பாரதி என்னும் பாரின் தீ...! 040

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதி என்னும் பாரின் தீ...! 040

பாரதி என்னும் பாரின் தீ..

செந்தமிழ்க் கொருநற் சீதன மாயினன்

வந்தனன் ஆதவன் வையத்துள் அன்னவன்

பாவெனுங் கருவியாற் பரப்பினன் புரட்சியைப் 

பாவேந் தரென்னும் பார்க்கவி தந்தனன்

தீண்டாமை பாடித் தீண்டிடச் செய்தனன்

ஆண்டோனைத் தாக்கி அதிர்ந்திடச் செய்தனன்

கூவுங் குயிலுக்கும் கூட்டின் விடுதலைக்கும்

யாவும் ஆக்கிய இறைவனுக்கும் சொல்லால்

வாடா மலர்மாலை மாட்டினன் இவனிவண்

பாடாப் பாட்டுண்டோ? பாடித் தீர்த்தனன்

பாரிலுளப் பாங்குகளும் பையவரும் நற்புதுமை

வாரியள்ளிப் பாடினன்  வாய்த்திருந்த பெண்ணடிமை

வீழ்த்தவுங் கொடுஞ்சாதி வேறுபாட்டை வீழ்த்தவும் 

ஆழ்ந்துநின்று பாடினன் ஆய்ந்தாய்ந்து பாடினன்

பாரதி என்னும் பாரிந்தீ

பாரடா எரிகுதே பைந்தமிழ் நீரிலே!

- அ. முகிலன்
சங்கீதமங்கலம்,
விழுப்புரம்.