கவிஞர் சசிகலா திருமாலின் மகனதிகாரம்

கவிஞர் சசிகலா திருமாலின் மகனதிகாரம்

மகனதிகாரம் _ 1

 

அடிவயிற்றில் ஏதோவொரு

மாற்றம் நிகழ

அது மயக்கமென உருமாற

என்னவன் மீது நான் கொண்ட

மயக்கத்தின் பயனாய் விளைந்த

ஓர் அற்புத முத்து

எந்தன் கருப்பை சிப்பிக்குள்

உருவாகும் தருணம்...

 

உதிரங்கள் உதிராமல்

நாட்களெல்லாம் உருண்டோட

உனை உறுதி செய்யவே முழுதாய்

நாற்பத்தைந்து நாட்களாகுமென

யாரோ கூற....

ஒவ்வொரு நாளையும்

யுகமென நகர்த்துகிறேன்

உனை உறுதிப்படுத்திக் கொள்ளவே...

 

குமட்டலும் மயக்கமும் பாடாய் படுத்த

அறைகுறையாய் உறுதியானது

அடிவயிற்றில் உருவானது நீதானென்று...

என்னவனோடான கூடலென்பது

வெறும் உணர்ச்சிகளுக்கான

உடல்களின் சங்கமம் அல்ல..

உனை உருவாக்க என்னவனும் நானும்

தேவனாகவும் தேவதையாகவும்

உருமாறிய தருணமெனவே

உணர்கிறேனடா நான்...

மகனதிகாரம் _ 2

 

எந்தன் கருப்பையில் நிந்தன் இருப்பை

அரைகுறையாய் அறிந்ததிலிருந்தே மறந்தும்

அதிர்ந்து நடக்கவில்லையடா நான்

அடிக்கடி விரல்கள் அடிவயிற்றை

அனிச்சையாய் வருடிடவே

உள்ளுக்குள் ஓர் இனம்புரியா

சிலிர்ப்பொன்று சில்லிட்டது...

 

உந்தன் நகர்வின் அசைவினை

 என்றுணர்வேனோ?...

உந்தன் கால்தடங்களை

என் வயிற்றில் என்று பதிப்பாயோ?...

என்றெண்ணியே கற்பனை வானில்

சிறகுயர்த்திப் பறக்கும் மனதினை

எந்த கடிவாளமிட்டு நான் அடக்கிட ..

 

இதோ உணர்வுகளின்

 மொத்தக் குவியலாய் என்னுள் நீ...

முழுதாய் ஆக்கிரமித்துவிட்டாயடா

என் செல்வமே...

இதோ

உனை உறுதி செய்துக்கொள்ளவே

தவித்து தாகித்து நிற்கிறதடா நெஞ்சம்...

 

மகனதிகாரம் _ 3

 

இதோ மெல்ல மெல்ல நாட்கள் நகர

நாட்காட்டியில் நல்லதொரு நாள் பார்த்தே

என்னவனின் உயிர் நீரின்

ஓர் துளியில் உருவான உன்னை

எந்தன் சிறுநீரின் ஓர் துளிக்கொண்டே

பரிசோதிக்க எத்தனிக்கையில்

உலகின் கடவுளர்கள் அனைவரையும்

கைகூப்பி கலங்கி நிற்கிறேன்

இரட்டை சிவப்பு கோடுகள்

இலகுவாய் விழ வேண்டுமென்றே...

 

எதிர்பார்ப்பின் விளிம்பில் நானிருக்க

மெலிதாய் ஓர் கோடு நிரம்ப

மனமோ பதைப்பதைத்து வெதும்ப

அழுத்தமாய் அடுத்த கோடும் அரங்கேற

மனமோ உற்சாகத்தின்

உச்சத்தில் துள்ளிக் குதிக்க...

உணர்ச்சிப் பெருக்கெடுத்து

உறைந்து நிற்கிறேன் நான்...

கற்சிலையெனவே....

 

சசிகலா திருமால்

 

மகனதிகாரம் _ 4

 

என்ன தவம் செய்ததோ

எந்தன் கருவறை

உனை சுமந்திடவே...

கருப்பை நிறையாமல்

எத்தனையோ பெண்கள் தவமிருக்க

என்னுள் நீ உருவானாய்

ஓர் வரமெனவே...

 

இதுவரை மருந்து மாத்திரைகளை

மறந்தும் பயன்படுத்தாதவள்..

இன்றோ... மறவாமல்

மடக் மடக்கென்று விழுங்குகிறேன்

 உனக்கெனவே..

 

மல்லிகை மொட்டுகளைப் போன்ற

உந்தன் மேனியைத் தீண்டிடவே

எந்தன் விரல்கள் தவம் கிடக்க

பட்டாம்பூச்சிச் சிறகசைப்பது போலொரு

 குறுகுறுப்பு என்னில் நிகழ

 

எந்தன் நரம்புகளினூடே

வயலின் வாசிக்கும் இசை இதமாய் அரங்கேற

நொடிகளனைத்தும் யுகங்களாய் மாற

காத்திருக்கிறேன் நான்

 உந்தன் ஸ்பரிசத்திற்காகவே...

 

 

மகனதிகாரம் _ 5

 

ஆசையாசையாய் உண்பதை விடுத்து

அளவாய் உண்கிறேன்

உனக்கு மூச்சுத்திணறக் கூடாதென்றே...

தாய்சேய் இணைப்பு குழலின் வழியே

உதிரமென உணவை மட்டுமல்ல

உணர்வுகளையும் ஊட்டுகிறேன்...

 

உள்ளுக்குள் உந்தன் வளர்ச்சிக் கண்டே

உள்ளூர மனம் மகிழ்கின்றேன்...

முழுதாய் உருவம் தெரியாத உனைக்கண்டு

உயிர் சிலிர்க்கிறேன்...

 

உணர்வுகளால் என்னுயிரை நெய்பவனே

உனை உச்சி முகரவே

உயிர் சுமக்கிறேனடா செல்லமே

நீ என்னுள் சுழல்கையில்

இந்த உலகமே சுழலுமே

அந்த அற்புதத் தருணத்திற்காய்

தவமிருக்கிறேனடா என் முத்தாரமே...

 

மகனதிகாரம் _ 6

 

கருவறையில் உருவான காவியமே

முதலில் செவிகள்தான்

உருவாகுமாம் உனக்கு...

உந்தன் செவிதனில் விழுகிறதா

உன் மேல் கிறுக்காய் திரியும்

தாயிவளின் இதய ஓசை...

 

ஆணா பெண்ணா என்றறியா

சூட்டாதப் பெயர்தனை சொல்லியே

நித்தம் நித்தம் துடித்தியங்கும்

இதயத்துடிப்பின் ஓசையறிவாயா...

இதோ உனைக் கொஞ்சி மகிழும்

இப்பேதையிவளின்

குரலோசை கேளாயடி(டா) தங்கமே..

 

உனை தொட்டுணரும்

எனது ஸ்பரிசம் உணர்கிறாயா?...

உனைப் பற்றிய எனது

கனவுகளையும் கற்பனைகளையும்

 உள்ளுணர்வுகளையும் உணர்கிறாயா நீ?...

ஏதொன்றும் நானனறியேனடா

இருப்பினும் எந்தன் உள்ளுணர்வுகளை

 உள்ளூர நீ உணர்கிறாய்

என்றெண்ணியே உயிர் சுமக்கிறேன் நானடா..

 

 

  

மகனதிகாரம் _7

 

குமட்டலும் வாந்தியும் சற்றே குறைய

நாட்களோ நகர்ந்து நகர்ந்து

நான்கு மாதங்களை காட்டிட

நீயோ வயிற்றுக்குள்

அசைவுகளை அரங்கேற்றுகிறாய்...

 

வாழைமடல் போன்ற விரல்களையோ

மெல்லத் திறந்து மூடுகிறாய்

பூமியின் தரைத்தொடா

 பஞ்சு போன்ற பச்சிளம் பாதங்களை

அசைத்து அசைத்து முட்டிமோதி

உதைக்கவே முற்படுகிறாய்...

 

இதுவரை இனமறியா நீ இப்போது

ஆணென்றோ பெண்ணென்றோ

பெயர் சூட்டிக் கொள்கிறாய்...

முழுமுதற் முயற்சியாய்

 முகபாவனைகளை முயற்சிக்கிறாய்...

அதை கண்டுக் களிக்கவே

கண்கோடி வேண்டுமடா(டி)..

 

எலும்புகளெல்லாம் வலு பெறுமாம்

அப்படியாயின் நீ வளர்கிறாய் தானே..

நீ வந்த நாளிலிருந்து

வளர்பிறை தானடா(டி) என் வயிற்றிற்கு...

ஆஹா... உந்தன் வளர்ச்சியில் தான்

எத்தனை பூரிப்பு என்னுள்...

தாயாய் நானிருக்கவே

தவம் கோடி செய்தவளாகிறேனடா(டி)...

 

மகனதிகாரம் _ 8

 

அடடா.. தமனிகளும் சிரைகளும்

பின்னிப் பிணைய

தொப்புள்கொடியும் வலு பெறவே

ஊட்டமாய் உண்கிறேனடா உனக்காகவே...

இப்போது ஒலிகளை

உணர முடியுமாமே உன்னால்

நீ கேட்ட முதல் இசை

எந்தன் இதய ஓசை தானே..

நன்றாக உற்று கேள்...

உனக்காய் துடிதுடித்துத் துடிப்பதை உணர்வாய்...

 

அதட்டலான ஒலிகள் உன்னை

 அச்சுறுத்தும் என்றெண்ணியே

உன்னைக் கருத்தில் கொண்டே

இனிமையான இசையினை

செவிவழி நுழைக்கிறேன் உனக்கெனனவே..

முதன்முதலாய் உனக்கு

கேட்டிருக்கும் தானே...

நான் உன்னிடம் உரையாடியதெல்லாம்...

 

தங்கமே, முத்தே, பவளமே .. என்ற

எந்தன் கொஞ்சல் மொழி கேட்டாயோ

தாயிவளின் குரலோசை உணர்ந்தாயோடா(டி)

என் உணர்வில் மலர்ந்த மலரோவியமே...

 

மகனதிகாரம் _ 9

 

என்மீது என்னவர் கொண்ட

அதீத அன்பின் ஓர் துளியில் தானே

நீ வேர்விட்டு கிளைகளைப் பரப்பி

விருட்சமாய் வளர்ந்துக்

கொண்டிருக்கிறாய் என்னுள்..

நீ துளிர்விடும் நேரங்களில்

ஏற்படும் வலிகளும்

சுகமெனவே ஏற்கிறேனடா(டி) உனக்கெனவே...

 

ஹை வோல்டேஜ் மின்சாரம்

 தாக்கிடும் வலி வந்தாலும்

உனை கண்ணுறும் கணநேரத்தில்

மழைச்சாரலின் குளுமையென

 மாறிவிடாதோ வலிகளனைத்தும்...

உந்தன் புன்னகையின் தாக்கம்

எந்தன் இதயத்தை ஈரமாக்காதோ.

கனவிலும் நின்னைப் பற்றிய

 நினைவுகள்தானேடா(டி)..

உந்தன் அசைவுகளை அசைப்போடுவதற்கென்றே

ஒவ்வொரு நொடிகளையும்

எதிர்பார்த்தே உயிர் சுமக்கிறேனடா(டி)..

 

மண் தொடா நின் மலர்(பிஞ்சு)

பாதத்தின் மேல்

மையல் கொள்ளுதடா(டி) மனது..

என் மனவானில் சிறகை விரிக்கும்

சின்னஞ்சிறு பறவையெனவே நீயடா(டி)...

என் முத்தாரமே....

 

மகனதிகாரம் _ 10

 

நாட்களைப் போலவே உந்தன் நகர்வும்

மெல்ல மெல்ல புலப்படுகிறது என்னுள்...

எந்தன் இதயத்துடிப்பை விட

நின் இதயம் இருமடங்கு

இரட்டிப்பாய் துடிக்குமாமே...

இதோ மேடிட்ட வயிற்றில்

கரம் வைத்துக் கதைக்கிறேன் உன்னோடு..

 

நீயோ எந்தன் உணர்வுகளுக்கு செவிமடுத்து

மெல்ல மெல்ல அசைவின் மூலம்

வெளிப்படுத்திவிடுகிறாய்

உந்தன் உந்துதலை..

இதோ நீ என்னுள் கருவாகி

உருவான நாள்முதலாய்

நானுமோர் பிரம்மாவாகினேன்..

உன்னை பார்த்து பார்த்து செதுக்குகிறேன்..

 

செதுக்குவது நான் ஆனாலும்

 உன்னுருவம் அறியா அப்பாவிதான் நான்..

உள்ளம் உவகைக் கொள்ளவே..

உதிரத்தால் உணவளித்து காத்திருக்கிறேன்

உன்னுருவம் காணவே..

 

மகனதிகாரம் _ 11

 

உனைக் கொஞ்சி கொஞ்சி பேசுகையிலே

நீ உடலை மெல்ல மெல்ல அசைத்தே

உணர்வுகளை வெளிக்காட்டுகையில்

கொஞ்சம் கொஞ்சமாய்

அடிமையாகிறேன் நான்

உந்தன் அசைவுகளுக்கு...

மறுமுறை உந்தன் அசைவிற்காய்

தவமிருக்கிறேன்..

 

அழகிய உந்தன் மேனி

என்னுள் சுற்றி படர்கையில்

நிந்தன் வாசமறிகிறேன்..

எந்தன் பனிக்குடமதில்

மலர்ந்த பனி மலரே..

 

உனைச் சுற்றி படரும்

தொப்புள்கொடி வழியே

என் வாசம் உணர்கிறாயா நீ..

தாயிவளின் அன்பும் துடிப்பும்

புரிகிறதா உனக்கு..

உனைக் காணவே நிமிடங்களை எல்லாம்

 வருடங்களாய் எண்ணி

கடத்திக் கொண்டிருக்கும்

என் ஆழ்மனதின் ஏக்கங்கள்

புரிந்தறிவாயோடா(டி) செல்லமே..

ஊட்ட ஊட்ட திகட்டாத அமுதம் நீயடா(டி)..

நான் வரங்கள் என்று எண்ணுவதெல்லாம்

 நின் வரவொன்றேயன்றி வேறில்லையடா(டி) செல்வமே..

 

 

 

மகனதிகாரம் _ 12

 

பிறை நிலவு வளர்பிறையாய்

உருமாறுவது போல

இதோ மெல்ல மெல்ல நகர்ந்து

ஆறாவது மாதமதில்

அடியெடுத்து வைக்கிறாய் நீ...

சில நேரங்களில் முட்டவும்

சில நேரங்களில்

 உதைக்கவும் செய்கிறாய் என்னை...

 

உந்தன் பிஞ்சு பாதங்கள்

என்னில் சுவடுகள் பதிக்கையில்

எல்லையில்லா ஆனந்தத்தில்

துள்ளிக் குதித்தாலும்

சற்றே மனம் துடித்தழுகிறது

உன் பிஞ்சு பாதங்கள் நோகுமேயென்று...

 

அடிக்கடி விக்கல் எடுக்குமாம் உனக்கு

மேடிட்ட வயிறு மேலும்

துடிக்கும் போதெல்லாம்

உணர்கிறேனடா(டி) நான்

உந்தன் விக்கல்களை....

நீ விக்கும் போதெல்லாம்

 வியர்த்தும் போகிறேனடா(டி) நான்..

 

இப்போது தான் உந்தன் இமைகள்

இதமாய் திறந்து பதமாய் துடிக்குமாமே..

உணர்கிறேனடா(டி) நான்

ஒரு பட்டாம்பூச்சி சிறகு விரிக்கும்

குறுகுறுப்புதனை என்னுள்...

மேலும் காத்திருக்கிறேன்

ன்னுள் நீ சிறகு விரிக்கும் காலத்திற்காக...

 

மகனதிகாரம் _ 13

 

கருவாய் இருந்த நீயோ

உருப்பெற்று உருபெருக்கமடைகிறாய்...

சுதந்திரமாய் சுற்றித்திரிய

கருப்பைக்குள் இடமானது

போதுமானதாய் இருக்கிறதோ

 அல்லது அல்லல்படுகிறாயோ என்றெண்ணியே

வேதனையில் வெந்துத் தணிகிறேன் நான்...

 

உள்ளுக்குள் நீ உருள்கையில்

ஓர் புது உலகமே சுழல்கிறது என்னுள்...

உந்தன் கண்கள் இப்போது ஒளிபெறுமாமே?

இதோ... உனக்காய் என் வயிற்றில்

நான் கட்டிய கருவறை மாளிகையைக்

 கண்டுணர்கிறாயா?...

 

நீ உதைத்து பழகுகையில்

உண்டாகும் வலிதனையும்

சுகமென உணர்கிறேனடா நான்..

நான் விளிக்கும் மொழிகளுக்கு

நின் மலர் பஞ்சு பாதங்களை உதறி உதைத்து

நின் உணர்வினை எனக்கு உணர்த்துகையில்

நின் பட்டு பாதங்கள் நோகுமேயென்று

மனமுடைகிறேன் நான்...

 

இதோ.. மெல்ல மெல்ல தலையைத் திருப்பி

தலைகீழ் ஆசனமொன்றை மேற்கொள்ள முயற்சிக்கிறாய்...

உந்தன் வித்தையெல்லாம் விந்தையாய்

எந்தன் சிந்தை நுழைகிறதடா..

ஆவல் மேம்பட ஆர்ப்பரிக்கிறதடா மனம்

நின் வரவையெண்ணியே அனுதினமும்...

 

மகனதிகாரம் 14...

 

நாட்கள் வளர வளர

வளர்பிறையென நீயும் வளர்கிறாய் என்னுள்

என் அகபுற உணர்வுகள்

உன்னை அசூயை அடைய செய்துவிடக் கூடாதென்றே

இன்னும் சிரத்தையாய் சிரமேற்கிறேன்

என் பொறுப்புகளை...

 

அதிகமான ஒலியால்

அதிர்ச்சி அடைவாயென்றே

அதிராமல் நடை பயில்கிறேன் நான்...

என் அகம் மலர்ந்தால்

கருவறையில் நின் முகம் மலருமாமே

அதை நினைவில் நிறுத்தி

நெஞ்சம் நெகிழ்கின்றேன்...

 

புரண்டுப்படுத்தால் உன் பூவுடல் நோகுமேயென்று

ஒருபுறமாய் ஒருக்களித்துப் படுக்க

பழகிக்கொள்கிறேன்...

மேடிட்ட என் வயிற்றை வருடி

நின் இயக்கங்களை நான் உணர முற்படுகையில்

உண்டாகும் வளையோசை ஒலிகளை

கேட்டறிகிறாயா நீ?...

 

என் குரலோசையும் வளையோசையும்

உனக்கெனவே ஓசையெழுப்பி மகிழ்வதை அறிவாயா?..

உள்ளுக்குள் உந்தன் பூனைமுடிகள் உதிருகையில்

குறுகுறுக்கிறது எந்தன் கருவறை...

உன் நாவினில் சுவை மொட்டுக்கள்

மெல்ல மெல்ல அரும்பி வெடிக்க

உணவோடு சேர்த்து என் உணர்வுகளையும்

சுவைத்துணர்வாயா நீ?..

 

இறுக்கமான உடைகள் கூட

உன்னை இம்சித்துவிட கூடாதென்றே

தளர்வான உடையில் உனை தாங்கி பிடிக்கிறேன்...

எந்தன் கருவை உருவாய் காண

உள்ளம் உவகைக்கொண்டு

உயிர்த்தெழுகிறதடா...

 

மகனதிகாரம் _ 15

 

இதோ ...

நிமிடங்கள் எல்லாம்

நாட்களென உருண்டோட

நீயோ தலைகீழாய் நின்று

சாகசங்கள் செய்கிறாய்...

தலையால் கருப்பை வாயிலை

முட்டி முட்டி திறக்க முற்படுகிறாய்...

உனக்கும் அவசரமா என் முகம் காண?..

 

நீ முட்டுவதால் விருட்டென்று

வெளிப்படும் முதுகுவலியும்

உன் முகம் காணும் ஆர்வமதில்

கண்காணா தூரம்

 காணாமல் போகிறது..

 

இதோ...

வளர்பிறையென இருந்த நீ

முழுதாய் பௌர்ணமியாகி விட்டிருக்கிறாய்..

இருட்டறையிலிருந்து

 வெளிச்சத்திற்கு வர ஆவல் கொண்டே

எட்டியுதைத்து முட்டி போராடுகிறாய்..

 

உனை போலவே ஆர்வ மிகுதியால்

உனை ஆசையாய் அரவணைத்து

அகம் மகிழ்கின்றேன்..

என் சிந்தை முழுவதும்

நீயே ஆட்கொள்வதால்

கவிதையாய் நிறைக்கிறேன் கருவறையை...

 

மகனதிகாரம் _ 16

 

வெளியுலகம்தனை கண்டுவிட

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாய் நீ...

