"நிவர்"த்தி 

 

'நிவர்'த்தி - எழுத்தாளர் அன்னபூரணி தண்டபாணி .

 

"அம்மா! கரண்ட் எப்பம்மா வரும்?" ஐந்து வயது மகள் ஓவியா கேட்டாள்.

 

"வரும் கண்ணா! ஈபி அங்கிள் எல்லாம் வேல பண்றாங்கல்ல.. சீக்கிரமே வரும்!" அம்மா சரண்யா பதில் சொன்னாள். 

"வெளியவும் வெளாட போக கூடாது. வீடியோ கேம்ஸும் வெளாட முடில. டீவியும் இல்ல! இப்ப ஏம்மா கரண்ட் போச்சு? எனக்கு போர் அடிக்கிது!" எட்டு வயது மகன் அமுதன் குற்றப்பத்திரிகை வாசித்தான். 

 

"என்னடா கண்ணா செய்யறது? நிவர் புயல் வந்திருக்குல்ல.. அது மட்டுமில்ல.. ஊர் பூராவும் கொரோனா பரவிட்டிருக்குன்னு உனக்கும் தெரியும்ல!?" அப்பா தமிழரசு சமாதானம் செய்ய முயன்றான். 

 

"ஆனா கரண்ட் ஏன் போச்சு?" என்று ஓவியா மீண்டும் கேள்வி கேட்டாள். 

 

சரண்யாவுக்கு கோபமாக வந்தது. 

 

"ஏய்! இதே கேள்விய எத்தன முறை கேப்ப? எனக்கு வேலையிருக்கு!" என்று சரண்யா சிடுசிடுத்தாள். 


அவளும்தான் என்ன செய்வாள்? மின்சாரம் இல்லாததால் சட்னி அரைப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளை எல்லாம் கையால் செய்ய வேண்டி வந்ததே; கொரோனா பரவல் காரணமாக வேலைக்காரியும் வர முடியாத காரணத்தால் ஏற்கனவே வீட்டு வேலைகள் மலை போல குவிந்திருக்க, நிவர் புயலின் உபயத்தால் இப்போது மின்சாரத்தின் துணையும் இல்லாமல் போக, அவளுக்கு வேலை பளு இன்னும் கூடிப் போனது. அதனால் எழுந்த எரிச்சலை பிள்ளைகள் மீது காட்டினாள். 

 

தமிழரசு மனைவியின் மனம் புரிந்தவனாக, 

 

"சரி! சரி! பிள்ளைங்கள நா பாத்துக்கறேன். நீ வேலையப் பாரு!" என்று கூறி பிள்ளைகள் இருவரையும் பால்கனிக்கு அழைத்து வந்தான். 

 

அவர்கள் சென்னை தாம்பரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். கணவன் மனைவி இருவருமே கணிணிப் பொறியாளர்கள். பெருந்தொற்று காரணமாக தற்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்கள். 

 

அவர்கள் குடியிருப்பு 100 வீடுகள் கொண்ட ஒரு கேட்டட் கம்யூனிட்டி. 
 

நிவர் புயலின் தாக்கம் சென்னையில் அவ்வளவாகத் தெரியவில்லையென்றாலும் கனமழை இருந்ததென்னவோ உண்மை. அதனால் மண் இளகி, அவர்கள் தெருவிலிருந்த பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அப்படிச் சாயும்போது அருகிலிருந்த மின்தந்தியை இழுத்துக் கொண்டு சாய்ந்து விட்டது. இதன் காரணமாக அந்த மின்தந்தி இணைத்த பத்து பன்னிரெண்டு மின்கம்பங்களும் அப்படியே சாய்ந்தது. 


அதனால் மின்சாரம் வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று குடியிருப்புவாசிகள் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். 


கெட்டதிலும் நல்லதாக, இந்த புயல் மழை மற்றும் பெரு நோய்த் தொற்று காலத்திலும் மின்வாரிய ஊழியர்கள் ஆபத்பாந்தவனாய் மக்களைக் காக்க களப்பணியில் இறங்கியது குடியிருப்புவாசிகள் அனைவரையும் நெகிழச் செய்தது. 

 

குழந்தைகள் இருவரும் பால்கனி வழியாக வெளியே தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். 

