உலக ரேடியோ தினம்
உலக ரேடியோ தினம்
*உலக ரேடியோ தினம்*
காலை விடியலுடன்
பயனுள்ள தகவலைச் சொல்லி, சாமானிய மனிதனை
சக மனிதனாக்கி,
24 மணி நேர இயக்க முறையுடன் கிறக்கம் தந்த
உலக ரேடியோ தினம்!
மொட்டை மாடி இரவு,
மெல்லிய வாடைக் காற்று ,
வானத்து நிலவு,
ரேடியோவில் பாட்டு
என கவித்துவ பயணம் கண்ட
உலக ரேடியோ தினம்!
மின்காந்த அலைகளின் வழி,
செய்தி அறிவிப்பு/பாடல்/உரையாடல் ஒலி அலைகளை ஏற்றி ,
வான்வழி செலுத்தி,
செவி வழி அனுபவிக்கும்
உலக ரேடியோ தினம்!
சென்னை/புதுச்சேரி/காரைக்கால், கோவை/மதுரை/ஊட்டி/திருச்சி,
திருநெல்வேலி/கொடைக்கானல்,
நாகர்கோயில்/உதகமண்டலம், தூத்துக்குடி போன்ற இடங்களிலுள்ள
தமிழ் வானொலி நிலையங்களின்
உலக ரேடியோ தினம்!
ஊர்தி அலைபரப்பி,
பண்பேற்றப்பட்ட ஊர்தி அலை பரப்பி,
வானொலி தொலைபேசி பரப்பி
எனும் வகைகள் காணும்
உலக ரேடியோ தினம்!
புள்ளிகள்/ சிறு கோடுகளுடன்
துண்டு சிக்னல் பரப்பும் பயன்பாடான,
FM/AM வானொலி பரப்பி
எனும் பயன்பாடான
ஊர்தி அலைபரப்பி காணும்
உலக ரேடியோ தினம்!
பரப்பும் ஏரியல்/மாடுலேட்டர் ,
ஏ எம் ஆம்ப்ளிபையர்/ஒலிவாங்கி,
ஏ எஃப் ஆம்ப்ளிபையர் /ப்ரீ ஆம்ப்ளிபையர் /இன்டர்மீடியட் ,
பப்பர் ஆம்ப்ளிஃபையர்
என்ற நிலைகள் கொண்ட
வீச்சு மாற்றி வானொலி பரப்பியின் உலக ரேடியோ தினம்!
ஹகு பெருக்கி /பிரீ எம்பசிஸ், கிரிஸ்டல் அலையாக்கி/அதிர்வெண் மடங்காக்கி/ரியாக்டன்ஸ் பண்பேற்றி, பவர் பெருக்கி என்ற நிலைகள் கண்ட பண்பேற்றம் செய்யப்பட்ட
ஒலி அலைகளை உற்பத்தி செய்து பரப்பும் FM (பண்பலை) பரப்பிக்கான
உலக ரேடியோ தினம்!
கடல் வழியே மோர்ஸ் குறியீடு பயன்பாடான தந்தி குறிப்புகளாகி,
1905ல் சுஷிமா போரில்
ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படை கைப்பற்றிய செய்தியாகி,
1912ல் RMM டைட்டானிக்
கப்பலின் பயன்பாடாகி,
மூழ்கிய கப்பல்கள்/உயிரிழப்பு/உயிர் பிழைப்பு பட்டியல்களை அனுப்பும் தகவல் தொடர்பு சாதனத்தின்
உலக ரேடியோ தினம்!
முதல் உலகப்போரில் உத்தரவு, தகவல் அனுப்பும் பயன்பாடாகி
1920-1930 தொலைந்த விமானம், கப்பல்கள் கண்டறியும் பயன்பாடாகி, 1920- 1950 வரை *வானொலியின் பொற்காலம்* என ஊடகங்களின் முன்னோடியான வானொலியின்
உலக ரேடியோ தினம்!
