதா, டெய்லி எப்படி இத சாப்பிட்ற" என்றான். 
     "எங்க அம்மா தினமும் இப்படி தான் எதாவது ஹெல்தியா செஞ்சு தருவாங்க.. இந்த ஃபுட் எல்லாம் உடம்புக்கு அவ்ளோ நல்லதாம். வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு ரொம்ப உதவுமாம்.. கொண்டைக்கடலைல நிறைய புரோட்டீன்ஸ் இருக்குதாம்.  நிறைய வெஜிடபிள்ஸ் சாப்பிட்டாதான் நாம ரொம்ப ஹெல்தியா இருக்கலாம்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க" என்றான் முகிலன். 

       "ஓஹோ.. அப்போ உங்க அம்மா நூடுல்ஸ் எல்லாம் செய்ய மாட்டாங்களா? ஹோட்டல்ல இருந்து சிக்கன் ப்ரைடு ரைஸ், புரோட்டா இதெல்லாம் வாங்கி தர மாட்டாங்களா?" என்றான் அஜய். 
      "நாங்க எப்போதும் ஹோட்டல்ல சாப்பிட மாட்டோம். எங்கயாவது வெளில போய்ட்டு வீட்டுக்கு வர லேட் ஆகிடிச்சு. டிபன் செஞ்சு சாப்பிட லேட்டாகும் அப்படீனாதான் ஹோட்டல்ல சாப்பிடுவோம். அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்றதும் உடம்புக்கு கெடுதல்னு அம்மா சொல்லியிருக்காங்க.. ஏன்னா ஹோட்டல்ல என்ன எண்ணைய் யூஸ் பண்றாங்கனு தெரியாதாம்,  சுத்தமா சமைப்பாங்கலானும் தெரியாதாம், அதுமட்டுமில்லாம அதுல டேஸ்டுக்காக நிறைய மசாலா யூஸ் பண்ணுவாங்களாம்.. அது எல்லாருக்கும் ஒத்துக்காது... வயித்துவலி வந்துடும்னு சொல்லுவாங்க.. இதே நம்ப அம்மா சமைக்குறாங்கனா நமக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து சுத்தமாவும் ஹெல்தியாவும் சமைப்பாங்களாம்.. அதுனால நம்ப உடம்புக்கு சீக்கிரம் எந்த டிஸீசும் வராதாம்"  ... என்று சொல்லி முடித்தான் முகிலன். 

       முகிலன் பேசுவதையே ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த அஜய்  "ஓ... இதுல இவ்ளோ விஷயம் இருக்கா"... என்றான். 
       "இது மட்டும் இல்ல அஜய் அம்மா இன்னொன்னும் சொல்லுவாங்க, ஹோட்டல்ல நிறைய பேருக்கு சமைப்பாங்க, நிறைய பேர் ஹோட்டலுக்கு  வரணும் நிறைய சம்பாதிக்கணும்ங்குற நோக்கத்துலதான் சமைப்பாங்க, ஹெல்தியா இருக்கணும்னு நினைக்குறத விட டேஸ்டியா இருக்கணும்னு தான் நினைப்பாங்க. ஒரு சில ஹோட்டல்ல மட்டும் தான் ஹெல்த்த பத்தி யோசிப்பாங்க. ஆனா, வீட்டல அம்மா சமையல் அப்படி கிடையாது , ஹோட்டல் டேஸ்ட்ட விட கம்மியா இருந்தாலும் பார்த்து பார்த்து ஹெல்தியா சமைப்பாங்க. அவங்க சமையல்ல அன்பும் அக்கறையும் கலந்திருக்கும்னு சொல்லுவாங்க... ஆமா அஜய் நீ ஏன் எப்போதும் நூடுல்ஸ், இட்லி, பிரட் ப்ரைனு இப்படியே எடுத்துக்கிட்டு வர.. உங்க அம்மா குழம்பு சாதம்லாம் செய்யவே மாட்டாங்களா?... என்று அஜய்யிடம் கேட்டான் முகிலன். 

