பெண்மையை போற்றும் 053

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றும் 053

பெண்மையைப் போற்றுவோம்
*****************
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" ஆம் பெண்மை என்பது உன்னதம் நிறைந்தது.பெண்கள் யாவரும் போற்றுதற்குரியவர்கள்.
பெண்ணென்ற அமைப்பிலே மண்ணிலே பிறந்தது முதல் மண்ணிற்கிரையாகும் வரை  கண்ணியம் பல பெற்றுக் காத்திரமானவர்கள்.பருவம் ஒவ்வொன்றிலும் புண்ணியமான பாத்திரம் பற்பல ஏற்பவர்கள்.

வளர்ந்து சகோதரியாய் பதவியேற்று அன்பின் துவக்கம் ஆவாள் பெண்.பருவம் தந்த உடல்மாற்றம் வலிகள் பல தந்திட்ட போதும் சகித்து முகத்தில் மலர்ச்சி தருவாள்.தாய்மை என்ற நிகரற்ற பதவியால் உலகையே தனக்குள் ஆளும் வல்லமை பெறுவாள்.ஆணின் துணையாய் என்றும் வாழ்வில் ஓர் உறுதுணையாய் மிளிர்வாள்.கணவனின் ஆசையைக் கருவாய்ச் சுமந்து காரிகை அவளோ கற்பக தருவாவாள்.கர்ப்பகால அசௌகரியங்கள் சகித்து மனதில் உவகை கொள்வாள்.பிரசவ வலியால் செத்துப் பிறந்து புனிதம் எனும் பொன்னாடை அணிவாள்.
உடலால் மென்மை ஆனபோதிலும் உள்ளத்தால் வலிமை பெற்றே திகழ்வாள்.அன்பைச் சுரந்து உடலை வருத்தி குடும்பத்துக்காய் அயராது உழைப்பாள்.கணவனும் குழந்தைகளும் இரண்டு கண்களாக அவர்களை கண்ணிமையாகக் காத்து நிற்பாள்.தாய்ப்பாலுடனே பாசத்தையும் பாங்காய் ஊட்டிப் பேரின்பம் அடைவாள்.குடும்பம் என்ற குருவிக்கூட்டை குவலயமாகக் கட்டிக்காப்பாள்.

பெண்மை மிகவும் சக்தி வாய்ந்தது.உலகம் என்ற தேர் உயிரோட்டமுள்ளதாய்ச் சுழல அச்சாணியானவள் பெண்ணே ஆவாள்.இன்றைய சமுதாயத்தில் பல வன்முறைகள்,அடக்குமுறைகள்,துஷ்பிரயோகங்கள் பெண்களுக்கெதிராகச் செயற்படுத்தப்படுகின்றன.இவை அழிய வேண்டும்.உலகை விட்டும் ஒழிய வேண்டும்.

பெண்களின் திறமைகள் உலகுக்கு வெளிச்சம் காட்டப்பட்டால் உலகுக்கே அவர்கள் வெளிச்சம் காட்டுவார்கள்.ஆண் அஞ்சும் பல காரியங்களைச் செய்யும் வீரியம் கொண்டவர்களாக இன்றைய பெண்கள் திகழ்கிறார்கள்.பற்பல துறைகளிலும் மங்கையர் புரிகின்ற சாதனைகள் அதற்கு சான்றுகளாய் அமைகின்றன.எண்ணிலடங்கா பெண்மணிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளன. வார்த்தைகளால் வரையறை செய்ய முடியாத பெருமை நிறைந்தவர்கள் பெண்கள்.அவர்கள் புகழை இன்று மட்டுமல்ல என்றும் போற்றுவோம்.

-பஸ்லா பர்ஸான்
 காத்தான் குடி
 இலங்கை