பெண்கள் நாட்டின் கண்கள் 050

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்கள் நாட்டின் கண்கள் 050

பெண்கள் நாட்டின் கண்கள்

குறிப்புச் சட்டம்:
        முன்னுரை
        பெண் ஒரு போராளி
         அன்பில் அடையாளம் பெண்கள்
         பெண்ணின் மனவலிமை
         முடிவுரை
 முன்னுரை
நம் நாட்டில் பெண்கள்,
  நதியாகப் பார்க்கப்படுகிறார்கள். மொழியாகப் பார்க்கப்படுகிறார்கள். விண்ணாகப் பார்க்கப்படுகிறார்கள். மண்ணாகப் பார்க்கப்படுகிறார்கள். ஏன் கடவுளாகக் கூட பார்க்கப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? உலகத்தில் உள்ள உச்சபட்ச வலியை தாங்கி ஒரு உயிரை அவள் இம்மண்ணில் படைப்பதால் தான். புராண காலம் தொட்டு புரட்சி காலம் வரை யுகம் யுகமாய் ,ஊழி ஊழியாய் ,ஒளி ஆண்டுகளாய், மானுடத்தை இரட்சித்து பரிசுத்தமாக்கி ,சகல மனிதப் பாவங்களையும் ஏற்று, ரத்தமாய் ,கண்ணீராய், வியர்வையாய், விஞ்ஞானமாய், கவிதையாய், சொற்களில் சொல்ல முடியாத தெய்வீகமாய் விளங்குவதால் தான், பெண்கள் மாண்புமிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். பெண்கள் நாட்டின் கண்கள் அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
 அன்பின் அடையாளம் பெண்கள்  :
       பெண்கள் என்றாலே அன்பு நிறைந்தவர்கள் தங்கள் அன்பினால் தம்மோடு வாழ்கின்றவர்களை அரவணைத்து வாழ்வின் இன்னல்களை களைந்து அனைவரையும் நல்வழியில் இட்டு செல்கின்றனர்.தாயாகவும் சகோதரிகளாகவும் உடனிருந்து வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தையும் கடக்க உறுதுணையாக இருப்பார்கள்.பெண் இல்லா ஊரில் பிறந்தவர்கள் அன்பின் இலக்கணம் அறியாதவர்கள். 
பெண் ஒரு போராளி ;
      சுடரே,மலரே என்ற ஆராதனை உனக்கானதில்லை .நீ பூ அல்ல தீ என்பதை நினைவில் கொள்.
 திறம் ,துணிவு, நேர்மை இவை மட்டுமே பெண்ணுக்கான அணிகலன்கள். காட்சி பொருளாக சித்தரிக்கப்பட பெண் ஒரு காகிதப்பூ அல்ல. நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் பாரதி பெண்ணுக்கு சொன்ன வார்த்தைகள் மட்டுமில்லை, அதுவே பெண்ணின் கவசமும் .அவளுக்கான எல்லைகளை அவளே வகுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றவள் பெண். என்பதையறிந்து வாழ்வில் பெண் கடக்கும் கரடு முரடான பாதைகளில் அவளுடைய பாதங்களை மட்டுமே நம்பி பயணம் செய்ய வேண்டும்.
எங்கே பெண்ணின் கனவுகளுக்கு கதவுகள் தாழிட்டுக் கொள்ளும் நிலை வருகிறதோ அங்கே கதறி கதவுகளை திறக்காமல் கல்வி எனும் ஆயுதம் ஏந்தி தாழிடும் கதவுகளை முட்டி உடை.
ஒரு பெண்ணாய் அவளுக்கென பொறுப்புகளை நேர்த்தியாய் செய்ய மட்டும் பிறக்கவில்லை பெண்.
பெண்ணின் குறிக்கோளுக்கு தடையாய் யார் வரினும் வந்தவர் சுவடில்லாமல் செல்லும்வரை யுத்தகள போராளியாய் போரிட்டு ஓட வைக்கும் வல்லமை பெற்றவள் பெண்.
வாழ்க்கை பெண்ணின் கண்ணீர் பக்கம் அழைக்கும் போதெல்லாம் கல் கொண்டு எரி.
 உனக்கான பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றுவதிலும் வெற்றி பெறுவதிலும் உன் பங்கே அதிகம் என்பதை நினைவில் கொள் .
பெண்ணின் மனவலிமை 
             தனது லட்சியத்தில் எந்த வித சலிப்பும் தொய்வும் இன்றி முன்னேற துடிப்பவள் பெண். நெருக்கடி காலத்திலும் தனது குடும்பத்தை திறம்பட நிர்வகிக்கும் பெண்களின் நிர்வாக திறமையே நாட்டையும் அவர்களை நிர்வாகிக்க வைக்கிறது. சகிப்புத்தன்மை, அரவணைப்பு, பொறுமை, மனவலிமை எல்லாம் மங்கைக்கே உரிய மகத்தான பண்புகள். ஆணும் பெண்ணும் சமமாய் உழைத்து சமான வருமானம் ஈட்டும் நாடுகளில் இன்று உழைப்பாளர் தொகை உயர்ந்துள்ளதாம். இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் முன்னேறுகிறதாம். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த பெண்கள் வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பதில்லையே என்று பாரதியின் வாக்குக்கு ஏற்ப பூத்து குலுங்கும் நறுமண மலர்களாய் பெண்கள் தங்கள் பட்டறிவினால் ஒளி வீசி வருகின்றனர்.
பெண்களை இறைவன் உடலளவில் மென்மையாக படைத்திருந்தாலும் மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். எத்தனை துன்பங்களையும் சகித்து கொண்டு தன்னம்பிக்கையோடு போராட கூடியவர்கள்.தனது துன்பங்களை பொருட்படுத்தாது நாள் முழுவதும் தன் குடும்பத்துக்காக உழைக்கின்ற பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். 
முடிவுரை
             புதுமைப்பெண்களாக, புரட்சி பெண்களாக, துப்பாக்கி ஏந்தி போரிடும் வீராங்கனைகளாக, அறிவூட்டும் ஆசானாக, ஒப்பற்ற இல்லத்தலைவியாக, விண்வெளி ஆராய்ச்சியாளராக, தகவல் தொடர்பு வல்லுனர்களாக என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் இன்று சிறந்து விளங்குகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க பெண்கள் போற்ற பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல நம்மால் பின்பற்றபடவேண்டியவர்கள். எனவே அவர்களின் மகிமை உணர்ந்து சம உரிமை தருவோம். பெண்மையை போற்றுவோம்.
- G. ராமராதா
ராஜபாளையம்.