பெண்மையை போற்றுவோம் 048

புதுமைப்பெண் விருது கட்டுரைப்போட்டி

பெண்மையை போற்றுவோம் 048

பெண்மையை போற்றுவோம்

        பெண்கள் நாட்டின் கண்கள் .ஆஹா !அற்புதம்!! சிறு பூக்களில் தொடங்கி இயற்கை முதல் நீர்நிலைகள் வரை அனைத்தையுமே பெண்ணாக பாவித்து போற்றி கொண்டாடுவோம். 'பாரதமாதா'என்று நம் நாட்டையும் பெண்ணாக பாவித்து உருவகப்படுத்துகிறோம். இவற்றையெல்லாம் பெண்ணாக பாவிக்கும் நாம் பெண்களை எப்படி அணுகுகின்றோம்....? உலகம் முழுவதும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளாகுகின்றாள். புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் அங்கேயும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திக்கற்றவர்களு க்கு  தெய்வமே துணை என்றாலும் அங்கேயும்.....?(ஆசிபா, எட்டு வயது சிறுமி கோவில் கருவறையில் வைத்து தான் ஒரு வார காலமாக..... பாலியல் கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டாள்.) போதை வஸ்துகளின் பழக்கங்களினால் 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியோர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் கேவலமான நிகழ்வு தொடர்கதையாகி தொடர்கிறது. இந்த குற்றங்களை சட்டம் போட்டு தடுத்தாலும் கடுமையான  தண்டனையாளும் தடுக்க இயலவில்லை. பெண்மையைப் போற்றுவோம் என்று  அழைக்கும் குரலே அவள்  தாழ்வுற்ற நிலையை மாற்ற எடுக்கும் முயற்சிதான்.
               ஆதி சமூகம் தாய் வழி சமூகமாக பெண் தான் தலைமையேற்று வழி நடத்தினாள். பெண் தலைமையில் சிறு ,சிறு குழுக்களாக செயல்பட்ட ஆதி வழி சமூகத்தில் வேட்டைக்கும் தலைமையற்றவள் பெண். குகைகளில் வாழ்ந்தவள் கருவுற்ற காலங்களில், ஓய்வு நேரங்களில் உணவு தேவைக்காக கண்டுபிடித்த  அற்புதம் தான் விவசாயம். ஆம்!! விவசாயத்தை கண்டுபிடித்தவாள் பெண்தான். ( 'விவசாயி' ஆண்பால் பெயர் மட்டும்தான். பெண்களைக் குறிக்கும் பெண்பால் சொல் இல்லை.) குழுக்களாக ஒன்று கூடி உழைத்ததால் அன்றாட தேவைக்கு போக அதிகமான பொருட்களை  சேமிக்கும் பழக்கம் தொடர உபரி, சேமிப்பு என்று அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல, நிலவுடைமை சமுதாயத்தில் பெண் உடமையாக்கப்பட்டு வாரிசை பெற்று தருவாள்  பாதுகாக்கப்பட வேண்டும் என்று அடிமையாக்கப்பட்டாள் நிலவுடைமை சமுதாயத்தில். இதுவே தனிச்சொத்துரிமையின் தொடக்க புள்ளி.
              தாய் வழி சமுதாயத்தில் அனைத்தும்  சமமாக பங்கிட்டு பொதுவுடமை நிலை மாறி, நிலவுடைமை சமுதாயத்தில் ஆண் ஆதிக்கத்தில் தனி குடும்பம், சொத்து, சேமிப்பு என்று பெண்ணும் சொத்தாக பாவிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டாள்.
                   பெண் அடிமை நிலை மாற பல சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றி பெண் புரட்சிக்கு ஆதரவாகவும் அடிமைக்கு எதிராகவும் அவர்கள் எழுப்பிய குரல் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது. ராஜாராம் மோகன் ராய் தொடங்கி வள்ளலார், ஜோதிராம் பூலே, அய்யா வைகுண்டர் ஐயங்காளி, ஜீவா, பெரியார், பாரதி, பாரதிதாசன் என்று ஆதரவு கரங்களும் அரவணைத்து சென்றது. ஆண் பெண் இணைந்த சமமான வாழ்வு தான் சமுதாய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தீர்க்கமான கொள்கையுடைய முழக்கங்களின் குரலை முழுமையாக ஏற்க முடியாமல் 21ஆம் நூற்றாண்டு வரை தள்ளாடும் நிலை தான் தொடர்கிறது.இதை மேலும் உறுதிப்படுத்தும் அழைப்பு தான் *பெண்மையை போற்றுவோம்* என்ற அறைக்கூவல் நூற்றாண்டு காலமாக தொடர்கிறது.
                   ஆண், பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஆணுக்கு கல்வியும், பெண் குழந்தைக்கு சமையலும் என்ற நிலை மாறி இன்று இருபாலருக்கும் கல்வி நிலைக்கு செல்ல நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் தான் சாத்தியமாயிற்று. கல்விக்கு மட்டுமல்ல மேலாடை அணியக் கூட தடை இருந்த காலத்தில் வீரமங்கை ரங்கேலியின் உயிர் தியாகத்தினால் தான் தோள் சீலை போராட்டத்தின் மூலம் தான் மேலாடை கூட சாத்தியமாயிற்று. (தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டில்) இதை மறந்த இந்த தலைமுறையினர் ஆடைக் குறைப்பு தான் நாகரிகம் என்ற நினைப்பு வேதனையை அளிக்கிறது.
              குழந்தைகளின் பாடல் ஒன்று 'தோசையம்மா தோசை' என்று தொடங்கும் பாடல் வரியில் அப்பாவுக்கு நான்கு அம்மாவுக்கு மூன்று என்று உணவிலும் ஆண்களை விட குறைத்து தான் உண்ண வேண்டும் என்று குழந்தைகளிடமிருந்தே போதிக்கப்பட்டும் 'உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு ' என்று மூத்தவளின் குரலும் ஒலிக்க உணவு, உடை, கல்வி அனைத்துமே பெண்களுக்கு பாராபட்சமாகயிருந்த நிலையில் பெண்மையைப் போற்றுவோம் என்ற குரலும் மாற்றத்தை முன்னோக்கி செல்கிறது.
            உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் இளம்பெண், கும்பல் பாலியல் வன்கொல்லைக்கு உட்பட்ட சம்பவத்தில் நான்கு நபர்களின் ஒருவனுக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றும் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சி தருகிறது. பெண்மையைப் போற்றுவோம் என்று உதட்டளவில் இல்லாமல் வன் கொலைக்கு நீதியும் இதுபோன்ற மனித தன்மையற்ற செயல்களை சட்டத்தின் துணைகொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
                   பெண் குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரைகள் வழங்கி, ஆண் அதிகாரத்தை வளர்த்து விடும் நிலையை மாற்றி ஆண் குழந்தைகளுக்கும் அறிவுரைகள் தேவை  என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
              இந்த வருட மகளிர் தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் : பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம் மாற்றம் இதை நோக்கிச் செல்லும் இவ்வேளையில் ஹத்ராஸ் பெண்ணுக்கு  நீதி வேண்டி போராடும் அவல நிலை மாற வேண்டும்.
                 பெண்மையைப் போற்றுவோம் என்பது அவர்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் உரிய திறவுகோல் என்பதை தாண்டி "பெண் விடுதலை நீங்கின் இங்கு மண் விடுதலையும் முயற் கொம்பே " என்ற புரட்சி வரியை மனதில் ஏந்தி பெண்மையை போற்றுவோம்.

- மைதிலி கல்யாணி, இராஜபாளையம்