 

மின்வாரிய ஊழியர்கள் கீழே விழுந்த மின்கம்பத்தை பொதுமக்கள் உதவியுடன் நிமிர்த்தி நிறுத்தி மண்ணில் மீண்டும் நட்டுக் கொண்டிருந்தார்கள். 

 

"அங்க பாருங்க பசங்களா! அந்த ஈபி அங்கிள் எல்லாம் கீழ விழுந்த அந்த எலக்ட்ரிக் போஸ்டை தூக்கி வெக்கறாங்க.. தெரியுதா?" என்று தமிழரசு காட்ட, குழந்தைகள் இருவரும் ஆர்வமாகப் பார்த்தார்கள். 

 

அதற்குள் அவனுடைய கைப்பேசியில் செய்தி வந்தது. 

 

அவர்கள் குடியிருப்பின் வாட்ஸ்அப் குழுவில் அவர்களின் தெருவில் விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை ஒருவர் படம் எடுத்து பகிர்ந்திருந்தார். 

 

"இங்க பாத்தீங்களா.. நம்ம தெருல இருக்கற எல்லா போஸ்ட்டும் கீழ விழுந்திருக்கு.. வயர் எல்லாம் கீழ கிடக்கு பாருங்க.." என்று தன் கைப்பேசியில் காட்டினான்.
 

குழந்தைகள் இருவரும் பயமும் ஆவலுமாக அதைப் பார்த்தனர். 

 

"வயர் எல்லாம் கீழ கிடக்குல்ல.. அத யாரும் மிதிச்சிட்டா என்னாகும்.. அவங்க மேல கரண்ட் பாசாகிடும்ல.. அதனாலதான் கரண்ட் கட் பண்ணிருக்காங்க.." 

 

"ம்.." என்றாள் ஓவியா. 
 

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் குடியிருப்பின் எதிரிலிருந்த மின்கம்பம் வெற்றிகரமாகத் தூக்கி நிறுத்தப்பட்டு மண்ணில் ஆழமாக நடப்பட்டது. 
 

"அப்பா.. அங்க பாருங்க.. அந்த போஸ்ட்ட திருப்பியும் நட்டுட்டாங்க.. அப்ப இப்ப கரண்ட் வந்துடுமா?" அமுதன் ஆர்வமாகக் கேட்டான். 
 

"இல்ல அமுதா! ஒரு போஸ்ட்தானே நட்டிருக்காங்க.. நம்ம தெருல இருக்கற பன்னண்டு போஸ்ட்டும்ல விழுந்திருக்கு.. அவங்க எல்லாத்தையும் நட்டுட்டு எல்லா வயரையும் கனெக்ட் பண்ணிட்டு அப்றம்தான் பவர் சப்ளை குடுப்பாங்க.." என்று தெளிவாகப் புரிய வைத்தான் தமிழரசு. 
 

"அப்ப எப்பப்பா கரண்ட் வரும்.." மீண்டும் முதல் கேள்வியிலேயே வந்து நின்ற மகளை அன்புடன் பார்த்தான். 
 

"இப்ப.. நீ ஒரு ஹோம்வொர்க் முடிச்சதும் உடனே அடுத்த ஹோம்வொர்க் செய்வியா? இல்ல.. கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பியா?" என்று கேட்டான் தமிழரசு.
 

"ஹூம்.. ரெஸ்ட் எடுப்பேன்.." என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே கூறிய மகளை தூக்கி முத்தமிட்டான். 
 

"நீ கொஞ்சூண்டு எழுதினதுக்கே நிறைய ரெஸ்ட் எடுக்கற.. அப்ப அந்த அங்கிள் எல்லாம் எவ்ளோம் பெரிய போஸ்ட்டை தூக்கி நிறுத்தியிருக்காங்க.. அவங்களுக்கு டயர்டா இருக்கும்ல.. அதனால மெது மெதுவாதான் செய்வாங்க.. அது வரைக்கும் நாம தான் பொறுமையா இருக்கணும்.. சரியா?" என்று சொல்லிக் கொடுத்தான். 

 

"ம்.." என்ற குழந்தைகள் மீண்டும் பால்கனியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். 
 

சரண்யா தன் வேலைகளை பாதி முடித்துவிட்டு நடுவே கொஞ்சம் ஓய்வுக்காக பால்கனிக்கு வந்தாள். 
 

