அக்னிச் சுடர் பாரதி..! 012

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

அக்னிச் சுடர் பாரதி..! 012

அக்னிச் சுடர் பாரதி

முண்டாசுக் கவியே நீயென்
மூச்சினில் நிறைந்து விட்டாய்!

அக்கினிக் குஞ்சை எந்தன்
அறிவினில் பொதிந்து வைத்தாய்!

பெண்மையின் பொருளை எந்தன்
சிந்தையில் விதைத்து விட்டாய்!

ஒளி வீசும் புரட்சி தீபம் அன்று
தமிழ் மண்ணில் ஏற்றி வைத்தாய்!

விடுதலை வேட்கையை உந்தன்
வீரக்கவிகளில் கலந்து தந்தாய்!

தமிழின் மேன்மை உந்தன்
கவிதைகளில் மிளிருதய்யா!

இளைய பாரதத்தை வரவேற்க  
எழுச்சி கீதம் பாடி நின்றாய்!

புதிய ஆத்திசூடி புனைந்து நீயும்
 சிறார்க்கு அறிவுரை தந்தாய்!

கவிதைகளில் எளிமையை நீ
புகுத்தியே சிறக்க வைத்தாய்! 

திமிர்ந்த ஞானச் செருக்கென்று
பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தாய்!

சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மாவைக்
காதலில் திளைக்க வைத்தாய்!

சின்னஞ்சிறு கிளி கண்ணம்மாவை
எங்கள் ஆவி தழுவ வைத்தாய்!

கண்ணனுக்கு அவதாரங்கள் பற்பல
காவியமாக நீ படைத்தாய்!

தீராத விளையாட்டுப் பிள்ளையை
எங்கள் மனங்களில் ஓட வைத்தாய்!

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உந்தன்
கவிதையில் மிளிர வைத்தாய்!

நெஞ்சில் உரமில்லா வஞ்சகரைக்
கவிதைகளில் சாடினாய் நீ!

சிந்து நதியின் மிசை நிலவிலே
ஒற்றுமை கீதம் நீ இசைத்தாய்!

பாரதத்தில் பாஞ்சாலி புகழ் பாடிப்
பெண்மையை உயர்த்தி நின்றாய்!

வீழ்ந்தாலும் எழுந்திடுவேன் என்று
நம்பிக்கை விதை விதைத்தாய்!

உந்தன் புகழ் பாட ஒருபிறவி போதாது
மீண்டும் மீண்டும் பிறந்திடுவேன்!

உந்தன் பெருமையைக் கவிதைகளில்
போற்றித் துதித்திடுவேன்!

புவனா சந்திரசேகரன்.