கோலத்தின் கோலம்

திருவிழா கவிதை

கோலத்தின் கோலம்

கோலத்தின் கோலம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப
தமிழனின் தத்துவமான, 
தமிழ் மண்ணுக்குரிய பண்பான ,
எறும்பு/ பறவைக்கு உணவாகும்
*அரிசி மாக்கோலம்* !

நடுவில் சாணியுருண்டை 
அழகுற அமர்ந்திருக்க, 
பரங்கிப் பூ செருகி வைத்து, 
வீட்டில் வயது பெண்
இருப்பதை உணர்த்தும் 
*மார்கழி கோலம்* ! 

குத்துவிளக்கு அகல்விளக்கு 
வரைந்த வடிவினில், 
அழகழகாய் செம்மண் தீட்டலில் ,
தீபமாக எரிவது
*கார்த்திகை கோலம்* !

செவ்வந்தி /மல்லி /சாமந்தி 
ஆவாரம் மருதாணி இலையழகில்,
 பள்ளி /கல்லூரி விழாக்களில், மாணவர்கள் கற்பனையில் 
*ரங்கோலி கோலம்* !  

தமிழர்களின் பண்பாட்டு செறிவு 
கலாச்சார பாரம்பரியம் மிளிர்வு
வீட்டுப் பெண்களின் கை திறனில் பொங்கல் விழா போட்டியில் 
வள்ளுவன்/பொங்கல்/கரும்புடன்
*கோடுகளின் கலைக் கோலம்* !

கிருஷ்ண ஜெயந்தி நாளினில் 
பாத அழகின் வெளிப்பாடாக, வாசலிலிருந்து பூஜை அறை வரை, கோகுலக் கண்ணனை வரவேற்கும் 
*மாக்கோலம்* !

மாடுகளின் ஆட்டம் 
மாவிளக்கு படையல் 
பொங்கல் வைத்து நேர்த்தியுடன்
தோகை விரிப்பினில்
*மயிலார் கோலம்* !

 திருமணத் தம்பதிகள் வரவேற்பில் மனைக்கோலம்!
சந்ததி செழிக்க உணர்த்திடும்
ஹிருதய கோலம்! 
சுமங்கலிப் பிரார்த்தனையில் 
மனங்களை இணைக்கும் 
இழைக் கோலம்! 
தெய்வீக சக்தியை 
வீட்டுக்குள் வரவழைக்க 
பூஜை அறை கண்ட
*ஸ்வஸ்திக் கோலம்* ! 

சுத்தமான காற்று கிடைக்க,
இடுப்பு எலும்பு வலுப்பெற,
சிந்தனை ஒருநிலைப்படுத்தி,
மனச் சிதறல் தடுக்கும் பயிற்சியாகி, கண்பார்வையை சீராக்க,
 பாட்டி கற்றுக் கொடுத்து 
பேத்தி அழித்தழித்து  போடும் 
*பூக் கோலம்* !

அதிகாலை புத்துணர்ச்சி, 
அன்றைய தின அலுவல் திட்டமிடல், நிதான இயல்பு குணம், ,
நேர மேலாண்மை பகுத்தல், 
சிக்கலைத் தீர்க்கும் பொறுமை, 
இத்தனையுடன் அரங்கேறும் 
*ஊடு புள்ளி /நேர் புள்ளிக் கோலம்* ! 

கணவருடன் வீட்டு ஆடவர்கள் ரசித்திட, முடிவெடுக்கும் திறன் வெளிப்படுத்த, படிகளில் அவசர ஒட்டு படைப்பாகும் 
*ஸ்டிக்கர் கோலம்* !

பிடித்த தலைவன் வெற்றி பெற ,
ஓட்டு கேட்டு வரும் போது,
கட்சி சின்னம் வரைதலில்
*அரசியல் கோலம்* !

எதிர் வீட்டு/பக்கத்து வீட்டுப் பெண்கள் காலை/மாலையிலே கோலமிட ,
அவள் ஆரோக்கியம் பறைசாற்றும் 
கோலமாகி,

இழப்பு/அமாவாசை/திதி 
தினங்களில் 
கோலமில்லா வாசலாகி,
பெண்ணோடு
மண்ணோடு பிணைந்த
கோலத்தின் கோலத்தை 
வாழ்வியலாக்கி மகிழ்ந்திருப்போம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.