        "எங்கம்மாவும்  எப்பவும் உங்கம்மா மாதிரிதான் சமைப்பாங்க.  ஆனா நான் தான் வேண்டாம்னு சொல்லிடுவேன். மீறி குடுத்துவிட்டாங்கனா சரியா சாப்பிடாம பாதிய திரும்ப வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போய்டுவேன். அதுனால நான் சாப்பிட்டா போதும்ன்னு  நினைச்சு எனக்கு பிடிச்சா மாதிரி நான் என்ன கேட்குறனோ அத செஞ்சு தருவாங்க. ஆனா இப்போதான் முகிலா புரியுது. அம்மா நமக்காகதான் ஹெல்தியான ஃபுட்டா பார்த்து பார்த்து அன்போடு சமைக்கிறாங்கனு.. நானும் இனிமே நிறைய வெஜிடபிள்ஸ் எல்லாம் சாப்பிட போறேன். அம்மா சொல்றத கண்டிப்பா  கேட்பேன் ".. என்றான் அஜய். 

     இவர்கள் இருவரின் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த விமலா மிஸ் பலத்த கைத்தட்டலொன்றை எழுப்பிவிட்டு முகிலனையும் அஜய்யையும் அன்போடு தட்டிக்கொடுத்தார். பின்  மாணவர்களைப் பார்த்து , "ஸ்டூடண்ஸ், நானும் நிறைய ஸ்டூடண்ஸ்ஸ  பார்த்திருக்கேன் மேக்ஸிமம் பிரட் ஆம்லெட், நூடுல்ஸ்னுதா எடுத்துக்கிட்டு வறீங்க. இதெல்லாம் எப்போவாவது சாப்பிடலாம் பட் எப்போதும் சாப்பிடக்கூடாது.  மதியம் நிறைய வெஜிடபிள்ஸோட ரைஸ்தான் சாப்பிடணும் சரியா.. பேரன்ஸ் மீட்டிங்ல கூட பசங்களுக்கு லஞ்ச் ரைஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் குடுத்துவிடுங்க டிபன் ஐட்டம்ஸ் மேக்ஸிமம் குடுத்துவிடாதீங்கனு சொல்லியிருக்கோம். ஆனா அஜய் சொன்னா மாதிரி பசங்க சாப்பிட்டா போதும்ங்குற எண்ணத்துல உங்களுக்கு பிடிச்சத மட்டுமே செஞ்சு குடுத்துவிட்றாங்க பேரன்ட்ஸ். அது ரொம்பவே தப்பு. முகிலனோட அம்மா , வெஜிடபிள்ஸ் குடுத்துவிட்றதோட மட்டுமில்லாம ஒவ்வொரு வெஜிடபிள்ஸ்லயும் என்னென்ன நன்மைகள் இருக்குனு சொல்லி தந்திருக்காங்க.  அதுனால தான் முகிலன் ஒருநாள் கூட உடம்பு முடியலனு ஸ்கூலுக்கு லீவு போட்டது இல்ல. அட்டனன்ஸ் ஹோல்டர் லிஸ்ட்லயும் எப்பவும் பர்ஸ்ட்லயே இருக்கான். இது ரொம்பவே பாராட்ட வேண்டிய விஷயம். 

