பங்குனியும் பங்குனி உத்திரமும் ...

பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனியும் பங்குனி உத்திரமும் ...

*பங்குனியும் பங்குனி உத்திரமும்* 

மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் பங்குனி!
வணங்க/பூஜை செய்ய உரிய மாதமான பங்குனி!
பனிதரும் குளிர்ச்சி/சூரியஒளி 
தரும் வெப்பமும் இதமாக 
பதமாக உள்ள  பங்குனி!

பூமிக்குள் வாஸ்து பகவான் 
தூங்கிக் கொண்டிருக்கும் பங்குனி!
வாஸ்து பூஜை செய்ய முற்பட
கோபத்திற்கு உள்ளாகி செயலில் தடங்கல் ஏற்படும் பங்குனி!
புது வீடு கிரகப்பிரவேசம் செய்யக் கூடாதென *ஜோதிட சாஸ்திரம்*  உணர்த்தும் பங்குனி!

சூரபத்மன் எனும் ஆணவம்
சிங்கமுகன் எனும் மலம் 
தாரகாசுரன் எனும் மாயை தனை
ஆறுமுகன் அழித்த  பங்குனி!
தமிழ் மாதங்களில் 
12 ஆம் மாதம் பங்குனி
 12 ஆம் நட்சத்திரமான 
உத்திரத்துடன் இணைந்து
*பங்குனி உத்திரம்* 
புண்ணிய  தினமான பங்குனி!

சிவனின் மோனநிலையை கலைத்த மன்மதனை எரிக்க கலங்கி நின்ற தேவர்கள் கண்ணுக்கு விருந்தாக 
சிவ-பார்வதி மணம் நிகிழ்ந்த 
பங்குனி உத்திரம்!

சிவன் - பார்வதிக்கு 
ஆடை அணிகள் அழகு செய்து, மணவறையில் அமர்த்தி, வாத்தியங்கள் முழங்க 
வேதங்கள் ஓதி, 
ஹோமம் வளர்த்து 
தோத்திரங்கள் கூறி, 
தாலி கட்டி/வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் 
இருவரையும் ஊர்வலமாக, 
கொண்டு சென்று, 
பள்ளியறைக்கு அனுப்பி வைக்கும் தினமான பங்குனி உத்திரம்!  

அதிகாலை எழுந்து/குளித்து 
வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்கி 
கந்த சஷ்டி கவசம்/திருப்புகழ் திருமுருகாற்றுப்படை படித்து 
இறை சிந்தனையில் 
இருக்க வேண்டும் என உணர்த்தும் தினமான பங்குனி உத்திரம்!

போகரால் உருவாக்கப்பட்ட 
பழனி முருகனுக்கு 
பங்குனி வெயில் வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த 
காவிரி நீரால் குளிர்வித்து தேரோட்டமும் காணும் தினமான பங்குனி உத்திரம்!

பங்குனி மாதம் ஏற்றும் தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக காட்சி தருகிறதால்
திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி 
தீவினை பகை அகற்றி 
புண்ணியம் பெறுகின்ற 
தினமான பங்குனி உத்திரம்! 

தண்ணீர் பந்தல் வைத்து 
நீர்மோர் தானம் தர, 
48 ஆண்டுகள் விரதமிருந்த பலனும், தெய்வ பிறவியாக மறுபிறவி அமையும் பலனும் கிடைக்குமென்ற
தினமான பங்குனி உத்திரம்!

திருமழப்பாடியில் 
*நந்திக் கல்யாணத்தை* 
கண்ணாரக் காண 
முந்திக் கல்யாணம் நடக்குமென உணர்த்தும் பங்குனி உத்திரம்! 

காரைக்கால் அம்மையார் 
முக்தி அடைந்த பங்குனி உத்திரம்!
ரதியின் வேண்டுதல் கேட்டு 
மீண்டும் மன்மதனை சிவன்
உயிர்ப்பித்த பங்குனி உத்திரம்!

தேவர் குல தலைவன் தேவேந்திரன் இந்திராணியை கை பிடித்த,,
படைப்பு கடவுள் நான்முகன்  
கலைவாணியை நாவிலமர்த்திக்
கரம் பிடித்த பங்குனி உத்திரம்!

தீர்த்தவாரி நடைபெறும்
கடல்/ஏரி/ஆறு/கிணறு/குளம் போன்றவற்றில் புனித நீராட புண்ணியம் கிட்டும் என உணர்த்தும் தினமான பங்குனி உத்திரம்!

