என்னை துளைத்த தோட்டாக்கள்...

புதுக் கவிதை

என்னை துளைத்த தோட்டாக்கள்...

என்னைத் துளைத்த தோட்டாக்கள்..

இந்திய இராணுவத்தினரால்
அமிர்தசரஸ் பொற்கோவிலை
தாக்கிய புளூ ஸ்டார் நடவடிக்கையே
எதிர்வினையான தோட்டாக்களாக!

தங்கத் தொட்டில்/வெள்ளித் தட்டு,
 அரண்மனை உல்லாச வாழ்வில்,
சிறைவாசமான தாத்தா/அப்பா,
போராட்டம் கண்ட பாட்டி/அம்மா
உறவுகளான இந்திராவிற்கு
இறுதி உறவான தோட்டாக்கள்!

சிறுவயது பிராயத்தில்
*வானரசேனை* இயக்கத்தின்
தலைமைக்கான தகுதி,
தனிமை தகர்த்த தந்தை கடிதங்கள்,
"நான் பெண்ணல்ல!மனிஷி!"
என தைரிய பதிலளித்த நேர்மை,
அகில இந்திய வானொலியை 
செம்மைப்படுத்தி/தொலைக்காட்சி
மையப்படுத்தி/மக்கள் தொடர்பை
தாரக மந்திரமாக்கியவரின்
இறப்பினை இடைவிடாது
 ஒலி பரப்ப வைத்த தோட்டாக்கள்!

பத்தாண்டுகள் பரிச்சயமான
பணியாளர் *பியாந்த்சிங்* கின்
அடிவயிற்றில் சுட்ட 3 தோட்டாக்கள்,
5 மாதங்கள் முன்பு பணியேற்ற
*சத்வந்த்சிங்* குறி வைத்து சுட்ட
30 தோட்டாக்கள் ரோஜாவின் ராஜா
மகளை துளைத்த தோட்டாக்களாக!

அயர்லாந்து நாட்டு தொலைக்காட்சி
பேட்டி தர அலுவலகம் சென்ற,
புதுதில்லி சப்தர்ஜங் தெருவில்,
31.10.1984 தேதி காலை 9.20ல்
23 குண்டுகள் உடலை விட்டு
வெளியேறி/7 குண்டுகள் உயிர்
பறித்த சம்பவமான தோட்டாக்களாக!

ராம்சரண்/ தார் செம் கிங் ஜாம்வால்
பியாந்த்சிங்கை சுட்டுக் கொன்று,
சத்வந்த்சிங்/கைகர்சிங்கினை
தூக்கிலிட்டு/1000க்கணக்கான
சீக்கியர்களை கொன்று பழி தீர்த்த,
தந்தையின் தைரியத்தை
தன்னம்பிக்கையாகக் கொண்ட,
இந்தியாவின் இந்திராவைத்
துளைத்து ருசி பார்த்த தோட்டாக்கள்!

இந்திய மண்ணை நேசித்து
4 முறை பாரதப் பிரதமரான,
பசுமை புரட்சி திட்டம் அளித்த,
வங்கிகளை தேசியமயமாக்கிய,
வங்கதேச உருவாக்கத்தில்
ஆளுமை மிக்க பெண் தலைவியான,
30 ஆண்டுகளுக்கு முன்பே
அணுகுண்டு சோதனை நிகழ்த்தி
இந்தியாவை அணுசக்தி நாடாக
மாற்றி/உலகளவில் இந்தியாவின்
அதிகாரத்தை பிரதிநிதித்துவத்தை
பிரகடனப்படுத்திய இந்திராவை
80 பாட்டில் இரத்தமேற்றி,
இரும்பு பெண்மணியின்
இதயத்தை மட்டும் இறுதி வரை
இடைவிடாது துடிக்க வைத்து,
தேசத்தின் நேசத்தில் யாதுமாகி,
அரசியலை தொழிலாகக் காணாத
மண்ணின் பெண்ணை 
மண்ணில் சாய்த்த தோட்டாக்களாக!

இந்தியாவின் தரத்தினை
20 அம்ச திட்டத்தில் உயர்த்திய,
உலகம் போற்ற வாழ்ந்த
இந்தியாவின் வரமான,
சோதனைகளை தொடை நடுங்க
வைத்து/சாதனை பெண்ணாகி,
கம்பீரமான தலைமையோடு
அஞ்சா நெஞ்சம்/தெளிந்த அறிவு
தடைகளை தகர்த்த துணிவு,
நேரான பாரதி பெண்ணான பார்வை,
துவளா மனதுடைய 
நினைக்க நினைக்கப் பெருமை
சேர்த்த அருமை மகளை
கட்டிய குங்கும நிற சேலையில்
இரத்த சிதறல் பூக்களோடு,
நிலமகள் தாங்கிய  தோட்டாக்கள்! 

கிங்மேக்கர் காமராஜரால் பிரதமராகி,
தனக்கான தனி பாதையில்
அரசியல்/ ஆட்சியியல் நிகழ்த்தி,
1971ல் அமெரிக்க வாக்கெடுப்பில்
அதிகம் விரும்புபவராக பதிவான,
தனது ஒவ்வொரு துளி ரத்தமும்
இந்தியாவை வலுவாக்கும் பணி
செய்யுமென இறுதி உரையளித்த,
பாரத ரத்னா விருதாளரான
பாரதம் நேசித்த பெண்மணி
இந்திரா பிரியதர்ஷினி காந்தியின்
காலத்தின் அலங்கோல
நிகழ்வான துளைத்த தோட்டாக்கள்
மண்ணோடு/அம்மகளோடு 
மறைந்து/நம் மனதோடு 
உறவாடும் நினைவாகட்டும்!
புகழுடல் மறையாத கீதமாகட்டும்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
வாலாஜாப்பேட்டை..