     முகிலன் அம்மா சொன்னது மாதிரி,  ஹோட்டல் சாப்பாட்ல டேஸ்ட் மட்டும் தான் இருக்கும். பட், அம்மா செய்யுற சாப்பாட்ல அன்போட அக்கறையும் இருக்கும். ஸோ.. இனிமே நீங்களும், இதுதான் வேணும்னு அடம்பிடிக்காம  உங்க அம்மா டெய்லி என்ன சமைக்கிறாங்களோ அததான் சாப்பிடணும். அவங்க நிச்சயமாக உங்களுக்கு நல்லதுதான் நினைப்பாங்க.. நல்லதைதான் சமைச்சு தருவாங்க..  சரியா..  அதுவும் இப்போ இருக்குற சுவிட்சுவேஷன்ல நிறைய ஜெர்ம்ஸ் புதுசு புதுசா வருது. அது வந்துகிட்டு தான் இருக்கும். பட் அதுல இருந்து நம்பள நாமதான் பாதுகாத்துக்கணும். அதுனால ஹெல்தியான ஃபுட் கண்டிப்பா சாப்பிடணும். ஸோ.. அம்மா சமையல எதுவும் சொல்லாம அப்படியே சாப்பிடணும் ஒகேவா.. அதுமட்டுமில்லாம உங்க பேரண்ட்ஸ விட உங்க மேல அக்கறையா உங்களுக்கு இம்பார்டன்ஸ் தரதுக்கு வேற யாராலையும் முடியாது. 

         அதுனால உங்க பேரன்ட்ஸ் சொல்றத நீங்க கேட்குறது மட்டுமில்லாம உங்க ப்ரண்ட்ஸ் கிட்டயும் சொல்லி கேட்க சொல்லுங்க .. பேரன்ட்ஸ் பேச்சு கேட்டு நடக்குற முகிலனுக்கும், குழந்தை கேட்குற கேள்விகள அலட்சியப்படுத்தாம அவங்களுக்கு பொறுமையா நல்லது கெட்டது  எல்லாம் சொல்லித்தர அவனோட பேரன்ட்ஸ்க்கும் ஒரு பெரிய கைத்தட்டல் கொடுத்து பாராட்டலாமா?" என்று விமலா மிஸ் சொன்னவுடன் அனைத்து மாணவர்களும் அழகாக கைத்தட்டினார்கள். 

      சந்தோஷம் தாங்க முடியாமல்  "தேங்க்யூ மிஸ், தேங்க்யூ ப்ரண்ட்ஸ்" என்று அனைவருக்கும் நன்றி கூறினான் முகிலன். 

       "ஸ்டூடண்ஸ்.. இனிமே நீங்களும் டெய்லி ஹெல்தி ஃபுட் எடுத்துட்டு வருவீங்கதானே".. என்று மிஸ் கேட்டவுடன், "எஸ் மிஸ் நிச்சயமா எடுத்துட்டு வருவோம் மிஸ்" என்று கோரஸாக கூறினார்கள் மாணவர்கள். மதிய உணவு இடைவேளை இனிதே முடிவடைய மறுபடியும் கைக்கழுவுவதற்காக வரிசையில் செல்ல தொடங்கினார்கள் மாணவர்கள். 

        இந்த அவசர உலகத்தில் எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மயமாகிவிட்டது. கணவன் மனைவி  இருவரும் வேலைக்கு செல்லும் சூழல். ஆதலால் அதிகமாக ஹோட்டல் சாப்பாடு, ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது என்பதெல்லாம் வெகு இயல்பாகிவிட்டது. துரித உணவிற்கு நம் நாக்கும் அடிமையாகிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். இனிவரும் தலைமுறைகளை காக்கும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது. குழந்தைகளையும் துரித உணவிற்கு அடிமையாக்காமல் முடிந்தவரை அவர்களது நலனில் அக்கறைக் கொண்டு நம் பாரம்பரிய உணவுகளை சமைத்து தருவோம். "குழந்தைச் செல்வம்" கிடைக்கப்பெறுதல் என்பது மாபெரும் வரம். அப்படி வரமாய் பெற்ற செல்வங்களை பாதுகாக்க வேண்டியதும் நமது கடமைதானே. வரமாய் வந்த செல்வங்களை பொக்கிஷமாய் பாதுகாப்போம்.  மாற்றத்தை நம்மிலிருந்தே துவங்குவோம்.

சசிகலா திருமால்
கும்பகோணம்.