சந்தை

புதுக்கவிதை

சந்தை

சந்தை

ஏதேன் தோட்டமாக இருந்த பூமி
சபிக்கப்பட்ட வனமானது
ஆதாமின் வாரிசு
ஆப்பிள்களை சந்தைப்படுத்த
ஆரம்பித்த பிறகு தான்

 மனிதர்கள் வாரிசுகளை
விட்டுச்செல்வது போது
பாம்புகளும் வாரிசுகளை
விட்டுச் செல்ல ஆரம்பித்தன

பல்கிப் பெருகிய அவைகள்
அவசரத்திற்கு ஒளிந்து கொள்ள
இடமில்லாமல்
மூளைக்குள் ஓடிவந்து 
ஒளிந்து கொண்டன

சமயங்களில் முதலாளிகளின்
புன்னகைகளில்
ஒளிக்கீற்றுகளாகவும்
அரசியல்வாதிகளின் 
மணிக்கட்டுகளில்
ஆபரணங்களாகவும்

அதிர்ச்சியில் தற்காலிகமாக
ஊமையாகிப் போன புனிதர்கள்
யாவற்றையும் மௌன சாட்சியாக
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பூமி நெட்டி முறித்து புரண்டு படுக்க
ஆசைப்படுகிறது

கார்ப்பரேட் அதை 
ஒரு போர்வையாக
சுருட்டி
கடலுக்குள் கொண்டு செல்ல
எத்தனிக்கிறான்

இந்த முறை வராக உருக்கொண்டெல்லாம்
அவர் வரவேண்டியதில்லை
இதை நாமே தடுத்துவிடலாம் என்று
தோழர்  நமது கரங்களை எடுத்து
ஒன்றாக கோர்க்க ஆரம்பிக்கிறார்

பூமி முன்னெப்போதையும் விட
அசுர வேகத்தில் சுழல
ஆரம்பிக்கின்றது

- தங்கேஸ்.