பாரதி நினைவு நாள் சிறப்பு கவிதை

பாரதியார் நினைவு நாள் கவிதை

பாரதி நினைவு நாள் சிறப்பு கவிதை

தரணியில் பெருமை வேண்டிய பாரதி!

தமிழ் நதியோடு விளையாடி,
தமிழன் உயிரோடு உறவாடி,
புதிய சொல்/புதிய படைப்போடு,
கற்களை அடுக்குவது போல
சொற்களை அடுக்கி,
12வது அகவையிலே கவிஞனானவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற  பாரதி!

கம்பனை/வள்ளுவனை சிறப்பித்து,
சீர்மிகு புலவர்களாக,
வரிகளிலே வனப்புடனே வரித்து,
வீரம் சுரக்க/தீரம் தெறிக்க
பிற நாட்டு சாத்திரங்களை 
நம் நாட்டில் பவனி வர ஆசைப்பட்டவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

ஓடியும்/கூடியும் விளையாட சொல்லி,
தொழுது படித்திட பாப்பாவுக்கு
சொல்லில் உயர் சொல்லெடுத்து,
கொஞ்சு மொழியில் சொன்னவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

இலக்கண/இலக்கிய கட்டுக்களை
இலட்சியத்தோடு தளர்த்தி,
வேதனை ததும்பும் தீட்சண்ய வரிகளாக
எந்த நாளும் காக்கும் படியான
விதி சமைக்க ஆணையிட்டவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

அறிதல்/புரிதல் தெளிவோடு
தாகூரின் கதையை 
தெள்ளுதமிழிலே மொழிபெயர்த்து,
பாமரனும் படிக்கவென
கீதைக்கு உரை தந்து,
தேச மக்கள் உணர்வில் நிறைந்தவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

சாதிகள் இல்லையென பாப்பாவுக்கும்,
உயிர்ப்பிக்க/உறவாட/உயிர்வாழ
ஆண்/பெண் சாதி தவிர வேறில்லை
என சாதி முழக்க வேரறுத்து
சமூக நல்லிணக்க முழக்கமிட்டவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
ஒற்றுமை இந்தியா காண விழைந்து,
வேற்றுமையில் ஒற்றுமையை
பூனைகளின் நிறம் விளங்கக் காட்டி,
உலகத்தினர் பார்வையிலே
இமயமென உயர்ந்து நின்றவன்
தரணியிலே பெருமை வேண்டுமென்ற பாரதி!

சுட்டும் விழி சுடராய் 
பெண்மையை பெருமிதமாக விளித்து,
அச்சமில்லை பூமியில் இனியென
அவனி பெண்டிருக்கு உபதேசித்து,
நல்லதோர் வீணை செய்து,
நந்தலாலா பாடி/பராசக்திக்கு
 கடவுள் வாழ்த்து தந்த,
நானிலம் வியந்து பார்த்து
நாட்டு மக்கள் புகழக் கண்ட 
தரணியில்  பெருமை வேண்டுமென்ற பாரதி!


முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை.