பெண்ணுள் பஞ்சபூதம்

மகளீர் தினம் கவிதை

பெண்ணுள் பஞ்சபூதம்

பெண்ணுள் பஞ்சபூதம்

ஈரமான இதயத்தோடு
கருணை மழையாய்
தன்னலமில்லா பணி புரியும்
இல்லத்தரச்சியாய், 
கம்பீரமாய் வலம் வருவதில் 
*நீராக!*

பொறுமையின் சிகரமாய் 
பூமா தேவியாய் 
தாயென உயிர் சுமப்பதில்,
பாசம் சொரிவதில்
தங்கையாய்/தமக்கையாய்,
பரஸ்பர உணர்வு நிகழ்வுகளில் பகிர்தலுடனான தோழியாய் ,
நேசம் செலுத்துதலில் 
மனைவியாய்,
 அன்பை புரிதலில் மகளாய் பரிணமிப்பதில் 
*நிலமாக!* 

வழிபாடு செய்யும் 
தீப ஒளியாய்/திவ்ய ஒளியாய், 
பணம் புழக்கமாகும் மகாலட்சுமியாக, அறுசுவை சமைக்க 
அடுப்பில் நெருப்பென ஆகும் 
பெரும் சக்தியாய் பரிணமிப்பதில் *நெருப்பாக!*

குடும்பத்தின் 
ஆக்சிஜன் சிலிண்டர் ஆக,
இக்கட்டு நேரத்தில் 
குளிர் தென்றலாக,
மனதை/உடலை வருடும் 
இளந்தென்றலாக,
பெண்மை மிளிர்வதில் 
*காற்றாக!*

விட்டுக் கொடுப்பதிலும், விருந்தோம்பலிலும், 
பூசல் தவிர்த்து அரவணைப்பதிலும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் 
தன் மனதில் அன்பை பகிர்ந்து புகலிடம் தருவதிலும், 
*ஆகாயமாக!*

பெண்ணே!
அனைத்திலும் 
இல்லை ...இல்லை 
உன்னுள் 
பஞ்சபூதங்களும் அடக்கமே!

முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் 
வாலாஜாபேட்டை.