மனம்நிறை எதிர்பார்ப்புகளோடு என்னுலகிலிருந்து

மண்ணுலகம் வரவிருக்கிறாய்..

என்னுள் கருவாகி உருவாகி

என்மீதுள்ள அதீத நம்பிக்கையில்

அகிலத்தைக் காண ஆவல் மேலிடுகிறாய் ..

 

புத்தன் போன்று புனிதமானவர்கள் மட்டுமல்ல

பூவென்று அறிந்தால் கசக்கியெறியும்

கயவர்களும் மிகுந்த பூமியிது..

எதிர்த்து போராடவும் எதிர் நீச்சலிடவும்

கர்பத்திலேயே கற்பித்துவிட

எட்டி உதைத்து எதிர்நீச்சலிட

நீயும் பழகிவிட்டாய்...

 

கண்ணுக்குக் கண்ணாய்க்

கண்காணித்துக்கொள்ள நானிருக்கையில்

கடினமென்று ஏதுமில்லை...

அன்பால் அரவணைக்க அனைவரும் இருக்கையில்

நீ அச்சப்படவும் தேவையில்லை...

 

சுயநலக்காரர்களைக் கண்டு

கருவறையில் சுருண்டது போல்

சுருண்டு விடாதே...

நம்பிக்கையில் மலர்ந்து விடு

நல்லதோர் வீணையாய் இருந்து விடு..

 

மகனதிகாரம் 17

 

உருவில்லா கருவொன்றை

பையொன்றில் தாங்குகிறேன்..

மொட்டவிழும் நேரம் பார்த்து

மாதந்தோறும் மாறிமாறி வந்த

மாதவிலக்கை வாராது நிறுத்தி வந்தமர்ந்தவனே..

 

வளர்பிறையென வளர்கிறாய்

கைகால் உதறி பனிக்குடமதில்

நீச்சல் கற்கிறாய்...

உந்தன் சின்ன சின்ன அசைவுகளில்

மசக்கையெனும் மயக்கம் தெளிவிக்கின்றாய்...

பாரமென்றறியாது

பத்து திங்களும் பரபரப்பாய்

பார்த்து பார்த்து இயங்க வைக்கிறாய்..

 

தாய்மையுணர்வை

தவமென தந்தவனே...

நிமிடங்களெல்லாம்

வருடங்களாய் கடத்திக் கொண்டிருக்கிறேனடா....

பனிக்குடமுடைத்து பனிப்பூவாய்

நீ மலர்ந்திடும் நாளில்

உந்தன் வரவையெண்ணியே...

 

மகனதிகாரம் 18..

 

இடுப்பெலும்புகளில்

மின்சாரம் பாய்ந்தது போலொரு வலி..

வலியையும் தாண்டி இதமாயும்

இருமடங்கு வேகமாயும்

விட்டு விட்டு துடிக்கிறது இதயம்

உனை கண்ணுறும் ஆவலில்...

பெரும் எதிர்பார்ப்புடன் உள் நுழைகிறேன்

பிரசவ அறையினுள்..

 

முதல் பிரசவம் என்பதாலோ என்னவோ

பெரும் பதட்டமும் அச்சமும்

என் இதயத்தினுள் மாறி மாறி எழுகிறது..

சுகப்பிரசவமாக வேண்டும்

சுமையறியாமல் சுகமாய் நின் சுண்டுவிரல்

இப்பூமிதனில் பூபோல

தொட வேண்டும் என்றெண்ணியே

படபடப்பில் பரிதவிக்கிறேன்..

 

செவிலியர்கள் சொல்லும்

ஆறுதலுக்கும் ஊக்கத்திற்கும் செவிமடுக்கிறேன்...

இருப்பினும் இதயத்தினில் எழும்

இனம்புரியா உணர்வுகளுக்கு மட்டும்

ஏனோ தெரியவில்லை

என்னால் பெயரிட இயலவில்லை..

இதோ.. அச்சத்தின் உச்சத்தில் நான்..

 

மகனதிகாரம் 19

 

பிரசவத்திற்கான நேரம்

நெருங்க நெருங்க

பதட்டமும் பரிதவிப்பும்

என் கண்களில் பளிச்சிடுகிறது...

வலியினால் வரும் அழுகையை அடக்கவியலாமல்

வாய்விட்டு வீறிட்டு கதற வேண்டும்

என்று தோன்றினாலும்

பற்களுக்கு இடையில் பதுக்கிக்கொள்கிறேன்..

 

மருத்துவர்களோ முக்க சொல்லி

முதுகிலும் வயிற்றிலும் அழுத்தம் கொடுத்து அழுத்த

உனக்கு வலிக்குமேயென்று

உள்ளம் பதறுகிறேன் நான்..

ஆழ்கடலில் மூச்சடக்கி

முத்தெடுப்பது போல

மூச்சடக்கி முக்கி முக்கி பார்த்தும்

முழுதாய் நீ வெளிவர மறுக்கிறாயடா...

 

செவிலியர்களோ தீவிரமாய்

 வலியெடுக்க வேண்டி ஊசிகளை ஏற்ற

சுருக் சுருக்கென்று ஊசியென

குத்தி தைக்கிறது வலிகள்...

வலிகளினூடே நடை பயில

பனிக்குடம் உடந்து இரத்தமும் நீரும்

ஆறென வழிந்தோட

வலிதனில் துடித்துத்

துவளுகிறேன் நான்...

 

மகனதிகாரம் 20

 

எனது முக்கல் முனகலுக்கிடையில்

நீயோ வெளிவர மறுத்தலிக்கவே

சுகமாய் ஆகாதென அறுவைசிகிச்சைக்கு

ஆயத்தமாகிட அறிவுறுத்தப்பட்டே.. .

மயக்க மருந்தளிக்கும்

 மருத்துவரின் வருகைக்காய் காத்திருக்க

குளிரூட்டப்பட்ட அறையில் குற்றுயிரும்

குறை உயிருமாய் கிடத்தப்பட்டேன்..

 

இதோ என்னுள் அச்சம் உச்சத்தில் எகிறிட

என்னுள் உதித்திட்ட உன்னை

முழுதாய் காண்பேனா என்ற எண்ணம் மேலோங்கிட

குளிரூட்டப்பட்ட அறையிலும்

என்னுள் பரவுகிறது அச்சமெனும் வெப்பம்..

குலதெய்வத்தையும் மறந்து

எமதர்மனிடம் மன்றாடி மண்டியிடுகிறேன்...

 

என்னுயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள்..

என்னுள் உருவான உயிரை விட்டுவிடு என்று..

ஜனனமும் மரணமும் ஒருமுறை தான்

பெண்களுக்கு மட்டும் ஏனோ அது விதிவிலக்காய்..

பிரசவம் பெண்களுக்கு மறுஜென்மமாம்

 

எனக்கு மறுஜென்மம் கூட வேண்டாம்..

என் மரணத்திலேனும் நின் ஜனனம்

நிகழ்ந்தேறிட வேண்டும் என்றே

தவித்துத் துடித்தழுகிறேன் நான்

அனலிட்ட புழு போல..

 

 

 

 

மகனதிகாரம் 21

 

கால்தனை குறுக்கி கேள்விகுறியென

வளைந்து இதோ நீ என் கருவறையில்

சுருண்டிருப்பது போல

நானும் இப்போது சுருள்கிறேன்..

சுருக்கென்று தைக்கப்பட்ட மரப்பூசியில்

இடுப்பிற்கு கீழ் மெல்ல மெல்ல மரத்துப்போக

மின்சார வலிகள் எல்லாம் வலுவிழந்து

சற்றே வடிந்தாற் போலிருக்க..

 

அரைகுறை மயக்கத்தில்

நான் பாதி மரணித்திருக்க...

நீ பிறப்பெடுக்கவே

என் பிறப்புறுப்பின் மேல்

சரமாரியாய் சரக்சரக்கென்று

கத்தியிடும் சங்கீதம் என் காதினில் நுழைந்திட...

 

அரை பிணமென கிடக்கும் என்னுடலில்

உன் வரவையெண்ணி புது குருதி ஊற்றெடுக்கிறது...

மருத்துவர்களின் சம்பாஷனைகளும்

வலியும் வேதனையும் மாறி மாறி

 மேலும் மேலும் வதைத்திட...

திடீரென ஓர் அழுகுரல்...

அந்த அழுகுரல் கேட்டு

மீண்டும் புதிதாய் பிறப்பெடுக்கிறேன் நானும்..

 

மகனதிகாரம் 22

 

மீண்டும் மீண்டும் அழுகுரல்

உச்சஸ்தாயில் கேட்க

உறுதிப்படுத்திக் கொண்டேன்

அது நீதானென்று...

