காலம் தோறும் பெண்கள் 031

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

காலம் தோறும் பெண்கள் 031

காலந்தோறும் பெண்கள்

முன்னுரை 
 உலகில் உள்ள ஒவ்வொரு மனித உயிரின் ஜனனம் ஆனது பெண்ணிலிருந்து தான் தொடங்குகிறது என்று பெண்ணின் பெருமையக் கூறுவதில் பெருமிதம் கொள்ளலாம். பெண் இல்லை எனில் இவ்வுலகத்தில் மனித சந்ததியினர் உருவாக சாத்தியம் இல்லை எனலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த பெண்களின் நிலைகளை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது. 
பெண்கள் 
பெண் என்பவள் தான் பிறந்த தினத்தில் இருந்து தனக்காக இன்றி பிறருக்காக வாழ்வதே வாழ்வு என்ற அர்ப்பணிப்பு பண்பைப் பெறுகிறாள். சிறுமியாக உள்ள போது நல்ல சகோதரியாகவும் விட்டுக்கொடுக்கும் பண்போடும் வளர்கிறாள். பெண்களின் வளர்ச்சி நிலையை பேதை (5-7), பெதும்பை (8-11),  மங்கை (12-13), மடந்தை (14-19), அரிவை(22-25), தெரிவை (26-31), பேரிளம்(32-40) என ஏழு வகைப் பருவங்களாகப் பாகு படுத்தியுள்ளார்கள். மங்கைப் பருவத்தில் உற்ற தோழியாகத் துன்ப காலத்தில் ஆறுதல் கூறுகிறாள். பின் திருமணம் ஆகிய பெண் தன் துணைவனின் சுக துக்கங்களை தனதாக்கிக் கொண்டு அவனுக்கு உற்ற துணையாக  துணைவியாக இருக்கிறாள். 
பின் அவள் தாயாகிய பிறகு தன் உலகமே தனது குழந்தைதான் என்ற நோக்கில் தனக்கான அங்கீகாரத்தையும் தியாகம் செய்து குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி வளர்க்கும் தாயாகிறாள். இவ்வாறு தன் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் தனக்கான வாழ்வை வாழாமல் பிறரின் மகிழ்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்பவள் பெண்ணாகிறாள். 
காலந்தோறும் பெண்களின் நிலை 
உலகில் எத்தனையோ பெண்கள் சாதிக்க திறமை இருந்தும் தன் குடும்பச் சூழலின் பின்னணி கருதி அதை தன் மனதிற்குள்ளே பூட்டி வைத்து இன்றளவும் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தூண்டுகோலாக பல பெண்கள் நாட்டில் சாதித்தும் வருகிறார்கள்.  சங்ககாலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராக போற்றப்பட்டார்கள். ஆகையால் தான் சங்ககாலப் பெண் புலவர்கள் என்ற பட்டியலையே நம்மால் காண முடிகிறது. அவர்களில் அவ்வையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் என பலரை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர்களின் சங்க இலக்கிய பாக்களில் சில, மன்னனுக்கு அறிவுரை கூறுவதாகவும் உள்ளது. இவற்றிலிருந்து அவர்கள் எவ்வளவு உயரிய இடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
அதற்கடுத்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல கொடுமைகள், அநீதிகள் இழைக்கப்பட்டன. பெண்சிசுக்கொலை, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண் கல்வியும் மறுக்கப்பட்டது. அவை மட்டும் அன்று தன் கணவன் இறந்த உடனேயே மனைவியும் இறக்க வேண்டும் என்று உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கத்தையும் பெண்களின் மீது திணித்தார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்து ராஜாராம் மோகன்ராய், பாரதியார், பாரதிதாசன், கவிமணி என பல தலைவர்களும் கவிஞர்களும் பெண் விடுதலைக்காக போராடி அவற்றில் இருந்து அவர்களை மீட்டு எடுத்தனர்.
 தற்காலத்தில் பெண்கள் முழு சுதந்திரமாகச் செயல்பட அனைத்துவகையிலும் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொத்துரிமைச் சட்டம், வரதட்சனைக் கொடுமைச் சட்டம், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என பல சட்டங்கள் பெண்களுக்குத் துணையாக உள்ளது. பெண்களின் உரிமைக்காகப் போராடுபவர்களுள் பல ஆண்களும் உள்ளனர். எனவே அவர்களும் இங்கு போற்றுதற்குரியவராகக்  கருதப்படுகிறார்கள்.
பெண் விடுதலைக்காகப்  பாடுபட்டவர்கள் 
பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்கள், கவிஞர்கள் என அவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவற்றில் சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம். பாரதிதாசன் “கல்வி இல்லாத பெண் களர்நிலம் போன்றவள்” என்று கல்வியில்லாத பெண்ணை கல்வி கற்க வேண்டி விழிப்புணர்வோடு இவற்றைப் பாடுகின்றார். கவிமணி “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்ணின் பெருமையை பறைசாற்றுகிறார். பாரதியார் “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்” எனவே, இனிமேல் நீங்கள் படிக்கத் தொடங்குங்கள் என்று பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வை புகட்டுகின்றார். “ஒரு  ஆண் கல்வி கற்றால் அக்குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றதாகவும் ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பமே கல்வி கற்றதைப் போன்றது” என்ற வரிகளும் பெண் கல்வியின்  முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இவ்வாறு பெண்களின் விடுதலைக்காகப் பல கவிஞர்கள் தங்களின் பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது நம்மால் பார்க்க முடிகிறது. 


சாதனைப் பெண்கள் 
இவ்வுலகில் எத்துறைப் பார்க்கிணும் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். நமது இந்தியத் திருநாட்டில் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தியும், முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் அவர்களும், முதல் பெண் முதலமைச்சராக சுசேதா கிருபளானி அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திலும், முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு அவர்களும், முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக பாத்திமா பீவி அவர்களும் என இவ்வாறு அனைத்து துறைகளிலும் பெண்களின் சாதனைகள் இருக்கத்தான் செய்கிறது.  மண்ணில் இருந்து விண்ணில் வரை பல பெண்கள் சாதித்தும்  பல பெண்கள் சாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
முடிவுரை 
ஒரு கலைஞனுக்கு சிலை வடிக்க கண்கள் எவ்விதம் முக்கியமாகிறதோ, அவ்வகையில் பெண்களும் நாட்டின் கண்கள் ஆகின்றனர். ஆணுக்குப் பெண் சமம் ஆனவர்கள். பெண்ணின்றி ஆண் இல்லை, ஆண் இன்றி பெண்ணில்லை. எனவே, பெண்களைச் சமமான வகையில் மதித்து அவர்களைப் போற்றிடுவோம். வாழ்க பெண்ணியம்! வளர்க பெண்களின் சாதனைகள்!

- ப.லாவண்யா, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், விழுப்புரம் மாவட்டம்.