செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் நவம்பர் 18.

செக்கிழுத்த  செம்மல் வ.உ.சி

செக்கிழுத்த செம்மல் வ உ சி..

தேச நலனக்காய் தம் தேக நலனிழந்து இந்தியாவிலேயே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 
முதல் இந்திய விடுதலைப் போராளி!

வந்தேறிகளுக்கு எதிராகப் போராடி
வணிகக் கொள்ளைக்கு
முற்றுப்புள்ளி வைத்து!  
தொழிலாளர் வர்க்கத்திற்கு 
வழிகாட்டி ஒளியானவர்!

"நிதி திரட்டி தொழிலாளர் குடும்பங்களுக்கு உதவுதல் 
சிறப்பான செயலாற்றல் புத்தி" 
என *வெளிநாட்டு இதழ்கள்*  
முண்டியிட்டு போற்றிப் பாராட்டிய மாந்தரின் மகுடமான அறிவாளி!

அன்னிய வணிகத்து ஆணிவேரை
அடியோடு பிடுங்கியெறிய
 தன் சொத்தை விற்று கப்பலோட்டி அசைத்துப் பார்த்தவர்!

திலகரை அரசியல் மானசீக 
குருவாக  மனதார ஏற்று,
வந்தே மாதரம் பிள்ளை என்று 
வையக பற்றாளரால் வாயார பெருமிதமாக அழைக்கப்பட்டவர்!

சணல் நூற்று, கல்லுடைத்து, சிறையிலிருந்து வெளி வந்தவரை, யாருமே வரவேற்க  இல்லாத துர்பாக்கியசாலி ஆனவர்!   

வீட்டின் நிலத்தை எல்லாம் 
 தாய்நாட்டின் விடுதலைக்காக 
தார்மீக உணர்வோடு தாரை வார்த்து, 
மண்ணெண்ணெய் கடை வைத்து சென்னையில் பஞ்சம் பிழைத்தவர்!

தமிழ் மண்ணின் பண்பாட்டில் தமிழர்களின் வாழ்வு மலர 
விழைந்தே நூல்கள் பலவற்றை
பதிப்பீடு செய்தவர்!

தமிழ் சித்த மருத்துவ சாலைகள் ஊருக்கு ஊர் நிறுவ வலியுறுத்தி,
திருக்குறளை வாழ்வியல் நெறியாக வாழ்ந்து காட்ட வேண்டுமென அனுதினமும் பரப்புரை செய்தவர்!

 சமூக அரசியல் வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 
அமையவென சிம்மக் குரல் 
கொடுத்த அஞ்சா நெஞ்சன்!

தமிழகத்திற்கு தேவை 
காந்தியம்/நேருவியம்/பட்டேலியம் அல்ல  -  வ உ சி யமே என 
*திரு வி கா* வினால் எழுதப்பட்டவர்!

வர்ண ஒடுக்கு முறை 
வர்க்க ஒடுக்கு முறை 
அன்னிய ஆதிக்க முறை - எனும் மூன்றையும் ஒருசேர எதிர்த்து, காலமெல்லாம் களமாடி, ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னோடி என *கல்கியால்* 
புகழ்ந்து எழுதப் பெற்றவர் !
 
 பாரதி, சிவாவின் நட்பியல் பாசறையின் இலக்கணமாய், 
இன்பத்தமிழ் பதித்திட்ட 
நாடறிந்த இலக்கியமாய்,
தூத்துக்குடி துறைமுகம் 
கண்ட சுதேசியாய்,
 கப்பலோட்டிய தமிழன் என்று *ம.போ.சி* யால் போற்றப்பட்ட
வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரப்பிள்ளையின் 
நினைவு தினத்தை நினைவிலேந்தி வணங்குவோமே !

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை.