சிகப்பு மனசுக்காரி

புதுக்கவிதை

சிகப்பு மனசுக்காரி

"சிகப்பு மனசுக்காரி"

என் வாழ்க்கையை போல் இல்லாமல்
விடிந்துவிட்டது இந்த காலை....
எனக்கு காலை என்பது நேரமோ பொழுதோ கிடையாது ...
மாறாக குளித்து உடைமாற்றி அலங்கரித்து கொள்வதுதான்...

எனக்கான உலகம் இதோ
இந்த நாற்சுவரும் அதோடு இணைந்திருக்கும் கதவும்தான்...
எதையும் மறைக்க முடியாத இந்த அறைக்கு
கதவு செய்தவன் எவனோ?!

இந்த நாதியற்ற உடல்களுக்கு
தினம் ஒரு முதலாளி

அதில் ஒரு கவிஞன் சொன்னான் இரவைப்பிடிக்குமென...

வியர்வை படிந்த உடல்களை கடந்து
அக்குள் நாற்றம் கடந்து
நகக்கீரலில் சொட்டும் இரத்தம் கடந்து
இன்னுமின்னும் இச்சை இம்சைகள் கடந்து செல்லும் என் இரவுகளை எப்படி எனக்கு பிடிக்குமென்பேன்?!

எனக்கே எனக்காக பூச்சூட்டிக்கொண்ட நாளொன்றில்
என் முழுப்பெயர்ச் சொல்லி அழைத்து பெண்ணொருத்தி ...

நள்ளிரவில் பிராண்டும் நாய்கள் இல்லா உலகிற்கு அழைத்துச்செல்வதாய்....
அங்கே சிகப்பு விளக்கே இல்லாததாய் கனவு கண்டேன்!

கனவே போய் தொலை....!

இப்போது என் கவலை எல்லாம்
இந்த கட்டிலில்
என் தீண்டலோ வேண்டலோ இல்லாமல்
புணர்ந்து அயர்ந்து
குறட்டைவிட்டுக்கொண்டிருக்கும்
பெயர் ஊர் தெரியாத
கனவான் எப்போது எழுவானோ??!!

---கனி விஜய்,
திருவண்ணாமலை