இல்லறம் காக்கும் பெண்ணறம்...! 009

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

இல்லறம் காக்கும் பெண்ணறம்...! 009

இல்லறம் காக்கும் பெண்ணறம்: 
(கட்டுரை)

* முன்னுரை
* பெண் முன்னேற்றம்
* பெண்ணின் மாண்பு
*இல்லற மேன்மை
* முடிவுரை


முன்னுரை:

    மக்கள் தொகையில் ஒரு பாதி இருக்கும் பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உயர்வு பெற்றதில்லை.  பெண்களுக்கு சம உரிமையும், மதிப்பும் கொடுக்க வேண்டும் எனவும் பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு  சிறந்த வழி எனவும் வழிகாட்டுகிறார் மகாகவி பாரதியார்.

   மேலும்"மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்தவகையிலும்  நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வோம் இந்த நாட்டிலே"என்று  விடுதலைப்பாட்டில் பெண்களின் நிலை பற்றி பாடியுள்ளார் பாரதி.

* பெண் முன்னேற்றம்:

    நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர்நோக்குவது அவச்செயல் ஆகும் என காந்தி  கூறியதுபோல, மண்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், பாய் முடைதல், கூடை முடைதல், ஆடு மாடு, கோழி  வளர்த்தல், தேன் எடுத்தல் போன்ற சிறுகுடிசைத் தொழில்களை செய்து அந்த காலத்தில் தங்களது பொருளாதாரத்தை ஓரளவிற்கு பெண்கள் உயர்த்திக் கொண்டார்கள். 

பெண்கள் அன்று இருந்த நிலைக்கும், தற்போதுள்ள நிலைக்கும் பல ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளதை  மறுக்க முடியாது.
'பெண்கள் நாட்டின் கண்கள்' 
என்று பெண்களை பெற்றோர் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டும். 

மங்கையராய் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா' என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின்    
பாடல் பெண்களின் பிறப்பனை பெருமையாகவே இச்சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறது எனலாம்.

* பெண்ணின் மாண்பு:

    உலகை உருவாக்கிய இறைவனின் மறுவடிவமாய் அமைந்து மனிதரை இன்றும் படைத்துத்  தருபவர்கள் பெண்கள். பெண்கள் அழகின் நிழல், உணர்வுகளின் உள்ளுணர்வு, உறுதி யின் இருப்பிடம், இளகிய மனதின் ஓடை, தாய்மையின் தெய்வ நிலை எனப்பெறும் பல்வேறு சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டமைந்தவர்கள். பெண்ணின் உடல் அழகு மாறிவிடும். ஆனால் பெண்மையில் மறைந்திருக்கும் மாண்புகள் தொடர்ந்து நிற்கும்.

‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ எனப்பெறும் வண்ணம் நன்மைகளைத் தன்னகத்தே கொண்டமைந்த பெண்ணானவள் தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலளாய் அமைந்து விடுவாள் எனின் அத்தகைய மனைத்தக்க மாண்புடையவளாகிய பெண்மையைப் பெற்ற ஆணும் அவனைச் சார்ந்த குடும்பமும் சமூகமும் எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இனிதாய் உலகிற்கு வழங்கி நிற்கும். அத்தகைய பெண்மையும் அனைவராலும் தொழத்தக்க பெருந்தெய்வ நிலையை எய்தி மாண்புறும்.

* இல்லற மேன்மை:

இந்தியப் பெண் கடலின் உப்பெனவும், காற்றின் இசையெனவும் ஆனவள். குடும்பம் தழைக்க அன்பின் உரமிடுபவள். தன்னை உருக்கி, சிறுமைப் படுத்தி, வலி ஏற்று, முற்றுமாய்த் தான் சார்ந்த குடும்பத்தினை வளப்படுத்தத் தன்னுள் பெரும் தேய்தலை ஏற்றுத் தியாகத்தின் வழி  பெருந்தெய்வ நிலையை எய்தி நிற்பவள். இத்தகைய பெண்ணைத் தலையாய்க் கொண்டதுதான் இந்தியப் பண்பாடும், குடும்ப அமைப்பும் சமய முறைமையும் ஆகும். எனவேதான் சிவபெருமான் இடப்பாகத்தில் உமையாளை ஏற்றுப் பெண்ணின் நல்லாளோடும் பேரருள் புரிகின்றார். மாலவனோ இலக்குமியைத் தன் நெஞ்சில் ஏற்று மலர்மகள் உறை மார்பனாய்க் காட்சி தந்துக் கருத்தில் நிறைகின்றார். நான்முகனோ நாமகளைத் தன் நாவில் கொண்டு நல்லறம் காக்கின்றார்.

பெண் அறிவும், மங்களமும் செல்வமும் தந்தருள்பவள் மட்டுமல்ல. ஆணுக்குத் தெளிவருள் தந்திடும் சோதியாய், ஆணின் உயரிய எண்ணங்கள் உயர்வெற்றி அடைய உதவும் சக்தியாயும் அமைகின்றாள். எனவேதான் சக்தி பாரதியும் மேற்கொண்டார். 

* முடிவுரை:

   இவ்வுலகில்  மானுடப் பெண்ணாய்ப் பிறந்து இறைவனுக்கே அன்னையாகும் பேறு பெற்ற பெண்ணின் சிறப்பினையும் தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலளாய் அமைந்த பெண்ணின் பெருமைகளையும் நமது இலக்கியங்களும் புராணங்களும் பெரிதும் போற்றிக் கொண்டாடுகின்றன. எனவே உலக மகளிர் தினத்தினைக் கொண்டாடுகின்ற நாம், இந்நன்னாளில் இந்தியப் பண்பாட்டிற்கும் குடும்ப அமைப்பிற்கும் சமய மரபிற்கும் ஏற்ற பெண்மையின் மாண்புகளைப் போற்றி அதன்வழி நடந்து பெருமையுறுவோம்..
வாழ்க பெண்ணியம்.. 

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.