காதலர் தினம்

காதலர் தினம் சிறப்பு கவிதை

காதலர் தினம்

காதலர் தினம்

அன்புக்குரியவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினம்!
பண்டைய ரோமானியர் கண்ட திருவிழா தினம்!
பாராட்டினை நேசமாக வெளிப்படுத்தும் தினம்!

உலகம் முழுவதிலுமுள்ள 
மிக நெருங்கிப் பழகும் மக்களால்
கொண்டாடப்படும் தினம்!
மேற்கத்திய கிறிஸ்தவ திருச்சபை
செயின்ட் வேலன்டைன்  தினமாக 
 பிப்ரவரி 14 ஐ நிர்ணயித்து,
கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சால் ஜூலை 6 மற்றும் ஜூலை 30 ஐ நிர்ணயித்துக் கொண்டாடும் தினம்!

 வாழ்த்து அட்டைகளோடு
பரிசுகள் அனுப்புதல், 
டேட்டிங் மேற்கொள்ளுதல் 
என்ற விதத்தில் காதலை 
தெரிவித்துக் கொள்ளும்
தொன்மை  மரபு தினம்!

ரோம பேரரசான இரண்டாம் *கிளாடியூஸ்* காலத்தில் 
ஆண்கள் திருமணம் செய்தால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் 
என அந்நாட்டு அரசரின் எண்ணமாக,
திருமணம் செய்தல் தடைப்படும் சூழலில் / *வேலன்டைன்*  எனும் பாதிரியார் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க /மன்னருக்கு செய்தி தெரிய வர /மரண தண்டனை 
விதிக்கப்பட்ட நினைவு தினம்!

சிறை தண்டனையில் 
ஜெயிலர் ஆஸ்டீரியஸின் பார்வையற்ற மகள் ஜூலியாவிற்கு
பார்வை அளித்ததோடு 
46 பேர்களை ஞானஸ்தானம் 
பெற வைத்து /மன்னனின் கோபத்திற்கு ஆளாகி,
மரண தண்டனை நிறைவேற்றும் முன்பு *உங்கள் காதலர்*  என கையொப்பமிட்ட கடிதத்தை டெய்லரின் மகளுக்கு 
முதல் காதலர் தின அட்டையாக அளித்த தினம்!

*8*ஆம் நூற்றாண்டில் பண்டிகை கொண்டாட்டமாக பதிவாகி ,
*14* ஆம் நூற்றாண்டில் சாசரின் கவிதையுடன் கொண்டாட்டமாகி,
*15* ஆம் நூற்றாண்டில் காதலுடன் தொடர்புடையதாகி 
காதல் பறவைகளுக்கான
வசந்த காலத்தின் 
துவக்கமான தினம்!
*17* ஆம் நூற்றாண்டில் ஜாடியில் ஜோடிகளை வரைந்து ஜெஃபரி 
சாஸரின்  பார்லிமென்ட் ஆப் பௌல்சிலில் பறவைகள் துணையைத் தேர்ந்தெடுப்பதாக விளக்கம் கூறும் தினம்!
*18* ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தம்பதிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக 
மலர்/தின்பண்டம்/வாழ்த்து அட்டை அனுப்புதல் தினமாகி,
*19* ஆம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட வாழ்த்து அட்டையுடன் இத்தாலியில் செயின்ட்
 வாலன்டைன் தினத்தில் சாவிகளை
காதல் சின்னமாகக் கொடுத்து, காதலர்களின் இதயத்தை திறக்கும் 
அழைப்பான தினம்!  

ஜூலியா தன் அன்புக்குரிய 
காதலின் நினைவில் வாலன்டைன்  கல்லறைக்கு அருகில்
 நிலையான அன்பு மற்றும் நட்பின் அடையாளமான இளஞ்சிவப்பு நிற *பாதாம் மரம்*  நட்டதாக  செய்தி
 "தி டிக்ஷ்னரி ஆஃப் கிறித்துமஸ்"
புத்தகத்தில்  *J.C.கூப்பர்* 
பதிவு செய்த தினம்!

செயின்ட் வாலன்டைன் 
ஒரு ஊதா நிற அமெதிஸ்ட் மோதிரத்தை காதலுடன் தொடர்புடைய /அன்பை ஈர்க்கும் மன்மதன் உருவம் பொதிந்த மோதிரத்தை அணிந்து காதலை வெளிப்படுத்தியதாக கூறும் தினம்!

*ஸ்லோவேனியாவில்*  
திராட்சைத் தோட்டம் மற்றும் வயல்களில் வேலை துவங்கும் தினமாகி /வசந்தக் கால தொடக்க
தினம் என குறிப்பான தினம் ! 

