பேசும் தீபங்கள்...! 007

புதுமை ப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பேசும் தீபங்கள்...! 007

பேசும் தீபங்கள்...
(கட்டுரை)

* முன்னுரை
* மாதவம் செய்திட்டவர்கள்
* நாட்டின் கண்கள்
* பெண் விடுதலை
* வலிமையவள்
* முடிவுரை

முன்னுரை:

" பெண் இன்றிப் பெருமையும் இல்லை
          கண் இன்றிக் காட்சியும் இல்லை"
         என்பது பெரியோர் வாக்கு. ஆம் மனித உடலில் கண்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு சமூகத்தில் பெண்களும் முக்கியமானவர்களேயாவர். ஆதலால் தான், 
"பெண்கள் நாட்டின் கண்கள்" என்றனர்.  அன்பினால் வார்த்தெடுத்த உணர்வுகளின் கலவையாய், குவியலாய் பெண்ணைத் தவிர சிறந்த வேறொரு உயிரி நிச்சயமாக இல்லை. 

மாதவம் செய்திட்டவர்கள்:

       " மங்கையராய் பிறப்பதற்கே_ நல்ல மாதவம்
செய்திடல் வேண்டும் அம்மா"
         என்ற தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல், பெண்களின் பிறப்பினை பெருமையாகவே இச்சமூகத்திற்கு எடுத்து காட்டுகிறது. 

      வாழ்க்கை என்பது ஆண் பெண் என்ற இருபாலருக்கும் சமமானது. அந்த வாழ்வில் இன்று இருவருக்கும் உரிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பல போராட்டங்களுக்குப் பின்பு,  "பெண் ஆணிற்கு சமமானவள்" என்ற உரிமையைச் சட்டமும் சமூகமும் தந்துள்ளன. "பெண் அடிமைப்பட்டவள் அல்ல" என்பதை பல பெண்ணியவாதிகள் நிரூபித்துள்ளார்கள். 

            "உடலுறுதிக் கொண்ட ஆணைவிட
மனவுறுதிக் கொண்ட பெண்  சிறப்புக்குரியவள்"...
              சவால்களைத் தவிர்த்துத் தவிடுப்பொடியாக்கி, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணங்களும், வலிமையான ஊக்கமும் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பார்போற்றும் பூமகள்கள் ஆயிரமாயிரம். 

           "எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் 
இளைப்பில்லை காண்"
        என்ற முண்டாசுக் கவிஞர் பாரதியின்  சொற்களுக்கு இணங்க, அதை நிரூபிக்கும் வகையில் இன்று "மண் முதல் விண் வரை" சமூகத்தின்  எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் கால் பதிக்காதத் துறையே இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். 

நாட்டின் கண்கள்:

             இல்லத் தலைவியாக மட்டுமே இருந்தனர் அன்றையப் பெண்கள்.. ஆனால்   இன்று நாட்டின் தலைவியாகவும், உலகத்தின் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்துகின்றனர். வீட்டிலும் சரி, வேலைக்கு செல்லும் இடத்திலும்   சரி ஓர் பெண்ணிற்கு உடலளவிலும் மனதளவிலும் எத்தனையோ பிரச்சினைகள் அனுதினமும் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து காட்டாற்று வெள்ளமாய் வீறுகொண்டு ஓடுகிறார்கள் வெற்றியின் பாதயை நோக்கி... 

        பிரச்சினைகளைக் கண்டு பயந்திடாமல் எதிர்கொண்டு போராடும்,  எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்தான் பெண்கள். வேதனைகளை சாதனைகளாக்கி, களத்தினில் தடம் பதிப்பவர்கள் பெண்கள். 

      பெண்ணுரிமை என்பது என்ன?. 
பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துக் கொண்டு தீர்த்து வைப்பதே பெண்ணுரிமை ஆகும். 

      உலகம் முழுவதும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். பின்பு தனிமனித சுதந்திரத்திற்காக மனிதன் போராடிய போதுதான், பெண்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன என்பது குறித்த விழிப்புணர்வும் வளர ஆரம்பித்தது. பெண்ணுரிமைக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் மகாகவி பாரதியார். 
    "பெண்கள் அறிவை வளர்த்தால்
      வையம் பேதமை யற்றிடும் காணீர்" 
      பெண்களின் அறிவே இந்த உலகின் பேதமையை அற்றுப்போகச் செய்யும் என்று எழுதியவர் பாரதி. 
"சக்ரவர்த்தினி" என்னும் மாத இதழில் பெண்விடுதலைக்காக மிக தீவிரமாக எழுதியுள்ளார். 

பெண் விடுதலை:

            " பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி "  என்று தன் வாழ்நாள் முழுவதும் முழங்கிய பெரியார், தன் பகுத்தறிவு கொண்டு பெண்ணிற்காய்  "பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்மை ஒழிப்பு" என பெண்களுக்குத் தேவையான உரிமைகளுக்காக போராடியவர். 

        பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் "கல்வியறிவு அடிப்படை " என்பதை உணர்த்தினார். "தேவதாசி ஒழிப்பு முறையைக்" கொண்டு வந்தார். 
"கும்மி, கோலாட்டங்களை மறந்துவிட்டு , ஆண்களை போல எல்லா விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்" என்றார். 

