ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா

ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா தமிழில்

ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா

மொழி பெயர்ப்பு  

உலகப்புகழ் பெற்ற  ஷேக்ஸ்பியரின் 
Antony and Cleopatra 
ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா 

முதல் பாகம்  காட்சி 1  (ACT 1 scene 11)
எகிப்து அலெக்சாண்ட்ரியா கிளியோபாட்ராவின் அரண்மனையில் 
ஆண்டனி தன் சொந்த தேசத்திற்கு கிளம்ப ஆயத்தமாகிறான். 

இவனால் கிளியோபாட்ராவை பிரியவேமுடியாது என எண்ணிக்கொண்டிருந்த இவனது தோழனும் பணியாளனுமாகிய  எனோபார்பஸ் இந்த முடிவைக் கண்டு பேரதிர்ச்சி அடைகிறான். 

மறுபடியும் ஆண்டனி ஒரு மாவீரனாக உருமாறுவானா அல்லது கிளியோபாட்ராவின் காதல்  அடிமையாக இந்த எகிப்து தேசத்திலேயே விழுந்துகிடப்பானா என விளக்குவதே இந்த காட்சியாகும் ஷேக்ஸ்பியர் என்னும் மகா கலைஞன் ஒரு வரலாற்று நாடகத்தை கலையின் பொக்கிஷமாக மாற்றும் அற்புதத்தை வாசித்துப்பாருங்கள் )

எனோபார்பஸ் -
அரசே என்னை அழைத்தீர்களா ?

ஆண்டனி –
இந்த எகிப்து தேசத்தை விட்டு இந்த ஆண்டனி உடனே கிளம்பியாக வேண்டும்

எனோபார்பஸ் –( பதறியபடி )

அரசே ! நீங்கள் அப்படி சுற்றி வளைத்து சொல்வதை விடவும்
இந்த எகிப்து தேசத்துப் பெண்களெல்லாம் 
உடனே செத்துவிட வேண்டும் என்று 
ஒற்றை வார்த்தையில் முடித்திருக்கலாமே ?

பிரிவு என்ற வார்த்தை ஒன்றே  அவர்களை
உடனே பிணமாக்கிவிடும்
என்பது உங்களுக்கு தெரியாதா?
ஆண்டனி –
அந்தக் கதையெல்லாம்வேண்டாம்
இந்த ஆண்டனி இந்த இடத்தை விட்டு 
உடனே அகலவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

எனோபார்பஸ் –
ஆப்படியென்றால் இந்த எகிப்து பெண்களையெல்லாம்
இந்தநிமிடமே சாகவிடுங்கள்
ஆண்களின் ஆதிக்க உணர்வுகளுக்கு 
பெண்களின்  உயிர்கள் தானே எப்பொழுதும் எளிய உணவு
போட்டிச்சதுரங்கத்தில் அவர்கள் தானே பகடைக்காய்கள் ?
அரசியலின் அற்பவிசயங்களுக்கு  கிடைக்கும் முக்கியத்துவம் கூட
இந்த எளியபெண்களின் ஏக்கங்களுக்கு கிடைப்பதில்லையே
ஏன் அரசே ?
உயிரற்ற பொருட்களைப்போல அவர்களை ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிடுவது தானே ஆண்களின்குணம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அரசே !
நீங்கள் இந்த தேசத்தை விட்டு கிளம்பும் செய்தி
காற்றுவாக்கில் கிளியோபாட்ராவின் காதில்விழுந்தாலும் சரி
விழுந்த நொடி அவள் இறந்துவிடுவாள்

(கேலியாக )  அவள் ஏற்கனவே இது போல் அற்ப விசயங்களுக்காக இருபது முறை  இறந்திருக்கிறாள் 
இதையெல்லாம்  நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன்
ஆனால் மரணத்திற்கும் அவளுக்கும் 
ஏதோ இரகசிய நேசமிருக்கிறது அரசே
அதனால் தான் அது ( மரணம் ) ஒவ்வொருமுறையும் கடைசிநேரத்தில் 
அவள் உயிரை களவாடிச்செல்லாமல்
விட்டு விட்டுச் சென்றுவிடுகிறது

ஆண்டனி –
எனோபார்பஸ் நீ அவளைப்பற்றி அதிகம் அறியமாட்டாய்
என்று நினைக்கிறேன்
மனிதன் நினைத்தே பார்க்கமுடியாத அளவு
மாபெரும் தந்திரங்களை கைக்கொண்டவள் அவள்
அதாவது காற்றுப்பரவும் வேகத்தை விட
விரைவாக அவள் மனங்களை கைக்கொள்வாள்