தமிழரசு மனைவிக்கு உதவி செய்ய அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு அவன் சமையலறைக்குள் சென்று பாத்திரம் விளக்கினான். 

 

வீட்டில் அன்று முழுதும் இப்படியே கழிந்துவிட, தெருவில் மூன்று மின்கம்பங்களே மீண்டும் நடப்பட்டன. 

 

மறுநாள் மின்வாரிய ஊழியர்களின் சிரமத்தைக் குறைக்க ஜேசிபி வந்துவிட்டது. 

 

அதனால் மளமளவென வேலைகள் முடியத் தொடங்கியது. மின்கம்பங்களைத் தூக்குவதும், அதை மண்ணில் நட பள்ளம் தோண்டுவதும் ஜேசிபி செய்துவிட, ஊழியர்களின் முக்கால்வாசி வேலை பளு குறைந்து போனது. 

 

அன்று மதியம் மூன்று மணிக்குள் மீதமிருந்த மின்கம்பங்கள் எல்லாம் நடப்பட்டுவிட, மின்தந்தி இணைப்பும் அடுத்தடுத்துக் கொடுத்துக் கொண்டே வந்தார்கள். 

 

எல்லாம் முடிந்து மின் இணைப்பு கொடுப்பது மட்டுமே பாக்கி என்ற நிலையில் குடியிருப்பில் இருந்த மின் மாற்றியின் (டிரான்ஸ்ஃபார்மர்) மேல் ஒரு மின் ஊழியர் ஏறினார். 

 

தமிழரசுவின் வீட்டு பால்கனிக்கு நேராக அந்த மின்மாற்றி இருந்தது. ஓவியாவும் அமுதனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சரியாக அவர்களின் கண் முன்னே ஊழியர் அந்த மின்மாற்றியின் தந்தி இணைப்புகளை சரி பார்த்தார். 

 

குழந்தைகள் இருவருக்கும் இது மிகுந்த ஆவலையும் உற்சாகத்தையும் அதற்கு மேல் வியப்பையும் கொடுத்தது. 
 

"அப்பாப்பா! இங்க பாருங்க! அந்த அங்கிள்.." என்று ஓவியா கூவ, இவளுடைய குரல் கேட்டு அந்த மின் ஊழியர் இவர்களைத் திரும்பிப் பார்த்து கையசைத்தார். 

 

"உன்னும் கொஞ்ச நேரத்தில கரண்டு வந்துடும்.." என்றார் அந்த ஊழியர். 

 

ஓவியாவும் அமுதனும் அவர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்து சிரித்தனர். 

 

குடியிருப்புக்கும் மின்மாற்றிக்கும் நடுவே இரண்டு கார்கள் அளவு இடமிருந்தாலும் அவ்வளவு உயரத்தில் அருகருகே இருப்பது போலவே குழந்தைகள் உணர்ந்தார்கள். அவர் பேசியதும் அவர்களுக்குத் தெளிவாகவே கேட்டது.

 

சரியாக ஐந்து மணியிருக்கும் போது மின்மாற்றியின் மேலே நின்று கொண்டிருந்த ஊழியரின் கைப்பேசி ராகமிசைத்தது. 

 

அவர் அதை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு பேசியபடியே வேலை செய்தார். 
 

"சொல்லுமா!" 

 

".." 

 

"வண்டி ஏறிட்டியா?" 

 

".." 

 

"ஈ பாஸ் எடுத்துகிட்டியா?" 

 

".."

 

"சரி.. சரி.. காலையில நா ஸ்டேசனுக்கு வந்திடறேன்.. நீ பத்திரமா வா.. பாப்பாவ ஜாக்கரதையா பாத்துக்க.." 

 

".." 

 

"அப்டியா.. சரி இரு.." என்று அவர் கட் செய்தார். சில நொடிகளில் வீடியோ அழைப்பு வந்தது. 

 

அதை எடுத்து தன் முகத்தைக் காட்டி பேசினார். 

 

திரையில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை சிரித்துக் கொண்டே கையசைத்தது. 

 

"அப்பா! நாளிக்கு டேசன் வரியா?" 
 

"வரேன் பாப்பா!" 

 

"எனுக்கு பர்த் டேக்கு கலர் பென்சில் வாங்கி தரியா?"

