காதல் நதி

தொடர் கவிதை காதல் நதி

காதல் நதி

காதல் நதி 

 ( என்னுடைய முறிந்த சிறகுகள் நூலுக்காக நான் எழுதிய  முன்னுரையிலிருந்து சில பகுதிகள்)

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றிய முதல் கணத்திலேயே அவைகளின் உள்ளத்தில் நேசமும்தோன்றியிருக்க வேண்டும்.

பூமியின் அடியாழத்திலிருந்து பீறிட்டு பொங்கி வரும் நீரூற்று போன்றது காதல். அது மட்டும் ஒரு இதயத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்டால் கட்டற்ற காட்டருவி போல பொங்கி பிரவாகமெடுத்து புதுப்புனலாகி இந்தப் பிரபஞ்ச வெளி முழுவதையும் நிறைத்து விடுகிறதே.

அகலாத அன்பு ஒன்றினாலேயே இந்த ஆன்மா இந்தப்பூமியில்   இன்னும் புழுதியின் கறை படியாமல் இருக்கிறது .
மண்ணில் இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சமிருக்கிறது.

வான் மேகங்கள் அவ்வப்போது தலை நீட்டி நம் மீது கொஞ்சம் கருணை காட்டிப் போகின்றன.

கிணறு வெட்டும்போது கருங்கற்களை உடைத்து உடைத்து நீரூற்றை தேடுபவர்கள் போல நாம் மனிதர்கள் மனதில் கருணையின் ஈரத்தை தேட வேண்டியிருக்கிறது.

இதையே தானே மகா கவி ஷேக்ஸ்பியர்
கருணையின் மகோன்னதம் அளவிடுவதற்கும் அப்பாற்பட்டது

அது  உன்னதமான சொர்க்கத்திலிருந்து 
இப்புவியின் மீது மென்மையான மழைத்துளி போல 
விழுகிறது.

இது இருமுறை ஆசீர்வதிக்கப்பட்டது
கொடுப்பவர் பெறுபவர் இருவருக்கும்
மகிழ்ச்சியை அளிக்கும் இது
மன்னாதி மன்னர்களை விடவும்
வலிமை வாய்ந்தது .

இதை மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் என்ற நாடகத்தில் வரும் போர்ஷியா என்ற பெண் பாத்திரத்தின் வழியாக ஷேக்ஸ்பியர் எடுத்துரைப்பது எத்தனை அழகு !

The quality of mercy is not strained.
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath. It is twice blest:
It blesseth him that gives and him that takes.
'Tis mightiest in the mightiest; it becomes
The thronèd monarch better than his crown.

(  Portia, in William Shakespeare, The Merchant of Venice,
 Act 4, Scene 1.[1]  )

கற்காலத்து மனிதர் இல்லை நாம் . தற்காலத்து மனிதர்களுக்கு கருவிகளோடு பழகி பழகி மனித உணர்வே மரத்துப்போய்விட்டது.

விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்த நேரும்போதும்
அனிச்சையாக கடிகாரத்தை பார்க்கின்ற மனிதர்களாக நாம் மாறிப்போனோம்.

சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் நாம்.

நமக்கு  முதன் முதலில் கொடுத்தனுப்பப்பட்ட குழந்தை உள்ளத்தை உள்ளறையில் வைத்து பூட்டி விட்டு வீடு தேடி வரும் உறவுகளை வாசலில் நிற்க வைத்தே முகமன் கூறி அனுப்பி விடும் அற்புதமான
மனிதர்கள் நாம்.

நேசிக்கும் அன்பு ஒன்றிற்காக அனைத்தையும் இழக்கத் துணியும் அற்புதமான மனிதர்களை கோமாளிகள் என்று எண்ணும் எண்ணம் இந்த சமூகத்தில் புரையோடிப்போய் கிடக்கிறது.

இதையும் தாண்டி எத்தனை எத்தனை உள்ளங்கள் அன்பு ஒன்றிற்காகவே எரியும் தழலில் தங்களையே  எரித்து ஆகுதியாக்கி கொண்டிருக்கின்றன.

குறிப்பாக எத்தனை எத்தனை இளம் பெண்கள் தங்களை நேசிக்கிறவன் என்ற  ஒருவனின் வாக்குறுதியை நம்பி  பிரியத்தின் சத்தியத்தின் மீது எத்தனை மிகப் பெரிய இழப்புகளுக்கு  தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

காதல் என்னும் ஒற்றை வார்த்தைக்காக தன் ஆயுளையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள் அநேகம் . 

