ஷேக்ஸ்பியர் தமிழில்...

ஷேக்ஸ்பியர் தமிழில்...

ஷேக்ஸ்பியர் தமிழில்...

மொழி பெயர்ப்பு

All the World’s a Stage
BY WILLIAM SHAKESPEARE
உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..

( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும் வசனங்களே அற்புதமான கவிதைகளாகவும் தத்துவப்புதையல்களாகவும் கொட்டிக்கிடக்கின்றன

. அந்த வகையில் இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நாடகம் (As You Like It’ n Act II, Scene VII, the character Jaques speaks)
இதில் ஜேக்ஸ் என்ற கற்றறிந்த பாத்திரத்தின் வாயிலாக

  ( இவர் அரசனின் நண்பர் )
And so, from hour to hour, we ripe and ripe,
And then, from hour to hour, we rot and rot; என்று தொடங்கி 
 மனிதனின் வாழ்க்கை நிலையினை , நிலையாமையின் நிலைத்த தன்மையினை ஏழு பகுதிகளாக பிரித்துக்  காட்டுகிறார். 

இந்தப்பாத்திரத்தின் வழியாகப் பேசவதே ஷேக்ஸ்பியர் தான் என்று விமர்சகர்கள் சொல்வார்கள். ஷேக்ஸ்பியர் இந்த வரிகளை எழுதிய பிறகு அடுத்து வந்த  கவிஞர்கள் எத்தனை எத்தனையோ வகைகளாக வாழ்க்கையைப் பிரித்துபாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உலகத்தில் ஒரு ஷேக்ஸ்பியர் மட்டுமே கலைகளின் மகோன்னதம்.  அதற்கு இந்த வரிகளே சாட்சி
 
 

All the World’s a Stage
BY WILLIAM SHAKESPEARE

இந்த உலகமே ஒரு நாடகமேடை
வில்லியம் ஷேக்ஸ்பியர்

இந்த உலகமே ஒரு நாடகமேடை தான்
மாந்தர்கள் யாவரும் நடிகர்களே

நுழைவுவாயிலின் வழியே  மேடையேறி
காட்சிகளில்  தோன்றிய பின் 
மறையும் வழியே வெளியேறும் 
ஆண்களும் பெண்களும் உண்மையில்
நடிகர்களே !

ஒரு மனிதன் தான் வாழ்க்கையில் எத்தனை
எத்தனை பாத்திரங்கள் ஏற்கிறான்  ?

குறைந்தது ஏழு பாத்திரங்கள் 
அதற்கும் குறைவில்லை 

முதல் காட்சியில் கையில் தவழும் மழலை
பசியில் பாலுக்கழைக்கும்  குட்டிப்பூனையின்
சன்னமான மியாவ் குரலில் 
அழுகிறான்

அதிகமாய் உண்ட பாலையோ
செவிலித்தாயின் தோளில்
வாந்தியெடுத்து வழியவிடுகிறான்

அடுத்ததாக பள்ளி செல்ல சிணுங்கும் சிறுவன்

காலை பளிங்குபோல் 
ஒளிவிடும் முகத்தில்
கவலையின் ரேகைகள்
அச்சத்தின் சாயல்கள்

தோளில் தொற்றிக்கொண்டிருக்கும் புத்தகப்பை
பள்ளியை நோக்கி நகரும் நத்தை நடையில்
பள்ளி வந்து விடக்கூடாதே என்ற 
பதை பதைப்பு

மூன்றாவது அத்தியாயத்தில்
 இவன் ஒரு இளங்காதலன்

கொல்லனின் உலையிலிருந்து 
களவாடி வந்த
கனல் மூச்சு சுவாசத்தில்
செந்தழலாய் கொதிக்கும் உள்ளம்
துயரத்தை கூட்டிவிடும்

இவன் எழுதி முடித்த பாடல்கள் 
அத்தனையும் அத்தனையும்
காதலியின் புருவத்திற்கே சமர்ப்பணம்