இறைவனுக்கு நன்றிகளை

 உளமார உரித்தாக்கி

நிம்மதி பெருமூச்சோடு

ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது வலிகளினூடே...

 

இனி என்னுயிர் பற்றிய

பயமில்லை எனக்கு..

இதோ உனை ஈன்றதில்

நானுமோர் பிரம்மாவாகிறேன்...

நீ ஆணா பெண்ணா என்றறிய

ஆவல் மேலிட...

 

என் குறிப்பறிந்து மருத்துவரும்

என்னருகே உன் முகம் காட்டி

"ஆண் மகவென" அழுத்தமாய் கூறிட

அரை மயக்கத்தில் அரைகுறையாய்

உன் மலர் முகம்தனை காணவே

இதுவரை நான் கொண்ட வலிகளெல்லாம் மழுங்கிட

முழு மயக்கத்தில்

முழுதாய் மூழ்கி போகிறேன் நான்...

 

நான் பெண்ணாய் பிறந்த பலன்தனை

அடைந்துவிட்டேன் இன்று..

எனது பெண்மையும் தாய்மையும்

நிறைவடைந்த நிம்மதியில்

 இதமாய் இமை மூடுகிறேன்..

உந்தன் அழுகுரல் ஓசை மட்டும்

ஓயாமல் ஒலிக்கிறது என்னுள் இன்னிசையாக...

 

மகனதிகாரம் 23

 

என்னுயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள்

என்னுள் உருவான உயிரை விட்டுவிடு என்ற

எனது வேண்டுதலுக்கு

மனமிறங்கிய எமதர்மனோ இரக்கப்பட்டு

உன்னோடு சேர்த்து என்னையும்

உயிர்ப்பித்து விட்டான்...

 

இதோ.. உந்தன் அழுகுரல் கேட்டு

மயக்கத்தில் ஆழ்ந்தவள்

மீண்டும் உந்தன் அழுகுரல் கேட்டே கண்விழிக்கின்றேன்...

மல்லிகை மொட்டென

உன் பிஞ்சு பாதங்கள்

மெல்ல மெல்ல என்மீது மோத

பட்டின் மென்மையாய்

நின் கைவிரல்கள் எனை தீண்டிட

சட்டென்று உணர்வு நிலைக்கு வந்தவள்

முதன்முதலாய்

முழுமதியென ஒளி உமிழும்

உந்தன் முகம்தனை முழுதாய் காண்கிறேன்...

 

முழுநிலவென ஒளிவீசி

உந்தன் ரோஜாமொட்டு இதழ்களை

மெல்ல குவிக்கின்றாய்...

உந்தன் வாழைப்பூவின்

மடல்கள் போன்ற

மென்மையான கைவிரல்கள்தனை

உனக்கு நோகாமல்

தன்மையாய் தீண்டுகிறேன்...

 

நீயோ.. என் விரல்களை இறுக பற்றிக்கொண்டு

புன்முறுவல் பூக்கிறாய்...

நான் தான் உன் தாயென்று

உணர்ந்துக் கொண்டாயா நீ...

அடடா.. வான்நிலவே

தரையிறங்கி வந்தது போல்

ஓர் உன்னத உணர்வு..

 

என்னையறியாமல் என் கண்களில்

வழிந்தோடும் கண்ணீரில் கரைந்துருகுகிறது...

பத்து திங்கள் நானடைந்த

வலிகளும் வேதனைகளும்...

உனை அள்ளியெடுத்து

உச்சி நுகர்கையில்

உணர்வுகளின் குவியலாய்

உணர்ச்சிகளும் பிரவாகமெடுக்கின்றன...

 

இது போதுமடா..

நான் பெற்ற பிறவி

நிறைவடைந்துவிட்டது இத்தருணத்தில்...

இதோ.. என் பெண்மை

 மலர்முகம் காட்டி சிரிக்கிறது உன் உருவத்தில்...

பெண்ணாய் பிறப்பெடுத்த

பிறவி பலன்தனை

முழுதாய் அடைந்துவிட்ட

என் வாழ்வின் மறக்கவியலா அற்புதமான தருணமிது...

பிரசவம் பெண்களுக்கு

மறுஜென்மம் என்பதை மறுப்பதற்கில்லை.

சசிகலா திருமால்