அந்த வரிசையில்  காதலுக்காக அற்புதமாக அமைந்திருக்க வேண்டிய தன் வாழ்க்கையை துறந்து ஒரு காதல் துறவி வாழ்ந்து வருபவர் என் நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு. திருவேங்கிமலை சரவணன் அவர்கள் .  

அவர் கதையை கேட்ட பின்பு தான் எனக்கு உடனடியாக இரண்டு வரிகள் தோன்றின.

இரவு முழுவதும் என் கண்களில் விடிகின்றது
விழித்திருக்கவோ நான் ஜென்மம் எடுத்தது ?

அற்புதமான மனிதர் அவர். எதை இழந்த போதும் மனிதர்கள் மீது காட்டும் நேசத்தை மட்டும் அவர் இழந்து விடவில்லை. 

இலக்கியத்தின் மீது தீவிர கொண்டவர் குறிப்பாக கவிதைகள் மீது. ஆங்கிலக்கவிதைகள் மீது அவருக்கு அளப்பரிய நேசம் .அந்த நேசம் ஒன்றே என்னையும் அவரையும் ஒரு நேர்கோட்டிலே நிறுத்தியது. 

அவர் அளித்த அற்புதமாக உற்சாகத்தின் பேரிலேயே நான் கலில் ஜிப்ரான் எழுதிய உலகப் புகழ் பெற்ற காதல் காவியமான ‘’ முறிந்த சிறகுகளை ‘’ கவிதை நடையில் மொழி பெயர்த்தேன். அதை அவருக்கே அர்ப்பணித்தும்விட்டேன். 

என்னை ஒரு கவிஞனாக அடையாளம் கண்டவர் அவரே . ’ முறிந்த சிறகுகள் விகடகவி மின்னிதழில் ஏழு அத்தியாயங்கள் வரையிலும் தொடர்ந்து வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. அற்புதமான ஆத்மார்த்தமான அனுவபம் அது. 

கலில் ஜிப்ரானைப்போல காதலித்தவர்கள் உலகத்தில் யாருமே இருக்க முடியாது என்பது என் எண்ணம். அந்தப்புத்தகத்தை மொழி பெயர்த்த ஆறு மாதங்களில்  ஜிப்ரானுடனும் அவர் காதலி செல்மாவுடனும் நானும் எண்ணங்களில் வாழ்ந்து வந்திருக்கிறேன்

லெபனானில் வசித்து வந்திருக்கிறேன்.
பல நாட்கள் தூக்கத்தை தொலைத்து நிசான் மலர்கள் பூத்து குலுங்கும் சிதார் மரங்களின் வழியே நடந்து திரிந்திருக்கிறேன்.

காதலர்கள் ஒருவரை ஒருவர்  எப்படி நேசிக்க வேண்டும் என்பதை முறிந்த சிறகுகளில் தான் காணமுடியும்.

நான் மொழி பெயர்த்த பகுதி இது

ஜிப்ரானும் செல்மாவும் பிரிவின் விளிம்பில் உரையாடிக் கொள்கிறார்கள் 
இதை கொஞ்சம் கேளுங்கள். உறங்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஆத்மா ஒரு  கணம் விழித்து ஒரு சொட்டு கண்ணீரை இவர்களுக்காக சிந்திவிட்டு உறங்கட்டும்.

செல்மா : அன்பே  உன் தலையை கொஞ்சம் உயர்த்து
உன் முகத்தை ஒரு முறை பார்த்து விடுகிறேன்
அன்பே உன் உதடுகளைத்திறந்து
ஒரு வார்த்தை சொல்
உன் குரலை கொஞ்சம் கேட்டுவிடுகிறேன்.
பேசு அன்பே பேசு
என்னை எப்பொழுதும் ஞாபகம் கூர்வாயா?

இந்தக் கொடிய புயல் நம் காதலெனும் கப்பலை
கடலில் கவிழ்த்து விட்ட பிறகும்
என்னை  ஞாபகம் கூர்வாயா என் அன்பே ?

இரவின் ஆழ்ந்த அமைதியில் அசையும்
என் சிறகுகளின் விசும்பல்களை 
நீ கேட்பாய் தானே ?

என் ஆன்மாவின் சிறகடிப்புகள் உன்னை வந்தடையுமா?
என் பெருமூச்சுகள் உன்காதில் விழுமா?

என்னுடைய கேவல்கள் ..
விகசிப்புகள்..