பிப்ரவரி 7 ல் 
ரோஸ் டே என ரோஜா கொடுத்து காதல் வெளிப்படுத்தும் தினமாக,
பிப்ரவரி 8 ல்
Propose Day என தயக்கமின்றி 
அன்பை வெளிப்படுத்தும் தினமாக,
பிப்ரவரி 9 ல்
ஆண்களும் பெண்களும் தன் அன்பை சாக்லேட் பாக்ஸ் கொடுத்து
மகிழும் சாக்லேட் தினமாக,
பிப்ரவரி 10 ல்
வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கச் சொல்லும் டெடி பொம்மையை அன்பளிப்பாக்கிய டெடி Day ஆக,
பிப்ரவரி 11 ல்
"நான் உனக்காக வாழ்கிறேன்  உனக்காக எதையும் செய்வேன் நம்பிக்கையோடு என்னை காதலி!" என கூறும் வாக்குறுதி தினமாக,
பிப்ரவரி 12 ல்
விரும்புபவரை கட்டிப்பிடித்து 
மகிழ்ச்சி பரிமாறும் ஹக் Day வாக ,
பிப்ரவரி 13 ல்
காதலர்களுக்கு இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்த முத்தங்கள் பரிமாறும் முத்த தினமாக ,
பிப்ரவரி 14 ல்
காதலர்களோ/ தம்பதிகளோ, நேரத்தை ஒன்றாக செலவிட்டு அன்பினைப் பரிமாறும் 
காதலர் தினமாகவென 
8 நாட்கள் கொண்டாடப்படும் தினம்!

இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் *விலங்குகள் நலத்துறை*  
 இந்து மத விழுமியங்களை மேம்படுத்த /பசு அணைப்பு தினமாக கொண்டாடுமாறு வேண்டுகோள் 
முன் வைத்த  தினம் !   

பிலிப்பைன்சில் 
பொதுவான திருமண நாளாக,
ரோமில் அதிகாரப்பூர்வ பண்டிகை நாளாக கொண்டாடும் தினம்!

மனக்கசப்பு/சண்டை ஏற்படுத்தும் *பேனா /கைக்குட்டைகளை* 
பரிசுகளாக அளிக்க விடாமல்,
தொழில் முன்னேற்றம் /உறவுகளை பாதிக்கும் /அதிர்ஷ்டத்தின் பங்கை வழங்குவதாக கூறப்படும் *கடிகாரத்தை* பரிசாக வழங்காமல், 
தவறான புரிதலை உண்டாக்கும் வாசனை திரவியத்தை 
பரிசாக வழங்காமல்,
துரதிர்ஷ்டம்/ தடைகளை தந்து உறவுகளை பாதிக்கும் 
கருப்பு நிற ஆடைகளை 
பரிசாகத் தராமல்,
"காதல் தான் இவ்வுலக தலைமை இன்பம்!" என *பாரதி* யின்  வழியிலே சினிமா/பீச்/இரவு நேர பார்ட்டி 
என ஆட்டம்/பாட்டம் நிறைந்த தினம்!

லுபர் காலியாவில் 
வசந்த காலத்தை வரவேற்க குழந்தைகள் கருவில் தரிக்க 
ஆண்கள் ஒரு நாயை /ஆட்டினை
பலியிட்டுக் கொன்று,
அந்த ரோமத்தை எடுத்து 
மணமான பெண்களை அடிக்க, கருப்பை வலுப்பெறுவதாக நினைக்கும் தினம் !

இங்கிலாந்து அரசர் எட்வர்ட் போல,
புதுக்கோட்டை மன்னர்
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்,
1915 ல் ஆஸ்திரேலியா  செல்ல, மெல்பர்ன் நகர வழக்குரைஞர் 
உல்ப் பிங்க் மகள் எஸ்மி மோலியின் மீது காதல்  கொள்ள /ஆகஸ்ட் 10 ல் திருமணம் நடக்க /நிறபேதம் காரணம் அங்கே துவங்க/ 22 .11 .1915 ல் புதுக்கோட்டை திரும்பிவர /மோலி கருவுற/ சிட்னியில் மகன் வாரிசாக பிறக்க /வாரிசு பிரச்சனை தீரர்  சத்தியமூர்த்தியின் எதிர்ப்பு வர,
 காதல் மனைவியும், செல்ல மகனையும் பிரியாது /21.60 லட்சம் பணத்தினை பெற்று/ மன்னர் பதவியை துறந்து /சிட்னி சென்று மணிமுடி துறந்த வரலாறு
காதலை/ அன்பினை/பிரியத்தின் ஆழத்தினை பறைசாற்றும் தினம்!