எனோபார்பஸ்-

அரசே  ! அரசியைப்பற்றி அவதூறாகப்பேசாதீர்கள்
அவளின் உணர்வுகள் முழுவதும் உண்மையான
காதல் வலையால் பின்னப்பட்டவை
அவள் நேசத்தை வெறும் வேசம் என்று வெறுத்துவிடாதீர்கள்
அவளிடமிருந்து வெளிப்படுபவை வெறும் ஏக்கப்பெருமூச்சுக்களும்
கண்ணீரும் மட்டுமே என்று எண்ணிவிடாதீர்கள்
அந்தப் பஞ்சாங்கத்தில்கூட  சொல்லாத புயலும் சூறாவளியும் ஒளிந்திருக்கின்றன என்பதை நானறிவேன்
அவளுக்கு மட்டும்  கடவுள் ஜோவைப்போல வல்லமையிருந்தால் இந்நேரம் பெருமழையையும் பிரளயத்தையும்
உண்டு பண்ணி இந்த மண்ணில் ஓடவிட்டிருப்பாள்

ஆண்டனி –
அவளின் அற்புத நடிப்புகளையெல்லாம் இதற்குமுன்பே நான்பார்க்காதவன் என்று நீ நினைக்கிறாயா?

எனோபார்பஸ்-
அரசே அப்படியென்றால் நீங்கள் அழகின் மறுபக்கத்தை ஆழ்ந்து பார்க்க தவிறிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்
உலகமெல்லாம் பயணித்து வெற்றிக்கொடிநாட்டி வந்தால் தான என்ன ?
உங்கள்  வருகையையே  நினைத்துக்கொண்டு 
தாள் திறந்து வைத்திருந்த   ஒரு பெண்ணின் உள்ளத்திற்குள் போய்வர உங்களால் முடியவில்லையே ?

ஆண்டனி –
பல்வியா இறந்து விட்டாள்

எனோபார்பஸ்-

அரசே ?

ஆண்டனி –
பல்வியா இறந்து விட்டாள்

எனோபார்பஸ்-
பல்வியா!

ஆண்டனி –
ஆம் இறந்து விட்டாள்

எனோபார்பஸ்-
(தொனி மாறுகிறது ) 
கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் அரசே !
உயிர் பலியிட்டு உடனே உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள்
ஒரு மனிதனின் மனைவியை 
தேவதைகள் அவனிமிடருந்து பறித்துக்கொள்ளும் போது இந்தப்பூமியை புணரமைக்க வந்த தெய்வீகதச்சன்களாய்
அவைகள் நம் முன்  தோற்றம் கொள்கின்றன.

நீங்கள் அணிந்திருக்கும் உடைகள் நைந்து
 பழந்துணிகளாகப் போய்விட்டனவென்று
கனகச்சிதமாய் அளவெடுத்து 
உங்களுக்கே உங்களுக்காகவென்று புத்தம் புதிய உடைகளை பிரத்யேகமாக தைத்துக்கொடுக்கும் தையற்கலைஞர்கள் தானே
நாம் வணங்கும் தேவதைகள் ?
ஏன் நீங்கள் வருத்தப்பட வேண்டும் ?
சரி வருத்தப்படுவதாகவே வைத்துக்கொள்வோம்
எப்பொழுது வருத்தப்பட வேண்டும் ?
இந்தப்பூமியில் பல்வியாவைத்தவிர வேறு அழகிய பெண்கள் எவருமே இல்லையென்றால்  நீங்கள் 
வருத்தப்படவேண்டும் .

ஆனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி அரசே
உங்களின் துக்கமே கையோடு ஓரு ஆறுதலை 
கொண்டு வந்து தந்திருக்கிறது  
அப்படியென்றால நீங்கள் அதிர்ஷ்டசாலிஇல்லையா அரசே ?
உங்களைப்போல் இந்தப் பூமியில் யாருமே அதிர்ஷ்ட சாலி இல்லை
உடைகளை மாற்றுவதைப்போல காலமே உங்களுக்கு சலித்துப்போன வாழ்க்கைத்துணையை மாற்றித்தந்திருக்கிறது
(கிண்டலாக  ) அரசே!
நீங்கள் கண்ணீர் சிந்துவதாக இருந்தால்
அதற்கு ஒரு அளவு சொல்கிறேன் கேளுங்கள்
வெங்காயம் உரிக்கும் போது கண்கள் 
எவ்வளவு கண்ணீர் சிந்துமோ அவ்வளவு சிந்தினால் போதும்

