ஒற்றை குடையின் கீழ்...

புதுக்கவிதை

ஒற்றை குடையின் கீழ்...

ஒற்றை குடையின் கீழ் 

குருவிகள் கூடுகட்டிக்கொள்ளும்  விட்டங்களாக இருந்தன மனங்கள்
பன்றிகளின் வசிப்பிடங்களாக மாறுவதற்கும் முன்பு

நிணங்களைப் பொசுக்கும் கருணையற்ற தீயில் 
விழுந்துவிட்ட வரலாறு
மொட மொடப்பான கருக்குத்தாளாகி 
இன்னும் உதிராமல் நிற்கிறது

லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
சிக்கி முக்கி கற்களின்  உரசலிலிருந்து பறந்த 
சிறுபொறி தான்
வாயில்லா விட்டில்களை இரையாக்கும் தீக்கொழுந்தாக
இன்னும் மனதோரங்களில் நடனமிட்டுக்கொண்டிருக்கிறது

மோசஸின் பத்துக்கட்டளைகளும் சின்ன சின்ன கேப்சூல்களில்
அடைக்கப்பட்டு விற்பனைக்கு 
வந்த பின்
அருள் வாக்குகளும் உபதேசங்களும் பூண்டு மாத்திரைகளும்
வந்தவண்ணமேயிருக்கின்றன

பூமிக்கூந்தலின் ஒரு பகுதி இன்னும் இரத்தத்தில் 
தோய்ந்தபடிமிதந்து கொண்டிருக்கிறது

ஒற்றைக்குடையின் கீழ் எல்லோரும் வந்த பின்பும்
பக்கத்துவீட்டுக்காரனின் முகம் மட்டும் இன்னும்
பரிட்சையமாகவேயில்லை

தங்கேஸ்