ஆழ்ந்த உணர்வு மிக்க காதலை அன்பின் அடையாளமாக காட்டி,
உதாசீனப்படுத்த முடியாத அழகுணர்வை வெளிப்படுத்தி,
மனதை அமைதிப்படுத்தும் 
*சிவப்பு ரோஜா* ,   
வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாக அக்கறை மிகுந்தவள் 
என குறிக்கும் *மஞ்சள்  ரோஜா* , 
நட்பில் இருந்து காதலுக்கு மாறும் *ஆரஞ்சு ரோஜா* ,
தொடக்க உறவு/தூய காதல் மலர்தல், 
கௌரவம்/பெருமதிப்பு காட்டும் 
*வெள்ளை ரோஜா* ,
உறவின் முடிவு மற்றும் காமத்தின் அடையாளம் காட்டும் 
*கருப்பு ரோஜா* ,
நன்றியை தெரிவித்து/ கருணை நேர்த்தி/சாந்தியை அறிவிக்கும் 
*இளஞ்சிவப்பு ரோஜா* ,
ராஜ குடும்பத்துடன் தொடர்புடைய வரவேற்பு அளிக்க 
சிறப்படைய /வசீகரிக்கும்,
ராணியாக இதயத்தில் அமர்ந்தவள் எனக் குறிப்பிடும் *ஊதா ரோஜா* ,
பாராட்டின் அடையாளமாக அம்மாவிற்கும், சகோதரிகளுக்கும் தருகின்ற லைட் பிங்க் ரோஜா,
தனித்துவமான அன்பு காட்டும் 
*நீல ரோஜா* ,
நட்பை குறிக்கும் 
மதிப்பை வெளிப்படுத்தும் *செம்மஞ்சள் ரோஜா* 
மனைவியின் தனித்துவ அன்பை முழுமையாக பெறுவதற்கான
*பல வண்ண ரோஜா*
என மலர்கள் ராணியான
ரோஜாக்களை கொடுத்து
அன்பினை வெளிப்படுத்தும் 
காதலர் தினம்!

திருச்சி திருமலை மன்னர் விரும்பிய பொம்மியை சிறை எடுத்து 
மணந்த *மதுரை வீரனை*  வெள்ளையம்மாளையும் மணந்த
தருணத்தில் மாறு கால் /மாறு கை வாங்கி மன்னர் கொன்று விட, பொம்மியும் வெள்ளையம்மாளும் மூச்சடக்கி உயிர் நீத்து பெருமித
 குலசாமியான மதுரை வீரனின் காதலை பறைசாற்றும் தினம்!

மலை பழங்குடி காத்தவராயன் 
அரசிளங்குமாரி  ஆரியமாலா மீது காதல் கொள்ள /அரசன் மறுத்து, மகளின் கரம்பிடித்தவனை கைது செய்து கழுவேற்ற/ உயிர் பிரிந்த *காத்தவராயன்- ஆரியமாலா*  
காதலைக் கூறும் காதலர் தினம்! 

 *ஷாஜகான்* தன் 
மூன்றாவது மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதல் தாஜ்மகாலாக 
பரிணமிக்கும் காதலர் தினம்!

"காதல் அஞ்சேன் அஞ்சுவன சாவில் பிறப்பு பிறிதாகுவது ஆயின் மறக்குவன் கொல் எண்!" என்று *நற்றிணை* பதிவான காதலின்
சிறப்பு கூறும் தினம்! 
இரண்டு அரசுகளின் பகையில் சோகமாக முடிந்த 
*கிளியோபாட்ரா-அந்தோணி* 
காதல் உரைக்கும் காதலர் தினம்!

பணக்கார வம்ச
காதல் மனைவி லைலா நோயில் இறக்க /அவள் கல்லறையில் காதல் பைத்தியமாக இறந்த ஏழை மஜ்னுவின் காதல் கூறும்  
காதலர் தினம்!

தங்கள் இறப்புக்குப் பின் 
இரண்டு குடும்பங்களை ஒன்றிணைத்த 
*ரோமியோ -ஜூலியட்டின்*
காதல்  நினைவூட்டும் காதலர் தினம்!

அக்பர் மகன் சலீம்
தன்னை விரும்பிய அனார்கலி, உயிருடன் கல்லறையில்
சமாதியாக்க /மனம் பேதலித்து,
கல்லறையிலே உயிர் நீத்த
*சலீம் - அனார்கலி* 
அன்பினை பறைசாற்றும் 
காதலர் தினம் !