நான்காவது அத்தியாயத்தின்
 இவன் போர்வீரன்

தினவெடுத்த தோள்கள்
வார்த்தைக்கு பதிலாய்  வாளை உருவும்
வலிய கரங்கள்

சிறுத்தைபோல செதுக்கப்பட்ட தாடி
வாய்நிறைய சூளுரைகள்
எதிரியை வம்பிழுக்கும் வஞ்சினங்கள்
எரிமலையின் சீற்றம்

மாற்றானின் புகழ் மீது கனலும் பொறாமை
யுத்தத்தை முத்தமிடும் அதி தீவிர மோகம்
புகழென்னும் நீர்க்குமிழிகளை 
துரத்திப்போகும் மாய வேட்டைக்காரன் இவன்

மாய வேட்டையில் மாய்ந்திடவும்
தயாரகும்  வேட்கைக்காரன் இவன்
துப்பாக்கிமுனையிலும் 
தோட்டாக்களை முத்தமிடும் 
துணிச்சலுக்கு சொந்தக்காரன்
இவன் அளப்பரிய போர்வீரன்

ஐந்தாவது அத்தியாயத்தில் 
இவன் ஒரு நீதிபதி

அடுக்கடுக்காய் படிந்திருக்கும்
பானைபோல் பருத்த அடிவயிறு
அதற்குள்  நிறைந்திருக்கும்
அத்தனையும் அசைவத்தின் கொழுப்பு

குத்தீட்டிபோல் கூர்மை கொண்ட பார்வை
மரியாதையை கூட்ட
 சீராக செதுக்கப்பட்ட தாடி

வாயைத்திறந்தால் அத்தனையும் வசனங்கள்
வற்றாத எடுத்துக்காட்டுகள்
நல்லுரைகள் மேற்கோள்கள்
இத்யாதி இத்யாதி 
இப்போது இவன் நீதிபதி

ஆறாவது அத்தியாயத்தில் 
இவன் மெலிந்த முதியவன்

அடிவயிறு ஒட்டிப்போய் 
உள்வாங்கி கொண்டது
அணிந்த கால் சாராய் கழன்று விழுகிறது

பார்வை கொஞ்சம் மங்கிப்போக
மூக்கு கண்ணாடி வந்து 
முந்தி அமர்ந்து கொண்டது

மெலிந்த இடுப்பில் 
ஒரு பக்கம்  தொங்கும் பணப்பை 
தோல் பைக்குள்  கொஞ்சம் நாணயங்களும் 
அதக்கிகொள்ள புகையிலைகளும்

இந்தப்பூமியை 
காலடியில் அளந்த காலம் போய்விட்டது
இப்பொழுது இந்த முதியவன் 

நடைபயிலும் போது
இந்த உலகம் ஏன் இத்தனை காத தூரம் 
விரிந்துகொண்டே...... செல்கிறது....... ?

கர்ஜித்த கனத்த கம்பீர சப்தம்  
ஏன்  இளைத்த குழந்தையின்  
கொர் கொர்  சப்தமாய் மாறிவிட்டது ?

இவன் வாய்திறந்தால்
விசில் சப்தமும் பீப்பி சப்தமும்
 விட்டு விட்டு கேட்கிறதே !

கடைசி பாத்திரத்திற்கு
 பயணிக்கிறதா இவன் குரல் ?

வாழ்வின் கடைசி பாத்திரம்
 இது ஏழாவது பாத்திரம்
இறுதியாத்திரைக்கு தயாரான 
இரண்டாவது குழந்தை இவன் 

புரியாத வாழ்வின் புதிரான கேள்விகளுக்கு
விரைவில் விடையாகப்போகிறான் இவன்

மறதியின் நாயகன் இவன்
வாழ்வையே மறந்து போகும் 
தருணம் வந்து விட்டது 

பற்கள் இல்லை
பார்வைகள் இல்லை
உணர்வு இல்லை
சுவை இல்லை
ஏன் எதுவுமேயில்லை
இனி அதிகநாட்களும்இவன் இங்கிருக்கப்போவதில்லை...

மூலம் – ஷேக்ஸ்பியர்
மொழியாக்கம் - தங்கேஸ்