அந்தி இருளின் கருமையில்கலந்து
அதிகாலைச்சூரியனின் செக்கச்சிவந்த ஒளியோடு
காணாமல் போய்விடும்
என்நிழலை நீ தினமும் காண்பாயா என் அன்பே ?

என்னிடம் சொல்லி விடு என்னுயிரே 
என்னிடம் சொல்லி விடு 
இனி நீ என்னவாகப்போகிறாய் என்று சொல்லி விடு

என் கண்களுக்கு மந்திர ஒளியாக இருந்தாய்
என் காதுகளுக்கு இனிய பாடலாய் இருந்தாய்
என் ஆன்மாவிற்கோ சிறகுகளாக இருந்தாய்
இனி நீ என்னவாக இருக்கப்போகிறாய்

ஜிப்ரான்  : என் அன்பே !
நான் என்னவாக இருக்கவேண்டுமென்று
நீ விரும்புகிறாயோ 
நான் அவ்விதமே உன்னுடன் இருப்பேன்
என் செல்மா! என்றேன்
செல்மா சொன்னாள்

செல்மா : தன் துயரங்களை தானே காதலிக்கும்
ஒரு கவிஞனைப்போல 
நீ என்னை காதலிக்க வேண்டும் என்னுயிரே

இதைக்கேள்
அந்த வழிப்போக்கனுக்கோ அளவு கடந்த தாகம்
வழியிலோ ஆழ்ந்த அமைதியான குளம்

அதில் ஒரு கை நீர் அள்ளிப்பருகிய பின்
அங்கே பிரதிபலிக்கும் தன் பிம்பத்தை பார்த்து
களிப்பெய்திய அந்த வழிப்போக்கன்
அந்த குளத்தை தன் வாழ்நாளெல்லாம்
எவ்விதம்  நினைவு கூர்வானா
அது போலவே நீயும் என்னை நினைவு கூற வேண்டும்
என் அன்பே !

உலகின் ஒளிக்கீற்றைப் பார்ப்பதற்கும் முன்பே
நிரந்தரமாய் உறங்கிப்போன தன் சிசுவை
ஒரு தாய் எவ்விதம் நினைவு கூர்வாளோ
நீயும் என்னை  அவ்விதமே நினைவு கொள்ள வேண்டும்
என் அன்பே !

மன்னிப்பு போய் சேரும் முன்பே 
மரித்துப்போய் விட்ட ஒரு மரணதண்டனைக் கைதியை
கருணை கொண்ட அரசன் 
எவ்விதம் நினைவு கூர்வானா
அது போலவே நீயும் என்னை நினைவு கூற வேண்டும்
என் அன்பே !

கேட்டீர்கள் தானே எவ்வளவு அற்புதமான உரையாடல் இது .நமது உள்ளத்தை உலுக்கிவிடவில்லையா ?

இன்னுமோர் இடத்தில் ஜிப்ரான் காதலைப்பற்றிச் சொல்கிறார்

‘’ இதுதானா தெய்வீகக் காதல் என்பது ?
இது தானா ஆன்மாவை சாரலாய் நனைப்பது
இது தானா நேசத்தை தேடும் பெரும் பசி என்பது
இது தானாஆத்மாவை
மகிழ்ச்சிக்கடலால் நிறைப்பது ?

எதிர்ப்பில்லாத நம்பிக்கையூட்டுவதும் இதுதானா?
பூமியை சொர்க்கமாக மாற்றுவதும் இதுதானா?

வாழ்க்கையை இனிய கனவாகவே 
மாற்றிப்போவதும் 
இது தானா இது தானா ?

அடடா காதல் மட்டும் ஒருவரின் வாழ்விற்குள் வந்துவிட்டால் அது என்ன மாய மந்திரங்களை செய்கிறது. இதற்காகத்தானே ஷாஜகான்  மும்தாஜின் கல்லறையைப் பார்த்துக் கொண்டே தனிமைச்சிறையில் உயிர் விட்டது ?

இதற்காகத்தானே அம்பிகாவதியும் அமராவதியும் ரோமியோவும் ஜூலியட்டும் அனார்க்கலியும் சலீமும் என்று உயிர் விட்டவர்களின் ஒரு பெரிய பட்டியல் தொடர்கிறது. 

ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ் பெற்ற நாடகமான ரோமியோ ஜூலியட்டில் ஒரு காட்சி. ரோமியோவின் குடும்பமும் ஜூலியட்டின் குடும்பமும் பரம்பரை எதிரிகள் . 

ஆனால் ரோமியோவும் ஜூலியட்டும் காதலில் விழுகிறார்கள்  எப்படிபட்ட  காதலில்  என்றால் அப்படி ஒரு அபாரமான காதலில்
  
 பாரதி சொல்வானே
காதல் காதல் காதல் 
காதல் போயின் சாதல் சாதல் சாதல்
( எனக்கு பாரதியின் கண்ணம்மா பாடல்கள் அதிகம் பிடிக்கும் காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக்களிக்கின்றேன் என்ற வரிக்கு தனியாக ஒரு தீஸிஸே எழுதலாம் )

ஜூலியட்டும் ரோமியோவும்  உரையாடுவதை கேளுங்கள் இது போல  இந்தப் பூமிப்பந்தின் உச்சியில் பொறித்து வைக்க வேண்டிய வாசகங்கள் இவைகள்.

ஜூலியட்:  உனது பெயரே எனது எதிரி
நீ நீ தானே ? மாண்டேக் ( இனப் பெயர் )என்பது என்ன  ?

கை கால் முகம் தோள் அல்லது ஒரு மனிதனின்  உடம்பில் ஒரு பகுதி
இப்படி  எதுவுமே இல்லை தானே  ?

 நீ இன்னொரு பெயராக இருந்தால் என்ன ?
பெயரில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் ?

ஒரு ரோஜாவை நீங்கள் வேறு என்ன பெயரிட்டு அழைத்தாலும்
அது இனிமையான சுகந்தத்தை தானே கொடுக்கப்போகிறது ?

ரோமியோ என்ற பெயரால் நீ அழைக்கப்படாவிட்டாலும்
அதே அபரிதமான அன்பைத்தானே என்னிடம் 
பொழியப்போகிறாய்

உன்னை என்னுடன் இணைய விடாமல் 
தடுக்கும் உன் பெயரையே எடுத்துவிடு
பின்பு எடுத்துக் கொள்

( Juliet:
'Tis but thy name that is my enemy;
Thou art thyself, though not a Montague.
What's Montague? It is nor hand, nor foot,
Nor arm, nor face, nor any other part
Belonging to a man. O, be some other name!
What's in a name? That which we call a rose
By any other word would smell as sweet;
So Romeo would, were he not Romeo call'd,
Retain that dear perfection which he owes
Without that title. Romeo, doff thy name,
And for that name which is no part of thee
Take all myself. )

ரோமியோ :  உனது வார்த்தைகளுக்காகவே எனது பெயரை 
 நீக்கி விடுகிறேன்  ஜூலியட்
என்னை அன்பே என்று அழை 
அதுவே நீ எனக்கு சூட்டிய புதிய பெயராக இருக்கட்டும்
இனிமேல் நான் ரோமியோ இல்லை

( Romeo:
I take thee at thy word:
Call me but love, and I'll be new baptized;
Henceforth I never will be Romeo. )

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அற்புதமாக சில கவிதைகள் ரோமியோவின் வசனத்தை படித்தபின் எனக்கு ஞாபகம் வந்தன

நான் தான் நீ 
நீ தான் நான் 
இதைக்காதலால் அறிந்தேன்

உன் நினைவுகள் வந்தால் 
கண்ணீர் வருகிறது
கண்ணீர் வந்தால் 
உன் நினைவுகள் வருகிறது

உண்மைதானே கவிஞர் சொல்கிறது. பரிசுத்தமான கண்ணீர் புனிதத்தின் அடையாளம் தானே

நானும் கூட கவிஞரின் பாதிப்பில் 
இரண்டு வரிகள் எழுதினேன்

அம்மு உன் மடிசாயும் நேரம் 
என் உயிர் பிரிய வேண்டும் 
உன் உயர்வான காதலுக்கு 
வேறு பரிசென்ன வேண்டும்  ?

தன் பிறை வடிவை 
உன் நெற்றியில் ஒட்டி வைத்து விட்டது நிலா
நீ அதை என் விழிகளில் ஒட்டிவிட்டாய்
இரவு முழுவதும் அடைகாக்கும் என் கண்களுக்குள் 
அது ஒரு பௌர்ணமியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது

நான் இந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருக்கும் போது
ஒரு செம்பருத்தி மொட்டு திறந்து கொண்டிருக்கிறது

வானவில் ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறது
தேன் சிட்டுக்கள் ஒரு கணம் அசைவற்று
தலை திருப்பி பார்க்கின்றன
தூரத்தில்  நீ வந்து கொண்டிருக்கிறாய் 

              தங்கேஸ்

                    ( காதல் நதி வரும் )