 

"கலர் பென்சிலா.. பாக்கறேன் பாப்பா.. இப்ப கடைல்லாம் இல்ல.. கடை தொறந்ததும் வாங்கி தரேன் பாப்பா.." என்றார். 

 

குழந்தையின் முகம் விழுந்துவிட்டது. 
 

"ம்ம்ம்.." என்று சிணுங்கத் தொடங்கியது.

 

"ஏய்! கொண்டா இப்டி! எல்லாத்துக்கும் அழுவியா?" என்று குழந்தையை அதட்டிக் கொண்டே கைப்பேசியை அதனிடமிருந்து பிடுங்கிய அவர் மனைவி அவர் மேலே நிற்பதை அப்போதுதான் கவனித்தாள். 

 

"ஏங்க? எத்தன முறை சொல்லிருக்கேன்.. மேல நிக்கறச்ச போன் பேசாதீங்கன்னு.." என்று கடிந்து கொள்ள, 

 

"சரி.. சரி.. நீ புள்ளைய திட்டாத.. நா காலையில வரேன்.." என்றார் மனைவியிடம். 

 

"நீங்க பத்திரமா இருங்க.." என்று போனை வைக்கப் போனாள். 

 

"நீ பாப்பாவ காட்டு.." பிடிவாதம் பிடித்தார். 
 

"ம்ச்.. ஏய்.. அப்பா கூப்பிடறாங்க பாரு.." 
 

"ம்.. போ.." குழந்தை முரண்டு பிடித்தது.

 

"பாப்பா.. அப்பா பாரு.. நாளைக்கு நா கடை தொறந்ததும் கலர் பென்சில் வாங்கியாரன்.. சரியா.. சிரி.. டாட்டா சொல்லு.." என்று கொஞ்சினார். 

 

"ம்.. டாட்டா.. போ.." என்ற குழந்தை கோபம் காட்ட, 

 

"சரிம்மா.. அத திட்டாத.. எதாச்சும் பிராக்கு காட்டு.. சரியாகிடும்.. நா வெச்சிடறேன்.." என்றார். 
 

"சரிங்க.. ஜாக்கிரதையா இருங்க.." என்று கூறிக் கொண்டே அவர் மனைவி அழைப்பை துண்டித்தாள்.
 

அந்த ஊழியரும் ஒரு புன்னகையுடன் தன் கைப்பேசியை தன் பேன்ட் பேக்கெட்டுக்குள் வைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். 
 

இதையெல்லாம் பால்கனியிலிருந்து பார்த்த அமுதனுக்கும் ஓவியாவுக்கும் வியப்போ வியப்பு! 
 

"அப்பா! அப்பா!" என்று கூவிக்கொண்டே தந்தையிடம் ஓடிப்போய் தாங்கள் பார்த்ததை விழி விரிய விளக்கினார்கள். 
 

தமிழரசுவும் ஒரு புன்னகையுடன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டான். 
 

"ஏம்ப்பா.. அந்த பாப்பா அங்கிளுக்கு டாட்டாவே சொல்லல.." 

 

"கடைதான் இல்லையே.. அப்றம் எப்டி கலர் பென்சில் வாங்குவாரு.. இது ஏன் அந்த பாப்பாக்கு தெரீல.." 

 

தந்தையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். 

 

தமிழரசு எல்லாவற்றையும் பொறுமையாக அவர்களுக்குப் புரிய வைத்தான். 
 

"அந்த பாப்பா.. ரொம்ப சின்னதில்ல.. அதான்.. கடை இருந்தாதான் கலர் பென்சில் வாங்க முடியும். இல்லன்னா வாங்க முடியாதுன்னு அதுக்கு புரியல.." 

 

தந்தை சொல்வதை கவனமாகக் கேட்ட அமுதன் ஓடிப் போய் தன் அலமாரியிலிருந்து தன் தந்தை தனக்காக வாங்கித் தந்திருந்த கலர் பென்சில் டப்பாவை எடுத்து வந்தான். 
 

"அப்பா! இத நா அந்த பாப்பாக்கு பர்த்டே கிஃப்டா தரவா?" என்று கேட்டான். 
 

அண்ணன் ஒரு பொருளை தரவா என்று கேட்டதும் ஓவியாவும் உள்ளே ஓடிப் போய் தனக்காக தன் தந்தை வாங்கிக் கொடுத்த டிராயிங் புத்தகத்தை எடுத்து வந்தாள். 
 

"நானும் இத தரவா?" என்று கேட்டாள். 
 

சரண்யாவுக்கும் தமிழரசுவுக்கும் தங்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமையாக இருந்தது. 
 

"ம்.. அந்த அங்கிள் கீழ இறங்கினதும் தரலாம்.." என்று அவன் கூறும் போதே அந்த ஊழியர் மின்மாற்றியிலிருந்து இறங்கத் தொடங்கினார். 
 

குழந்தைகள் இருவரும் பால்கனியில் எட்டிப் பார்த்துவிட்டு,
 

"அப்பா.. அந்த அங்கிள் மேலேர்ந்து இறங்கிட்டாங்க.." என்றனர். 
 

"சரி! வாங்க! கீழ போய் அந்த அங்கிள பாக்கலாம்!" என்று கூறி தமிழரசு எழுந்தான். 
 

சரியாக அப்போது மின்சாரம் வந்தது. 
 

"ஹே! கரன்ட் வந்துடுச்சு.. கரன்ட் வந்துடுச்சு.." என்று குதூகலமாகக் கூவினான் அமுதன். அண்ணனுடன் சேர்ந்து ஓவியாவும் குதித்தாள். 

 

இருவரையும் அழைத்துக் கொண்டு கீழ்தளம் வந்தான் தமிழரசு. 
 

மேலே ஏறி வேலை பார்த்த ஊழியர் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார். 
 

ஓவியாவும் அமுதனும் அவரிடம் ஓடினார்கள். 

 

தன்னிடம் ஓடி வந்து மூச்சு வாங்கும் குழந்தைகளை வியப்பாகப் பார்த்தார் அவர். 
 

"என்னா பாப்பா? இப்டி ஓடியாறீங்க?" 
 

"அங்கிள்.. இத உங்க வீட்டு பாப்பாவுக்கு குடுங்க.. அவளுக்கு எங்க பர்த்டே கிஃப்ட்.." என்று பெரிய மனிதத் தோரணையுடன் அமுதன் தன் கையிலிருந்த புதிய கலர் பென்சில், டப்பாவைத் தந்தான்! 
 

"இதயும் குடுங்க அங்கிள்." என்று கூறி தன் கையிலிருந்த டிராயிங் புத்தகத்தைக் கொடுத்தாள்ஓவியா. 
 

"ஐயோ.. வோணாம் பாப்பா.." என்று அவர் வாங்கிக் கொள்ள மறுக்க, இவர் இப்படிச் சொல்லக் கூடும் என்று ஊகித்த தமிழரசு,
 

"பரவால்ல சார்! வாங்கிக்கங்க!" என்றான். 

 

"ரொம்ப தேங்க்ஸ் பசங்களா.. தேங்க்ஸ் சார்.." என்று கூறி அவர் அதை வாங்கிக் கொண்டார். 
 

"அங்கிள்! உங்க பாப்பாவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லுங்க.." என்று கூறினான் அமுதன். அவன் கையைப் பிடித்து குலுக்கி நன்றி சொன்னார் அவர். 

 

"அங்கிள்! கரண்ட் குட்ததக்கு தேங்க்ஸ்!" என்று தன் மழலை மாறாமல் கூறிய ஓவியாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி நன்றி கூறினார். 

 

"உங்க குழந்தைக்கு பர்த்டே விஷஸ்! இந்தாங்க.." என்ற கூறிய தமிழரசு இரண்டு ஐநூறு ரூபாய் தாளை அவருடைய கையில் திணித்தான். 
 

முதலில் வாங்க மறுத்த அந்த ஊழியர் பின்னர் தமிழரசின் அன்புக் கட்டளைக்கு அடி பணிந்து வாங்கிக் கொண்டார்.

 

தன் குழந்தையின் ஏக்கத்தை இந்தக் குழந்தைகள் நிவர்த்தி செய்து விட்டார்களே என்று மகிழ்ந்தபடி கிளம்பினார் அவர். 

 

நிவர் புயலினால் தன் குழந்தைகள் இருவரும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று நினைத்து நினைத்து மகிழ்ந்தபடியே மனநிறைவுடன் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான் தமிழரசு.  
 

♥♥♥♥♥