கல்வி சேவை/ விழிப்புணர்வு நிகழ்வு, பொழுதுபோக்கு நிகழ்ச்சி /பேரிடர் தகவல் போர் அறிவிப்பு
அளிக்கும் சாதனமாம் வானொலியின்
03.11.2011 ல் ஐ.நா.சபை அறிவித்த
உலக ரேடியோ தினம்!
வானொலி ஒளிபரப்பு சேவை கொண்டாட ,
பன்னாட்டு வானொலியாளர்களுக்கு இடையே கூட்டுறவு ஏற்படுத்த, தகவல்கள் பரிமாறுதல்
எனும் நோக்கங்கள் நிறைந்த
உலக ரேடியோ தினம்!
ரேடியோ கட்டுப்பாடு மூலம்
படகை இயக்கிய மாடிசன் ஸ்கொயர் கண்ட உலக ரேடியோ தினம்!
இத்தாலியில் /பீகா பல்கலைக்கழகத்தில் ,
குறைந்த செலவில் தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கமாகி,
2012 ல் கொண்டாடப்பட்ட
உலக ரேடியோ தினம்!
2014 ல் பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டுவது தொனிப்பொருளாகி,
2018 ல் வானொலியும் விளையாட்டும். 2023 வானொலி மற்றும் அமைதி
கருப்பொருள்களாகி கொண்டாடும் உலக ரேடியோ தினம்!
1864 ல் ஸ்காட்லாந்து சார்ந்த
கிளார்க் மேக்ஸ்வெல்
வானொலி அலை கருத்தை
உலகுக்கு தெரிவித்து,
1866 ல் ஹென்றி ஹெர்ட்ஸ்
வானொலி அலைகளில்
மின்னூட்ட வேறுபாடு கண்டறிந்த,
உலக ரேடியோ தினம்!
1884 ல் டெஸ்லா காயில் கண்டுபிடிப்பு, வானொலி அலை அனுப்பும் தயாரிப்பில் பரிசோதனை கூடம் சிதைவு காண,
1894 ல் இந்திய விஞ்ஞானி
*ஜெகதீஷ் சந்திர போஸ்*
கம்பி இல்லா தகவல் அனுப்பும் கருவியை உருவாக்க,
1896 ல் *மார்க்கோனி*
இத்தாலியில் ஆதரவு கிட்டாமல் ,
இங்கிலாந்தில் மோர்ஸ் குறியீடு பயன்படுத்தி /ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு வானொலி அலை அனுப்பி காப்புரிமை பெற்றதோடு,
1908 ல் *கார்ல் பெர்டினாண்ட்* பிரௌவுனுடன் *நோபல் பரிசு* பெற்ற
உலக ரேடியோ தினம்!
எத்தனையோ தலைவர் உரைகள்,
எத்தனையோ தலைவர் மரணங்கள்
நேரில் காண்பது போல
ஒலிபரப்பும் வானொலியின்
உலக ரேடியோ தினம்!
தேர்தல்/ வேலை நிறுத்தம் /இயற்கை பேரிடர் நாட்டு நடப்புகள்/ உலக அரசியல் நிகழ்வுகள்/ பாரதப் பிரதமர் *இந்திரா காந்தியின் படுகொலை* இந்திய ராணுவ நடவடிக்கைகள் என உடனுக்குடன் உள்ளூர் செவிகளை சேர்கின்ற /அழுத்தமான
*ஆகாசவாணியின்
செய்திகள் வாசிப்பது
சரோஜா நாராயணசாமி*
என்ற குரல் ஒலிக்க,
சகஜ வாழ்வை பரிணமிக்கும் நிகழ்வாக/டீக்கடை அரட்டையர்களின் குரல்கள் அடங்கி/ புருவங்கள் சுருங்கி/ கண்கள் இடுங்கி/காதுகளோ தலைப்புச் செய்திகள் கேட்கத் துவங்க,
பஞ்சாயத்து கூடங்களிலும்
மர பெஞ்சில் வைக்கப்பட்டு, அனைவரும் சூழ அமர்ந்து கேட்ட உலக வானொலியின் தினம் !
ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் கானி,
ஈரான் அதிபர் அலி அக்பர் ரப் செஞ்சானி என்பதான பொது அறிவு கேள்விகளுக்கான விடையை கொடுத்ததும் சரோஜ் நாராயணசாமியின்
தெளிவான குரலுடன் அளித்த
உலக ரேடியோ தினம்!
விவித் பாரதியின் இரங்கல் இசையோடு /இந்திய தேசிய தலைவர்களின் மரணத்தை ஒலிபரப்பி/தமிழ் அறிந்த
நெஞ்சங்களை ஏகபோக குத்தகை எடுத்திருந்த ஆசியாவின் முதல்
வானொலி நிலையமான
இலங்கை வானொலிக்கான
உலக ரேடியோ தினம்!
1952 ல் இந்திய வானொலி, திரைப்படப் பாடல்களை
ஒலிபரப்ப தடை போட ,
தமிழ் திரையுலகம் ஒட்டுமொத்த விளம்பரம் மையமாக
இலங்கை வானொலியில்,
அனைத்து திரைப்படப் பாடல்களும் அடங்கிய இசைத் தட்டினை ஒலித்த
உலக ரேடியோ தினம்!
இலங்கை ஒலிபரப்பு
கூட்டு ஸ்தாபனத்தில்
வர்த்தக ஒலிபரப்பு
*பொங்கும் பூம்புனல்* என
*கே. கிருஷ்ணா* வின் மெஸ்மெரிசக் குரலில் தொடங்கி ,
அறிவுப்போடான MSVயின்
மெல்லிசையில் இசை துணுக்காகி ரசிகர்களின் எண்ண
தடங்களில் இசைக்கீறலான
உலக ரேடியோ தினம்!
*பிறந்தநாள் /இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்*
என TMS குரலுடன் தொடங்கிய பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வில்,
நேயர்களின் பெயரை குறிப்பிட்டு,
"வாழ்த்துவது தாத்தா/ பாட்டி /அப்பப்பா/ அம்மம்மா/பெரியம்மா
என வார்த்தை பிறழாமல் வேகமாக உச்சரிப்பதிலும்/நேயர் விருப்பத்தில் பல நேயர்களின் பெயர்களை அவரவர் ஊர்களுடன் மூச்சு விடாமல் அறிவிப்பதிலும், "நாளைவரை உங்களிடம் இருந்து நன்றி கூறி விடை பெறுவது "
என நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறுவதிலும் /தனக்கென ஒரு வேகமான ஸ்டைலை கடைப்பிடித்த,
இன்றைய ரேடியோ ஜாக்கிக்களின் முன்னோடியான,
அன்றைய *K.S. ராஜா* கண்ட
உலக ரேடியோ தினம்!
கம்பீரமான குரலில்
அழுத்தமான உச்சரிப்பில்
நிதானமான பேச்சு பாணி கொண்ட *அப்துல் ஹமீதின்*
பாட்டுக்குப் பாட்டு நிகழ்வில்
"நான் குறிப்பிட்டது கு..குறில் அல்ல கூ ...நெடில்" ஏகப் பிரபலமான,
எதிர்பார்ப்பிலான கணீர் குரலோனின்
உலக ரேடியோ தினம்!
துறை சார்ந்த அறிவு சமயோசிதமாக
படம் /இசையமைப்பாளர் /பாடகர், பாடலாசிரியர் என பெயர்களை இயந்திரத்தனமாக அறிவிக்காமல், அப்படப்பிடிப்பின் /இசையமைப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை சுவைபடக் கூறுவதால் *இலங்கை வானொலி* யின் வெற்றி குறிப்பிடும்
உலக ரேடியோ தினம்!
