பெண்மையை போற்றுவோம்... 019

புதுமைப் விருது கட்டுரைப்போட்டி

பெண்மையை போற்றுவோம்... 019

பெண்மையை போற்றுவோம் ...

மாதர் தம்மை இழிவு செய்யும்
 மடமையைக் கொளுத்திடுவோம் 
வையக வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே
   என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரிகளை வலுவாக பற்றிக்கொள்வோம்.
  ஆதிகாலத்தில் ஆண் ஆதிக்கம் இருந்தது. காலத்திற்கு காலம் ஆண்கள் தமது சுயநலம் கருதி, வழக்கங்களையும்,சட்டங்களையும் வகுத்து பெண்ணை அடக்கி வைத்திருப்பதில் திருப்தியும் மகிழ்வும் கண்டனர்.பெண் என்பவள் வீட்டில் வளர்க்கப்படும் ஓர் விலங்கு என புகழ்பெற்ற படைப்பாளி காண்டேகர் குறிப்பிட்டுள்ளார்.
    
    ஆனால் காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் தொடர்கதையாக நிலைத்து நிற்க உதவிடவில்லை.பலவிதத்தில் பெண்களின் பங்களிப்புகள்,செயற்பாடுகள் தோன்றி எண்ணத்தின் மாற்றத்துக்கு வழிக்கோலின.அரசியல் என்பது பெண்களுக்கு பொருந்தா ஒன்று என்ற கருத்தும் நிலவியது பெண்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது.ஆனால் காலப்போக்கில் பெண்களுக்கு வாக்குரிமையை 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் முதல் இங்கிலாந்தில் சர்வஜன வாக்குரிமையை பெற்றுக்கொண்டனர்.
    தாய்மை,அன்பை காட்டும் தன்மை,இரக்கம், அருள்,மென்மை,அழகு போன்ற பண்புகளுக்கெல்லாம் பெண் உறைவிடமாக இருப்பதால் அகிலத்தில் பெண்மை பெருமை கொள்கிறது.
   சங்ககாலப் பெண்கள் வீரம்,கடமை உணர்ச்சி,கருத்து சுதந்திரம்,காதல் சுதந்திரம் பெற்றிருந்தமை பற்றியும் பெண்களால் ஆண்கள் பெற்ற புகழையை பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.அதுபோல் இடைக்காலத்தில் பல இலக்கிய நூல்கள் பெண்களை அடிமைத்தனத்தில் தள்ளுவதில் முக்கிய பங்கை பெற்றன.எனினும் கம்பர்,ஔவையார் போன்ற பல தமிழ் புலவர்கள் பெண்களை புகழ்ந்து உன்னத நிலையில் வைக்க பாடுபட்டார்கள் என பல உதாரணங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  
   பெண்ணின் நேசம், ஆழமானது, விசாலமானது, எல்லையில்லாதது, வார்த்தைகளால் விபரிக்க முடியாதது,சோகங்களை துயரங்களை தாங்கி மகிழ்வோடு வாழவைப்பவள்.ஒரு தாயைத் தேவதை எனக் கூறும் சமயக் கதைகள் உள்ளன.இறைவன் ஒரு குழந்தையை பூலோகத்துக்குச் சென்று வாழும்படி ஆலோசனை சொன்னார்.அதற்கு அந்த குழந்தை இறைவனை விட்டு போக விருப்பமில்லை என கூறியது. அதற்கு இறைவன் என்னுடைய அன்பு உன்னோடு தொடர்ந்து இருக்கும்.நான் உன்னைத் தாய் என்னும் தேவதையுடன் அனுப்புகின்றேன் எனக் இறைவன் நம்பிக்கையை ஊட்ட குழந்தை மகிழ்வோடு ஏற்றது என ஓர் கதை இருக்கிறது.

  பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ தம்மையறியாமல் திருமணம் எனும் கடிவாளத்தை இட்டுக்கொள்கிறார்கள்.இதனை குறிப்பிடும் போது 'தெய்வத்தின் தெய்வம்' திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் நினைவில் வருகிறது " பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே உன்னை புரிந்தும் கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே " என்று கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவில் எழுகிறது. இன்று ஓரளவு அதன் தாக்கத்தில் இருந்து மீண்டு உள்ளார்கள்.

   ஸ்ரீ சாரதா தேவி அம்மையாரின் அறிவுரையை குறிப்பிடுவது காலச்சிறந்ததாகும்.பெண்மை என்பது மென்மையாய், புனிதமாய்,கருணையாய் ,தாய்மையாய் உருவெடுத்து வந்துள்ளது எனவே பெண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.பாதுகாக்கப்பட்ட பெண்மை மதிக்கப்பட வேண்டும்.
  இருபத்தோராம் நூற்றாண்டு பெண்களின் முன்னேற்றம் அளப்பறியது.இன்னும் பெண்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் நாட்டுப்பற்றும் ஊக்கமுடைய குடிமக்கள் தோன்ற முடியும்.பல சிறந்த மாற்றங்கள் உண்டாகும். உலகில் பெண்கள் கல்வித்துறையில் சிறந்த நிலையை அடைந்து உள்ளார்கள். சுவாமி விவேகானந்தர் பெண்ணின் கல்வி பற்றி சிறப்பாக கூறி இருக்கிறார். பெண்ணின் கல்வி அவரின் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் நற்பயனை அளித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.இன்று பல துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். ஆண்பெண் சம பங்களிப்பு மனித சக்தி உபயோகம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

  புதுமைப்பெண் புதிய நெறிப்பாட்டுடன் தோன்றி முயற்சித்தால் மட்டுமே சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனும் விடயம் விவாத பொருளாக உள்ளது.

பெண்ணியம் என்பது எல்லோராலும் காக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.எனவே அடிமைத்தனத்தை தவிர நீங்கள் இழப்பதற்கொன்றுமில்லை.பெண்களுக்கு தளராத உள்ளமும் சத்தியமுமே நிரந்தர வெற்றியை தரும். மனித இனம் மலர, வியாபிக்க இல்லாள் இன்றியமையாதவள் என்பதை உணர்ந்து பெண்மையை போற்றுவோம். எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல கலாசார பண்பாட்டை விட்டுச் செல்ல வேண்டியது இன்றியமையாதது என்பதை உணர்வோம். அத்தோடு 
என்றும் பெண் என்பவள் வேரூன்றி நிற்கவேண்டுமாயின்,அவள் நாணலாய் வளைந்து கொடுத்தே ஆகவேண்டும் ...என்பதை நினைவில் கொள்வோம்.

༺༻❀ எம்.லீலா வினோதினி❀༺༻ 
 இலங்கை.