ஆண்டனி –
எனோபார்பஸ் , பல்வியா அங்கே நம்  நாட்டில் எற்படுத்தி வைத்திருக்கும் குழப்பங்களை என்னைத்தவிர யாராலும் தீர்க்க இயலாது- 
அதனால் நான் அவசியம் அங்கே சென்றாக  வேண்டும்

எனோபார்பஸ்

அரசே இங்கிருந்து நீங்கள் சென்று விட்டால் 
இந்த நாட்டில் ஏற்படப்போகும் குழப்பங்களையும் 
உங்களைத்தவிர ஒருவராலும் தீர்க்க இயலாது.
குறிப்பாக கிளியோபாட்ராவிற்கு ஏற்படும் குழப்பங்கள்
அதனால் நீங்கள் அவசியம் இங்கேதான் இருக்க வேண்டும்

ஆண்டனி –
கேளியான பேச்சுக்களை கேட்கும் மனநிலையில் நான் இல்லை எனோபார்பஸ்
நமது படைஅதிகாரிகள் என் உத்தரவை உடனே தெரிந்து கொள்ளட்டும் 
நான் ஏன் எகிப்தைவிட்டு கிளம்ப வேண்டுமென்று உடனே அரசி கிளியோபாட்ராவிடம் விளக்கி கிளம்புவதற்கு சம்மதம் வாங்கிவிடுகிறேன்
பல்வியாவின் மரணம் மட்டுமே நான் அங்கு செல்வதற்கு காரணமல்ல.
இன்னும் சில அரசாங்ககாரியங்கள் அதற்குப்பின்னால் உண்டு
என்பதை புரிந்துகொள்
நமது தேசத்தின் நல்லாட்சியை விரும்பும் நமது நண்பர்கள் 
நாட்டின் நலனை முன்னிட்டு நமக்கு கடிதம் மேல் கடிதமாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்
கடல் வழியாக ஆக்ரமித்துக்கொண்டே வரும் செக்டேஸியஸ் பாம்பி சீசருக்கு சவால் விடும் அளவுக்கு அருகில்வந்துவிட்டான்
.
தராதரம் அறியாமல் மரியாதை அளித்து பழகிவிட்ட 
நமது மக்கள் இவனுக்கு மட்டற்ற மரியாதையை வாரிவழங்கிக்கொண்டிருக்கிறார்கள். 
அவன் தந்தையின் பெயரையும் புகழையும் அவன் அறுவடைசெய்துகொண்டிருக்கிறான்
அதுமட்டுமல்ல அசட்டுத் துணிச்சலோடும் அபாரமான தன்னம்பிக்கையோடும் 
மக்களின் கண்களின் ஒரு பக்கம் மண்ணை தூவிவிட்டு 
நான் தான் அடுத்து இந்த உலகத்தின் சக்கரவர்த்தி என்று மார்தட்டிக்கொண்டு இருக்கிறான்.
அவனை நாம் மட்டம்தட்டி அவனின் மமதையை அடக்கவில்லையென்றால் நமது தேசம்
அழிவுப்பாதையில் செல்வதை யாராலும் தடுக்கமுடியாது

நனைந்த குதிரையின் உரோமம் ஒன்றும் 
விசமுள்ள விரியன் பாம்பு போல் அவ்வளவு ஆபத்தானதல்ல
ஆனால்
குட்டையில் குழப்பங்கள் கொசுவைப்போல் பல்கிப்பெருகிக்கொண்டிருக்கின்றனவே ?

நமது படைத்தளபதிகளிடம் அதிகாரிகளிடம் போர் வீரர்களிடம்
உடனே என் உத்தரவை முறைப்படி  எடுத்துச்சென்று இயம்பிவிடு
எகிப்திலிருந்து உடனே  கிளம்ப வேண்டியது 
நமக்கு ஒன்றும் கசப்பான செய்தியல்ல
உவப்பானதே என்று அவர்களை புரிந்து கொள்ளச் சொல்

எனோபார்பஸ் –( குரலில் உறுதியான தொனி)
உத்தரவு அரசே உடனே உங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன்.

( உடனே எனோபார்பஸ் மறைகிறான். இந்த இரண்டாவது காட்சி நிறைவு பெறுகிறது )

நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்

மூலம் -  ஷேக்ஸ்பியர் 
மொழி பெயர்ப்பு  தங்கேஸ்