மனித உரிமைகளை போற்றுவோம்...!

சர்வதேச மனித உரிமைகள் தினம் கவிதை (டிசம்பர்)

மனித உரிமைகளை போற்றுவோம்...!

மனித உரிமைகள்
போற்றுவோம்

மனிதனாய்ப் பிறந்து
மாண்போடு வாழவே
பணிந்து போனாலும்
பண்பாடாய் நடந்தே
புண்ணியங்கள்  செய்யும்
புத்தியான உள்ளங்கள்
எண்ணியதை அடைய
எடுத்திடும் முயற்சியே

பிறப்புரிமை எழுத்துரிமை பிதற்றாத கருத்துரிமை
திறந்த மனதோடு
திருத்தங்கள் கூறிடவே
நீதியும் நேர்மையும்
நீங்காது உரைத்திட
சதியில்லா வேலைகளைச்
சாதித்துக் காட்டிடவே

கனவுகளைக் கண்டு
கற்பனைகள் வளர்த்திட
கருத்துச் சுதந்திரம்
கரையாது ஓங்கிடவே
அவரவர் திறனுக்கு
அங்கிகாரம் கிடைத்திட
தவறினைச் சுட்டி
தட்டிக் கேட்டிடவே

குறைகளைக் களைந்து
குற்றங்கள் நிரூபிக்க
மறையாத மரியாதை
மனங்களுக்கு தந்திடவே
எதையும் உரைத்திட
எழுச்சியான நிலையாய்
புதையும் உண்மைகளுக்கு
புத்துயிர் வழங்கிடவே

மொழி இனம் பேதங்கள் கடந்த
சமூகமாய் ஒன்றிணைந்து
உரிமைகள் கோரிடும்
மக்களாய் வாழ்வதே
மனித உரிமைகளின் 
வழித் தோன்றல்

உரிமைகள் அனைத்திற்கும்
உணர்வுகள் அளித்தே
புரிதலை வளர்த்து
புதுமைகள் படைப்போம்

கிருஷ் அபி, இலங்கை.