பெண்மையை போற்றிடுவோம் 051

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றிடுவோம் 051

பெண்மையை  போற்றிடுவோம் 

முன்னுரை :
              பல பெருமைகளையும், திறமைகளையும் தன்னகத்தே கொண்ட பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வரலாற்றில்  சாதனைப்படைத்த பெண்கள் வாழும் இதே தேசத்தில் கள்ளிப்பால் கொடுத்து  பெண்கள்  கொல்லப்படும் நிலையும் ஒரு காலத்தில் நிலவி வந்தது.ஆனால் இன்று பெண்கள் 
கல்வித்தேனூட்டி  வளர்க்கப்படுகிறார்கள்.அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்ற வரிகளை தகர்த்து தலைநிமிர்ந்த நம் புரட்சிப்பெண்கள் கால் பதிக்காத  துறைகளே இல்லை என்றால் அது மிகையாகாது. இக்கட்டுரையில்  பெண்களின் பெருமையை பற்றி விரிவாக காண்போம் 

சங்ககாலப்பெண்கள்  : 
                                    சங்ககால காப்பியங்களான  சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை  பெண்ணியத்திற்கு பெருமை தேடி தந்துள்ளன . சங்ககாலத்தில்  ஒளவையார், பாரிமகளிர், வெண்பூதியார்,காக்கைப்பாடினியார், போன்ற கல்வியில்  தலைச்சிறந்த பெண்களும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெண்மையை போற்றிட்ட பாரதி 
            பெண்ணின் பெருமையை  உலகிற்கு எடுத்துரைத்ததில் பெரும் பங்காற்றிய  பெருமைக்கு பாரதியாரே நிதர்சனம்.
“ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
   பாரினில்  பெண்கள் நடத்தவந்தோம்  
   எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் 
   இளைப்பில்லை  காணென்று கும்மியடி  “
 என்ற தன் வரிகளால் பெண்களின் அடிமை விளங்கை 
 உடைத்தெறிந்து பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற  தன்னம்பிக்கையை விதைத்து   பெண்களின் நிலை உயர அரும்பாடுபட்டார் பெண்கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார்.

பெண் சக்தி 
பெண் என்பவள்  தனது பிறப்பின் போதும் பருவமடையும் போதும், திருமணத்தின் போதும், பிரசவத்தின் போதும்,வாழ்வின் பல துயரிலும், இறக்கும் தருவாயிலும்  அழுகை ஒன்றே அவளுக்கு வகுக்கப்பட்ட நியதி.எவராலும் அவ்வளவு எளிதாக பெண்கள் படும்பாட்டை  சொல்லிவிட இயலாது.ஒரு உயிரை வெளிக்கொணர அவள் தாங்கும் வலிதனை இப்புவியில் எதனுடனும் நாம் ஒப்பிட்டு கூற இயலாது.ஆண்களே சற்றே சிந்தியுங்கள் .பெண்களை போற்றாவிடினும் பரவாயில்லை  இழிவாக எண்ணாதிருக்க முயன்றிடுங்கள்.

பெண்ணின் பரிமாணங்கள் 
                                   ஈறைந்து  மாதங்கள் நமை   சுமந்து இரவுப்பகல் கண்விழித்து நமை வளர்த்த தாயாகவும், நம்முடனே பிறந்திட்ட தங்கை தமக்கையாகவும், நம்முடனே தோழமை கொள்ளும் தோழியாகவும், காதல்
 தேவதையாகவும்,வாழ்வின் இரு மனங்கள் இணைந்திடும் மனவாழ்வில் தாரமாகவும் ,  தாயாகவும்,முதுமைப்பருவத்தில்   குழந்தையாகவும், வாழ்ந்து தன் பரிமாணத்தை நிறைவு செய்கிறாள். இப்படியாய் தனது ஆசைகளை துறந்து  தன்  குடும்பத்தின் நல்வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்து வாழும் சக்தி சொரூபம்  தான் பெண்.
  பெண்களின் மீதான சமூகப்பார்வை 

இவ்வுலகை ஆளப்பிறந்தவள் அறிவாற்றல் கொண்டு ஆகச்சிறந்தவள் ஏனோ இன்று வெறும் காட்சிப்பொருளாய்  பார்க்கப்படுகிறார்கள்.
“ பெண்கள்  நம் கண்கள்  “ என்று சொன்ன காலம் போய் இன்று காமக்கண்களோடு பெண்கள் பார்க்கப்படும் நிலை நம் மனதை உருக்குலையச் செய்கிறது. பெண்களை தேவதைகள் என்றெண்ணிய  காலம் போய் அவர்களை தேவ தாசிகளாக என்னும் சில காமக்கொடூரர்கள் வாழும் சமூகம் தனில் எங்கே ? பெண்களுக்கு  பாதுகாப்பு இருக்கிறது . பெண் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் பிதற்றல் தான்.கொலைகளும்  , பாலியல் வன்கொடுமைகளும் , தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.இத்தகைய அவலம் தமிழனுக்கு தன்மான தலைக்குனிவு.பெண்களை இழிவுப்படுத்தாத சமூகம் தான் பெண்ணின் தன்னம்பிக்கையை கூட்டி அவள் சாதனைகள் புரியவும், சரித்திரம்  படைக்கவும் ஊன்றுதலாய்  இருக்கும்.

 “ மங்கையராய்  பிறப்பதற்கே – நல்ல 
     மாதவம் செய்திட வேண்டும் அம்மா  “
என்ற கவிமணியின் வரிகள் பெண்களின் பிறப்பினையே இவ்வுலகிற்கு பெருமையாக எடுத்துரைக்கிறது. இத்தகு பெருமைக்குரிய பெண்கள்  இன்று கல்வி அறிவில் சிறந்து அறிவியல், மருத்துவம், இலக்கியம், காவல்துறை என பல்வேறு துறைகளில் சாதித்து சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறார்கள்.

முடிவுரை  

                         பெண்கள்  தலைமை பொறுப்புகளில்  இருக்கும் ஊர்களில் தான் அதிக இலட்சியவாதிகள் உருவாகின்றனர்  .எந்தவொரு நாட்டில்  அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் மிகுதியாய் இருக்கிறதோ அங்கு  வாழும் பெண்களின் வாழ்வு முன்னேற்றத்துடன் காணப்படும் என்று உலக பொருளாதார அமைப்பு கூறுகிறது.
     உலக வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்த  பெண்களின் தியாகத்தையும், சாதனையையும், போற்றும் விதமாக தான் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தன்னலம் விடுத்து தன்னையே உருக்குலைத்து வாழும்  உன்னதமான பெண்களை போற்றியே இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன் பெருமையுடன் நான்.

- நா. பாரதி , சு. குளத்தூர், கள்ளக்குறிச்சி.