கொன்றை மலர்

கொற்றை மலர் கவிதை

கொன்றை மலர்

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதில்
மனதிற்கு பிடித்த மாதரசியை
இதயத்தில் இருத்திக்கொண்டு
மாதொரு பாகனாகிவிட்டான்
பெரும் பித்தன்

நினைவு  இறங்கி வந்து 
கொல்வது இரவில் தான்
 என்பதை
எப்படி கண்டு கொண்டானோ
புனல்வார் சடையில் 
பிறையை வேறு  சூடிக்கொண்டான்

காலத்தை படைத்தவனாக
இருந்தாலும் அவனும்
அதற்கொரு பயணிதானே

நிலவு மிதக்கும் கையனை
நிலவு  தன் உறவென்று
சொல்லி விடுமா
அல்லது விரல் வழி கசியும் நதிதான்
ஒரு கன்றுக்குட்டியைப் போல
கையை நக்கிவிட்டு செல்கிறதா?

விண்ணில் பூத்துக் கிடக்கும்
கோடி நட்சத்திரங்களும்
தங்கள் உரையாடலை
இதோ தொடங்கி விட்டன
நம் வாழ்வு என்பது அதற்கொரு
சிறிய கண்சிமிட்டல் தான்

வா 
நாம் மழை ஈரம் கசியாத
கொன்றை மலர்களாகி
இரவெல்லாம் அவைகளை
இமைக்காமல் பார்த்துக்கிடப்போம்

தங்கேஸ்