        "கற்புக்கரசி" போல "கற்புக்கரசன்" என்ற வார்த்தை ஏனில்லை? என்று கேட்டு பெண்ணுரிமையை நிலைநாட்டியவர். "மதர் இந்தியா" எனும் நூலில் பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்த தன் சிந்தனைகளை பதித்துள்ளார். மேலும் "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற கேள்வியை எழுப்பியதோடு இல்லாமல் அதற்கான விளக்கத்தையும் தன் புத்தகத்தில் தந்துள்ளார். 

    "பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது" என்றார் ஜவஹர்லால் நேரு. இப்படியெல்லாம் போராடி பெறப்பட்டதுதான் பெண் சுதந்திரம் என்பதும்.  ஆனாலும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்றால், அது இன்றளவும் கேள்விகுறி தான். 

       ஆம்.. இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருந்தாலும், ஆங்காங்கே அதிகரித்து வரும் வன்கொடுமையும், வன்புணர்வும் மனதை ரணமாக்கிக் கொண்டுதானிருக்கிறது. 

    "தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதே
பெண்களுக்கு அழகு" என்றார் ஔவையார். 
     "பெண்கள் தன் அழகிற்காக அல்ல
  ஆயுதமாக பயன்படுத்தவே தன் நகத்தினை வளர்த்திட வேண்டும்" என்று அறிவுறித்தினார் மகாத்மா காந்தியடிகள். இன்றைய நிதர்சன நிலையும் இதுதான். என்னதான் பெண்கள் முட்டிமோதி பல எதிர்ப்புகளுக்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேற்றம் கண்டாலும், சில கயவர்களுக்கு இடையில் இன்னும் போராட வேண்டிய நிலையில் தான் பெண்கள் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். 

         "பெண் எந்த காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும் புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்" என்றார் வேட்லி. 
         ஆயிரமாயிரம் பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்துக்கொண்டே இருந்தாலும், பிரச்சினைகளை ஒரு தூசியென  தள்ளிவிட்டு , காற்றோடு காற்றாய் பிரவேசிப்பவள் பெண். 

வலிமையானவள்:

        பெண் மிகவும் பலவீனமானவள் என்பார்கள். ஆம் அன்பிற்கு ஒன்றே அடிபணிபவள். ஆனால், மனதளவில் அவள் பலமுடையவள். இவ்வுலகில் பிள்ளைப்பெறும் வலிதனைப் பொறுத்துக்கொள்ளும் சக்தி , மனவலிமை பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. 

        அன்பின் சொரூபமவள். எத்தனை துயரங்கள் வந்தாலும், வேதனைகளையும் சோதனைகளையும் துணிச்சலோடு எதிர்கொள்பவள் பெண். பெண்ணியம் பேசித்திரியும் எத்தனையோ பேர் வெறும் பேச்சளவில்தான் பெண்மையை போற்றி புகழ்கின்றனர். 

     "எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்" என்கிறது மகாபாரதம்.  அந்த வகையில் பெண்மையை மதித்து போற்றி தேவதைகளாக கொண்டாடும் தேவதன்களும் இங்கே இருந்திடத்தான் செய்கிறார்கள். ஆம்... பெண்களுக்கு அரணாயிருக்கும் ஆண்கள் இருப்பதினால்தான் இங்கே பெண்கள் என்னும் தீபங்கள் எரிந்து கருகிடாமல் , இன்னும் சுடர்விட்டு ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

           பெண் என்பவள், இயற்கையின் அங்கமான தனிசக்தி என்பதை அவள் உணரத் தொடங்கும் போது தான் சாதிக்கத் தொடங்குகிறாள். ஆண்களை எதிராக செயல்படுவதல்ல பெண்மை. "ஆணும் பெண்ணும் இரட்டை நூல்களாலான சமுதாயக் கயிறு... இதுவே பலமான உறவுகளைக் கட்டி வைத்து ஆரோக்கியமான சமுதாயத்திற்கும் காரணமாக அமைகிறது. இதில் ஒரு நூல் அறுந்தாலும் , பல உறவுகள் சிதறித்தான் போகின்றன." 

         சமூக கட்டமைப்புகளை எதிர்த்து அல்ல மதித்து தான் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து, சமுதாயத்தில் அதனை தக்க வைத்துக்கொள்ளவும், பால் சமத்துவதற்காக போராட உதவும் ஒரு வழிகாட்டியே பெண்ணியம்.  நியாய உணர்வும், சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய எதார்த்தம் இது. சராசரியாக பார்த்தால் பெண்ணியமாக தெரிந்தாலும் அடிப்படையில் "மனித உரிமையே" பெண்ணியம். 

முடிவுரை:

        பெண்களை காலிலிட்டு மிதிக்கும் கயவர்களை புறந்தள்ளி, பெண் முன்னேற்றத்திற்கு பக்கபலமாய் ஏதுவாய் விளங்குபவர்களை ஏணிகளாய் பயன்படுத்தி முன்னேற்றம் காண்போம். என்னதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேசித்திரிந்தாலும் , ஒரு பெண் தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால்தான் தான் பெற்றுக்கொண்ட சுதந்திரத்திற்கே மதிப்பு. 

           "பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா"
        என்ற பாரதியின் கனவு பலித்தது இன்று. இதோ.. பாரதிக் கண்ட புதுமைப் பெண்களாய் புது யுகம்தனில் சிகரம் தொட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள் சிங்கப் பெண்கள். 
"தீபமாய் சுடர்விட்டு
தீவினைதனை அழிப்போம்"
     பெண்மை என்றென்றும் போற்றப்பட வேண்டிய ஒன்றே. 

கவிஞர். சசிகலா திருமால்
கும்பகோணம்.