பாவாடை சட்டை போட்ட காலத்தில், சென்னை வானொலி நிலையத்தில், சாமர்த்தியமாக 15 பைசா போஸ்ட் கார்டை வாங்கி வந்து /நான்கு மூலைகளும் மஞ்சள் தடவி,
நேயர் விருப்பம் என்ற தலைப்பிட்டு,
விருப்ப பாடலை எழுதி /போஸ்ட் பாக்ஸில் /வேண்டிய படி போட்டு,
நேயர் விருப்பம் ஒளிபரப்பும் தினத்திலே /வானொலியிடம் நெருங்கி அமர்ந்து/ அடுத்து நீங்கள் கேட்க இருக்கும் பாடல் மௌனம் சம்மதம் திரைப்படத்திலிருந்து
பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்... திருநெல்வேலி வனிதா/ செய்யாறு லதா /திருச்சி குமார் / ராணிப்பேட்டை தமிழ்செல்வி என கூறும் போது சென்னை வானொலி நிலையத்தின் மண்டல ஒளிபரப்பில்/"கேட்டுக் கொண்டிருப்பது உங்கள் விருப்பம் நேரம் இரவு 7 மணி 31 நிமிடம்"
என பெயரை கேட்டதும் கால்கள் தரையில் தங்காமல் குதித்த வானொலி காணும்
உலக ரேடியோ தினம்!
மர்பி ரேடியோவில் இருக்கும்
*குழந்தை லோகோவை*
ரேடியோ காலத்து மனிதர்களால் மறந்து விட முடியாத/மறக்கக் கூடாத
உலக ரேடியோ தினம்!
வானொலியை சைக்கிள் பார்களில் கட்டிக்கொண்டு /பல மைல் தூரம்
பாடல் கேட்டபடி முன்னேறிய பயணம், செய்திகளை தெரிந்து கொள்ள, களைப்பை போக்கும் சாதனமான உலக ரேடியோ தினம்!
1991ல் ராஜீவ் காந்தி படுகொலையில் "மனித வெடிகுண்டு வெடித்ததில் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டார்!" என்று செய்தியை வாசிக்க /அன்றைய நாள் முழுவதும் மௌனமாய் மனம் கனத்த
உலக வானொலி தினம்!
காலை 6:30 மணிக்கு தொடங்கும் ரேடியோ செய்திகள் /ஆன்மீகப் பகுதிகள்/ மனை மங்கலம் /கல்வி நிகழ்ச்சி/ இசை நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து ஒளிபரப்பாகி /7. 40க்கு "இன்று ஒரு தகவல்" ...தென்கச்சி சுவாமிநாதன் வழங்க/கேட்டு முடித்து, பள்ளிக்கு ஓட்டம் கண்ட
உலக ரேடியோ தினம்!
குடும்ப உறுப்பினர் போல உறவாகி
நடுவில் துல்லியமாக சத்தம் வராவிடில்/ நடு மண்டையில் தட்டுகின்ற அடி வாங்கி /பின் பாட ஆரம்பித்த வானொலிக்கான
உலக ரேடியோ தினம்!
என்னதான் டெக்னாலஜி வளர்ச்சியில் நினைத்த நொடியில்/ நினைத்த பாடல் கேட்கும் வசதி வந்தாலும், "மூக்குத்திப்பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுதம்மா!" என்ற பாடல் ஒளிபரப்பாகும் போது
மூக்கின் நுனியில் தன்னை மீறி ஒற்றை விரலை குறும்பாக வைத்துக் கொண்டு /குண்டுமல்லியை சரமாகத் தொடுத்த/ வாசமிக்க நாட்களை மறக்க முடியாத /மறக்க விரும்பாத
உலக ரேடியோ தினம்!
