பரவச காதல்..! 003

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

பரவச காதல்..! 003

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
எனக்காய் ஓர் கவிதை சொல்லேன்
என்று கெ(கொ)ஞ்சிடும் நின் விழிகளை
காண்கையில்..

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
என் வரவிற்காய் புலனத்தில்
வெகுநேர காத்திருப்பிற்குப்பின்
என் வருகையறியாமல் நீ சென்ற
அந்த நொடியினை நினைக்கையில்...

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
என் பெயர் அறிந்திட எண்ணி
எனது புத்தகத்தின் முதல் பக்கத்தை
நீ புரட்டுகையில் சட்டென்று
நான் கண்ணுற்றதை கவனித்து
நீ விழித்ததைப் பார்க்கையில்...

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
கடைசி நிமிட பயணம் வரை
பேருந்தில் என் வரவிற்காய்
நீ காத்திருந்ததில்..

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
காற்றில் உன் துப்பட்டா
எனை வந்து உரசுகையில்
மனதில் கலவரத்தோடு
வெட்கம் பூத்த நின் வதனம் கண்டு ..

எனக்கும் கொஞ்சம்
பாவமாய்தான் இருந்தது...
அருகருகே அமர்ந்தும்
என் விரல்நுனி தொட முயன்று
நீ தயங்கி நின்றதில்...

அடி பைத்தியம்...
தயக்கம் துறந்து தழுவிக்கொள்ளடி
காதலுரைத்துக் கட்டிக்கொள்ளடி
என் பாவம் கொஞ்சம்
பரவசம் கொள்ளட்டும்...
காதலும் கண்விழித்து கைகோர்க்கட்டும்...

-கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.