பறவை...வானம்... கவிதை...

புதுக்கவிதை

பறவை...வானம்... கவிதை...

பறவை என்னும் சொல் இல்லாத
 ஒரு கவிதையை எழுதச் சொல்கிறாய்

பறவை இல்லாத கவிதையில் வானமும் இடம் பெறாது

வானம் இடம் பெறாத கவிதையில்
விண்மீன்களும் மழையும் மரங்களும்
மனிதர்களும் இடம் பெறார் தானே

நான் ஒரு மீனை எடுத்து 
பறவையின் இடத்தில் நிரப்புவேன்
அதன் செதில்கள் 
சிறகுகளாக மாறும்

கடல் எல்லையற்ற 
நீல வானமாக 
கடல்களை நோக்கி
 விரையும் நதிகளில்
நாம் ஒரு  கால் நனைக்க செல்வோம்

நாம் கால்களின் அழுக்குகளை
சிறு மீன் குஞ்சுகள் 
விரும்பி உண்டு செல்லும்

லயித்து  தீரா நதிகளின் காதலர்களாவோம் நாம் 

அன்று பறவைகளைத் 
தேடி வரும் வெற்று வானம்
கடலில் குதித்து மூழ்கி சாகும்

கரையில் தூக்கி வீசப்பட்ட மீன்கள்
 சட்டென்று சிறகுகளை விரித்து பறக்க தொடங்கி விடும்

தங்கேஸ்