அன்றைய நாளில் காதில் வந்து விழுந்த இயல்/இசை/ நாடகம் எனும் முப்பெரும் கலைகள்,
வானொலி அண்ணா *கூத்தபிரானின்* சிறுவர் நிகழ்ச்சி,
உண்ணும் போதும் உறங்கும் போதும் எழுதும் போதும் படிக்கும் போதும் பிரியாமல் உடன் இருந்த வானொலியின் உலக ரேடியோ தினம்!
ஒரு காலத்தில் போஸ்ட் கார்டை
வாழ வைத்த சாதனமாகி ,
மனம் நொந்த காலத்தில் TMS ன்
"ஆறு மனமே ஆறு"என்று கேட்ட போதும் /அமைதி வேண்டிய போது இசைஞானியின் "கண்ணே கலைமானே!" பாடலோடு/ காதல் பொங்கும் வேளையிலே "காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே"
என்ற பாடலும் கேட்கையிலே
சக தோழமை உறவான
உலக ரேடியோ தினம்!
ரேடியஸ் என்ற லத்தின் சொல்லிலிருந்து வந்த ரேடியோ, ஸ்மார்ட் போனின் முன்னோடி!
என்பது ஆண்டுகள் நிறைவு கண்ட ஆல் இந்திய ரோடியோ,
பவள விழா காணும் சென்னை அகில இந்திய வானொலி நிலையம்
இன்றைய தினம் மகிழ்வுறும்
உலக ரேடியோ தினம்!
1951இல் திருச்சி வானொலியில்
என் கணவர் என்ற தலைப்பில் *செல்லம்மாள் பாரதி* ஆற்றிய உரை,
விருட்சமாகி/
திருச்சி ஜனவரி 2020 இல்
பண்பலை வானொலியில்
"மலரும் மொட்டும்" நிகழ்வில் பங்கேற்ற பொய்யாமணி அரசு பள்ளி மாணவர்கள்/ மாவட்ட ஆட்சியராக விருப்பமென பேசிய ஏழாம் வகுப்பு மனோப்ரியா மாணவியை/அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்பழகன் தன் இருக்கையில் அமர வைத்து பெருமைப்படுத்திப் பார்த்த வானொலிக்கான
உலக ரேடியோ தினம்!
மாணவர்களுக்கு அறிவுரை, பொதுமக்களுக்கு தேவையான விஷயங்கள் என்று
இன்றைய நாளில் பிரதமர் மோடி அவர்கள் மங்கி பாத்
என்ற மனதின் குரல் நிகழ்விலே, 98-வது நிகழ்ச்சிக்கு
தகவல்களை வழங்குமாறும்,
ரேடியோ கேட்டு/அதனுடன் தொடர்பு உடையவர்களைப் பாராட்டியும்
நல்ல நிகழ்ச்சியின் மூலம் நமது வாழ்க்கையை ரேடியோ மூலம் பிரகாசமாகட்டும் "
என்றும் டிவிட் செய்தியை
இன்று இந்திய பிரதமராக வெளியிட்ட
உலக ரேடியோ தினம்!
வீட்டின் கூடத்தில்/ சுவரில் பொருத்தப்பட்ட செல்ஃபில்,
சில பழைய தபால் அட்டைகளின் மேலே /வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட/மர்பி ரேடியோ
அன்றைய சாமானிய மக்களின்
ஒரே பொழுதுபோக்கு சாதனம்!
பொங்கும் பூம்புனல் ஒலிபரப்பு
கடந்த கால வாழ்வின் மிச்சங்களாகி, காலம் களவாடி தன்னுள்
மறைத்துக் கொண்டாலும்,
50 வயது கடந்தவர்களின் மனச்சுவடில் நிச்சயம் ஒரு நினைவுப் பெட்டகமாய், ரேடியோவின் நினைவலைகள் கண்ட உலக ரேடியோ தினம்!
ரேடியோ வானொலி நிகழ்வை மீண்டும் கேட்போம்!
கடந்த கால இனிய நினைவலைகளோடு உலாவுவோம்!
- முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.

Comments (0)