செஞ்சுடர் சூரியன்

அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு கவிதை

செஞ்சுடர் சூரியன்

செஞ்சுடர் சூரியனை

சிறு நெருப்பு என எண்ணும்

பேதைகளை மன்னிப்போம்

மனிதா மனிதா !

நீ நினைப்பதால்

ஞாயிறு சிறுபொறியாய்

மாறிடுமோ?

அறிவுச்சுடர் வீசிய புத்தன்தான்

அம்பேத்கராய் வந்துவிட்டானோ

இப்புவியில்

இந்தியாவின் இருண்ட பக்கங்களை

எரித்த ஒளி ரேகைகள் தானே

இருவரும்

ஒரு ஆகாயத்தில் இரண்டு சூரியர்கள்

இல்லையா என்ன?

பேனாவின் வழியாக

பிரளயத்தை ஏற்படுத்தியவர்கள்

இருவர்கள் தான் 

இந்தப் பூவுலகில்

ஒருவர் கம்யூனிசத்தின் தந்தை

காரல் மார்க்ஸ்

மற்றவர் எங்கள் 

தந்தையர்களின் தந்தை (பாபாசாகிப் )

புரட்சியாளர் அம்பேத்கர்

அவர் (அரசியல் சாசனத்தை)

அறிமுகப்படுத்தும் வரை

அடக்கப்பட்டவர்களுக்கு

அனைவரும்

சமமானவர்கள் என்பது

 

அவர் ( அரசியல் சாசனம்)

இயற்றும் வரை 

பெண்களுக்கே தெரியாது

அவர்கள் சொத்தில்

பிறப்புரிமை பெற்றவர்களென்பது

 

அவர் கையெழுத்திடும் வரை

 (அரசியல் சாசனம்)

இந்திய தொழிலாளர்களுக்கே

தெரியாது

எட்டு மணி நேரமே

ஒரு மனிதனின்

உழைப்பின் நேரமென்று

 

பிற்படுத்தபட்டோருக்கு இடஒதுக்கீடு

பெண்களுக்கு சம உரிமை

அடக்கப்பட்டோருக்கு தனித் தொகுதி

அனைவருக்கும் கட்டாய கல்வி

தொழிலாளர்களுக்கு

 உழைப்புக்கேற்ற

ஊதியம்

அப்பப்பா எத்தனை எத்தனை

ஒரு மனிதரின் சாதனைகள்

 

ஒரு காவியத்தலைவன் மீது

சாதியத்தின் சாயம் பூச

எப்படியடா முடிகிறது

இந்த மனிதர்களால்?

 

சாதியில் ஊறித் திளைக்கும்

சனாதனத்திற்கு

சாவு மணி அடிக்க வந்தவனை

காவி பூசி யாரும்

கவர்ந்து விட முடியாது

 

எங்களின் டி என்ஏ அடுக்குகளில் கூட

அவரது பெயர்

பெரும் புரட்சியாளர் 

என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது

 

அறிவிலிகளே அறிவிலிகளே!

இந்தப் பூமியில்

ஒரு கடைக்கோடி மனிதன் மீது கூட

நீங்கள் தீண்டாமை கடைபிடித்துக்கொண்டிருக்கும் வரையிலும்

அண்ணலின் குரல் ஓயாது

ஒலித்துக்கொண்டேயிருக்கும்

 

தேசமே தேசமே !

இத்தனை அறிவு ஜீவியான மனிதன்

உலகில் எந்த மூலையில்

பிறந்திருந்தாலும்

அந்த தேசம் அவனை

உச்சியில் தூக்கி வைத்து

கொண்டாடியிருக்கும்

வானம் வரை அவன் புகழை

வளர்த்தெடுத்திருக்கும்

ஆனால் இந்த நாட்டில் தான்

அப்படிப்பட்ட மனிதரின் சிலைக்கு

அவமரியாதை

செய்யப்படுகிறது

 

தீயர்களே தீயர்களே

தீயை தொட்டால்

பொசுங்கி விடும்

உங்கள் மடமைகள்

சனாதனம் தானே

உங்களுக்கு உடமைகள்

 

பலவீனர்களே பலவீனர்களே!

ஒரு முறை அவரது பெயரை

உச்சரித்தபடி சுவாசித்துப்பாருங்கள்

அப்பொழுது தெரியும் உங்களுக்கு

உண்மையான சுதந்திரமென்றால்

என்னவென்பது

 

புல்லர்களே புல்லர்களே !

நிலம் நீர் இரண்டிலும்

சாதி வளர்ந்தவர்கள் நீங்கள்

சாகசம் செய்வதாக நினைத்து

நெருப்பை தொட்டுப் பார்க்க

நினைக்காதீர்கள்

விரல்கள் வெந்து விடும்

 

கோமாளிகளே கோமாளிகளே !

நகைச்சுவை புரிவதாக நினைத்துக்கொண்டு

தத்து பித்தென்று

உளறி வைக்காதீர்கள்

ஏனென்றால் ஒரு வார்த்தை

ஒரே வார்த்தை

உங்களை ஊமையாக்கிவிடும்

உண்மை என்பது

ஒரே வார்த்தை தானே

 

இப்புவியில் என்றுமே

ஒரு புத்தன் ஒரு மார்க்ஸ்

ஒரு அம்பேத்கர் 

புரட்சியாளர் அம்பேத்கர்

-தங்கேஸ்