ரஷ்ய மன்னன் மனைவி கேத்தரின் காவலாளியான போர் வீரனை விரும்பி புரட்சியாக அவனை மணந்து கணவனை விஷம் வைத்துக் கொன்ற 
*கேத்தரின் -கிரிகோரியை*  நினைவூட்டும் காதலர் தினம்!  

 மேடம் மேரி - பியரே குயுரி,
பாரிஸ்- ஹெலனா,
ஒர்பியுஸ் யுரிடிஸ்,
துஷ்யந்தன்-சகுந்தலை,
நளன்-தமயந்தி,
கோவலன்-மாதவி,
ஆகிய அத்தனை பேரும் 
அண்ணலும் நோக்கினான் 
அவளும் நோக்கினாள்
 என்ற வாக்கின் அர்த்தமான
ராமன்-சீதை வழி வந்தவர்களை
நினைவு கூறும் காதலர் தினம்!

மொத்தத்தில் 
கௌரவ தாழ்ப்பாள்கள் போட்டுக் கொண்ட இரும்புக்கதவுகள் அன்பெனும் சாவியால் 
திறக்கப்படும் தினம்!

தென்றல் தீண்டாத உள் மனதின் 
சோக புழுக்கள் புத்துணர்வு இறக்கைகளை பெறும் தினம்!

 தோட்டத்து வேலியையும் தொட்டுக்கொண்டு ஓடும் 
நட்பு நதிகள் தன்னம்பிக்கையுடன் கைசேர்க்கும் தினம்!

வசந்தம் தேடும் எதிர்பார்ப்பு முற்றங்கள் காற்றில் கலந்து 
நேசம் நிறைக்கும் 
மகிழம்பூ வாசம் நுகரும் தினம்!

 வெயிலையும் மழையையும் பொறுமையாய் ஏற்று 
உணர்வுகளை மட்டும் 
பரிமாறும் தினம்!

பருவங்கள் மாறிட 
பாலினங்களின் மனங்கள் 
இடம் மாறும் தினம்!
 காதல் என்ற பெயரால் 
ரோஜாக்கள் மணம் வீசும் தினம்!

 இளமை என்பது 
நரம்புகளால் ஆனதென
 காதல் வயலின் 
வரம்புகள் மீறும் தினம்!
 பாசத்தின் பதிவுகளாய் 
நேசத்தின் விடியல்களாய் 
தன் இருப்பை 
வெளிச்சமிட்டுக்  காட்டும் தினம்!

 எத்தனையோ பேர் சுற்றி இருப்பினும் சுயமுள்ள சுபங்களாய் 
காதலனை  நாடும் தினம்!
தன் மனதில் கவிதையாய் இருந்ததை இதுவரை எழுதாத இன்னொரு இதயத்தில் காதல் கவிதையாய் வாழ்த்து அட்டையில் 
எழுத முற்படும் தினம்!

படிமங்களின் வடிவமாகி 
முரண்களில் சரணடைய வைத்து வாழ்வின் திருப்பம் நாடும் தினம்! காதல் என்பது காதலர்களுக்கு
முதல் வேதம் 
இரண்டாவது குரான் 
பைபிளில் மூன்றாவது ஏற்பாடு 
என்று நிரூபித்து 
கண்களே இதயமாவதும் 
இதயமே கண்களாவதும் என்று
பரிணமிக்கும் காதலர் தினம்!    

காதலர்களை ஸ்டெதஸ்கோப் இல்லாமல் இதயமாற்று
அறுவை சிகிச்சை நடத்தி 
இதயம் துடிப்பதை 
உள்ளத்திற்கு உணர்த்தும் தலைசிறந்த மருத்துவர்களாக்கி 
நிரூபிக்கும் காதலர் தினம்!

சிலரை கவிஞர்களாகி
பலரை ஊமைகளாக்கும் 
காதலர் தினம்!
 நினைவுகளை ரகசியமாக 
அரியணை ஏற்றி 
மனிதனை மன்னனாக்கி 
மகுடம் சூட்டும் தினம்!

 சிறகுகள் ஆணுக்கு உரிமை
விறகு பெண்ணுக்கு உரிமை
 மையல் ஆணுக்கு சொந்தம்
 சமையல் பெண்ணுக்கு சொந்தம்
என்ற வித்தியாசங்களை 
எல்லாம் நிர்மூலமாக்கும்  தினம்!

மொத்தத்தில்
 காதல் என்பது முதலாளித்துவமல்ல அதற்கு முன்னால் அனைவரும் சமம் என்ற ஜனநாயக தத்துவம்
பறை சாற்றும் காதலர் தினம்!

உண்மையான 
தூய்மையான 
ஒழுக்கமான 
காதலை வரவேற்போம்!
நியாயமான காதலை 
வாழ வைப்போம்!    

முனைவர் பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை