குடியரசு தினம் கவிதை

குடியரசு தினம்

குடியரசு தினம் கவிதை

தேசத்தின் 
கொடி 
மண்ணில்
பறக்குது 
பாரீர் !

நேசத்தின் 
கரங்கள் 
நொடியில் 
வணங்குவதை 
கேளீர் !

வீறெழுந்து 
பறக்கும் 
திசையில் 
வீரம் 
ஒளிருதடா !

பட்டொளி 
வீசிப் 
பறந்திட 
உணர்வெங்கும் 
அதிருதடா !

சுதந்திர 
உணர்வில் 
உரிமை 
வரமாய் 
வந்ததே ! 

விடுதலையைப்
பெற்றிட
நலமானப் 
பொழுது 
விடிந்ததே ! 

கீழிருந்து 
மேலாக
வந்ததினை 
அறிந்திடில் 
சுதந்திரம்..

மேலிருந்து
கடமையை 
செய்திடலே 
குடியரசின்
மந்திரம்..

சுழன்றிடும் 
காற்றில் 
உயிரின் 
சுவாசம் 
உள்ளதே !

சுற்றிடும் 
பூமியில் 
இன்பமும் 
துன்பமும் 
சுழலுதே ! 

பறந்திடும்
கொடியின்
வரலாற்றை
மறந்திட
வேண்டாமே.. 

பறந்திடத் 
தந்திட்ட
உயிர்களை 
எந்நாளும்
நினைப்போமே ! 

வண்ணங்கள்
எண்ணங்கள்
கொடியின்
பெருமைக்கு 
உரியதாம்..

கற்றிடும்
உற்றிடும்
மனிதர்கள்
அறிந்திடல்
நல்லதாம்..

கண்களில்
கருத்தியல்
சுழல்வதால்
காலத்திற்குக்
கனிவுண்டோ.! 

உள்ளத்தில்
கொடியின்
உயர்ச்சியே
ஒற்றுமைக்கு 
அணியன்றோ.! 

உயர்ந்து
நின்றால்
கொடியாக
உன்னையும்
வணங்கிடுவர்.

உள்ளார்ந்து 
உண்மையாக
வாழ்ந்திடில் 
அனைவரையும் 
போற்றிடுவர். 

முனைவர் இராமகுமார்.