ரோமியோ ஜூலியட் நாடகம்

ரோமியோ ஜூலியட் நாடகம் தமிழில்

ரோமியோ ஜூலியட்  நாடகம்

Romeo and Juliet

முழுமையான தமிழ் மொழியாக்கம் (நாடக வடிவில் )

( ரோமியோ  , ஜூலியட் நாடகம் )

Act 1 Scene 2

( காட்சி 2 )

இடம் :வெரேனா வீதி 

பொழுது - பகல்

பாத்திரங்கள்

கேபுலட்  கேபுலட்டின் உறவினன் பாரிஸ்

மற்றும் கேபுலட்டின் வேலைக்காரன் பீட்டர்

மற்றும் ரோமியோ பென் வாலியோ

பீட்டர் : ( குழப்பமாக )

என்னது இதில் எழுதியிருக்கும் பெயர்களை எல்லாம்

நான் கண்டுபிடிக்க வேண்டுமா ?

நல்ல கதை தான்

காலணி  தைப்பவனிடம் தையற்காரனின் கத்திரிக்கோலையும்

தையற் காரனிடம் காலணி தைப்பவனின் குத்தூசியையும் கொடுத்து விட்டு  வேலை வாங்குவது போல் இருக்கிறது.

பெயின்டரிடம் மீன் வலையையும்  மீன் பிடிப்பவனிடம் வண்ணக்கலவைகளையும் கொடுத்து விட்டு வேலை வாங்குவது போல் இருக்கிறது இப்பொழுது இந்த வேலைக்கு என்னை அனுப்பியது.

இந்த பட்டியலில் இருப்பவர்களையெல்லாம்

நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமாம்

இதில் கொடுமை என்னவென்றால் எனக்கு வாசிக்கவே தெரியாது

இப்போது பாருங்கள் யாராவது வாசிக்கத் தெரிந்தவர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களிடம் உதவி கேட்க வேண்டும்

( அப்போது பென்வாலியோவும் ரோமியோவும் அங்கே வருகிறார்கள் )

பென்வாலியோ :

வா ரோமியோ நெருப்பை நெருப்பால் அணைக்கும்

கலை தான் காதல்

ஒரு புதிய வலி வந்து  விட்டால்

பழைய வலி தானாகவே காணாமல் போய் விடும்

உனக்கு தலை சுற்றல் ஏற்பட்டால்

நீ அதற்கு மாற்று  திசையில் உன் தலையை சுற்று

தலை சுற்றல் தானாகவே  சரியாகிவிடும்.

அது போலத் தான் வேதனையும்

ஒரு புதிய வேதனை வந்தால்

பழையது தானாகவே சரியாகி விடும்

நண்பா புதிய பெண்களை உற்றுப் பார்  !

பழைய காதலெல்லாம் காணாமலே போய் விடும்

ரோமியோ :

உன்னுடைய இந்த வாழை இலை வைத்தியத்தை

உன்னோடு மட்டும் வைத்துக் கொள்

உபயோகமாக இருக்கும்

பென்வாலியோ :

எதற்கு ?

ரோமியோ :

ஆ..உன்னுடைய உடைந்த எலும்புகளை ஒட்டவைப்பதற்குத்தான்

பென்வாலியோ :

ஏன் ரோமியோ நீ பைத்தியமாகி விட்டாயா ?

ரோமியோ :

பைத்தியமில்லை அதை விடவும்  அதிகம்

இங்கே எந்த மனநோயாளியை விடவும்

நான் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளேன். 

உணவின்றி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.

காரணமின்றி சாட்டையால் அடிக்கப்படுகிறேன்.

அளவின்றி சித்திரவதை செய்யப்படுகிறேன்.

( பீட்டரிடம் திரும்பி ) மாலை வணக்கம் நண்பரே !

பீட்டர் :

இனிய மாலை வணக்கம் இளைஞனே !

உனக்கு வாசிக்கத் தெரியுமா ?

ரோமியோ :  ( குழப்பமாக )

ஓ என் தலைவிதியை நான் உன்னிடம் வாசித்தால்

அது துயரமாக இருக்கும்

பீட்டர் :

அட போப்பா  உன் தலைவிதியை

புத்தகமில்லாமல் கூட நீ வாசித்து விட்டுப்போ  

நான் கேட்டது உனக்கு எழுத்துக்களை

வாசிக்கத் தெரியுமா என்று தான் ?

ரோமியோ :

எழுத்துக்களைப் பார்த்தால் ஒரு வேளை

எனக்கு மறந்து போன மொழி ஞாபகத்திற்கு வரும் .

மொழி ஞாபகத்திற்கு வந்தால்

எப்படியும் நான் வாசித்தது விடுவேன்

பீட்டர் :

நீ நேர்மையாகத்தான் பேசுகிறாய்.

நீ பேசுவதைப் பார்த்தால்

உனக்கு உண்மையிலேயே வாசிக்கத் தெரியாது

போல் இருக்கிறது.

பரவாயில்லை நான் அடுத்த ஆளைப் பார்த்துக்கொள்கிறேன்.

ரோமியோ : ( அவரைத் தடுத்து )
 
கொஞ்சம் பொறு நானே வாசிக்கிறேன் 
 
( அந்தப் பட்டியலை வாங்கி பெயர்களை வாசித்துக் காட்டுகிறான் ) 
 
"சிக்னர் மார்டினோ மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்;
 கவுண்ட் அன்செல்மே மற்றும் அவரது அழகான சகோதரிகள்;       விட்ராவியோவின் விதவை; சிக்னர் பிளாசென்டியோ மற்றும்

அவரது அழகான மருமகள்; மெர்குடியோ மற்றும் அவரது சகோதரர்

அவரது சகோதரர் காதலர்; என் மாமா கபுலெட் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்கள்
 
என் அழகான மருமகள் ரோசலின் மற்றும் லிவியா சிக்னர் வாலண்டியோ மற்றும் அவரது உறவினர் டைபால்ட் லூசியோ
மற்றும் கலகலப்பான ஹெலினா
 
இது மிகவும் அழகான மக்கள் குழு 
ஆமாம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?
 

 

பீட்டர் : மேலே

ரோமியோ : எங்கே  மேலேயா ?

பீட்டர் : இரவு விருந்துக்கு எங்கள் வீட்டிற்கு

ரோமியோ : யாருடைய வீட்டிற்கு ?

பீட்டர் : என்னுடைய எசமானரின் வீட்டிற்கு

ரோமியோ :

சரி சரி இந்தக் கேள்வியை நான் முதலில் கேட்டிருக்க வேண்டும்

பீட்டர் :

நீ கேட்கவில்லையென்றாலும் நான் சொல்லிவிடுகிறேன்.

என் எசமானர் கேபுலட்.தான்

இந்த நகரிலேயே மிகப் பெரிய செல்வந்தர்

நீ மட்டும் மாண்டேக்காக இல்லாவிட்டால்

தாராளமாக நீ அந்த விருந்துக்கு வரலாம் .

ஒரு கோப்பை ஒயினை அருந்தி விட்டு

மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

சரி சரி நான் வருகிறேன் .உன் உதவிக்கு நன்றி

( பீட்டர் மறைகிறான் )

பென்வாலியோ :

நண்பா இந்த இரவு விருந்துக்கு இன்று நாம் செல்வோம் .

நீ உருகி உருகி காதலிக்கிறாயே

அந்த ஒப்பற்ற அழகி ரோஸலின்

அவளும் அங்கே வருகிறாள் அல்லவா. ?

அங்கே நான் உனக்கு காட்டும் அழகிகளை

வைத்த கண் வாங்காமல் பார்.

அதன் பிறகு நீ எனக்கு  உண்மையை சொல் 

நீ அன்னம் அன்னம் என்று  கதைத்துக்கொண்டிருக்கிறாயே

அந்த ரோஸலின் அவள்  உன் கண்களுக்கு

அங்கே வெறும் காகமாய் தான் தெரிவாள்.

ரோமியோ :

தான் வணங்கும் தேவதையை விட

ஒரு பொய் அழகியை 

என் கண்கள் எனக்கு காட்டினால்

அந்த நிமிடமே என் கண்ணீரெல்லாம்

நெருப்பு சுவாலைகளாக மாறி விடும்.

இது வரையிலும்  கண்ணீரில்  மூழ்காத கண்கள்

உடனே எரிந்து சாம்பலாகி விடும் .

ஒரு பொய்யழகியை எனக்கு காட்டியதற்காக.

என்னவளை விட இன்னொரு பெண் பேரழகியா ?

அதுவும் அவள் என் கண்களுக்கு  தென்படுவாளா ?

புரிந்து கொள் நண்பா

இங்கே சூரியன் தோன்றிய நாளிலிருந்து

என்னவளைப் போன்ற அழகி 

இந்தப்பூமியில் இன்னும் உதிக்கவேயில்லை.

பென்வாலியோ :

ஓ நண்பா உன் அழகியின் அருகில் மற்ற அழகிகள்

இல்லாத போது

அவள் தான் பேரழகி என்று நீ  தீர்மானித்து விட்டாய்.

ஆனால் விருந்தில் உனக்கு நான் காட்டப்போகும்

உயர்ந்த அழகிகளோடு

நீ அவளை ஒப்பிட்டுப்பார்த்தால்

அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகியில்லையென்று

நீயே முடிவுக்கு வந்து விடுவாய் பார்.

 

ரோமியோ :

 சரி சரி நான் உன்னுடன் வருகிறேன்

 ஆனால் அது  மற்ற கன்னிகளை காண்பதற்கு அல்ல

 என்னவளின் பேரழகில் மயங்கி திளைப்பதற்கே

 

(  இருவரும் மறைகிறார்கள் )

    ( தொடரும் )

 மொழி பெயர்ப்பு  : தங்கேஸ்