உளியென மாறும் வலி

புதுக்கவிதை

உளியென மாறும் வலி

உளியென மாறும் வலி...

பத்து மாத பந்தம் கருப்பையில்,
மூன்று முடிச்சு பெறும் வரை
கண்டிப்பான ஒழுக்க வளர்ப்பில்,
பேரன்/பேத்தியையும்  வளர்த்து
அழகு பார்த்த *தாயவளின்*  இறப்பு
நெஞ்சில் உளியென விழும் வலியாக!

தோளுக்கு மேலுள்ள உலகத்தில்
நல்லவன்/கெட்டவன் அறிய வைத்து,
படிப்பும் பதவியும் தந்து
முன் செல்ல வைத்து/அழகு பார்த்து,
வாழ்க்கை வரம் அள்ளித் தந்து,
வசதியுடன் வாழ வைத்த
*தந்தை* யின் மறைவு 
நினைத்தாலே அழுகையின் 
உளியென விழும் வலியாக!

வாழ்க்கைப் பயணம் எளிதல்ல,
மேடும் பள்ளமும் நிறைந்த
சகிப்புத்தன்மை நாடும் பயணமென
*குருவின்*  போதனைகள்,
சாண் ஏற முழம் சறுக்கலான
வேதனை உளியென விழும் வலியாக!

வெற்றி தோல்விகளின் படிகளில்
கை பிடித்து/தோள் சாய்க்கும்
*தோழமையின்*  துரோக வலையின்
இறுக்கத்தில்/துவண்ட மனதில்
உளியென விழும் வலிகளாக!

பிறந்த வீட்டு *சகோதர* உறவுகள்
காலப் போக்கில் காணாமல் போக,
கண்கள் தேடும் பிம்பங்களாக
செதுக்கிய பாசப் பின்னலோடு
உளியென விழும் வலிகளாக!

எதிர்பார்ப்பின் *ஏமாற்றங்களில்*
மகன்/மகளின் திருமண வைபவம்
காணாமலே கண் மூடுவோமாவென
முதுமையின் அத்தனை நோயுடன்,
கண்ணீரில் என் இரவுப் பொழுதுகள்,
தலையணை நிரப்பும் துளிகளின்
உளியென விழும் வலிகளாக!

ஆசிரியப்பணியின் அலைக்கழிப்பில்
அன்றாட வேலைப் பளுவில்
பென்சனில்லா நிலையில்,
*எதிர்காலம்* கேள்விக்குறியாகி,
வாழ்க்கை புதிர்க்குறியாக,
பயத்தின் உளியென விழும் வலிகள்!

புரிதலில்லா வாழ்வில் பாதி வயது
புரிந்து கொள்ளாத *கணவன்*  உறவு,
நிச்சயமில்லா அன்புக்கு ஏங்கி,
போதுமடா இப்பிறவியென
நினைத்து/ஏக்கப் பெருமூச்சாகிட,
உளியென விழும் வலிகளாக!

வேரோடு சாய்ந்தாலும்
சாவு காணாத மரம் போல,
தாழ்வென்று நினையாத
நம்பிக்கை மட்டும் துளிர்ப்பாகி,
*சமூகம்* காட்டும் பாச ஊக்குவிப்பு
உளியென விழும் வலிகளாக!

வாழ்க்கை எதுவென்ற தேடலில்
தடைகள் உளியின் அடிகளாக,
எனக்கான வலிகளான 
ஆண்டவனின் அர்ப்பணிப்பென
சுகமான சோகத்தில் சுகந்த வாசம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை.