வான்தமிழ் உலகின் வளர்பிறை அண்ணா...! 011

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

வான்தமிழ் உலகின் வளர்பிறை அண்ணா...! 011

வான்தமிழ் உலகின் வளர்பிறை அண்ணா


தொண்டை மண்டலப் பண்டைய காஞ்சியில்/
தென்றல் காற்றாய் மண்ணில் தோன்றினார்/
அருங்குணம் அனைத்தும் அமையப் பெற்றவர்/
கரும்பினும் இனியக் காப்பியப் பெருமகன்/

கற்பவை யெல்லாம் கசடறக் கற்றவர்/
கள்ளம் கபடம் கனவிலும் அறியார்/
மக்களுக் காக மக்களில் ஒருவராய்/
பக்குவப் பட்டுப் பாதையை அமைத்தவர்/

அறிவின் சிகரம் பெரியார் வழியில்/
சிறிதும் அகலாச்    செயலின் சேவகர்/
கற்றார் உற்றார் உலகம் போற்றும்/
ஆற்றல் பெற்று ஊற்றாய்த் திகழ்பவர்/

கடமை கண்ணியம் கட்டுப் பாட்டை/
உடமை கொண்ட உத்தமர் அண்ணா/
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்/
ஏழ்மையைப் போக்கத் திட்டம் வகுத்தவர்/

மறைநூல் திருக்குறள் பாமரர் மனதில்/
நிறைவாய்ப் பதித்து நிலைக்கச் செய்தவர்/
அறவழி நின்று ஆட்சி செய்தவர்/
குறள்வழிக் கோமான் கொள்கை மறவர்/

 வான்தமிழ் உலகில் வளர்பிறை அண்ணா/ 
தேன்தமிழ் நாட்டின் தென்றல் அண்ணா/
வையகம் போற்றும் மேதை அண்ணா/
வாழ்க அவர்புகழ் வளர்க  செந்தமிழ்/

கவிஞர்  சைதை பாலு