கன்னிப்பெண்கள் 
கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் 
திருமண கோல தெய்வங்களை தரிசிக்க/ திருமண ப்ராப்தம் கிடைக்குமென உணர்த்தும் 
தினமான பங்குனி உத்திரம்!

மிதிலையில்/ஒரே மேடையில் 
 தசரத மைந்தர்கள் 
ராமன் - சீதையை
லட்சுமணன் - ஊர்மிளையை,
பரதன்-மாண்டவியை, 
சத்துருகனன் -ஸ்ருதகீர்த்தியை கோலாகலமாக திருமணம் நடைபெற்ற வைபவ தினமான
பங்குனி உத்திரம்! 

பர்வதராஜன் தவத்தால் 
பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் திருமணம் செய்த கோலத்தில் *சுந்தரமூர்த்தி*  
நாயனாருக்கு மதுரையில் 
காட்டித் தந்தருளிய தினமான 
பங்குனி உத்திரம்! 

தெய்வங்களே உத்திரத்தை 
சிறந்த நட்சத்திரமென 
தேர்வு செய்து திருமண வைபவம் காண /அவ்விதம் கல்யாணம் 
நடக்கும்  அதே மண்டபத்தில் 
பலரும் திருமணம் செய்து கொள்ளும் தினமான பங்குனி உத்திரம்!

ஸ்ரீரங்கநாதர் ஆண்டாளையும், முருகப்பெருமான் தெய்வானையையும் மணம் செய்த
தினமான பங்குனி உத்திரம்!   
பசுவாகிய ஆன்மா 
பதியாக்கிய சிவத்துடன் இணைவதான  உயர்ந்த நிலையை எடுத்து விளக்கும்
தினமான பங்குனி உத்திரம்!

திருமணமாகாத இளைஞர்களும் கன்னிகளும் திருமணக் கோலத்தில் சிவனையும் /முருகனையும்
தம்பதி சமேதரராக வணங்கிடும் 
திருமண விரதம்/கல்யாண விரதம்
எனப் போற்றப்படும் தினமான பங்குனி உத்திரம்! 

ஸ்ரீ வள்ளியும் /ஸ்ரீ மகாலட்சுமியும் அவதரித்த தினமாகி 
நவகிரகங்களில் ஒருவரான 
சந்திர பகவான் 27 நட்சத்திர கன்னியரை மணம் புரிந்த 
தினமான பங்குனி உத்திரம்!

ஸ்ரீ ஐயப்பன் அவதரித்த
பங்குனி உத்திரம்!
மகாலட்சுமி மகாவிஷ்ணுவை 
நோக்கி கடும் தவம் மேற்கொள்ள, திருமால் தன் மார்பில் 
மகாலஷ்மியை வீற்றிருக்கும் 
வரம் அளித்த தினமான 
பங்குனி உத்திரம்!

அக்னி சட்டியைக் கையிலேந்தி பூஜைகள் விமர்சையாக 
கிராம கோயில்களில் நடைபெறும் தினமான பங்குனி உத்திரம்! சிவனுக்கு வில்வம், 
லட்சுமிக்கு வெண்ணிற மலர்கள், முருகனுக்கு செவ்வரளி சாற்றி
வணங்கி/வேண்டுதலை வைக்கும்
தினமான பங்குனி உத்திரம்!

கொள்ளிடத்து அம்மன் ஆலயத்தில் தல விருட்ச மலர்கள் பூத்துக் குலுங்கி,
சிவசக்திக்கு கூடுதலாக 
வரமளிக்கும் ஆற்றல் உண்டென புராணங்கள் உணர்த்தும் 
தினமான பங்குனி உத்திரம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில்
ஆண்டாள்- ரங்கநாதர் 
திருமண வைபவம் காண,
களத்திர தோஷம் விலகி, 
திருமணம் கைகூடும் என்றுணரும்
தினமான பங்குனி உத்திரம்! 

மதுரையில்  கள்ளழகர் 
திருக்கல்யாணமும், திருப்பரங்குன்றத்தில்
தங்க குதிரையில் தம்பதி சமேதிரராக ஆண்டவனும்  பவனி வரும்
தினமான பங்குனி உத்திரம்!

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில்
 ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னிதியில் ஸ்ரீதேவி/பூதேவி/மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதமாக 
ஸ்ரீ கச்சி வரதராஜர் காட்சி தரும் தினமான பங்குனி உத்திரம்!

திருவையாறு அருகில் உள்ள திங்களூர் சிவாலயத்தில் லிங்கத்திருமேயை சந்திரன் 
தனது கிரணங்களால் தழுவிடும் தினமான  பங்குனி உத்திரம்!

நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் தொடுத்தல் லீலையும், காரையார் சொரி முத்தையனார் கோயிலில் உற்சவமும் நிகழும் தினமான பங்குனி உத்திரம்!

 வில்வீரன் அர்ஜுனன் ஜனன தினமான பங்குனி உத்திரம்!
 "பலிவிழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒளிவிழா காணாது போதியோ பூம்பாவாய்!" என
சம்பந்தர் திருமயிலையில் பூம்பாவையை உயிர்ப்பிக்கும் 
பதிகம் குறிப்பிடும் தினமான 
பங்குனி உத்திரம்!

எட்டுக்குடியிலே
காஞ்சிமட அன்பர் சிவன்,
பீப்பாயிலே தயிரை அடைத்து 
காற்றுப் புக முடியாமல் 
மெழுகு வைத்து மூடி, 
ஊர் குளத்தில் போட்டு/பிறகு
தண்ணீர் குளத்திலிருந்து 
பீப்பாயை எடுத்து/தயிர் தானம் செய்யும் தினமான 
பங்குனி உத்திரம்! 

 நெல்லையிலே கும்மியாட்டம் 
நிகழ்த்தும் தினமென 
*கொங்கு கல்வெட்டு* ஆய்வு கூறும் பங்குனி உத்திரம்!
இறைவன் திருவீதி உலா 
வரும்போது பெண்கள் ஆலாத்தி எடுக்க வேண்டுமென 
*கோனேசர் கல்வெட்டு*  கூறும் 
தினமான பங்குனி உத்திரம்!

பெண்கள் புத்தாடை உடுத்தி 
நீர்முள்ளி செடியின் 
வெண் காம்புடைய மலர் பறித்து தலையில் சூடி அழகு படுத்தி வைபவம் காணும் தினமென *அகநானூறு*  பதிவான 
பங்குனி உத்திரம்!

"உருவ வெண் மணல் முருகு
நூறு தண் பொழில் பங்குனி 
முயக்கம் கழிந்த வழி நாள்"  என்று
மொட்டை போட்டு நேர்த்திக்கடன் கழிக்கும் தினமென 
*அகநானூறு*  பதிவான 
பங்குனி உத்திரம்!

"இந்திர விழாவிற் அன்ன என"
ஐங்குறுநூறு பதிவான 
இந்திர விழா  தினமான 
பங்குனி உத்திரம்!
"வில்லவன் விழவினுள் 
விளையாடும் பொழுதன்றோ!" *கலித்தொகை*  பதிவான காமன்
விழாவான பங்குனி உத்திரம்!

"மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை கலி கொள் சுற்றமோடு கரிகால் காண" என *அகநானூறு*  பதிவான/புத்தாடை உடுத்தி புனலாடல் எனும் புனல் விழா
தினமான பங்குனி உத்திரம்!

"முழவு கண் புலரா 
விழவுடை ஆங்கண்!"
 என *நற்றிணை* பதிவாகி, பனைமடலில் செய்த குதிரையை வீதியில் சிறுவர் இழுத்து 
முழவு அடித்து ஆடிப் பாடும்
முழவு விழா தினமான 
பங்குனி உத்திரம் !

"கொங்கரர்கள் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன!" என *அகநானூறு* பதிவாகி, கொங்கு நாட்டில் கொங்கர்கள் இடுப்பில் மணி கட்டி ஆடும் 
*உள்ளி விழா*  தினமெனும்
பங்குனி உத்திரம்!

.தண்ணீரினால் ஆலயத்தில் 
விளக்கு எரிக்க உதவிய 
சிவ பக்தன் *நமி நந்தி அடிகளை*  நினைக்கும் தினமான 
பங்குனி உத்திரம்!

மொத்தத்தில்
குடும்ப ஒற்றுமை மேலோங்கி,
நோய் நீங்கி/ஆயுள் அதிகரித்து, செல்வ வளம் பெருகி,
 பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, 
புது தாலி மாற்றி தீர்க்க சுமங்கலி 
வரம் கிடைத்து,
 எல்லையில்லாத நிம்மதி கிட்டி, பிரிந்த தம்பதிகள் சேர்ந்து,
சகல யோகங்களும் கைகூடும் 
என்று பலன்களை வாரி வழங்கும் தினமான பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் 
திருமண வைபவம் காண்போம்!
திருவருள் பெற்று
நிம்மதியான வாழ்க்கை பெறுவோம்!

முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் 
வாலாஜாபேட்டை .