மாண்புமிகு மகளிர் 018

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

மாண்புமிகு மகளிர் 018

மாண்புமிகு மகளிர்.

*குறிப்புச் சட்டகம்:*
1. முன்னுரை
2. வீரமங்கை வேலு நாச்சியார்
3. சாவித்திரிபாய் பூலே
4. தேவானந்தா
5. முடிவுரை

*முன்னுரை:*
         நம் நாட்டில் பெண்கள்,
  நதியாகப் பார்க்கப்படுகிறார்கள். மொழியாகப் பார்க்கப்படுகிறார்கள். விண்ணாகப் பார்க்கப்படுகிறார்கள். மண்ணாகப் பார்க்கப்படுகிறார்கள். ஏன் கடவுளாகக் கூட பார்க்கப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? உலகத்தில் உள்ள உச்சபட்ச வலியை தாங்கி ஒரு உயிரை அவள் இம்மண்ணில் படைப்பதால் தான். புராண காலம் தொட்டு புரட்சி காலம் வரை யுகம் யுகமாய் ,ஊழி ஊழியாய் ,ஒளி ஆண்டுகளாய், மானுடத்தை இரட்சித்து பரிசுத்தமாக்கி ,சகல மனிதப் பாவங்களையும் ஏற்று, ரத்தமாய் ,கண்ணீராய், வியர்வையாய், விஞ்ஞானமாய், கவிதையாய், சொற்களில் சொல்ல முடியாத தெய்வீகமாய் விளங்குவதால் தான், பெண்கள் மாண்புமிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். அத்தகு மாண்புமிக்க பெண்களில் சிலரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

*வீரமங்கை வேலு நாச்சியார்:*
          நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் ,
ஆயிரமாயிரம் பேர் அந்நியனை எதிர்த்துப் போரிட்டு இருந்தாலும் கூட ,வெற்றி பெற்றது என்னவோ ஒரு பெண்ணான வேலுநாச்சியார் மட்டும் தான். வெற்றி பெற்றது மட்டுமின்றி "இனி சிவகங்கையின் மீது படையெடுத்து வரமாட்டோம்! சிவகங்கைக்கு விடுதலை அளித்து விட்டோம் ",என்ற வெற்றிப்பட்டயத்தை 'ஆங்கிலேயரிடம் இருந்து எழுதிவாங்கிய பெண் 'என்ற பெருமை வேலுநாச்சியாரை மட்டுமே சாரும்.

*சாவித்திரிபாய் பூலே:*
        பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கல்வி கற்ற பெண்ணை  ஒரு ஆண் மணந்தால் ,"அவன் உண்ணும் உணவு புழுக் கூட்டமாக மாறிவிடும்! அவன் உயிர் உடலை விட்டுப் போய்விடும்", என்ற மூடப்பழக்க வழக்கம் நிறைந்த காலகட்டத்தில், பெண்களுக்கு கல்வி கற்பிக்கப் புறப்பட்டவர் தான் சாவித்திரிபாய் பூலே .இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமையும் இவரையே சாரும். பெண்களுக்கு கல்வி கற்பிக்க இவர் வெளியே வரும் போதெல்லாம்  இவர் மீது மாட்டின் மலமும், மனிதனின் மலமும், கற்களும் வீசப்படுமாம். அவற்றையெல்லாம் தன் மீது விழும் மலர்களாக எண்ணிக் கொள்வாராம் சாவித்திரிப்பாய் பூலே. இதனால் எப்போதும் ஒரு மாற்றுப் புடவையை தன்னோடு வைத்திருப்பாராம். பள்ளி வந்தவுடன் ,மலம் நிறைந்த ஆடையை மாற்றிக் கொண்டு ,பின் பெண்களுக்கு கல்வி கற்பிப்பாராம் .
      இவரை நினைக்கும் போது ,கீழ்க்கண்ட மகாகவி பாரதியின் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது. தேடி சோறு நிதம் தின்று -பல 
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் 
 வாடி துன்பம் மிக உழன்று -பிறர் 
வாட பல செயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-
 கொடும் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்- பல 
வேடிக்கை மனிதரைப் போலே -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?               இவ்வரிகளின் பொருளையும், சாவித்திரிபாய் பூலே அவர்களின் செயலையும் என்னால் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை.
 
*தேவானந்தா:*
     பிப்ரவரி 2023 இல் நடந்த நிகழ்வு இது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய பெண் தான் தேவானந்தா .கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு, தன் கல்லீரலைக் கொடுக்க முன் வந்தாள் தேவானந்தா. ஆனால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு 18 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே, உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்  என சட்டம் சொல்கிறது. தந்தையின் உயிரை எப்படியாவது காக்க வேண்டும் என்று துடித்த தேவானந்தா, நீதிமன்றத்தை நாடினாள். நான் என் முழு விருப்பத்தோடு, என் தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விரும்புகிறேன் .'என் வயதைக் கருத்தில் கொள்ளாது ,என் தந்தையின் உயிரைக் காக்க வேண்டும்'. அதற்கு ,நான் உறுப்பு தானம் செய்ய எனக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என வாதாடினாள் .விளைவு நீண்ட மருத்துவ ஆலோசனைக்குப் பின் நீதிமன்றம் அவளுக்கு அனுமதி வழங்கியது. அறுவை சிகிச்சை முடிந்து தந்தையும், மகளும் இப்போது நலமாக உள்ளனர். சிறுமியின்  இச்செயலைப் பார்த்த மருத்துவமனை, அவர்களிடம் சிகிச்சைக்கு பணம் வாங்கவில்லை. மாறாக சிறுமியின் செயலைப் பாராட்டியது. அவளின் செயல் மகளிர் குலத்தையே மாண்புறச் செய்து விட்டது.

*முடிவுரை:*
    வம்சத்தை விருத்தி செய்தல் ,வாய் ருசிக்க சமைத்தல் ,தெம்பாக குடும்பம் காத்தல், தெருவுக்கு வராதிருத்தல், இவைதான் 'பெண்ணுக்கு அழகு' என பெண்கள் அடிமையாக வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இப்பொழுது கடையிலும், கணினியிலும், கண்ணியமான காவல்துறையிலும், நாடு காக்கும் படையிலும், பள்ளியிலும் ,பயணம் செய்யும் பேருந்திலும், பறக்கும் விமானத்திலும், தடையின்றி விண்ணேறும் விண்கலத்திலும், பெண்கள் நம் தாயாக, தாரமாக ,தங்கையாக, தோழியாக நீக்கமற நிறைந்து விட்டனர் நம் 'மாண்புமிக்க மகளிர்'. 
     "மகளிரைப் போற்றுவோம் 
மானுடம் காப்போம்".

சு. உஷா, திருவண்ணாமலை..